இந்தியச் சமூகத்தில், நாதியற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையாகவும், திக்கற்றவர்களுக்குத் தெரியும் திசையாகவும், உரிமையற்றவர்களுக்கான ஊன்றுகோலாகவும், நீதித்துறை விளங்க வேண்டும் என்பது சாமானியர்களின் எதிர்பார்ப்பு; அதுவே, சான்றோர்கள் வகுத்த சரியான இலக்கணம்!

     நமது நாட்டில் அரசு நிர்வாகத்தினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் போதும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும், அமைதிப்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து மனித உரிமைகளை மீறும் போதும் - நியாயம் கேட்டு நீதிமன்றங்களின் கதவுகளைத் தான் தட்ட வேண்டும் என்பது கட்டாயமானதாகும்.

     இந்த நிலையில் இந்திய நீதிபதிகளின் செயல்பாடுகள் பொதுவாகக் கவலையைத் தருகின்றன. அவர்கள் கையூட்டுப் பெறுவதும், ஊழல் புரிவதும், அன்பளிப்புகளை வாங்கிக் குவிப்பதும், கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு ஆடிக்களிப்பதும், அவ்வப்போது தலைப்புச் செய்திகளாய் வந்து மனதைக் கலக்குகின்றன. சமூக விரோதக் கூட்டத்தினருடன் மறைமுகத் தொடர்பு கொள்வதும், பணத்துக்காக நீதியை விற்பதும், ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து போவதும் நம்மைக் கூச்சப்பட வைக்கின்றன.

     உச்ச நிதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ‘நீதிபதி வர்மா’-1977ஆம் ஆண்டு, ஒரு சுற்றறிக்கையை விடுத்தார். அதில், நீதிபதிகள் யாவரும் தங்களது ஆண்டு வருமானம் மற்றும் சொத்துக் கணக்குகளைக் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கூறினார். மேலும், நீதிபதிகள் ஒவ்வோர் ஆண்டிலும் தாங்கள் வாங்கிய சொத்துக்கள், பணப் பரிமாற்றங்கள் குறித்து அந்த ஆண்டின் முடிவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கூறினார். சில ஆண்டுகள் அவரது அறிவிப்பு உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்புறம் அது, ‘கடந்த காலச்’ செய்தியாகிவிட்டது!

     அண்மையில் வழக்கறிஞர் ஒருவர், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ மூலம் நீதிபதிகளின் சொத்து மற்றும் வருமானங்கள் குறித்துத் தகவல் வேண்டும் எனத் தகவல் ஆணையரிடம் விண்ணப்பம் செய்தார். ஆனால் அதனை, உச்சநீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதி, தள்ளுபடி செய்துவிட்டார். காரணம், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நிதிபதிகளிடம் கணக்குக் கேட்க முடியாது; நிதித்துறை என்பது அரசியல் சட்டத்துக்கு மட்டுமே பொறுப்பானது; ஆகவே அது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது அல்ல”– என்று அறிவிப்புச் செய்தார்.

     அவருடைய இந்த அறிவிப்புக்கு ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், மாறுபட்டுள்ளார். “நீதிபதிகள் அனைவருமே பொது மக்களின் ஊழியர்கள் என்பதால், அரசியல் சட்டத்துக்குப் பொறுப்பானவர்கள் என்ற காரணத்ததைக் கூறி தப்பிக்க முடியாது” – என்று தம், கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

     நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கையும், வருமான விபரத்தையும் தெரிவிக்க வேண்டியதில்லையா? இந்நாள் – முன்னாள், உச்சநீதிமன்ற நிதிபதிகளின் முரண்பட்ட கருத்துக்கள், முளைவிட்டமைக்கான அடிப்படைக் காரணங்கள், அடுக்கடுக்காய்த் தோன்றுகின்றன.

