’ட்ராய்’ நகரினை முற்றுகையிட்ட மாபெரும் கிரேக்கப்படை நீண்ட நாட்களாக அந்த நகரத்தினை வெல்லமுடியாமல் கடற்கரையில் நின்றது. சில நாட்கள் அமைதிகாத்த கிரேக்கப்படைகள் சென்றுவிட்டன என்று நம்பிய ’ட்ராய் படைகள்’ கடற்கரையில் ஒரு பெரிய மரக்குதிரை இருப்பதைக் கண்டார்கள். அதன் அருகிலே ஒரே ஒரு கிரேக்கவீரன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.

தன்னை தனியே விட்டுவிட்டு கிரேக்கப் படை சென்று விட்டதாக ‘சினான்’ என்கிற அந்த கிரேக்கப் படைவீரன் சொன்னான். ‘ ஏதேன்’ என்கிற கடவுளின் கோவிலுக்கு செய்யப்பட்ட அழிப்பிற்கு பரிகாரமாக இந்தக் பெரிய மரக்குதிரையை ’பரிசுப்பொருளாக’ கிரேக்கர்கள் விட்டுச் சென்றிருப்பதாக ‘ட்ராய்’ நகர மக்களிடம் சொன்னான். இதை நம்ப மறுத்த ட்ராய் நகரின் மதகுருமார் ‘லகூன்’ Laocoön எனும் ஒருவர், “கிரேக்கர்களிடம் இருந்து பரிசுப்பொருளை கொண்டு வருபவரையும் நம்புவதற்கில்லை” (I fear Greeks, even those bearing gifts) என்றார். எச்சரித்த மதகுருமார் அன்றிரவே கொலை செய்யப்பட, பிறரின் எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு ‘ட்ரோஜான் குதிரை’ யாராலும் வெல்ல முடியாத இரும்புக்கோட்டையான ‘ட்ராய்’ நகரத்திற்குள் இழுத்து வரப்பட்டது.

trojan_horse_460

சரியான நேரம் அறிந்து குதிரைக்குள் ஒளிந்திருந்த கிரேக்க வீர்ர்களிடம் ஒற்றைக் கிரேக்கவீரன் ’சினான்’ சமிக்கையை கொடுக்க, இரும்புக் கோட்டையாக இருந்த ‘ட்ராய்’ நகரத்திற்குள் முட்டாள்தனத்தினால் இழுத்து வரப்பட்ட ட்ரோஜான்-குதிரையில் இருந்து வெளிப்பட்ட நயவஞ்சக வீரர்கள், உறக்கத்திலிருந்த ‘ட்ராய்’ நகர மக்களை வேட்டையாடினார்கள். எதற்கும் அசையாத இரும்புக்கோட்டை சில கணத்தில் வீழ்ந்தது.

இதுவே பின்னாளில் “கிரேக்கனின் பரிசுப்பொருளை நம்பாதே” என்னும் சொலவடையானது.

“அமெரிக்காவின் மோசடித் தீர்மானத்தினை” ஆதரித்து ஈழ விடுதலைக்கு குழிபறிக்க முனைந்த கும்பலிடமிருந்து 2013 ஆரம்பத்தில் போராட்டத்தினை காக்க முடிந்தது. அவர்களை அப்பொழுதே அம்பலப்படுத்திய பொழுது பெரும்பாலோனோர் அமைதிகாக்கவே செய்தனர். அப்பொழுதும், அதன்பிறகும் அந்தக் கும்பலிடம் எந்த ஒரு விமர்சனமுமற்று உறவு கொண்ட இயக்கங்களை, கட்சிகளை இன்று “அடிமைகளின் மாநாட்டிற்கு இந்தியா செல்லக்கூடாது” என்கிற திமுக-காங்கிரஸ்-இந்தியா விரித்த வலையில் நன்கு அறிந்தோ - அறியாமலோ தமிழ்ச் சமூகத்தினை மாட்டிவிட முயன்றிருக்கிறது. தமிழ்ச் சமூகம் போராடும் திசையையும் கோரிக்கையையும் தாமே முடிவு செய்ய வேண்டுமென்கின்ற இந்தியாவின் செயல்திட்டத்தினை கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்த முனைந்தவர்கள் தற்பொழுது வெற்றி பெறும் இடத்தில் இருக்கிறார்கள். ‘ட்ரோஜான்’ குதிரையை தமிழ்த் தேசியப் போராட்டத்திற்குள் இழுத்து வர உதவியவர்கள், அந்தக் குதிரையை நகரத்தின் மையத்தில் விட்டுச் சென்றவர்களைப் பற்றி ஏதும் பேசாமல் இன்று மெளனம் காக்கிறார்கள்.

