கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் அவர்களது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்கியிருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக அவர் நோய்வாய்பட்டிருந்த போதும் அவர் இயற்கை எய்திவிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

காவிரிப் படுகையான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவளி எடுப்பதற்கும், அதன் பிறகு நிலக்கரி எடுப்பதற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசுக் குத்தகைக்கு விடுத்துள்ளது. இத்திட்டத்தால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயத்தை விளக்கி, கிராமம் கிராமமாகச் சென்று மக்களைத் திரட்டுகின்ற களப்பணியில், கடந்த ஓரு மாதகாலமாக அவர் ஈடுபட்டிருந்தார். இந்திய அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுச் சதியான, மனித குலத்திற்கே விரோதமான இத்திட்டத்தை முறியடிக்கும் போராட்டக் களத்திலேயே அவர் நம்மைப் பிரிந்துள்ளார்.

திரு. கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.

திரு. கோ.நம்மாழ்வார் அவர்கள், அடிப்படையில் மனித சமத்துவம், சமன்பாட்டு அடிப்படையில் உயிர்களின் வாழ்வுரிமை ஆகியவற்றின் நிலை நின்றதால், இயல்பாக அவர் இயற்கை வேளாண்மை என்றத் துறையை தமது வாழ்நாள் சாதனைத் துறையாக ஆக்கிக்கொண்டார். தமிழர் மரபு பல்வேறு வளமான அறிவியல் கூறுகளைக் கொண்டது. அப்படிப்பட்ட தமிழர் மரபின் மிகச் சிறந்த நிகழ்காலப் பிரதிநிதியாக, நம்மாழ்வார் அவர்கள் செயல்பட்டார்கள்.

‘நிலம் நமது தாய், அது விற்பனைக்கல்ல’ என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சொல்லிவருகிறது. இதுபோன்ற ஒரு கொள்கையை நம்மாழ்வார் அவர்கள் தமது சொந்த சிந்தனைப் போக்கில் அவரது சொற்களைக் கொண்டு பல்லாண்டுகளாக பட்டித் தொட்டியெங்கும் பரப்பிவந்தார்.

பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை இலாபக் களங்களாக வேளாண் நிலங்கள் மாற்றப்பட்டு, வேதி பொருட்களின் நச்சுக் குவியலாலும் மரபீனி மாற்றப் பயிர்கள் என்ற இயற்கை அழிப்புத் திட்டங்களாலும் பாழ்பட்டுப் போன நிலங்களை, அந்த அழிவிலிருந்து காப்பாற்ற இயற்கை வேளாண் முறையை வளர்த்து செயல்படுத்தி வந்தார். இயற்கை முறையில் புதிய உரங்கள் மட்டுமின்றி, பூச்சி விரட்டிகளையும் உருவாக்கினார். மரபீனி மாற்றப் பயிர்கள் என்ற பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக உழவர்களைத் திரட்டிப் போராடினார்.

வேளாண் துறை மட்டுமின்றி சமூகவியலிலும் முற்போக்கான கருத்துகளை பரப்பிவந்தார். அவர் ஒரு சாதி மறுப்பாளர், மதச்சார்பற்றவர், சமூக சமத்துவக் கொள்கையாளர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய தமிழ்த்தேசியர். தமிழர்கள் இன அடிப்படையில் இந்தியாவிலும், ஈழத்திலும் ஒடுக்கப்படுவதை எதிர்த்தப் போராட்டங்களில் பேரணிகளில், கலந்து கொண்டவர். காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் தாமே தலைமைத் தாங்கியும், மற்றவர்களையும் கூட்டாக பங்கெடுக்க வைத்தும் செயல்பட்டவர்.

ஈழ விடுதலைக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களில் பங்கெடுத்தவர். வேளாண் அறிஞர் என்று அந்தத்துறையோடு ஒதுங்கி இருக்காமல் சமூகத்துறை பலவற்றின் உரிமை சமத்துவத்திற்காகப் போராடியவர்.

நமக்கு மரபுரிமையாக உள்ள வேம்பு போன்றவாற்றின் காப்புரிமையை வெளி நாட்டு ஏகபோக நிறுவனம் ஒன்று தமக்குரிய சொத்தாக காப்புரிமை செய்துத் திருடிக் கொண்டபோது அதனை எதிர்த்து வந்தனா சிவா அவர்களுடன் இணைந்து வழக்காடி (வேப்பமரம்) வேம்பு உரிமையை மீட்டுத்தந்தார்.

அவர் சொல்லும் வேளாண்முறை, மருத்துவம் ஆகியவற்றை நடைமுறைப் படுத்திக் காட்டும் செயற்களமாக ‘வானகம்’ என்ற வேளாண் குடியிருப்புப் பண்ணையை உருவாக்கினார். அதுமட்டுமின்றி தமது கொள்கை சிந்தனைகள் தம்மோடு நின்று போய்விடாமல் இளைஞர்களையும், உழவர்களையும், தமிழகமெங்கும் பயிற்றுவித்து பணி செய்ய வைத்தார்.

திரு. கோ.நம்மாழ்வாரின் பணிகளும், சிந்தனைகளும் செயல்களும் அவரோடு முடிந்துவிடாமல் தொடரும், மேலும் மேலும் தமிழ்நாட்டில் வளரும். நாம் அவற்றை வளர்க்க வேண்டும்.

ஆட்சிகளும், அரசு அங்கீகாரம் பெற்ற வேளாண் வல்லுனர் என்ற பெரும் புள்ளிகளும் தமிழக வேளாண்மையை, வேளாண் நிலங்களை பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக் காடாக மாற்றிக் கொன்றுவிட்ட நிலையில், அவ்வளவு பெரியப் பகைவர்களை எதிர்த்துப் போராடி இயற்கை வேளாண் முறையை மாற்றுத் திட்டமாக வைத்து ஆட்சியாளர்களும் அதுபற்றி சிந்திக்க வேண்டிய நிலையை உருவாக்கிய அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்!

அவர் வழிகாட்டிய பாதையில் அவரது கொள்கைகளை வலுவாக எடுத்து செல்வோம். அய்யா நம்மாழ்வார் அவர்களை இழந்து வாடும் தமிழ் மக்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.