தொண்ணூறுகளுக்குப் பின்பு நவீனத் தமிழ் கலை இலக்கிய சூழலில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட பின்நவீனத்துவம், மையம் X விளிம்பு என்னும் நிலைகளில் விளிம்பு நிலையின் பக்கம் தான் நிற்பதாக அறிவித்துக் கொண்டதுடன் அனைத்து சர்வாதிகாரங்களுக்கும் எதிரியாகவும் தன்னை முன்னிறுத்திக் கொண்டது. இச்சிந்தனை, புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளான விளிம்புநிலை குழுவினரை கலை இலக்கியங்களில் முன்னிலைப்படுத்தி அவர்களைக் கொண்டாடியது. முற்போக்கு/பகுத்தறிவுவாத கலை இலக்கிய சிந்தனைகளும்கூட அதுவரைக்கும் பொருட்படுத்தாத/அக்கறை கொள்ளாத தலித்துகள்/பழங்குடிகள் உள்ளிட்டு விபச்சாரிகள், திருநங்கைகள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், ரோகிகள், மனப்பிறழ்வுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகள் என்று சமுதாய விளிம்பின் நுனியில் மற்றமைகளாக (Others) இருக்கும் மனிதர்களை பின்நவீனத்துவம் கதை நாயகர்களாக/நாயகிகளாக வரிந்துகொண்டது. மொழி, தத்துவம், இலக்கியம், உளவியல்துறை அறிஞர்களிலிருந்து பிறப்பெடுத்து ஆளாகிய சிந்தனைப்போக்கு என்று போற்றப்படுவதுடன் ழாக் தெரிதா, மிஸல் ஃபூக்கோ, ரொலான் பர்த், டெல்யூஸ்-கத்தாரி, ஜீன் பொத்ரியார், ழாக் லக்கான் போன்ற வெவ்வேறு துறைகளை சார்ந்த மேற்கத்திய அறிஞர் குழுவினால் வடிவமைக்கப்பட்டது பின்நவீனத்துவம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் பிரெஞ்சு சிந்தனையாளர் ழாக் தெரிதா 1966 ஆம் ஆண்டு ஹாப்கின்சஸ் பல்கலைக்கழகத்தில் நிர்-நிர்மாணம் (De-construction) பற்றிய கட்டுரை வாசித்ததிலிருந்து பின்நவீனத்துவம் தோற்றம் பெற்றதாக பின்நவீனத்துவ அபிமானிகள் பேசுகின்றனர்.

பின்நவீனத்துவத்தின் மையம் :

“பின்நவீனத்துவம் அறிவார்ந்த சிந்தனைப்போக்கு, படைப்பாக்க சுதந்திரம், தன் கலாச்சாரத் தன்மைக்கு அழுத்தம், அர்த்தத்தை மரபு சார்ந்த விளக்கங்களிலிருந்து விடுவிக்கும் விழைவு, ஏற்கனவே நிறுவப்பட்ட கருதுகோள்களை மறுபரிசீலனை செய்யும்படி கேள்வி எழுப்புதல், இலக்கியப் படைப்பு இன்னபடிதான் இருக்க வேண்டும் என்று கிழிக்கப்பட்ட கோட்டை மீறுதல், வியூக அமைப்பு அரசியல் சார்ந்ததாயினும் சரி, இலக்கியம் சார்ந்ததாயினும் சரி அதை நிராகரித்தல், வேண்டுமென்றே உதாசீனம் செய்து எழும்பவிடாமல் அமுக்கி வைக்கப்பட்ட அர்த்தத்தை எடுத்துக் காட்டுவதில் முனைப்பு இவையெல்லாம் பின் நவீனத்துவத்தின் சிறப்புத் தன்மைகளாகும். இன்னொரு விதமாகக் கூறினால், பின் நவீனத்துவம் பன்முகத் தன்மையின் தரிசனம். இது கலாச்சாரத்தின் பல்திறத்தன்மை, வட்டாரத்தன்மை மற்றும் அர்த்தத்தின் வேறாம் தன்மைக்குc(The Other)cமுதன்மை தருகிறது. அதோடுகூட, அர்த்தத்தின் வேறாம் தன்மையில் வாசகனின் பங்கினையும் எடுத்துக் காட்டுகிறது” (காண்க: அமைப்பு மையவாதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல்-கோபிசந்த் நாரங்க், பக்:507) மையம், விளிம்பு, நிர்-நிர்மாணம், ஆசிரியனின் மரணம், ஊடிழைப் பிரதி, இயல்பான உண்மை போன்ற பின்நவீனத்துவ சொல்லாடல்கள் விளக்க முனைவதும் மேற்கண்ட அம்சங்களையே.