நகருக்குள் வந்த ’சினான்’ என்கிற தனித்த கிரேக்க வீரன் இந்திய அரசிற்கு ’சைகைக் குறிப்புக் காட்ட’, நாம் இன்று வேட்டையாடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ’சினானை’ ஆதரித்த ட்ராய் நகரவாசிகளின் தலைவர்களிடத்தில் கோபம் கொள்ள என்ன இருக்கிறது நமக்கு. அவர்களது முட்டாள்தனத்தினாலேயே அனைவரும் அழிந்தார்கள் என்கிற வரலாறு உருவாவது அவர்களுக்கு எந்த வகையில் பெருமையளிக்கப் போகிறது?. அனைத்தும் அழியும் வரை மெளனம் காக்கப் போகிறார்களா அல்லது தாம் செய்த பிழைகளுக்குப் பொறுப்பேற்று களம் காணப் போகிறார்களா என்பதை நாங்கள் கவனிக்கத் தவறமாட்டோம்.

அமெரிக்கத் தீர்மானத்தினை ஆதரித்து திசை திருப்ப முயன்றவர்களும் அந்த ’சினான்’ போன்றவர்கள் தான். ’சினான்’ ஒரு போர்வீரன் தான். அவனைப் போலவே இவர்களும் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் ‘கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் தான். ஆனால் போர்வீரனாய் இருந்தாலும் ‘சினான்’ யாருக்கு ஆதரவாக நின்றான் என்பதுவே வரலாறாக நிற்கிறது.

அமெரிக்கத் தீர்மானத்தினை ஆதரிக்கிறோமென்று சொல்லி ‘ட்ரோஜன் குதிரையை’ தமது தலைநகருக்குள் இழுத்து வரவேண்டுமென்று குரல்கொடுத்த செயல்பாட்டாளர்களை என்னவென்று சொல்வது? அவர்களைப் பார்த்து பரிதாபப்படவே முடிகிறது. போர்க்களத்தில் தமது இரு கரங்களையும் இழந்தாவது ஆயுதங்களைப் பெறவேண்டுமென்று முடிவெடுப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.

சினானின் உதவியாலும், இவனை நம்பி நகரத்திற்குள் குதிரையை இழுத்துவரச் சொன்னவர்களின் முட்டாள்தனத்தினாலும், இன்று ‘ட்ரோஜான்’ குதிரை நகரத்தின் மையத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. திறக்கப்பட்ட மரக்குதிரையிலிருந்து எதிரிப்படைகள் தமிழ்ச் சமூகக் கோட்டையை நிர்மூலமாக்கும் போரினை துவக்கி இருக்கிறார்கள். ’சினான்’ நம்பவைத்த சக அமைப்புகள் காக்கும் கள்ள மெளனம் ‘ட்ரோஜான் குதிரையின்’ வன்மத்தினை விட மோசமானது. நகரின் மையத்தில் நடந்து கொண்டிருக்கும் நிர்மூலத்திற்கு இவர்களும் நேரடியாக துணைபோனவர்கள் என்றே வரலாறு எழுதப்படும்.

