இதயத்தால் சிந்தித்த சில எண்ணங்கள்

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே:
 
வணக்கம். கூடங்குளம் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 600 நாட்கள் ஆகிவிட்டன. நானும், நண்பர்கள் ராயன், மை.பா., முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்டோர் இடிந்தகரைக்குள் முடக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் நாள், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்த அன்று, வைராவிக்கிணறு கிராமம் நோக்கி ஒரு பேரணி நடத்திக் கொண்டிருந்தோம். சரியாக மாலை 4:45 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, “ஆட்சித்தலைவர் டாக்டர் செல்வராஜ் உங்களையும், அருட்தந்தை செயக்குமார் அவர்களையும் நாளை காலை அலுவலகத்துக்கு வந்து சந்திக்கச் சொல்கிறார்” என்றார். எனது தலைக்குள் ஓர் அலாரம் ஓங்கி ஒலித்தது. பேரணி முடிவில் பேசும்போது “நாளை எதற்கும் தயாராய் இருங்கள்” என்று தெரிவித்துவிட்டு, வைராவிக்கிணறு ஊரின் பத்ரகாளியம்மன் கோவிலில் இளைஞர் கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு, இடிந்தகரை வந்து சேர்ந்தேன். மாவட்ட ஆட்சித் தலைவரே அழைத்தார். “எங்களைக் கைது செய்வதற்காக அழைக்கிறீர்களா?” என்று கேட்டேன். “நான் நினைத்தால் 2,000 போலீசாரை அனுப்பி உங்களைக் கைது செய்ய முடியாதா? எதற்கு இங்கே அழைக்க வேண்டும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
 
udayakumar_330கூடங்குளம் அணு உலையின் பக்கம் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்படும் செய்தி எங்களுக்கு வந்து கொண்டிருந்தது. “நானும் அருட்தந்தை செயக்குமாரும் திருநெல்வேலிக்கு வர முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக ஆட்சித் தலைவரிடம் சொன்னதும், “நான் ராதாபுரம் வருகிறேன், நீங்கள் இருவரும் அங்கே வாருங்கள்” என்றார். “நீங்கள் இங்கே இடிந்தகரைக்கே வாருங்கள்” என்றேன் நான். மக்களிடம் கலந்தாலோசித்தோம்; “யாரும் எங்கேயும் போக வேண்டாம்” என எங்களைப் பணித்தனர் புத்திசாலி மக்கள். அடுத்த நாள், மார்ச் 19, 2012 அன்று காலை ஆட்சித் தலைவர் மீண்டும் அழைத்தார். “வர முடியாது” என்று திட்டவட்டமாகச் சொன்னேன். சற்று நேரத்தில் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த 18 பேரும், கூட்டப்புளியில் 178 பேரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தனது மகனின் பிறந்தநாளுக்காக ஈரோடு சென்றிருந்த தோழர் முகிலன் தொடர்வண்டியில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டார். தோழர்கள் சதீஷும், வன்னி அரசும் கைதாயினர்.

காவல்துறை அராஜகத்தைக் கண்டித்து நான், ராயன் உட்பட 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கினோம். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. விஜயேந்திர பிதாரி என்னை சரணடையச் சொன்னார். “மக்கள் விடமாட்டேன் என்கிறார்கள்; நாங்கள் கிட்டத்தட்ட 10,000 பேர் இருக்கிறோம். எங்கள் அனைவரையும் கொண்டுபோகுமளவு வாகனங்களை அனுப்புங்கள்; நாங்கள் அனைவரும் கைதாகிறோம்” என்று சொன்னேன். “இதுதான் நான் உன்னோடு பேசுகிற கடைசி முறை!” என்று எச்சரித்தார். அன்று இரவு நாகர்கோவிலுள்ள எனது பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பத்து நாட்கள் கழித்து எனது பச்சைப் பிள்ளைகள் படிக்கும் நூலகம் நாசமாக்கப்பட்டு, புத்தகங்கள் கிழிக்கப்பட்டு, குடிநீர் குழாய்கள் உடைத்தெறியப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டு ஒரு மிகப்பெரிய தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண நூலக எரிப்பைப் போன்ற எனதுப் பிள்ளைகளின் நூலக அழிப்பு என்னையும், எனது மனைவியையும், எங்கள் பள்ளிப் பிள்ளைகளையும், ஆசிரியைகளையும் மிகவும் பாதித்தது. (இன்றுவரை காவல்துறை யாரையும் விசாரிக்கவுமில்லை, கைது செய்யவுமில்லை. என் பள்ளிக் குழந்தைகளின் நூலகத்தைச் சூறையாடியவர்கள், அதன் சூத்திரதாரிகள் அனைவரும் அதற்கான பாவச் சம்பளத்தை உறுதியாகப் பெறுவர்.)

