ஐரோப்பிய வந்தேறி தமிழர்களை விரட்டுவோம்.. தமிழர்களின் மானம் காப்போம்!” என்னும் தலைப்பில் கீற்று தளத்தில் ஒரு கட்டுரையைக் காண நேர்ந்தது. தலைப்பைக் கண்டதும் வாட்டாள் நாகராஜும், உத்தவ் தாக்கரேவும் கீற்று தளத்தில் எழுத ஆரம்பித்து விட்டார்களோ! என்று ஒருகணம் அதிர்ச்சியாகிவிட்டேன். (வந்தேறிகள், விரட்டுவோம் போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு உரியதாயிற்றே!!.) எந்த அடிப்படை புரிதலும் இல்லாத, மேம்போக்கு சமூகப் பார்வை கொண்டதாகவும், ஃபேஸ்புக் ஃபேக் ஐடிகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும் இருந்தது அந்தக் கட்டுரை.. இப்படி ஒரு கட்டுரை கீற்றில்  வந்தது சற்று வியப்பே! அதனால் இந்தப்  பதில் கட்டுரை. 

முதலில் கட்டுரை ஆசிரியர் லோகேஷ் பற்றி பார்ப்போம்.

 தமிழர்களுக்குக்  கல்வி தந்தவர் காமராஜர் என்று பேசுவதில் எந்தப்  பொருளும் இல்லை என்றவர்தான்  கட்டுரை ஆசிரியர் லோகேஷ். நல்லவேளை ராஜாஜிதான் கல்வி தந்தார் என்று சொல்லாமல் விட்டாரே! அதுவரையில் மகிழ்ச்சி. 

 தமிழில் ‘ழ’ என்னும் எழுத்து சிறப்பு வாய்ந்தது என்று சொல்வதிலோ, தமிழ் ஒரு செம்மொழி என்றோ சொல்வதில் எந்த பொருளும் இல்லை என்னும் கருத்து உடையவர். ஆனால் இந்தி திணிப்பை எதிர்த்தோ, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தோ கட்டுரை எழுத மாட்டார். 

சாதியை ஒழிக்க முடியாது, ஓர் ஓரமாக இருந்துவிட்டு போகட்டும் என்று வெளிநாட்டில் இருந்து பதிவு போடுகிறார். ஆனால் வெளிநாட்டில் சாதிக் கட்டமைப்பு இல்லை என்பதை இங்குள்ள வெறியர்களிடம் சொல்லி புரியவைக்கும் பணி செய்ய மாட்டார். ஆனால் சில ஃபேஸ்புக் ஃபேக் ஐடிகளின் இனவாதக் கூச்சலை எதிர்க்கிறார். 

 மோடியின் வெளிநாட்டு பயணங்கள் பலவும் இந்திய பெரும் முதலாளிகளுக்கானதே! அதைப் பற்றி கீற்றில் பல கட்டுரைகள் உள்ளன. அதில் ஒன்றையாவது படித்தாரா லோகேஷ்?? படித்திருக்க மாட்டார். அதனால்தான் மோடியை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார். ஆனால் மோடி செய்த படுகொலைகள் பற்றி வாயைத் திறக்க மாட்டார்.

இவ்வாறு மேம்போக்கான அரசியல் புரிதலும், தீவிர இந்திய தேசப் பற்று/பக்தியும்  கொண்ட லோகேஷின் கட்டுரை கீற்றில் வந்துள்ளது. இதனைக் கீற்றின் கருத்து சுதந்திரமாக எடுத்துக் கொள்வோம். இனி முற்போக்கு காவிகள் அனைவரும் கீற்றில் எழுதுவார்கள் என எண்ணுகிறேன். 

இனி கட்டுரைக்கு வருவோம்.

எதுக்கெடுத்தாலும் "வந்தாரை வாழ வைக்கும் நாடு.. வந்தாரை வாழ வைக்கும் நாடு" என டயலாக் பேசுகிறார்கள்.. எது உன் நாடு? என்று கேட்டுள்ளார் லோகேஷ். இது என்ன கேள்வி! தமிழ்நாடுதான் நம் நாடு. இந்தியர்களை நோக்கி ‘எதுடா உங்கள் நாடு?’ என்று கேள்வி கேட்பாரா? மாட்டார். இந்திய தேசப் பக்தி தடுக்குமே!! 

அடுத்து “பழங்காலத்து வரலாற்றை விடுவோம்” மறந்து விடுவோம் என்கிறார். இப்படி வரலாற்றை மறந்து போனதால்தான் சாதிக்கும்,  இந்துத்துவத்திற்கும் அடிமையாகி நிற்கிறான் தமிழன். அதிலிருந்து விடுபடும் நோக்கில் தமிழர்கள் தங்கள் வரலாற்றைப் பேசுவதில் லோகேஷ்க்கு என்ன் வருத்தம்? பக்கம் பக்கமாக இந்திய வரலாறு பேசுபவர்களிடமும் இதையே சொல்வாரா?