திமுக-இந்தியா என்கிற ‘ட்ரோஜான்’ குதிரையை பரிசுப் பொருளாக இன்று தமிழ்த் தேசியப்ப் போராட்டத்திற்குள் அழைத்து வந்தவர்களைப் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எச்சரித்திருந்தோம். அவ்வாறு எச்சரித்த காரணத்தினாலேயே மே17 இயக்கம் “உளவாளி இயக்கம், தொண்டு நிறுவனம்” என்கிற குற்றச்சாட்டிற்கு ஆளானது. ‘’ட்ரோஜான்’ குதிரையை சந்தேகித்து எச்சரித்த அந்த ஒற்றை நபரான ‘லகூன் –Laocoön’ எவ்வாறு புறக்கணிக்கப்பட்டு பலியிடப்பட்டாரோ அவ்வாறே மே பதினேழு இயக்கமும் புறக்கணிப்பு-அவதூறு அரசியலால் வேட்டையாடப்பட்டது. அனைத்து இயக்கத்திடமும் மே17 இயக்கம் சந்தேகத்திற்குரிய இயக்கம் எனும் பொய்ப் பிரச்சாரம் எந்த ஒரு ஆதாரமும் இன்றி பரப்பப்பட்டது. பரப்பியவர்கள் வேறெவரும் அல்ல, ஒற்றை கிரேக்க வீரனாக நின்ற ‘சினான்’ என்பவனே. எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல் தமது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சினானின் வார்த்தைகளை நம்பி ‘லகூன்’ புறக்கணிக்கப்பட்டதும் தமிழ்ச் சமூகத்தின் சமகால வரலாறு.

தனது ஒவ்வொரு நகர்வினையும், ‘சினான்’ தனது பேச்சு லாவகத்தினால் மறைத்து பிறரை ஏமாற்றிய சந்தர்ப்பங்கள் கடந்த 4 வருடங்களாக ‘ட்ராய்’ நகருக்குள் நிகழ்ந்தது. நான்கு ஆண்டுகளாய் இந்த நிகழ்வுகளை பலரிடம் எச்சரித்தும் மெளனமே பதிலாகக் கிடைத்தது. ஒருசிலர் அனைத்தினையும் கேட்டு விட்டு,சினானிடம் அதிக நெருக்கத்தினை ஏற்படுத்தி பலமேடைகளில் ஏற்றவும் செய்தனர். ‘ட்ராய்’ நகரத் தந்தைக்கு மாலை அணிவிக்கும் பெருமையும் சினானுக்கு கிட்டியது ஆகப்பெரும் நகைமுரண்.

 இன்று அவனது பேச்சினை நம்பி ஏமாந்த ‘ட்ராய்’ நகரின் தலைமைப் படையதிகாரிகள், அரசன், அமைச்சர்கள் இந்த ‘ட்ரோஜன்’ குதிரையை தமிழகத்தின் மாற்று இயக்கங்களின் மத்தியில் ‘தமிழ்த் தேசியத்திற்கான பரிசுப்பொருளாக’ இழுத்து வந்து நிறுத்தி இருக்கிறார்கள். வெளியே ‘தமிழ்த் தேசியக் குதிரையாகவும்’, உள்ளே திமுக எனும் படைவீரனாகவும், கைகளில் இந்திய தேசியம் எனும் ஆயுதங்களுடனும் ‘ட்ரோஜான்’ காத்திருக்கிறது. ட்ராய் நகரினை வீழ்த்த ஒரே ஒரு ட்ரோஜான் போதுமானதாக இருந்தது. தமிழ்ச் சமூகம் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடாது என்பதால்தானோ என்னவோ மேலும் இரண்டு-மூன்று ட்ரோஜான்களை உருவாக்கி நகருக்கு வெளியே இன்றும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவைகளைப் பற்றியும் அறிவித்துமாயிற்று. வழக்கம் போல மெளனமே பதிலாக இருக்கிறது. இனிமேலும் தமிழ்ச் சமூகம் விழித்துக் கொள்ளுமா எனத் தெரியாது. ஆனால் மே பதினேழு இயக்கத்தின் எதிர்ப் போராட்டம் கடந்த 4 வருடங்களைப் போலவே இனியும் தொடரும். களத்தினை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க முடியாது. சமரசம் தற்கொலைக்கு சமம்.