அந்த நெருக்கடியான காலகட்டத்திலிருந்து, இன்று வரை இடிந்தகரையைவிட்டு வெளியே போகவில்லை. அருகேயுள்ள கூத்தங்குழி கிராமத்துக்கு மட்டும் பெரும்பாலும் கடல் வழியாக ஐந்தாறு முறை சென்று வந்திருக்கிறேன். கைதுக்கோ, சிறைக்கோ பயந்து வாழும் தலைமறைவு வாழ்க்கை அல்ல இது; எங்கள் போராட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள நடத்தும் தவம்தான் இந்த இடிந்தகரை திறந்தவெளி சிறைச்சாலை வாழ்க்கை. உழைத்து வாழும், உண்மையான, அன்பார்ந்த இடிந்தகரை மக்கள் எனக்கும், நண்பர்களுக்கும் உணவும், உறையுளும் அளித்துக் காத்து வருகிறார்கள். நாங்கள் தங்கியிருக்கும் அருட்தந்தை இல்லத்தைச் சுற்றி ஆயிரக் கணக்கான மக்கள் இரவும், பகலும் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

பெண்களுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு என இரண்டு வீடுகள் இருப்பதுபோல, எனக்கு இசங்கன்விளை கருவான இடம், இடிந்தகரை உருவான இடம். எனது கையளவுக் கல்வியும், சாதாரணத் திறமைகளும், வாழ்வின் அடித்தட்டில் கிடந்து உழலும் உழைக்கும் மக்களுக்கு பயன்படுவது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.

இரண்டு அருமையான சகோதரிகளுடன் பிறந்து, அற்புதமான பல பெண்களுடன் உயர் கல்வி கற்று, சுமார் பதினான்கு வருடங்கள் ஆயிரக் கணக்கான இளம்பெண்களுக்கு தந்தை போன்றதோர் ஆசிரியராகப் பணியாற்றி, வாழ்வின் துவக்கம் முதலே பெண்கள் மேல் மதிப்பும், மரியாதையுமாக இருந்ததால், இன்று இடிந்தகரைப் பெண்கள் மத்தியில் ஒரு சகோதரனாக, மகனாக நான் இடம் பிடித்திருக்கிறேன். இந்தப் பிறவியில் இதைவிடப் பெரியதொரு பதவி, பட்டம் எனக்கு கிடைக்கப் போவதில்லை. சாதி, மதம், ஊர், தொழில் கடந்துப் பெற்றிருக்கும் இந்தப் பேறு இன்றைய தமிழகத்தில், இந்தியாவில் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

எனது வாழ்வில் அப்பா, அம்மா, மனைவி, மகன்கள் தவிர எனது வழியில் நடப்பவர்கள் என்று யாரும் கிடையாது. ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்தும், அவர்கள் மீது என்னை, எனது கருத்துக்களை நான் திணிப்பதில்லை. காரணம் யாரையும் வழிநடத்துமளவுக்கு நான் பெரிய ஞானியல்ல. அதேபோல, நான் யாரையும் அடியொற்றி நடப்பவனுமல்ல. ஆனால் ஒத்தக் கருத்துடைய உண்மையானத் தோழர்களோடு கைகோர்த்து அருகருகே நடந்து வந்திருக்கிறேன்; இன்னும் நடக்கத் தயாராயிருக்கிறேன்.

