ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு விட்டது. மாணவர்களின் எழுச்சியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற விடுமுறை முடிவுக்கு வந்து கல்லூரிகள் தொடங்கி விட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் ஈழத் தமிழருக்கு விளையப் போகும் நன்மை என்ன? மாணவர் போராட்டம் எப்படித் தொடரப் போகின்றது? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. 

முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிடாத போராட்டம்:

2008 – 2009 ஆம் ஆண்டுகளில் இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையைத் தமிழ்ச் சமூகம் சந்தித்தது. ஈழத் தமிழர் மீதான இன அழிப்புப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது.ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதோடுதமிழீழ விடுதலைக்கான 60 ஆண்டுகாலப் போராட்டத்தைச் சிதைத்தது இலங்கை அரசு. அப்போரை உலக நாடுகள் ஆதரித்து உதவியும் வேடிக்கைப் பார்த்தும் நின்றன. போரை நிறுத்தக் கோரி தமிழகம் மேற்கொண்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கை அரசுக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்திய அரசு செய்தது.

போர் முடித்த பிறகு இனக்கொலைச் செய்த சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை எல்லாம் சிங்களமயமாக்கி வருகின்றது.வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழர்கள் இன்று மூச்சுவிடக் கூட வழியின்றி சிங்கள இராணுவப் பிடியில் சிக்கியுள்ளனர். வடக்கு பகுதியில் மட்டும் 2 இலட்சம் சிங்கள இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயக பகுதிகளான இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. தமிழர் அடையாளங்களை அழித்து,தமிழர் நிலத்தை பறித்துஇன அழிப்பை முடிக்க வேகமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.ஈழத்தில் கட்டமைப்புரீதியான இனப்படுகொலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்னொருபுறம் தமிழ்நாட்டுத் தமிழர்களும் புலம் பெயர் வாழ் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பொறுப்புணர்வோடு களம் இறங்கி இருக்கின்றனர்.இது சிங்கள அரசின் கொக்கரிப்புக்கு சவாலாகி இருக்கின்றது.புலம்பெயர் வாழ் தமிழர்கள் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அளப்பெரும் பணியாற்றி வருகின்றனர். போர்க்குற்ற ஆவணங்களையே போர்க் கருவியாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தமிழரின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது சர்வதேச நாடுகளைத் தன் பக்கம் வைத்துக் கொள்ள பெருமளவில் பணத்தையும் உழைப்பையும் செலுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளியுள்ளது.

இனப்படுகொலையைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியுடன் தமிழகம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை நிற்கும் தன்னுடைய வரலாற்றுக் கடமையை முன்னெப்போதும் இல்லாத அளவில் செய்து கொண்டிருக்கின்றது.இனப்படுகொலைக்கு துணை நின்றதோடு இன்று வரை இலங்கை அரசைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தமிழகம் போராடிக் கொண்டிருக்கின்றது.

சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக எழுந்து நிற்பதற்கானத் தருணத்தை எதிர்பார்த்து ஈழத் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.இன அழிப்புப் போரின் அவலத்தில் இருந்தும் இழப்புகளிலிருந்தும் மெல்ல மீண்டு வந்து இன அழிப்புக்கு எதிராகப் போராடுவதற்கு புலம்பெயர்வாழ் தமிழர்கள்,தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டம் துணை செய்து கொண்டிருக்கின்றது.

2013 இல் மாணவர் எழுச்சி:

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 13வயது மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் வரப்போவதாக செய்தி வந்தது. தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பின் வெளிப்பாடாக தமிழக மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் போராட்டம் பெருந்தீயாகப் பற்றி எரிந்தது.அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை.இலங்கை அரசே கொண்டு வந்த கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை  (LLRC)முன் வைத்தது. அந்த தீர்மானத்தை மேலும் சீர்குலைப்பதில் இந்திய அரசின் பேருதவியுடன் சிங்கள அரசு வெற்றிப் பெற்றது.இறுதியாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தாத மற்றும் இலங்கை அரசு நடத்தி வரும் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசத்தைக் கொடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் மாணவர் போராட்டம் தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்து வந்தது. பன்னாட்டு இனப்படுகொலை விசாரணை, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்எடுத்துச் செல்லப்பட்டது.இதன் வெற்றியாக, ’தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்து காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க., காங்கிரசு தலைமையிலான மத்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து கூட்டணியில் இருந்து வெளியேறியது.   ஆனால், இந்திய அரசு தன் நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சமும் மாறியதாக தெரியவில்லை.