‘இலங்கை காமன்வெல்த் குழுவில் இருந்து நீக்கப்படவேண்டும்’, ‘மாநாடு இலங்கையில் நடத்தப்படக் கூடாது’ என்கிற நேர்மையான தமிழ்ச் சமூகக் கோரிக்கைகளை தவிர்த்துவிட்டு, ‘இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது’ என்று கோரிக்கையை திசை திருப்பிய ‘கூட்டமைப்பு’ இதற்காக பதில் சொல்லக் கடமைபட்டவர்கள். பட்டினிப் போராட்டம் என அழைக்கப்பட்ட இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே, இப்போராட்டத்தினை நிர்வகிக்க, பரப்ப, விரிவுபடுத்த, கோரிக்கையை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட, ‘இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு கூட்டமைப்பில்’, மே பதினேழு இயக்கத்தினை சேர்க்கக்கூடாது என்று தோழர்.தியாகு உட்பட முடிவெடுத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மே17 இயக்கத்தினை புறக்கணித்ததைப் பற்றி கேள்வி கேட்காமல் அமைதி காத்த கூட்டமைப்பின் பிற இயக்கத் தோழர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

மே பதினேழு இயக்கம் சேர்க்கப்பட்டிருக்குமானால் ’கோரிக்கைகளை திசைதிருப்பிவிட அனுமதிக்க மாட்டார்கள்’ எனும் எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைகளுக்கும் கோடானுகோடி நன்றிகள். ஒருவரின் நேர்மையை, உடனடியாக ஆழப்புரிந்து கொள்பவர்கள் நேர்மையான எதிரிகளும், துரோகிகளுமே. இந்த இரண்டில் நீங்கள் எந்த பொறுப்பினை வகிக்கிறீர்கள் என எமக்குத் தெரியாது. எமக்கான பணி காத்துக் கிடக்கவே செய்கிறது. காமன்வெல்த் மாநாட்டு எதிர்ப்பினை விட முக்கியமாக 13வது சட்டத் திருத்தமும், மாகாணத் தேர்தலை மையப்படுத்தாத அரசியல் விவாதமே இங்கு அரங்கேறியதன் அடிப்படை காரணம், தமிழீழ ஆதரவு ஆற்றல்களை பொதுவாக்கெடுப்பு நோக்கிய பயணத்தினை தடுத்து நிறுத்தி திசை திருப்பவே.

இந்த சதியை உடைப்பதற்காகவே எமது ‘இந்தியா-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை’ 25ஆம் தேதி திட்டமிடப் பட்டிருக்கிறது. 13வது சட்டத்திருத்தம் ஏமாற்று, பொதுவாக்கெடுப்பினை உடனே நடத்து, காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தாதே என்கிற முதன்மை முழக்கங்களுடன் இந்திய அலுவலகத்தினையும், காமன்வெல்த்தின் பின்புலமாக இருக்கும் இங்கிலாந்து தூதரகத்தினையும் முற்றுகை இடுகிறோம்.

commonwealth_may17_640

தமிழீழத்தினை நேசிக்கும் நேர்மையான தோழர்களை பங்கேற்க அழைக்கிறோம். திசைதிருப்பல் அரசியல்களை விரட்டியடிக்கும் அரசியல் வலிமை தமிழீழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது என்று இந்திய அரசிற்கும், திமுகவிற்கும் உணர்த்தும் அவசியம் நமக்கு இருக்கிறது.