இருபது தேசத் துரோக வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட முன்னூற்றைம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள், எஞ்சிய வாழ்நாள் முழுக்க சிறையிலேயே இருக்கும்படி செய்யலாம். வயதான பெற்றோர் பயத்திலேயே வாழ்கிறார்கள். குழந்தைகள் கவலைப்படுகிறார்கள். மனைவி குடும்பத்தை, பள்ளியை, சொத்துக்களை, வாழ்க்கையை தனியாக இழுத்துக்கொண்டிருக்கிறார். “ஏன் கணவனை திருப்பி அழைக்காமல் விட்டுவைத்திருக்கிறாய்” என்பன போன்ற சமூக நெருக்கடிகள் ஒருபுறம். கடுமையான பொருளாதார நெருக்கடி மறுபுறம். காவல்துறை, உளவுத்துறை அராஜகம் இன்னொருபுறம். இவற்றையெல்லாம் துரும்பாகக் கொண்டு செயல்படும் இரும்பனைய மனைவி என்பதால், வாழ்க்கை இன்னும் நகர்ந்து கொண்டிருக்கிறது. நான் வீட்டைவிட்டு இவ்வளவு நாட்கள் பிரிந்திருந்தது கிடையாது. வருகைதரு ஆசிரியராக வெளிநாடுகளுக்கு, வெளியூர்களுக்கு கற்பிக்கப் போனாலும் ஒரு மாதத்துக்கு மேல் போவதில்லை.

பெற்றோரை, மனைவி, மகன்களை ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு ஒரு முறைப் பார்க்கிறேன். அவர்கள் இடிந்தகரை வருகிற நாளன்று வேறு ஏதாவது நிகழ்வுகள் இருந்தால், அல்லது பார்வையாளர்கள் வந்திருந்தால், வீட்டாரோடு உட்கார்ந்துப் பேசக்கூட முடியாமற் போகும். விடைபகர்ந்து பிரியும்போது மனைவியோடு கைகுலுக்கிக் கொள்வதோடு சரி. “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” என்பது போலத்தான் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது. “ரோமில் வாழும்போது, ரோமர்கள் போலவே நட” என்பதோர் ஆங்கிலப் பழமொழி. அனுதினமும் கத்தோலிக்க அருட்தந்தையர்களுடன் வாழ்வதால், அவர்களைப் போலவேதான் தனிக்கட்டையாகவே தனிப்பட்ட வாழ்க்கை நகர்கிறது.

பொருளாதார விருத்திக்காக, வளமான எதிர்காலத்துக்காக கணவனை வருடக்கணக்கில் பிரிந்திருக்கும் மனைவியர், வெளிநாடுகளில் கிடந்து தவிக்கும் கணவர்கள், மரணத்தால் பிரிக்கப்பட்ட தம்பதியர் போன்றோரின் துன்பங்கள், துயரங்கள் தெளிவாகப் புரிகின்றன. தனிமையான படுக்கையோ, காமமோ அல்ல பிரச்சினை. உணர்வுப்பூர்வமான ஆதரவு இன்றி இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினமானது. உளவுத் துறைகளும், அரசுகளும் தொடர்ந்து ஒட்டுக் கேட்பதால், மனைவியோடு தொலைபேசியில்கூட ஆசையாகப் பேசமுடியாது.

மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் என்னையும், நண்பர்களையும், எங்கள் குடும்பங்களையும் கண்காணிப்பதுபோல, இந்த நாட்டிலுள்ள கொள்ளைக்கார அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கண்காணித்தால் எவ்வளவோ குற்றங்களைத் தடுக்க முடியும், ஏராளமான மக்கள் பணத்தைக் காப்பாற்ற முடியும். இந்த நாட்டில் எந்தப் பிரதமரும், முதல்வரும், அமைச்சரும், அதிகாரியும் என்னைப் போன்று எண்ணிறந்த முறை “நான் வெளிநாட்டிலிருந்து பணம் பெறவில்லை,”, “நிரூபித்தால் தூக்குத் தண்டனைக்கும் தயாராயிருக்கிறேன்” என்று திருப்பித் திருப்பி சொல்லியிருக்க மாட்டார்கள். எந்த அரசு வேலையும் பார்க்காத நான், பொதுப்பணத்தைக் கையாளாத நான், ஊடகச் செவ்விகளில், செய்தி நிகழ்ச்சிகளில், பத்திரிகையாளர் சந்திப்பில் என ஏராளமான முறை இந்த சத்தியப் பிரமாணத்தை எடுத்திருக்கிறேன்.