     இந்தியாவில் சாதாரணக் குடிமகன்கூட தமது பண வரவு செலவு - சொத்து மதிப்பு - ஆகியவற்றைக் குறிப்பிட்டு வருமானவரி செலுத்த வேண்டும்; செலுத்துகின்றனர். அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விபரங்களை, வருமான வழிகளைத் தாக்கல் செய்திட வேண்டும்; ஆண்டுதோறும் தாக்கல் செய்கின்றனர். அவ்வப்போது அவை ஆய்வு செய்யப்பட்டு முறைகேடு தெரிந்தாலோ, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்க்கப்பட்டு உள்ளது என்றாலோ, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. தவறான சொத்து விபரம் அளித்தவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள், அவர்கள் மீது குற்றவியல் வழக்கும் தொடரப்படலாம். ஆனால், நீதிபதிகளுக்கு மட்டும் ஏன் இந்த விதி விலக்கு? மக்கள் மத்தியில் நியாயமான இக்கேள்வி மக்கள் மத்தியில் எழுவது இயல்புதானே!

     சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாய் இருக்கலாம். ஆனால் நமது நீதிமான்கள், அப்படிப்பட்டவர்களாகவா இருக்கின்றார்கள்!

1. உத்திரப்பிரதேச மாநிலம், காசியாபாத் நீதிமன்ற ஊழியர்களின் சேமநலவைப்பு நிதியில் ஏழுகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதற்கான புகார் எழுந்தது. மேற்படி புகார் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்திட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் சம்பந்தப்பட்டுள்ள பலர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள்; இவர்களில் பலர் நீதிபதிகளாகப் பணிபுரிந்து, ஓய்வும் பெற்றுவிட்டனர். மேலும், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே, நீதிபதிகளின் மீதான ஊழல் புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்!

2. தற்போதைய மேற்குவங்க மாநில உயர்நீதி மன்ற நீதிபதி, ‘சௌமித்ரா சென்’ – 1993ஆம் ஆண்டு, இந்திய ஸ்டீல் ஆணையத்துக்கும், ‘ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா’ என்ற நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற வழக்கில், நீதிமன்றத்துக்குச் செலுத்திய காப்புத் தொகை முப்பத்து இரண்டு லட்ச ரூபாயை வங்கியிலுள்ள தனது சொந்தக் கணக்கில் நீதிபதி, போட்டுக் கொண்டார் - என்பது குற்றச் சாட்டு. இக்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு விசாரனைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உச்ச நிதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதி ‘சௌமித்ரா சென்’ என்பவரைப் பதவி நீக்கம் செய்யலாம் என்று குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளார். இப்பரிந்துரை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூன்றில் இருமடங்குப் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும்வரை, ‘சௌமித்ராசென்’ நீதிபதியாகவே நீடிப்பார்! நீதித்துறை, அரசியல் சட்டத்துக்கு அல்லவோ கட்டுப்பட்டது?!

     3. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ‘நிர்மல்ஜித் கவுர்’ மற்றும் ‘நிர்மல் யாதவ்’ ஆகியோரை ஊழல் புகாரின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை செய்து வருகிறது. அந்த நீதிமன்றத்தில், கூடுதல் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய ‘சஞ்சிவ் பன்சால்’ – என்பவரின் உதவியாளர், ‘நீதிபதி நிர்மல்ஜித் கவுரி’டம் பதினைந்து லட்சம் ரூபாயைக் கையூட்டாகக் கொடுத்துள்ளார். உடனடியாக அந்த நீதிபதி ‘நிர்மல்ஜித் கவுர்’ காவல் துறைக்கு புகார் செய்துவிட்டார். புகார் விசாரிக்கப்பட்டது காவல் துறையினரின் விசாரணையில் உண்மை வெட்டவெளிச்சமானது. ஆம் அதே நீதிமன்றத்தின் வேறு ஒரு நீதிபதியான ‘நிர்மல் யாதவ்’ என்பவருக்குத் தரப்பட வேண்டிய அக்கையூட்டுப் பணம் கைமாறி - பைமாறி - பெயர்மாறி - நிர்மல் யாதவுக்குப் பதில் நிர்மல் கவுருக்குப் போன விவரம் பகல் வெளிச்சமாய்ப் பளிச்சிட்டது! ‘நீதிபதி நிர்மல் யாதவ்’ மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.

     4. இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த சோலாண் மாவட்டத்தில் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும், நிலம் வாங்கியது தொடர்பான ஊழல் புகாரில் அவருடைய பெயர் அங்கும் இடம் பெற்றுள்ளது. இப்படியாக நீதிபதிகள் மீது ஊழல், கையூட்டுப் புகார்கள் நாள்தோறும் எழுப்பப்பட்டு வருகின்றன.