கோரிக்கைகளை காயடிக்கும் ‘ திமுக-அதிமுக-இந்தியா’வின் கூட்டணியை முறியடிக்கும் மனவலிமை உள்ளவர்கள் மட்டும் எமது போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கள்ள மெளனம் காத்தவர்களை நாங்கள் அழைக்கவில்லை. ‘ட்ராய்’ நகரினை மீட்கும் ஒரு மாபெரும் பொறுப்பில் ஒரு சிறு பகுதியை நாங்கள் மேற்கொள்கிறோம்.

‘ட்ரோஜான்’ குதிரையையும், அதில் இருந்து வெளிப்படும் நயவஞ்சக வீரர்களையும் எதிர்த்து களமாட அனைத்து ‘ட்ராய்’ நகர மக்களையும் அழைக்கிறோம். ‘சினான்’ தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு கிரேக்க வீரர்களுக்கு சைகைகளை காட்டவும், மேன்மேலும் குதிரைகளை நகரத்திற்குள் அழைத்து வருவதற்கு அனுமதிக்காமல் தடுக்கவும் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமானது.

‘ட்ரோஜான் குதிரையை’ முதன்முதலில் கண்டறிந்த மே பதினேழு இயக்கம் வேட்டையாடப்படுவதற்குள் ‘ட்ராய்’ நகரம் விழித்துக் கொள்ளட்டும், அல்லது மே பதினேழு இயக்கம் வேட்டையாடப்பட்ட பின்பாவது நகரம் காக்க அனைவரும் விழிக்கட்டும்.

- புருசோத்தமன்.தி, ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம் (9659463414,  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

15 comments

15
annamalaiar
மே 17 இயக்கத்தின் அடிபடை கொல்கைகள் என்ன ? நான் தெரிந்து கொல்ல விரும்புகிரென்
Karthik
இன்று இந்தியா மாநாடு நடக்கும் இலங்கைக்கு போகக் கூடாது என போராட அழைக்கும் அவர்கள், நாளை காமன்வெள்த் விளையாட்டு போட்டிகளுக்கு இந்தியா போகக் கூடாது என்பார்கள். உடனே அம்மா சட்ட மன்ற தீர்மானம் : இந்தியா விளையாட்டில் கலந்து கொள்ளக்கூடாது... தமிழக வீரர்கள் போக மாட்டார்கள்.... தீர்வு போன்ற ஒன்றைக் காட்டி அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இவர்களின் நுண் அரசியலை விளக்கும் கட்டுரை... நன்று.
selvaganapathy
the best thing of this article is the time it is written, the way it is narrated, intellectual analysis.
John
சினான் - சிறப்பான பொருத்தம் - தாத்தா திமுகவில், பேரன் சினானாக். லயோலா மாணவர்களின் போராட்டத்தின் முதல் நாளன்று, மாணவர்களிடம் உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லி சினானும் அவரது கட்சியினரும், குழப்பம் விளைவிக்க முயன்றதை கண்டு அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது, முந்தைய செயல்பாடுகளையும், தற்போதைய செயல்பாடுகளையும் பார்க்கும்பொது, திமுக களம் இறக்கி விட்டிருக்கும் நபர் என்பது தெளிவாக புலப்படுகின்றது.
விழிவேந்தன்
வரலாறு என்பது தனிநபர்களாலோ இயக்கங்களாலோ தீர்மாணிக்கப் படுவதில்லை. மக்களே வரலாற்றை தீர்மானிக்கிறார்கள். தம்முடைய அறிவுஜீவி தனத்தை நிரூபிக்கும் பொருட்டு தாமே கோரிக்கைகளை வகுத்துக் கொண்டு தம் பின்னால் மக்கள் ஆட்டு மந்தைகளைப்போல வர வேண்டியவர்கள் என்றும், மக்களிடம் அந்த கோரிக்கைகளை திணிக்க முயலும் இயக்கங்களை அடையாளம் காண்போம். பட்டினி போராட்டம் இருந்த தியாகு வின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் அவரையும் கொச்சைப் படுத்துகிறார்கள். தோழர் அருண்சோரி சொல்லித்தான் தோழர் தியாகு, தான் முன்வைத்த கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கினார் என்று சொல்வது தியாகுவின் சுயசிந்தனையை கேள்விக்குளாக்குவது போலாகும். வரலாற்றில் இருந்து இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளட்டும். இல்லையென்றால் தக்கதொரு சமயத்தில் வரலாறே இவர்களுக்கு பாடம் கற்பிக்கும்.
Kumar
வட்டுக்கோட்டையில் மக்கள் கூடி தனி ஈழமே தேர்வு என்று கூறியதை ஒட்டி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் எப்படி மக்களிடம் திணிப்பதாக கருத முடியும். வட்டுக்கோட்டை தீர்மாணத்திற்கு எதிராக நடைபெற கூடிய நகர்வுகளை அடையாளம் காண்பதும் அவசியம் ஆகின்றது. இந்தியாவும் திமுகவும் தொடர்ச்சியாக இது போன்ற நகர்வுகளை மேற்கொள்கின்றன. அமெரிக்க தீர்மானத்தினை எதிர்த்து மாணவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது, வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்ட அருன்சோரியின் குழு 'அமெரிக்க தீர்மானத்தை' ஆதரிக்ககோரியது. அப்பொழுதும் மக்கள் பக்கம் நிற்காமல், திமுகவின் பக்கம் நின்ற அருன்சோரி, யாருடைய வேலைகளை நிறைவேற்ற தற்பொழுது திமுகவை மாற்று இயக்கஙகளுக்கு இடையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றார்.
மொர்தெகாய்
//மக்களே வரலாற்றை தீர்மானிக்கிறார்கள். தம்முடைய அறிவுஜீவி தனத்தை நிரூபிக்கும் பொருட்டு தாமே கோரிக்கைகளை வகுத்துக் கொண்டு தம் பின்னால் மக்கள் ஆட்டு மந்தைகளைப்போல வர வேண்டியவர்கள் என்றும், மக்களிடம் அந்த கோரிக்கைகளை திணிக்க முயலும் இயக்கங்களை அடையாளம் காண்போம்//

