ஒரு மனிதன் அமைப்பாகவோ, கட்சியாகவோ செயல்படும் முன்னரே மக்கள் விரோதப் பிரச்சனையும், அந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் கோரிக்கையும் ஓர் இடத்தில ஏற்கனவே இருக்கிறது.

அந்த மக்கள் கோரிக்கையை முன் நகர்த்தி தீர்வு பெறவே களத்தில் பொது மக்களும், அமைப்பு சார் மக்களும் திரண்டு போராடுகின்றனர்.

கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கைக்கு எவ்வகையில் நேர்மையாக களத்தில் இருக்கிறார்கள் என்பதே அவர்கள் அமைப்பாகவோ கட்சியாகவோ மக்கள் மத்தியில் நீடித்து இருக்க முடியும்.

சில கோரிக்கைகள் சில தலைமுறைகள் தாண்டியும் நிறைவேறாமலே இருக்கும். தாங்கள் இயங்கும் காலத்தில் கோரிக்கைக்காக உழைப்பதே சரியான செயல்பாடாகும்.

மக்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டதாய் இருக்கும் அமைப்புகள் / கட்சிகள் அந்த மக்களுக்கு ஏற்படவேண்டிய நேர்மையான தீர்வுக்காக அணி திரள்வது அடிப்படை அரசியல் நேர்மையாகும்.

தங்களின் முதன்மை செயல்பாட்டுக் கோரிக்கை பிற அமைப்புகளுடன் சிறு முரண்களுடன் இருப்பினும் அவற்றை கலந்து பேசி ஒத்த கருத்தை எட்ட முயற்சிக்க வேண்டும். கோரிக்கை மீதான புரிதல் ஒவ்வொரு அமைப்பு சார் மனிதர்க்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறாக இருப்பினும்., சுய விருப்பு வெறுப்பு தாண்டி பாதிக்கப்பட்ட மக்களை மனதில் நிறுத்தி கோரிக்கைக்காக உழைப்பதே நியாயமாகும். முதன் முதலாக "எந்த நிகழ்வு" தம்மை பொது தளத்தில் செயல்படத் தூண்டியது எனும் முதல் காரண நிகழ்வை எப்பொழுதும் அணையா நெருப்பாக மனதில் இருத்த வேண்டும்.

மக்களை பிளவுபடுத்தும் காரணிகள் எளிதாக உருவாகலாம், முரண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம் ஆனால் அது எவ்வகையிலும் மக்கள் கோரிக்கைக்கு தீர்வைப் பெற விடாமல் தடுக்கக் கூடாது.

கோரிக்கையால் ஒன்றிணைந்து, நேர்மையான கோரிக்கையை மட்டுமே முன் நகர்த்த செயல்படுவதே "கோரிக்கை முதல் வாதம்" ஆகும்.

தமிழ், தமிழர், தமிழ் தேசிய விடுதலை, தமிழீழ தேசிய விடுதலை, தமிழக வாழ்வுரிமை ஆகிய பிரச்னை சார்ந்து இயங்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மக்களுக்கான நேர்மையான கோரிக்கைகளை பட்டியலிட வேண்டும். தங்களின் கொள்கைகளில் சிறு முரண்கள் இருப்பினும். பட்டியலிடப்பட்ட கோரிக்கைக்காக முழுமையாக உழைப்பது எனும் உறுதி மொழி ஏற்க வேண்டும்.

100 சதம் கொள்கை உடன்பாடு ஒரு அமைப்பினுள் இருக்கும் ஒவ்வொருவரும் எட்டுவது சிரமம். ஆனால் அது சாத்தியமே. கொள்கை, கோரிக்கை உடன்பாட்டுப் புரிதலை ஏற்படுத்தும் கடமை அமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரித்தானது.

கொள்கை முரண்கள் எந்தச் சூழ்நிலையிலும் கோரிக்கை முதல் வாதத்தை பாதிக்காமல் பார்க்க வேண்டும். மக்களுக்கான பிரச்சனைகள் அதிகரிக்கும் இவ்வேளையில் பொதுத் தளத்தில் இயங்குபவர்களின் ஒற்றுமையே பலம் ஆகும்.

- தமிழ்நுட்பத் தம்பி கார்த்திக், மே 17 இயக்கம், மதுரை

Pin It