     நீதிபதிகள் – வழக்கறிஞர்கள் – காவல் அதிகாரிகள் – அரசியல்வாதிகள் ஆகியோரிடையே வலுவான நெருக்கம் உருவாகி வருவதும், ‘நீதித்துறையின் ஊழல்’ அதிகரிப்பதற்கான காரணம் என, சமூக ஆர்வலர்கள் கருத்துரைக்கின்றனர்.

     நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள், நீதிபதிகள் அனைவரும் நேர்மையாளர்களாகவும், உத்தமர்களாகவும் விளங்குவார்கள் என்று நம்பினர் போலும்! அதனால், ஊழல் புரியும் நீதிபதிகளைத் தண்டிப்பதற்கான தனித்த சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை போலும்!

     மேலும், தவறு செய்யும் நீதிபதிகளைப் பதவி நீக்கம் கோரும் தீர்மானத்தை, ஏற்க நூறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்; அய்ம்பது மாநிலங்களவை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திட வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பதவி நீக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இந்த நடை முறையைப் பின்பற்றி, நம்நாட்டில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எந்தவொரு நீதிபதியும் இதுவரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பது பாகற்காயைவிடப் படுகசப்பான உண்மை!

     சட்டக் குழுவின் 195-ஆவது அறிக்கையின் அடிப்படையில், ‘நீதிபதிகள் விசாரணை மசோதா 2006’ – என்னும் சட்ட முன்வடிவை, நடுவன் அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மசோதாவின் அடிப்படையில், ‘தேசிய நீதித்துறை கவுன்சில்’ – ஏற்படுத்தப்பட வேண்டும்; “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தேசிய நீதித்துறை கவுன்சிலுக்குத் தலைவராக இருப்பார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர், உயர் நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளிலிருந்து இருவர், உறுப்பினர்களாக இருப்பார்கள். நீதிபதிகள் மீது வரும் புகார்கள் குறித்து இக்குழுவினர் விசாரிப்பார்கள். குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதிகள் தங்கள் தரப்பை எடுத்துக் கூறிட வாய்ப்பு வழங்கப்படும். அந்த விசாரணை ஆறு மாத கால வரம்புக்குள் முடிக்கப்பட வேண்டும். விசாரணைக் காலத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதியைப் பதவியில் இருந்து விலகியிருக்கமாறு இந்தக் கவுன்சில் ஆணையிட முடியும். கற்றச் சாட்டு, உண்மை எனத் தெரியவந்தால், குற்றத்தின் தன்மைக் கேற்ப, தண்டனையை அந்தக் குழு தீர்மானிக்கலாம். குற்றச்சாட்டுக் கடுமையாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிபதியைப் பதவி நீக்கம் செய்திடக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யலாம்”. இவ்வாறான, ‘நீதிபதிகள் விசாரணை மசோதா - 2006’ – உடனடியாக நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும், அப்படி வந்தால் நீதித் துறை சிறந்து விளங்கிட வாய்ப்பு ஏற்படும்.

     நீதித்துறையில் ஊழல் என்பது மற்றத் துறைகளையெல்லாம்விட மிகவும் அபாயகரமானது. அரசு மற்றும் தனியார் துறைகளின் ஊழலால் மக்கள் பாதிக்கப்படும் பொழுது நியாயம்கேட்டு நீதித்துறையினை நாடுகின்றனர். ஆனால், நீதிதேவதையின் கருவறையே ஊழல் கறைபடிந்து காணப்படுமானால் வேறு புகலிடம் ஏது?

     “எந்த ஒரு நாட்டில், நீதித் துறையில் ஊழல் பெருகுகிறதோ, அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்” என்பார் ‘எமர்சன்’ என்னும் மேல்நாட்டு அறிஞர். அவரின் அக்கூற்று நம் அனைவரின் நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும். நம் நீதித்துறையில் சின்னமே துலாக்கோலைச் சமன்செய்து, தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதி தேவதை தான்! ஒருபால் கோடாமைக்கும், சார்பு நிலைக்கும் அப்பால் நின்று செயல்படுவதற்கான அடையாளங்கள் அவை! நீதித்துறையின், அந்த அடையாளங்கள் அழிந்துவிடக் கூடாது என்பது மக்களின் குறிப்பாக – பாமர மக்களின் எதிர்பார்ப்பு!

- பி.தயாளன்

Pin It