மக்கள் உண்மையின் பக்கம் நிற்காவிடில் நாம் மக்களின் பக்கம் நிற்பது சந்தர்ப்பவாதம்.
விழிவேந்தன்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25230:2013-10-21-09-44-20&catid=1:articles&Itemid=264
விழிவேந்தன்
மக்கள் நீர் போல என்றால் நான் மீன் போல இருக்க வேண்டும் - தோழர் மாவோ.
observer
மே 17 இயக்கம் எந்த அடிப்படையில் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறது என்பதை 2012 மார்ச் மாதத்திலேயே கீற்று தளத்திலேயே கட்டுரை வெளியிட்டுள்ளது. அதனை படித்தால், மே 17ன் நிலைப்பாடு தெரியும். ஆனால் தமிழ்நாடு மக்கள் கட்சியின் அமெரிக்க தீர்மான நிலைப்பாடு குறித்து கேள்வி எழுகின்றது. திமுக அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் நடத்தியது. பிறகு அப்படியே பல்டி அடித்து தீர்மானத்தில் திருத்தங்கள் கோரியது. தமிழ்நாடு மக்க்ள் கட்சியும் மாணவர் போராட்டங்கள் தொடங்கிய பின்பு, வருமான் வரி அலுவலகத்தை முற்றுகை இட்டு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக்கோரியது. பின்பு, திடீரென பல்டி அடித்து அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்தது. 2 பல்டி நேஷனல் கம்பெனிகளுக்கும் இன்னொரு ஒற்றுமை உண்டு. லயோலா மாணவர்கள் போராட்டம் தொடங்கிய முதல் நாள் வெள்ளியன்று அங்கு வந்த தமிழ்நாடு மக்க்ள் கட்சியின் குழு உண்ணாவிரத்தை கைவிட சொல்லி குழப்பம் விளைவித்தது. அடுத்த நாள் சனியன்று கருணாநிதியும் உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி அறிக்கை வெளியிட்டார். மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதால் இரண்டு பல்டி நேஷனல் கம்பெனிகளுக்கும் என்ன சிக்கல்? அமெரிக்க தீர்மானத்தை முதலில் ஆதரித்துவிட்டு, அனைவரும் எதிர்க்கின்றனர் என்று தெரிந்தவுடன் பல்டி அடிக்கும் த.ம.க. விற்கு இருக்கும் அடிப்படை புரிதல் இவ்வளவுதானா? ஒரு கோரிக்கையினை கூட ஒழுங்காக சிந்திக்கும் அளவிற்கு புரிதல் இல்லாதவர்களா அல்ல்து திமுகவின் அல்லக்கைகளா இந்த த.ம.க.?
vinothkumar vp