இந்தியாவில் அகதிகளுக்கு எந்த வசதியும் இல்லை என்கிறார். உண்மைதான். இங்குள்ள அகதிகளுக்கு எந்த வசதியும் செய்து தராததற்கு இந்திய கொடுங்கோல் அரசும், அதற்கு சேவை செய்யும் தமிழக அடிமை அரசும் தான் காரணம். அதனைப் பற்றி பேசாமல் யாரையோ சில ஃபேக் ஐடிகளை வசை பாடுகிறார் லோகேஷ். அது சரி, இந்தியப் பாசம் கொண்டவர்கள் பெயர் அளவில் கூட இந்தியாவை எதிர்க்க மாட்டார்களே!

அடுத்து ஈழப் பிரச்சனையை காரணம் காட்டி, தமிழகத்தில் வடுகர்கள், வந்தேறிகள் எனப் பிரிவினை பேசும் போக்கு அண்மைக்காலமாகவே அதிகரித்துள்ளதாக சொல்கிறார். யார் பேசுவது என்று பெயரைக் குறிப்பிட்டு எழுத வேண்டியதுதானே! யாரோ சில ஃபேஸ்புக் ஃபேக் ஐடிகள் சொன்னதை வைத்து இதுவே பெரும்பான்மையான மக்களின் கருத்தாக இருப்பது போல பிம்பத்தை உருவாக்குகிறார் லோகேஷ். 

எந்த அரசியல் இயக்கமோ, காட்சியோ அப்படி ஒரு பாசிசக் கருத்தை சொல்லவில்லை. சொல்லப் போவதுமில்லை. அப்படியானால்  யாருக்கு அறிவுரை சொல்ல வருகிறார் லோகேஷ்? முகம் காட்ட துணிவில்லாத ஃபேக் ஐடிகளுக்கா? அதற்கு கீற்று தளம் நல்ல இடமில்லை என்பதே என் கருத்து. 

உண்மையில் ஈழப் படுகொலைக்குப் பின்னர் தமிழகத்தில் என்ன நடந்துள்ளது? தமிழ்த்தேசிய எழுச்சி மலர்ந்துள்ளது. இந்தியாவையும், அதனை தாங்கி நிற்கும் இந்துத்துவத்தையும் பெருமுதலாளிகளையும்  அம்பலப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக இளையோர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. இயற்கையைக் காப்போம், நாசக்காரத் திட்டங்களை எதிர்ப்போம் என்னும் முழக்கம் வலுக்கிறது. மொத்தத்தில் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் கூட்டம் அதிகரிக்கிறது. திராவிடத்தையும், பொதுவுடைமையையும் பெயரளவில் வைத்துக் கொண்டு மக்கள்விரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அம்பலப்படுத்தப் படுகிறார்கள். அதனை வேறு வகையில் புரிந்து கொண்டுள்ளார், அல்லது வேறு பொருளில் திரித்து பேசுகிறார் லோகேஷ். இந்தியப் பாசம் காரணமாக இருக்கலாம். 

“நேற்று பெய்த ஈழ மழையில் தமிழகத்தில் முளைத்துள்ள காளான்கள், அதான் பிரபாகரனின் தம்பிகள்” என்று ஒரு கடுமையான வார்த்தையை சொல்லியுள்ளார் லோகேஷ். நானும் அவ்வாறு முளைத்தவன்தான், பிரபாகரனின் தம்பிதான் என்று சொல்லிக் கொள்கிறேன். ஆனால் லோகேஷ் சொல்கிறபடி ஈழம் என்பது மழை அல்ல. அது ஓர் இனத்தின் வலி. கண்மூடித்தனமான தேசபக்தி கொண்டவர்களுக்கு அது  புரியாது. இந்திய தேச வெறி ஊறிய மூளையும், சிங்கள தேச வெறி ஊறிய மூளையும் ஒரே அளவில்தான் சிந்திக்கும் என்பதை நாம் அறிவோம். 

ஆனால் எம் தமிழ்த்தேசிய சிந்தனை என்பது அவ்வாறு அல்ல. சாதி, மதம், இனம், மொழி என எதன் பெயரில் ஒடுக்குமுறை நடந்தாலும் அதனை எதிர்த்து நிற்பதே எம் தமிழ்த்தேசிய அரசியல். சிங்களன் ஒடுக்கப்பட்டால் சிங்களன் பக்கம் நிற்போம். பார்ப்பான் ஒடுக்கப்பட்டால் பார்ப்பான் பக்கம் நிற்போம். இதுதான் தம்பி பிரபாகரனும், தந்தை பெரியாரும் கற்றுத் தந்த அரசியல். இந்திய தேச மாயையிலிருந்து ஒரு நிமிடம் வெளிவந்து யோசியுங்கள். நான் சொல்ல வருவது புரியும்.

