"என்ன தோழர் இவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது?"

தோழரின் ஞாயமான கவலை என்னையும் தொற்றிக்கொண்டது.

maoist 343"ஏன்.... என்னாச்சு?"

"படைதான் கட்சியின் ஒரே அமைப்பு வடிவம்; யுத்தம்தான் கட்சியின் ஒரே போராட்ட வடிவமுன்னுட்டு சொல்லிக்கிட்டேயிருக்காங்க! அதெல்லாம் இங்க சரிப்பட்டு வராது தோழர்ன்னா புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறாங்க!”

“இங்க சரிப்பட்டு வராதுன்னு நீங்க சொல்றது எனக்கும் விளங்கலை”

“தமிழ்நாட்டுக்கு சரிப்பட்டு வராது தோழர்”

“வேற எங்க சரிப்பட்டு வரும்?”

“வடக்கிலுள்ள பழங்குடியினங்களின் வாழ்க்கைப் பிரச்சினை ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவாயிருக்கு. அங்க சரிப்பட்டு வரும்.”

“அவங்களும், நீங்களும் இந்தியாவுக்கு ஒரே கட்சியின்னு பேசுறவங்கதானே?”

“ஆமா”

“அவங்க ஒரே கட்சி! ஒரே வேலைத்திட்டமுன்னு வைச்சிருக்காங்க. நீங்க வெவ்வேறு நிலைமைகளுக்கு வெவ்வேறு வேலைத்திட்டம் வச்சிருக்குறீங்களா?”

“இல்ல”

“அப்போ... அவங்களால தமிழ்நாட்டுல கட்சி கட்ட முடியாது, உங்களால வடக்கில் கட்சி கட்ட முடியாது. அப்புறம் எப்படி ஒரே இந்திய கட்சி?”

“நாங்க வெவ்வேறு நிலைமைகளுக்கு வெவ்வேறு வேலைத்திட்டம் வைக்கலைன்கிறது சரி. ஏன் ஒரே கட்சி நிலைமைக்கு தகுந்தமாதிரி வேலைத்திட்டங்களோடு இந்தியாவுல கட்ட முடியாதா?”

“ஒரு நடைமுறை சிக்கலைப் பார்ப்போம். இப்போ மாவோயிஸ்ட் கட்சி இந்தியாவின் சில பகுதிகளில் செல்வாக்கோடு இருக்கிறது.”

“ஆமாம். அவர்களுடைய ஆயுதப்போராட்டக் கோட்பாடு பொருந்தி வருகிற பகுதிகளில் இருக்கிறது.”

“கோட்பாடு எப்படி மக்களுக்கான செயல்பாடாகப் பொருந்துகிறது?”

“வாழ்நிலைதான் சிந்தனையையும், போராட்டம் உள்ளிட்ட செயல்பாட்டையும் தீர்மானிக்கிறது. இந்த வகையில் ஒரு சமூகத்தின் வாழ்நிலையை சரியாக விளங்கிக் கொண்ட கட்சி அச்சமூகத்தின் எதிர்கால விருப்பங்களையும், அதை அடைவதற்கான வழிமுறையையும் கோட்பாடாக வடித்து வைக்கும்போது பொருந்துகிறது.”

“சரி. அப்ப ஒரே இந்தியா, ஒரே மக்கள், ஒரே சமூகம்னா அம்மக்களின் விருப்பமும், அதை அடைவதற்கான வழிமுறையும் ஒரே மாதிரிதானே இருக்கும்! அப்புறம் ஏன் வடக்கில் சில இடங்களில் ஒத்து வருகிற போராட்டமுறை தமிழ்நாட்டுக்கு சரிவராதுன்னு சொல்றீங்க?”

“ஒரே மக்கள் சமூகம் இல்லைதான் தோழர்”

“சரி, விடுங்க. நடைமுறை சிக்கலைப் பார்ப்போம். இப்போது மாவோயிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அரசுக்கு தலைவலி. ஆகவே அரசு அக்கட்சியை நசுக்கி, அழிக்க முனைகிறது இல்லையா?”