வடக்கு மாகாண தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்த ஒரே அமைப்பு தமிழ்நாட்டில் மே17. ஆனால் மக்கள் வாக்களித்தார்கள். அப்படியானால் அவர்கள் மே17 ஐ நிராகரித்துவிட்டார்களா? அல்லது ஈழ கோரிக்கையை விட்டு விட்டார்களா? 13ஆவது சட்ட திருத்தத்தை ஏற்று கொண்டு விட்டார்களா? கண்டிப்பாக இல்லை... சரி தமிழ்நாட்டில் மற்ற அமைப்புகள் ஏன் புறக்கணிப்பு கோர வில்லை... ஏதோ தான் தான் அறிவு ஜீவி போலவும் ஈழத்தின் மீட்பர் போலவும் நினைத்து மக்களையும் தமிழ்தேசிய தலைவர்களையும் முட்டால்களை போலவும் எண்ணிக்கொண்டு அங்கே கள நிலைமை என்ன வென்றே புரிந்துக்கொள்ளாமல் அழைப்புவிடுத்த தங்கள் அறிவுஜீவிதனத்துக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய அடி இது. சிங்கள் பேரினவாத இராணுவ கட்டமைப்பில் சிக்கியுள்ள மக்களால் தேர்தலை புறக்கணிக்க முடியுமா? அதற்கான சூழல் உள்ளதா? என எதையும் கருத்தில் கொள்ளாமல் தான் தான் சமரசமற்ற சமர் செய்வதாகவும் நினைத்து அழைப்பு விடுத்தீர்கள். அமையப்போவது ஒரு கைபாவை அரசு என தெரிந்தும் மக்கள் வாக்களித்தது, தங்களுக்கு சிறிதளவு உரிமையாவது கிடைக்கும், இராணுவமயம் சிறிதாவது தளர்த்தப்படும் என்பதாலேயன்றி சமரசமல்ல.. இதே போல் தான் ஐநா எதிர்ப்பு, அமெரிக்கா எதிர்ப்பு, பிரிட்டன் எதிர்ப்பு என்பதெல்லாம் கேட்பதற்கு முற்போக்கு போல தெரிந்தாலும் உண்மை நிலையில் இந்திய அரசை காப்பதாகவே அமையும் என்பதை எப்போது புறிந்துக்கொள்வீர்கள்
vinothkumar vp
மே 17விடம் ஒரு கேள்வி?.....இதுவரை காம்ன்வெல்த் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக அவர்களை மையப்படுத்தி ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறதா மே17. . இதில் சமரசமற்ற போர்... நாங்கள் டெசோ... என வீர வசன‌ம் வேறு.. உங்கள் கோரிக்கையை (சமரசமற்ற ???) இந்தியாவுக்கு தான் வைக்கிறோம் என்கிறீர்கள். மகிழ்ச்சி தான். ஆனால் மார்க்& ஸ்பென்ஸரை அல்லவா முற்றுகையிடுகிறீர்கள். கொக்ககோலா பாட்டிலிடமும், கேஃப்சி கோழியிடமும் வீர சமர் புரிவதுதான் இந்திர அரசுக்கு நெருக்கடி ஏர்ப்படுத்துமா.... மே17 கார்த்திக் இவ்வாறு பதிவு செய்துள்ளார்...//...அமெரிக்க வணிக நிறுவனங்களை எதிர்ப்பது அவர்களின் ளொப்ப்ய்யை உடைப்பது போன்றது என்பது புரியவில்லையா?..// கொக்க கோலா எதிர்த்தால் அந்த இடத்துக்கு பெப்சி வரும்.. கேஃப்சி எதிர்த்தால் மெக் டொனால்ட் வரும்... ஏர்டெல் எதிர்க்க ஏர்செல் வரும்... ஒரு முதலாளியை எதிர்ப்பது அடுத்தவனுக்குதான் ஆதாயம். முதலாளித்துவ அரச கட்டமைப்பை உடைப்பதுதான் மர்க்சியம்...
Rahuvaran
''இந்தியா காமன் வெல்த் மானாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் இந்தியா தனிமை படுத்தப்படும்''
.-- இலஙகை தூதன் கரியவாசம்.