ஈழ விடுதலைக்கு தடையாய் இந்தியாவென்னும் பெருஞ்சுவர்:

தமிழினப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு ஆதரவை அளித்து வருகின்றது இந்திய அரசு. ஈழத்தில் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த அடையாளமும் அழிந்து போய் விடும் அபாயம் நிலவுகின்றது. தெற்காசியாவில் உள்ள மிகப் பெரும் நாடாகவும், 7 கோடி தமிழர்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்கிக் கொண்டிருப்பதால் இந்தியாவின் இசைவின்றி ஈழத் தமிழர் தொடர்பான எந்த ஒரு சர்வதேச நகர்வும் நடப்பது இல்லை. சர்வ தேச நாடுகளின் ஆதரவை திரட்டும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியும் இந்தியா என்னும் முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தடையாக இந்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கை விளங்குகின்றது. 

இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி தமிழீழ விடுதலைக்கானத் தடைகளை உடைப்பதே ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய புவிசார் அரசியலாக இருக்கின்றது.இந்த பணியைச் செய்து முடிக்கும் கடமை தமிழ்நாட்டு மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த கடமையை நிறைவேற்றுவதற்கான முதன்மை பொறுப்பை வரலாறு தமிழ்நாட்டு மாணவர்களிடம் கையளித்து இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்.

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு:

மார்ச் மாதத்தில் தமிழகத்தைச் சூழ்ந்த போராட்ட மேகம் இலயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த பட்டினிப் போராட்டத்தில் இருந்து மின்னலுடன் இடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி    இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கும் விதமாக சென்னையில் உள்ள மத்திய அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.இம்முற்றுகையில் சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  அதிலிருந்து போராட்டக் களத்தில் இறங்கிய பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களோடு இணைந்து போராட்டத்தைத் தொடர்ந்து முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு மார்ச் 14ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அன்றளவில் 15மாவட்டங்களைச் சேர்ந்த மாணவப் பிரதிநிதிகள் மாணவர் போராட்டக் குழுவில் இருந்தனர்.

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரனையை வலியுறுத்தியும்,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தைக் கொண்டு வரக் கோரியும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவின் சார்பாக மார்ச் 18 ஆம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டமும் மத்திய அரசு அலுவலகங்களை  முற்றுகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலும் மார்ச் 18ஆம் தேதி அன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. தொடர்ச்சியாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, மாணவர் பேரணி என்று நாள்தோறும் போராட்டம் வளர்ந்தது.இந்த வரிசையில் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இராணுவ தலைமையகம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.இந்த போராட்டங்களின் துணையோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து உள்ளோம்.

 நீண்ட காலப் போராட்டத்திற்கு தயாராகும் தேவை:

சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை,தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கானப் போராட்டத்தை தொடர வேண்டும்.இப்போது வந்துள்ள மாணவர் பேரெழுச்சி மழை போல் மண்ணில் சரிந்து விழாமல் ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் எழ வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியமே தமிழீழ விடுதலைக்கு துணை செய்யும்.அதற்கு தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட நீடித்த போராட்டமாக வளர்தெடுக்க மாணவர்கள் தம்மை அமைப்பாய் உருத்திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம். 60 ஆண்டு காலமாக நீளும் ஈழப் போராட்டத்தின் ஆழ அகலத்தைப் கற்றுக் கொண்டு நீண்ட காலப் போராட்டத்திற்கு எம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடக்கம் முதல் இன்று வரை ஆதரித்தும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்தும் வருகின்ற தமிழகத்தின் அறம் சார்ந்த அரசியல் தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்தை வார்த்தெடுக்க உறுதி கொள்கிறோம். 

தமிழ்நாட்டு மீனவர் மீதான தாக்குதல்:

இந்திய அரசின் சிங்கள ஆதரவு வெளியுறவுக் கொள்கை இலங்கை தீவோடு நின்றுவிடவில்லை.தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் சிறைப்படுத்தப்படுவதும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. இது வரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய அரசு இலங்கையை நட்பு நாடு என்று வெட்கமின்றி சொல்வதோடு மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் இது நேர்கின்றது என்று சிங்களக் கடற்படையின் இனவெறித் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசி கொண்டிருக்கின்றது.