Derridaபொதுவாக பின்நவீனத்துவம் குறித்த குறைந்தபட்ச புரிதலுக்கு தொன்மைக்காலம், மத்தியக்காலம், மறுமலர்ச்சிக்காலம், நவீனக் காலம் என்னும் யுகாந்திரங்கள் பற்றிய புரிதல், கீழைத் தத்துவார்த்தங்கள் குறித்த அறிமுகம், இம்ப்ரெஷனிசஸம், எக்ஸ்பிரஷனிஸம் என்பனப்போன்ற நவீனத்துவ இஸங்கள் பற்றிய வாசிப்பு என்பது கட்டாயமாகிறது. நவீனத்துவ/பின்நவீனத்துவ தத்துவவாதிகள் பற்றிய குறைந்தபட்ச வாசிப்பு இல்லாமல் பின்நவீனத்துவ சாராம்சத்தை உள்வாங்குவது முடியாத காரியம்தான். இதனடிப்படையில் விளிம்புநிலை பிரிவுகுட்பட்ட ஆளொருவர் பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கை புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது இச்சிந்தனை தன் வலிகளுக்கு, வதைகளுக்கு, விடுதலை உணர்வுகளுக்கு தீர்வுகளை முன்வைக்காவிடினும் தன் துக்கங்களைக் காதுகொடுத்து கேட்கும் சிநேகித மனப்பான்மையைக் கொண்டிருக்கிறது என்கிற வகையில் அதன்மீது மேலதிக ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டவராக மாறிவிடும் வாய்ப்பும் பெருகிவிடுகிறது மேற்படி நபருக்கு.

அனைத்து சர்வாதிகாரங்களுக்கும் எதிரியாக தன்னை அறிவித்துக்கொள்ளும் பின்நவீனத்துவம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிர்ணயம் குறித்துப் பேசும் மார்க்சியத்துடனும் மல்லுக்கு நிற்கிறபோது உழைக்கும் வர்க்கத்தின் மீட்பராக மார்க்சியத்தை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஏமாற்றமும் குழப்பமுமே மிஞ்சும். மார்க்சியம். முதலாளி X தொழிலாளி என்னும் சட்டகம் தாண்டி தன் பார்வை வெளிக்கும் அப்பால் இருக்கும் விளிம்புநிலை குழுவினர் குறித்து சிந்திக்கவில்லை; இந்திய சமுதாய சூழலுக்குள் புரையோடிக் கிடக்கும் தீண்டாமை மற்றும் சாதிகளின் அழித்தொழிப்புக் குறித்தும் அதனிடம் ஆணித்தனமான செயல்திட்டம் எதுவும் இல்லை என்றாகிறபோது புறக்கணிக்கப்பட்ட சமூக/தனிமனித சுதந்திரம் பற்றிய மார்க்சியத்தின் அறிவுப் போதாமையிது என்று மார்க்சியத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறது பின் நவீனத்துவம்.

தலித் கலை இலக்கியமும் பின்நவீனத்துவமும்:

புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டைத் தொடர்ந்து புதிய உத்வேகத்துடன் எழுச்சிப் பெற்ற தலித் கலை இலக்கியம் இயல்பாகவே தனித் தன்மையான போர்க்குணத்தையும் தன்னுள் கொண்டிருந்தது. சாதியப் பண்பாட்டு நெருக்கடிகளிலிருந்து விடுபடத் துடிக்கும் கனவுகளோடு எழுந்த இவ்விலக்கியம் வேதம், சனாதானம், மனுதர்மம் போன்றவற்றை கேள்விக்குட்படுத்தி கலகம் புரியும் மனநிலையுடனும் விளங்கியது. அம்பேத்கர் தன் வாழ்நாளிலேயே இந்து மதத்தை அறிவுத் தளத்தில் நிறுத்தி பிளவுவாத அடித்தளத்துமேல் எழுப்பப்பட்ட அம்மதம் மனிதநேயத்துகும் தனிமனித/சமூக சுதந்திரத்திற்கும் எதிரானது என்று போட்டுடைத்திருந்தார். இதன் நீட்சியாக தனக்கு மறுக்கப்பட்ட, தான் மேம்பாடு அடைவதற்கான வழிகளை அடைத்து வைத்துவிட்டு ஒடுக்குமுறைகளின் மூலம் தன்னை அடக்கியாளும் வரலாற்றுக் கொடுமைகளிலிருந்து விடுதலை கேட்கும் மற்றமையின் குரலாக எழுந்தது தலித் கலை இலக்கியம்.

கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் இந்தியாவிலும் தமிழகத்திலும் காலூன்றிய பின்நவீனத்துவம் தீண்டாமை மற்றும் சாதிய இழிவுகளுக்கு ஆளாகி விளிம்பு நிலை சமூகத்தின் குரலாக விளங்கிய தலித் கலை இலக்கியத்தை மற்றமையாகக் கொண்டு வாரி அணைத்துக் கொண்டது. பின்நவீனத்துவத்தின் விருப்பங்களான விளிம்புநிலை, வட்டாரத் தன்மை, தன்னெழுச்சி (spontaneity), புனிதமானது/நிரந்தரமானது என்று கருதப்பட்ட மரபார்ந்த ஆனால் பிற்போக்குத்தனமானப் பழமைகளை மீறுதல், இத்யாதி அதிகார மையங்ளைக் கேள்விக்குட்படுத்துதல் என்பனப் போன்றவை தலித் கலை இலக்கியத்தின் குணாம்சங்களாக இருந்ததால் அதன் ஆதரவாளராக மாறிப்போனது பின்நவீனத்துவம். தமிழ் நவீன இலக்கிய சூழலுக்குள் கட்டுடைத்தல், கொட்டிக்கவிழ்த்தல், கலைத்துப்போடுதல், பிரதிதரும் இன்பம், ஊடிழைப் பிரதி, வாசகனின் பங்களிப்பு, ஆசிரியரின் மரணம் என்னும் சொல்லாடல்களை உச்சரித்துக்கொண்டு தனித் தன்மையான குரலுடன் களமிறங்கிய பின்நவீனத்துவம் தலித் படைப்பிலக்கியங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் செய்தது.

இதேவேளையில், தமிழ் நவீன கலை இலக்கிய சூழலில் பின்நவீனத்துவ கோட்பாடுகளை ஆதுரமாகப் பேசியவர்களுள் பெரும்பாலோர் தலித் அல்லாதவர்களாகவே இருந்தனர். அத்தகை யோரும், பின்நவீனத்துவத் தாக்கம் கொண்டிருந்த வேறு சிலரும் தங்களின் பின்நவீனத்துவ தர்க்கங்களுக்கு நியாயம் சேர்க்கும் விதமாக தலித்துகளின் சமூக, பொருளாதார, அரசியல் எழுச்சிக்கு ஆதரவாளர்களாகவும், சாதி மறுப்பாளர்களாகவும் ஆயினர் என்பதுவும் குறிப்பிடத்தகுந்தது. அவர்களது செயல்பாடுகள் தலித் கலை இலக்கிய படைப்புகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து தலித் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை வெளியிட தாராளமாக முன்வந்தன பதிப்பகங்களும். இதன் விளைவாக தமிழ்ச்சூழலில் தலித் கலை இலக்கியம் முப்போகம் விளையத் துவங்கியது.

"தங்களை இதுகாறும் ஒடுக்கி வந்த உயர்விசயங்களைத் தலித்துகள் தங்களுடைய முறைமீறலான நடத்தை, பேச்சு, சைகை, சிரிப்பு, நடையுடை பாவனை மூலமாகக் குப்புற வீழ்த்துவது தலித் உரையாடலின் தொடக்கமாகும்" என்றும் அதிகார பூர்வமானவற்றை நேர்நின்று சிரித்துப் பகடிக்கு உள்ளாக்கி இருக்கிற நிலையை மீறுகிற இயல்பால் “பேச்சு மறுக்கப்பட்டவர்களின் அதிகாரபூர்வ சக்திகளோடு உரையாடல்” என்னும் பக்தின் கூற்றுக்கு நிகரானது தலித் படைப்பிலக்கியம் என்றும் தலித் படைப்பிலக்கியத்தின் பண்பைக் குறித்து பேசினார் விமர்சகர் ராஜ்கௌதமன். இதுவரைக்கும் மத்திய தரத்து மக்களின் இழுபறி வாழ்வியலைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த தமிழ் புனைவிலக்கியம் தலித் இலக்கிய வகைமையின் வரவால் புத்துயிர்ப்பு பெற்றது. விளிம்பு நிலை பண்பும் வட்டாரத் தன்மையும் ஒருங்கிணைந்த தன்னெழுச்சியான படைப்பிலக்கியமாக வெளிப்பட்ட தலித் கலை இலக்கியத்தையும் தலித் எழுத்தாளர்களையும் தமிழ் பின்நவீனத்துவ இலக்கிய சூழல் வெகுவாகக் கொண்டாடியது; தலித் படைப்புகளுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கி கௌரவித்தது.