''இந்தியா காமன் வெல்த் மானாட்டில் கலந்து கொள்ளாவிட்ட்டால் இலங்கை சீனா பக்கம் செல்லும்''.-- தயத் ஜெயதிலகா.. இலங்கைக்கான பிரென்ச் தூதன்.

''இந்தியா காமன் வெல்த்தில் கலந்து கொள்ள கூடாது'' என்ற கோரிக்கை அயோக்கிய தனமானது.-- மே பதினேழு இயக்கம்.

லைக் -- ராஜபக்சே...
Sankar
இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் என்று 2011 ல் கருத்து நிலவியது. மே 17 இயக்கம் அதனை இனப்படுகொலை என்றே கூறவென்டும் என்று கூறியது. சோ கால்ட் புரட்சியாளர்கள் மே 17 இயக்கத்தை ராஜபக்சேவின் கைக்கூலி என்று கூறினார்கள். தற்பொழுது இனப்படுகொலை என்னும் கருத்தின் நியாயம் அறிந்து, அனைவரும் இனப்படுகொலை என்றே கூறுகின்றனர். 2012 ல் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக வும் அவர்களது கைக்கூலிகளும் கூறினர். அமெரிக்கத் தீர்மானம் எதிர்க்கப்பட வேண்டியது; பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணைகளை உள்ளடக்கிய தீர்மானமே நாம் வேண்டுவது என்று மே 17, 2012 ல் கூறியது. அப்பொழுதும், ராஜபக்செ எதிர்க்கும் தீர்மானத்தை மே 17ம் எதிர்க்கிறது; இவர்கள் ராஜபக்சேவின் ஆட்கள் என்று இதே 'புரட்சியாளர்கள்' 2012 லும் கூறினார்கள். ஆனால் 2013 ல் அமெரிக்கத் தீர்மானத்தை அனைவ்ரும் எதிர்த்தனர். தற்பொழுது, இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ளக் கூடாது என்று டெசோ மக்கள் கட்சி கூறுகின்றது. மாநாடே இலங்கையில் நடக்கக் கூடாது என்று மே 17 கூறுகின்றது. இப்பொழுதும் மே 17 மீது அதே அவதூறு வைக்கப்படுகின்றது. வழக்கம்போல் இன்னும் சில மாதங்கள் கழித்து, மே 17 வைக்கும் கோரிக்கையின் நியாயம் இவர்களுக்கு புரியக்கூடும். இன்னும் வளரணும் தம்பிகளா!
சாணக்கியன்
இங்கே சொல்லப்படும் கருத்துக்களை படித்தால், தமிழரின் ஒற்றுமை லட்சணம் சந்தி சிரிக்கிறது ---- இலங்கையில் இவர்களை இவ்வளவு நாள் சிங்களன் எப்படி விட்டு வைத்தானென்று வியப்பாயிருக்கிறது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.