அப்படியான நாம் எந்த காலத்திலும் வந்தேறி என்றோ, வடுகன் என்றோ சக தேசிய இனத்தின் மீது வன்மம் கொள்ளும் கீழ்த்தர அரசியலை செய்ய மாட்டோம். அது வாட்டாள் நாகராஜும், உத்தவ் தாக்கரேவும் செய்துவரும் அரசியல். இங்கு அதனை அனுமதியோம்.

“திடீர் டமில் புலிகள்” என்று சொல்லியுள்ளார் லோகேஷ். தமிழை டமில்  என்று சொல்வது  மொழிவெறுப்பு அன்றி வேறென்ன? இந்தியப் பற்று கொண்டவர்கள் தற்போது தமிழர்களை டம்ளர்கள் என்றும், தமிழை டமில்  என்றும் கேலி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் அண்ணன் லோகேஷும் சேர்ந்துவிட்டார் போல.

சோமாலியா, சிரியா போன்ற நாட்டிலிருந்து வருவோருக்கும் தமிழர்கள்  இடம் அளிக்க வேண்டும் என்கிறார் லோகேஷ். உண்மைதான். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இடமளித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மனம் எண்ணுகிறது. ஆனால் இந்திய அரசும், அதற்கு அடிமை வேலை செய்யும் தடைக்கல்லாக இருக்கிறதே! லோகேஷுக்கு இது புரியாமல் போனதேன்? தமிழ்த்தேசிய இன விடுதலை பெறாமல் இத்தனை நாம் எவ்வாறு செய்ய முடியும்? அதனால் அண்ணன் லோகேஷ் அவர்கள் இனி தமிழ்த்தேசிய இன விடுதலை பேச முன்வருவாரா? 

இறுதியாக சில வார்த்தைகள்.

தமிழ்நாட்டைக் கண்டித்து கர்நாடகத்தில் பந்த் நடத்தினால் பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழல் உள்ளது. இனவெறி கொண்டு நிற்கிறான் கன்னடன்... தமிழக எல்லைக்குள் வந்து தமிழனைத் தாக்குறான் மலையாளி.  பழவேற்காடுக்குள் புகுந்து தமிழனை அடிக்கிறான் தெலுங்கன்..பஞ்சம் பிழைக்க போனவனை சுட்டுத் தள்ளுறான். மீன்பிடிக்க போனவனைக் குருவி சுடுவது போல சுடுகிறான் சிங்களன்.

தமிழர்கள் யாரும் அப்படி போகவில்லை. போகவும் மாட்டார்கள். அதனால்தான் சொல்கிறோம் "நாங்க நாலா புறமும் தாக்கப் பட்டாலும், எம்மண்ணை நோக்கி வந்தவனை வாழ வச்சோம், இனியும் வாழ வைப்போம்". இவ்வாறு சொல்வதில் என்ன பிழையைக் கண்டீர்?

குஜராத் பூகம்பத்துக்கும், நேபாள பூகம்பத்துக்கும் தமிழ்நாடு முழுக்க உண்டியல் குலுக்கப்படுகிறது, நிதி சேகரிக்கப்படுகிறது.. ஆனால் தமிழகத்தை சூறையாடிய தானே புயலைத் தேசியப் பேரிடராக அறிவிக்க கூட இந்தியா முன்வரவில்லையே! 

எமக்காக எந்த குஜராத்தியும், நேபாளியும் உண்டியல் குலுக்கவில்லையே! இப்ப சொல்லுங்க. பரந்த மனம் கொண்டவர்கள் யார்??

யாரோ சில ஃபேக் ஐடிகள் வந்தேறி, வடுகன் என்று பாசிசம் பேசினால் அதே இடத்தில்  பதில் கருத்து கொடுங்கள். இல்லையேல் ப்ளாக் செய்யுங்கள். அதைவிடுத்து ஈழ மழை, காளான், டமில், பிராபாகரனின் தம்பிகள் என வாயில் வந்ததையெல்லாம் கட்டுரையாக எழுதி தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர். 

தமிழ், ‪தமிழர், ‪தமிழ்நாடு ஆகியவை சார்ந்து அரசியல் பேசுவது இந்தியப் பாசம் கொண்ட தங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடும். அதகாக தமிழர்களை இனவாதிகளாக சித்தரிப்பதையும் நிறுத்துங்கள்.

சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துவது எவ்வாறு கீற்று நந்தன் சமீபத்தில் சில கட்டுரைகள் எழுதினார். அதனைத் தாங்கள்  படித்தல் மிகவும் நல்லது.

மிக்க நன்றி..

- குருநாதன் சிவராமன்

Pin It