எங்களைப் பார்க்க வருகிறவர்களில் சிலர் “எப்படி நேரம் போகிறது? என்ன செய்வீர்கள்?” என்றெல்லாம் கேட்கிறார்கள். உண்மையில் நேரமில்லாமல் தவிக்கிறோம். சினிமா, தொலைக்காட்சி, வெளியூர்ப் பயணம், இயல்பு வாழ்க்கை என்று எதுவுமே இல்லாத நிலையிலும், நேரம் ஓர் அரிதான விடயமாகவே இருக்கிறது. சந்திக்க வருகிறவர்களோடு பேசுவது, ஊடகங்களை சந்திப்பது, போராட்டங்கள் திட்டமிடுவது, நடத்துவது, பத்திரிக்கைகள் படிப்பது, எதிர்வினை புரிவது, மக்களை சந்திப்பது, தொலைபேசியில் பேசுவது, படிப்பது, எழுதுவது என ஓய்வு இல்லாமல், மிகுந்த நெருக்கடியோடுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டப் பந்தயத்துக்கு நடுவேயும், உள் அமைதியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இறைவன்/கடவுள்/தெய்வம் என்று ஒரு தனி நபரோ, சக்தியோ நமக்கு மேலேயிருந்து நம்மையெல்லாம் மேலாண்மை செய்வதாக நான் நம்பவில்லை. ஆனால் இந்த உலகை, பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கும் அதே சக்தி, விசைதான் நம்மில் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையிலும் இயக்குகிறது என நம்புகிறேன். சுவாமி விவேகானந்தர் ஓர் அருமையான உவமை சொல்கிறார். அதாவது, இயற்கை என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் மையப்புள்ளிகளைக் கொண்ட, சுற்றளவு எங்குமே இல்லாத ஒரு மிகப் பெரிய வட்டம். அது போல ஒரு தனிமனிதன் தன்னை மையப்புள்ளியாகக் கொண்ட, சுற்றளவு எங்குமே இல்லாத இன்னொருப் பெரிய வட்டம். இந்த வட்டங்களை இணக்கமாய் வைத்திருப்பதற்காகத்தான் நம்மை மையப்படுத்தும் (centering) முயற்சிகளில் நாம் ஈடுபடுகிறோம். நான் யோகா, லூர்து மாதா கோவிலில் தியானம், நண்பர்களுடனான அளவளாவல் எனும் முறைகளைக் கையாள்கிறேன்.

நானோ, பிற நண்பர்களோ எந்த எதிர்பார்ப்புகளோடும் இங்கேப் போராட வரவில்லை. அதுபோல மக்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும் இறங்கிப் போவதற்கும் தயாராகவே இருக்கிறோம். மக்களுடைய, எங்களுடைய தன்னலமற்றத் தன்மையால்தான் எங்கள் போராட்டம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அரசியல் கட்சி தொடங்குவீர்களா, தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று பலரும் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் நானோ, நண்பர்களோ இங்கே வரவில்லை. தேர்தல் அரசியலில் எனக்கு ஈடுபாடில்லை. தனது பதவியை, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பணம் தேட வேண்டும்; பிறரை மட்டம் தட்டி வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; சூதும், வாதும் சொல்லி தன்னலத்தைக் காத்துக் கொள்ளவேண்டும். இப்படியெல்லாம் வாழ என்னால் இயலாது, நான் விரும்பவுவில்லை. சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், சுயநலவாதம் போன்றவற்றோடு வாழ்வது ஈனப் பிழைப்பு என்று கருதுகிறவன் நான்.

எனவே நான் தேர்தல் பதவிகளை விரும்பவில்லை. பெரும்பாலான இன்றைய மக்கள் பிரதிநிதிகளை மக்கள் திருடர்கள், ஒழுக்கங்கெட்டவர்கள், மோசமானவர்கள் என்றே பார்க்கிறார்கள். அவர்களை சந்தேகிக்கிறார்கள், கடுகளவும் நம்புவதில்லை, மதிப்பதில்லை. அரசியல் வியாபாரமாக்கப்பட்டு விட்டது, ஒருவித விபச்சாரம்தான் நடக்கிறது. இந்த ஈனப் பிழைப்பில் மாட்டிக்கொண்டு எனது மன அமைதியை, நண்பர்கள் மத்தியில் உள்ள நற்பெயரை கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அமெரிக்காவில் இருக்கும்போது 1997 முதல் 2000 வரை “School for Politicians” எனும் ஓர் இணையதள அரசியல் பள்ளியை நடத்தினேன். இப்படி “பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திவிட வேண்டும்” எனும் பாரதியின் கனவோடு இயங்குவதையே நான் விரும்புகிறேன். எனக்குத் தொழில் “எழுத்து, கவிதை, நாட்‌டிற்கு உழைத்தல்!”

அன்புடன்,
சுப.உதயகுமார்
இடிந்தகரை
மார்ச் 28, 2013

Pin It