இந்த வாய்ப்பை/சாதகமான சூழலை பயன்படுத்திக்கொண்ட தலித் எழுத்தாளர்கள் அனைத்துத் தரப்புகளும் மெச்சத்தகுந்த படைப்புகளை வழங்கி மற்றவர்களின் படைப்பிலக்கியங்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவையல்ல தலித் படைப்பிலக்கியம் என்று நிரூபித்துக்காட்டி அசத்தினர். சொல்லப்போனால் தலித் படைப்பாளிகள் தேர்ந்தெடுத்துக் கொண்ட புனைவிலக்கிய வடிவம், சொல்முறை, உள்ளடக்கம் ஆகியவை ஏககாலத்தில் படைப்பிலக்கியத்தை உள்ளங்கைகளில் மூடிவைத்துக்கொண்டு பாதுகாத்து வருவதாக அலட்டிக்கொண்ட பிற சமூகப் பிரிவினரின் படைப்பாக்க யுக்திகளுக்கும்/நுட்பங்களுக்கும் சவால் விடும் அளவுக்கு வெளிப்பட்டன. ஆனால், தலித் அல்லாதவர்களின் இந்த தலித் ஆதரவு நிலைபாடு என்பது அப்பிரிவினர் மீதான திடீர் கரிசனத்தால் விளைந்த ஒன்றல்ல, அது தலித் அல்லாதவர்கள் தாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட பின்நவீனத்துவ இலக்கிய சிந்தனைகளுக்கு நியாயமாக நடந்துகொள்வதற்கான செயலாக்கத்தின் வடிவம் என்பதை தலித் படைப்பாளர்களுள் பலர் புரிந்துகொள்ளாததுவே நகைமுரண். அத்தகைய தலித் படைப்பாளிகள் தங்களுள் வாசிப்பு அனுபவத்தின் ஊடாக ஏற்கனவே உறைந்திருந்த கலை இலக்கிய அறிவு வளமையின் துணையோடு வியக்கத்தக்கப் படைப்புகளை வழங்கியதென்னவோ உண்மைதான். என்றாலும் தங்களது படைப்புகளுக்குக் கிடைக்கப்பெற்ற அங்கீகாரம், பாரட்டுக்கள், பரிசுகளால் புளங்காகிதம் அடைந்த இவர்கள் இச்சூழலை இயக்கும் சிந்தனைப்போக்கைப் புரிந்து கொள்ளத் தவறினர் என்பதுடன் அக்காலக் கட்டத்தில் வேகமாக நடந்தேறிய பின்நவீனத்துவ உரையாடல்களின் மீது கவனம் செலுத்தி அதனை உள்வாங்கிக் கொள்ளாமலும் போயினர்.

அத்தகைய தலித் படைப்பாளர்கள் மத்தியில் இன்றளவுக்கும் கூட பின்நவீனத்துவம் குறித்த தெளிவு வறண்டே கிடக்கிறது. அவர்கள் முன் நாம் ழாக் தெரிதா, மிஸல் ஃபூக்கோ குறித்துப் பேசத் துவங்கினால் அவர்கள் சில அடிகள் பின்வாங்கி நின்றுகொண்டு எங்களுக்கு அசோகமித்திரன் போதும் என்கிறார்கள். அதே சமயத்தில் அமைப்பியல்வாத, பின்னமைப்பியல்வாத சிந்தனையாளர்கள் பெயர்களை இவர்கள் தெரிந்து வைத்திருக்க வில்லை என்றாலும் குறி, குறிப்பான், குறிப்பீடு என்னும் சொல்லாடல்களை விவாத அரங்குகளில் பயன்படுத்தினர் என்ற அளவில் அவர்களது இச்செயல்பாடுகள் அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவ சிந்தனைகள் காலத்தின் கட்டாயம் என்றாகியிருந்ததை உணர்த்தியது/உணர்த்துகிறது. பின்நவீனத்துவ சிந்தனைகள் தலித் கலை இலக்கிய வடிவங்களுக்கு வழங்கிய சலுகைகளை உணர்ந்து செயல்பட்ட ரவிக்குமார் போன்ற தலித் எழுத்தாளுமைகள் அச்சிந்தனைப் போக்குகளை சாதாரண வாசகர் வரைக்கும் கொண்டு சென்று நிறுவுவதை தங்களது கடமையாகக் கொண்டு செயல்பட்டனர். இவர் 90&91 களில் முன்னின்று நடத்திய ‘நிறப்பிரிகை’ இதழ்களில் வெளிவந்தக் கட்டுரைகளும் விவாதங்களும் அவரது இதர இலக்கிய செயல்பாடுகளையுமே மேலதற்கு உதாரணமாக சொல்லலாம். அதே வேளையில் ப.சிவகாமி, ரவிக்குமார் போன்றோர் தாம் கண்டுணர்ந்த தலித் இளம் படைப்பாளர்களை தலித்துகளின் வலிமிகு அனுபவங்களை வட்டாரத் தன்மையுடன் கூடிய தன்னிச்சையான படைப்புகளாகப் படைக்குமாறு ஊக்குவித்தவர்களுள் முக்கியமானவர்களாக விளங்கினர்.