ஈழத் தமிழ் அகதிகளின் நிலை:

இது மட்டுமல்ல, இந்திய அரசின் சிங்கள ஆதரவுக் கொள்கை இனப்படுகொலை அரசின் பிடியில் இருந்து தப்பித் தாய்த்தமிழகம் வந்த ஈழத் தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. மத்திய,மாநில அரசுகள் தமிழீழ அகதிகளை ’அகதிகள் முகாம்’ என்ற பெயரிலே திறந்தவெளி சிறைக்கூடத்தில் அடைத்து வைத்திருக்கின்றன. மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்திய அரசு அகதிகளுக்கான சர்வதேச விதிமுறைகளிலே இதுவரை கையெழுத்திடவில்லை. அதுமட்டுமல்ல சட்டவிரோத முறையில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலே செங்கல்பட்டிலும்,பூந்தமல்லியிலும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவரைக்கூட காவல் துறையின் கண்கானிப்பின் கீழ் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு.முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினாலும், வாழ்வதற்கு வழி இல்லாமலும் தமிழகத்தை விட்டும் தமிழீழ மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறுகின்றனர்.

இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையால் வஞ்சிக்கப்பட்டு வரும் மீனவர்களோடும் தமிழகத்தில் அகதிகளாக வாடும் ஈழத் தமிழர்களோடும் கரம் கோர்த்து நமது போராட்டத்தை வலுப்படுத்த இருக்கின்றோம்.உணர்வெழுச்சியால் பொங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களையும் நோக்கிச் செல்வோம்.

கோரிக்கைகள்:

இந்திய அரசே!

  1. இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்று அங்கீகரி!
  2. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிடு!
  3. இனப்படுகொலை செய்த சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதித்திடு!
  4. தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கிடு!

தமிழக அரசே!

  1. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழி நின்று தமிழகத்திற்குள் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதித்திடு!இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அகற்றிடு!
  2. இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடு!
  3. பூந்தமல்லியிலும் செங்கல்பட்டிலும் உள்ள சட்டவிரோத வதை முகாம்களை உடனடியாக களைத்திடு!

 

முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு நினைவு நாள்       மே1இல் தமிழகம் தழுவிய அளவில் பேரணி, பொதுக்கூட்டம்

வாரம்

பிரச்சார இயக்கம்

ஏப்ரல் 15 – ஏப்ரல் 21 வரை

’இலங்கையைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கத்தின் கீழ் இலங்கை தூதரகம் வெளியேற்றுதல், ஐபிஎல் போட்டிகள், காமன் வெல்த் மாநாடு புறக்கணித்தல் உள்ளிட்டவற்றைக் கோரி பரப்புரை.

ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை

சிறப்பு முகாம்களைக் களைக்கக் கோரியும், இரட்டை குடியுரிமை வழங்கக் கோரியும் தமிழீழ அகதி முகாம்களை நோக்கிய மாணவர் பரப்புரை

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை

மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை நோக்கியப் பரப்புரை

மே 6 முதல் மே 18 வரை

இந்திய அரசின் தமிழின விரோத கொள்கையைக் கண்டித்தும் நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும் பரப்புரை

மே 19

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் பேரணி, பொதுக் கூட்டங்கள்

      