“உண்மைதான்”

“அரசு செல்வாக்கோடு இருக்கும் பகுதிகளில் மாவோயிஸ்ட் கட்சியை அழிக்க முனைவதோடு அக்கட்சிப் பிறப்பகுதிகளில் தோன்றும்போது தொடக்கத்திலேயே அழிக்க நினைக்கிறது இல்லையா?”

“ஆமாம். ஒரு தேர்ந்த அரசு அதைத்தான் செய்யும். அதற்குத்தான் அரசு அறிவுஜீவிகளிலிருந்து பெட்டிக்கடைக்காரன் வரைக்குமாக ஒற்றர் படைகளை கட்டி உறுதிப்படுத்தியிருக்கிறது”

“இந்த நிலைமையில் மாவோயிஸ்ட் கட்சியை தமிழ்நாட்டில் கட்ட முனைகிறபோதே நசுக்கப்படுகிறது இல்லையா?”

“ஆமாம். இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். மாவோயிஸ்ட் கட்சியினர் என்று தெரிந்தப்பிறகு நாங்கள் அரசியல் நடவடிக்கைகளில்தான் ஈடுபடுகிறோமென சப்பைக்கட்டு கட்ட முடியாது. ஏற்கனவே சில இடங்களில் தனக்கு நெருக்கடியைத் தருகிற ஒரு அமைப்பு இன்னொரு இடத்தில் உருவாவதை அரசு அனுமதிக்காது. ஆகவே வடக்கில் சில இடங்களில் செல்வாக்கு செலுத்துகிற அமைப்பை தமிழ்நாட்டில் கட்ட முடியாதென்றுதான் சொல்கிறோம்.”

“அது சரிதான். தமிழ்நாட்டில் யுத்த நிலைமைகள் உடனடித் தேவையாக இல்லாத நிலையில் மக்கள் அதற்கான கட்சியைக் குறித்து அக்கறை காட்டுவதில்லை. ஆகவே, அக்கட்சியை தீர்மானிப்பதில் அரசு முதன்மைப் பங்காற்றுகிறது.”

“ஆமாம்”

“ஆனால் மாவோயிஸ்ட் கட்சி செல்வாக்கு செலுத்துகிற இடங்களில் அக்கட்சியைக் கட்டுவதில் கடுமையான நெருக்கடியிலிருக்கும் அங்குள்ள மக்கள் தீர்மானகரமான பாத்திரமாற்றுகிறார்கள்.”

“ஆமாம்”

“அவர்களுக்கு யுத்தம் செய்கிற கட்சிதான் வேண்டுமென்கிறபோது உங்களை மாதிரி யுத்தம் செய்யாத கட்சிகளை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?”

“ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”

“ஆக தமிழ்நாடு நிலைமைகளுக்கு பொருத்தமில்லாத கட்சியை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள்; யுத்தம் செய்கிற மக்கள் உங்களைப் போன்ற கட்சிகளைப் புறக்கணிக்கிறார்கள். வேறுபாடு என்னவென்றால், மாவோயிஸ்டுகளுக்கு அடக்குமுறையிருக்கும். உங்களை போன்றோருக்கு அதுயில்லை, அவ்வளவுதான்.”

“அது சரி. வெவ்வேறு நிலைமைகளுக்கு தகுந்தமாதிரி வெவ்வேறு வேலைத்திட்டங்களோடு இந்தியாவுல ஒரே கட்சியைக் கட்ட முடியுமா? முடியாதா?”

“முடியாது. புதிய சனநாயகப் புரட்சிக்கான கட்சியென்பது ஒரு தேசிய இனத்தின் சிக்கல்களைத் தீர்த்து அதை நவீன தேசமாக வளர்த்தெடுப்பதற்கான கட்சியேயன்றி, பல்வேறு தேசிய இனங்களுக்கிடையேயான சிக்கலைத் தீர்ப்பதற்கான கட்சியல்ல. விரிவா பேசலாமா?”

(தொடரும்)

- திருப்பூர் குணா

Pin It