ஒரு சில தலித் எழுத்தாளர்கள் தலித் கலை இலக்கியத்துக்கு ஆதரவாக நின்ற பின்நவீனத்துவ சூழல் பற்றிய அறிமுகம் இல்லாதிருந்தூம் அந்நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு தலித் இலக்கியம் என்ற பெயரில் வசவசவென்று எழுதித் தள்ளிய பெரும் அவலமும் ஒரு பக்கம் நடந்தேறியது. பயன் மதிப்பீடு அடிப்படையில் இல்லாமல் சந்தை மதிப்பீடு அடிப்படையில் இத்தகையோரது படைப்புகளை வெளியிடவும் செய்தன சில பதிப்பகங்கள். தரம் வாய்ந்த படைப்புகளை வழங்கிய தலித் எழுத்தாளர்கள் சிலரோ பின்நவீனத்துவ சிந்தனைகள் பற்றிய போதுமான புரிதல் இல்லாததன் விளைவாக அச்சிந்தனையின் நியாயங்கள் பற்றி பேசும் திறனற்று தங்களது எழுத்தாற்றல் கடவுளால் தங்களுக்கென்றே அருளப்பட்ட வரப்பிரசாதம் என்பதுபோல மதர்ப்புடன் திரிந்தனர்; எழுதும் ஆர்வம் கொண்டு முன்வரும் இளம் தலித் படப்பாளிகளை ஊக்குவிக்கும் சாதாரண மனநிலையுமற்றுப்போய் உனக்கெல்லாம் எழுத்து வராது தம்பி என்பதுபோல ஏளனமாக, மேட்டுக்குடி மனோபாவத்துடன் நோக்கி அவர்களது செயல்பாடுகளை முடமாக்கினர். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் தலித் எழுத்தாளர்கள் எனப்பட்டோர் பலர் தலித் கலை இலக்கிய எழுச்சிக்கு துணை நின்ற பின்நவீனத்துவ சிந்தனைக்கு நன்றியுடன் நடந்துகொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க தலித் கலை இலக்கிய வளர்ச்சிக்கும் துரோகமே செய்தனர்.

"சமூகம், அரசியல், இலக்கியம் என்ற ஒவ்வொரு தளத்திலும் கண்மூடித்தனமான பழைமையைப் பின்பற்றாமல் அதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும்; மனித உரிமையும் தனிமனித சுதந்திரமும் தான் ஒழுங்கமைவின் உரைகல். இது இல்லாவிட்டால் அரசியல் சுதந்திரமும் வெறும் காட்சிப் பிரமைதான்; பின்நவீனத்துவ மனம் எல்லா விதமான சர்வாதிகாரப் போக்குக்கும் பொதுமைப் படுத்தலுக்கும் எதிரி. அவற்றுக்குப் பதிலாக வட்டார அளவில் இயல்பாகவும் தன்னிச்சையுடனும் எழும்பும் வெளிப்பாட்டையும் செயலையும் பின்நவீனத்துவம் ஆதரிக்கிறது"(காண்க: அமைப்புமைய வாதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல்-கோபிசந்த் நாரங்க்,பக்:504) எனும் இச்சிந்தனைப்போக்குகளின் ஆதரவாளர்கள் தலித் அல்லாதவர்களாக இருந்தும் ஆனால் தலித் கலை இலக்கியங்களுக்கு துணை நின்றதிலிருந்து மேம்பாடடைந்தது தலித் இலக்கியம். காத்திரமான பின்நவீனத்துவ உரையாடல்கள் அற்றுப் போன இன்றைய சூழலியலின் பக்க விளைவாக(Side Effect)வே தலித் கலை இலக்கியம் தொய்வு கண்டுள்ளது என்னும் வாதத்தை தொடர்புப் படுத்திப் பார்க்க வேண்டிய காலமாகுமிது.

- வெ.வெங்கடாசலம்

Pin It