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு

தொடர்புக்கு: திவ்யா 9551629055, இளையராஜா: 9500044452, பெருமாள்: 8807322832

Comments

2 comments

2
இறைகற்பனைஇலான்
ஈழத்தில் உதயன் பத்த்ரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதர்கு,
அது அவர்களே செய்தது என்று டக்லஸ் தேவாநந்தா என்கிற கொலைக்குற்றவாளி அவசரமாக சொல்வதினால் டக்லஸ்தான் செய்திருப்பார் என்று உணரமுடிகின்றது. எனவே தமிழ் நாடு காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியான அவரை சர்வதேச நீதிமன்றத்தில் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழ் நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கலாமே?
Periyasamy
இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சுதந்திர தமிழீழத்தை உருவாக்கித்தர இந்திய மத்திய அரசு (!?) நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை சர்வ வல்லமையும் பொருந்திய மத்திய அரசில் இருப்பவர்களும் வட இந்திய ஊடகங்களும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் விமர்சித்தார்கள். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று காரணம் கூறப்படுகிறது. இலங்கையின் பிரச்சினைக்குரிய வடகிழக்கு பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அது புத்திசாலித்தனமானதாக இருந்திருக்கும். வரலாற்றுரீதியாக பார்க்கும் போது அத்தீவின் வடகிழக்கு பகுதி சிங்களப்பகுதியோடு ஒத்திருந்ததை விட பல வகைகளிலும் தென்னிந்தியாவோடு தான் (குறிப்பாக தமிழகத்தோடு) அதிகம் ஒத்திருந்தது. அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே. காலனிய ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகள் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அடங்கியிருந்தன. அவ்வாறே நிர்வாகமும் செய்யப்பட்டன. பிற்பாடு தான் கடல் கடந்து நிர்வாகம் செய்வது சிரமம் என கருதப்பட்டு அத்தீவின் தமிழ்ப்பகுதிகள் சிங்களப்பகுதிகளோடு இணைக்கப்பட்டு கொழும்பு நிர்வாகத்தின் கீழ் வந்தன. இலங்கை தனிநாடாக இருந்தாலும் அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டை விட சிறியது தான். மக்கள் தொகையோ வெறும் இரண்டு கோடி. ஆகையால் இலங்கையின் வடகிழக்குப்பகுதியை தமிழகத்தோடு இணைப்பது சாத்தியமான ஒன்றே. இப்படி ஒரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் பெரும்பாலான இந்திய மாநிலங்கள் பிரச்சினை இல்லாமல் ஏற்றுக்கொள்ளும். இந்திய தேசவிரோத செயல் என்று யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். இத்தகைய இணைப்பு ஏற்பட்டால் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஈழத்தமிழர்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் நன்மை தான் விளையும்.”ஈழ நிலம் தமிழ்நாட்டுடன் இணைவதன் மூலம் ஈழத்தமிழர்களும் இந்திய அடிமைகளாக மாறவேண்டுமா? தமிழ்நாட்டுத்தமிழர்கள் இந்தியாவில் அடிமைகளாக இருப்பது போதாதா?” என ஈழத்தமிழர்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் வேறு வழி இல்லை. தனித்தமிழீழம் என்பது சாத்தியமாக முடியாத ஒரு கனவு. 1871ல் மொத்த இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்த தமிழர்கள் இப்போது வெறும் பதினைந்து சதமாக குறைந்துபோய் உள்ளார்கள். சிங்கள அரசின் தொடர்ச்சியான சிங்களக்குடியேற்றம், ராணுவமயமாக்கம், புத்தமயமாக்கம் ஆகியவற்றால் ஈழம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், கப்பம் அறவிடுதல் ஆகியவற்றால் ஈழமக்கள் நாசமடைந்து வருகிறார்கள். இதே பாணியில் சம்பவங்கள் தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருட காலத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் முற்றிலும் அழிந்து போவார்கள். இப்படி அழிந்து போவதை விட தமிழ்நாட்டோடு இணைந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மேலானது. மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஈழ மக்களுக்கு பரந்து விரிந்த இந்தியா பாதுகாப்பானது. தமிழக மீனவர்களும் நாள்தோறும் உயிருக்கு பிரச்சினையை சந்திக்க வேண்டியதில்லை. கச்சத்தீவு தகராறும் இருக்காது. இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சினை எழுந்தால் எளிதாக சமாளிக்கும் சாத்தியமும் உண்டு. சேது சமுத்திரம் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தேவையே இல்லை. இந்திய ராணுவத்தளமாக இருக்கும் திருக்கோணமலையில் கப்பல்கள் வசீகரமாக நங்கூரமிடலாம். இந்துமாக்கடல் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் இந்திய அரசு தனது பிடியை இறுக்கி வைத்துக்கொள்ள முடியும். பாக்கிஸ்தான், வங்காள தேசம், சீனா ஆகிய பகை நாடுகளால் சூழப்பட்ட இந்தியாவுக்கு கடல் பிராந்தியத்தின் மீதான ஆளுகை மூலம் வலிமை உண்டாகும். இலங்கையின் கிழக்கில் அம்பாறை பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் தமிழ் மற்றும் அரபி இரத்தக்கலப்பு கொண்டவர்கள். இவர்கள் பலரின் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து போய் குடியேறியவர்கள் தான். இந்தியாவோடு இணைவதன் மூலம் உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய நாட்டோடு இணைந்த உணர்வு இம்மக்களுக்கு உண்டாகும். சிங்களருக்கு பயப்படவேண்டிய தேவையே இல்லை. இதையெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யோசிக்க வேண்டும். ”ஈழத்தமிழர்களுக்கு என தனிப்பட்ட அடையாளம் உண்டு. தமிழ்நாட்டோடு இணைவதன் மூலம் அந்த அடையாளத்துக்கு பாதிப்பு உண்டாகும்” என ஈழ மக்கள் நினைத்தால் மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் சுயாட்சி கவுன்சில் மாதிரியான ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு காலத்தில் இந்திய சுதந்திர தினத்தின் போது தங்கள் வீடுகளின் மீது இந்திய தேசியக்கொடியை ஏற்றியவர்கள் தானே ஈழ மக்கள். பின் எதற்கு தயங்க வேண்டும்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.