"வான்வெளியில் கொல்லப்பட்டன
அந்தப் பறவைகள்
கொலைகாரருக்கெதிராக
நட்சத்திரங்களும் மேகங்களும்
காற்றும் கதிரவனும்
சாட்சி கூறாவிட்டாலும்
அடிவானம் அதற்கு செவிமடுக்க விரும்பாவிடினும்
மலைகளும் அருவிகளும்
அவற்றை மறந்து விட்டாலும்
ஏதேனுமொரு மரம் அக்கொடுஞ்செயலைப்
பார்த்துத்தானிருக்கும்
தன் வேர்களில் அக்கொடியோரின் பெயர்களை
எழுதி வைக்கத்தான் செய்யும்"

- குர்தீஷ் கவிஞன் ஷெர்கோ பெகாஸ் ( தமிழில் எஸ்.வி.ராஜதுரை)

பிரான்ஸ், பாரீசிலிருக்கும் குர்திஸ் தகவல் மையத்தில் கடந்த வியாழன்று இரு குர்திஷ் பெண்களோடு குர்து போராளி சாகின் கான்சிஸ் (sakine cansiz) சுட்டுக் கொல்லப்பட்டார். குர்துகளுக்கான தனி நாடு கோரி கடந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் துருக்கி அரசாங்கத்துடன் ஆயுதமேந்தி போராடும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின்(PKK) முக்கிய பெண் போராளியான 55 வயதான கான்சிஸ், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை (கு.தொ.க.) நிறுவுவதற்கு முக்கியப் பங்காற்றியவர். தற்போது சிறையில் இருக்கும் கு.தொ.க. தலைவர் அப்துல்லா ஒசல்லானின் நம்பிக்கைக்குரியவராய் இருந்த சாகின் கான்சிஸ், கு.தொ.க.வின் முன்னாள் படைத்தலைவராய் பொறுப்பு வகித்தவர்.

துருக்கி அரசாங்கத்திற்கும் கு.தொ.க.விற்கும் முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் கான்சிஸ் கொல்லப்பட்டது குர்து இன மக்களையும் கு.தொ.க.வையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கு.தொ.க.வின் உட்கட்சிப் பூசல்களால் இக்கொலை நிகழவில்லை என்றும், கொலை செய்யப்பட்ட விதம், சத்தமெழுப்பா துப்பாக்கியை உபயோகித்தமை இவையிரண்டும் இக்கொலையை தொழில் முறை கொலையாளிகளே செய்திருக்கவேண்டுமென்று கு.தொ.க.விற்கு நெருக்கமானவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். இதையொத்த நிகழ்வாய் கடந்தாண்டு நவம்பர் மாதம் தனி ஈழத்திற்கான அரசியல் அமைப்பாளர் நடராஜா மதின்திரன் என்கிற பரிதி பாரீசில் இதே முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்கொலைக்கு இன்னும் துப்பு துலங்கவில்லை.

மனித உரிமைக்காக குரெலெலுப்பும் பாரிஸ், இன்று தேச விடுதலைக்காகப் போராடும் போராளிகளை சுட்டுக்கொள்ளும் அரசியல் கொலைகளுக்கான நகரமாய் மாறுகிறது. மற்ற இரு பெண்களில் பிடன் டோகன்குர்திஷ் தேசிய காங்கிரஸின் பாரிஸ் நகர பிரதிநிதி எனவும், லெய்ல சொலிமேஸ் கு.தொ.க. கட்சி சார்பாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பெண் பிரதிநிதி எனவும் அடையாளம் காண‌ப்பட்டுள்ளது.

சாரா என்று சக தோழர்களால் அழைக்கப்படும் கான்சிஸ், பெண்உரிமைக்காகப் போராடுவதில் சிறந்தவராகவும், போராட்டங்களில் பின்வாங்காத உறுதியான நெஞ்சுரம் கொண்டவராகவும் திகழ்ந்தவ‌ர்.

2007 விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க அரசின் ரகசிய கோப்புகளில், அங்காராவில் இருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரி சாராவை "மிகப்பலம் வாய்ந்த நிதி வல்லுநர்" எனவும் அவரைக் கைது செய்து, ஐரோப்பாவிலிருந்து திரட்டப்படும் புரட்சிக்கான நிதி ஆதாரங்களை நிறுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.

1970 ஆம் ஆண்டு குர்திஷ் மாகாணமான எலாசிகில் கு.தொ.க.வின் இளைஞர் செயலாளராக முக்கியப் பணியாற்றிய சாரா, 1978 ஆம் ஆண்டு நவம்பர் 25இல் துருக்கியின் தென்கிழக்கில் அமைந்திருக்கும் தியார்பாகிர் நகரத்திற்கு அருகாமையிலுள்ள பிஸ் கிராமத்தில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தொடங்கியபோது ஒசல்லான் மற்றும் அவரது மனைவி இல்டிரிமோடு இருந்துள்ளார்.

1980இல் துருக்கி ராணுவத்தால் கைது செய்யப்பட்ட சாரா சித்திரவதைக்குப் பெயர்போன தியார்பாகிர் நகரச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட போராளிகளில் 34 பேர் துருக்கி ராணுவத்தின் சித்ரவதையால் சிறையிலேயே மாண்டனர். பலநூறு போராளிகள் பலத்த காயமுற்றனர்.

2011 இல் வெளிவந்த டாகுமென்டரி படமொன்றில் தான் அனுபவித்த சித்ரவதைகளை சாரா நினைவுகூர்ந்துள்ளார். தியார்பாகிர் நகர சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது, கு.தொ.க.வை ஆயுதமேந்திய போராட்டத்திற்கு இட்டுச்சென்ற முக்கிய காரணியென்று கருதலாம்.

சிறையிலேயே துருக்கி அரசாங்கத்திற்கு எதிராய் குர்திஸ் கண்டனப் போராட்டம் நடத்திய சாரா, 1991 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனாலேயே இவர் கு.தொ.க. உறுப்பினர்களின் முன்னணிப் போராளி என்றழைக்கப்பட்டார்.

சிரியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் பேக்கே பள்ளத்தாக்கில் செயல்படும் கு.தொ.க.வின் பயிற்சி முகாமில் சேர்ந்த சாரா, பின் வடக்கு ஈரானில் அப்துல்லா ஒசல்லானின் சகோதரர், ஒஸ்மான் ஒசல்லான் தலைமையில் செயல்படும் ஆயுதப் பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றார்.

இப்பயிற்சி முகாமில்தான் சாரா, கு.தொ.க.விற்குள் பெண்கள் இயக்கத்தைத் துவக்கினார். 1993 இல் பத்திரிக்கையாளர் அலைஸ் மார்கஸ் எழுதிய "ரத்தமும் நம்பிக்கையும்" என்ற புத்தகத்தில் கு.தொ.க.வின் ஆயுதப்போராளிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருந்ததை சுட்டிக் காட்டுகிறார். தொடர்ச்சியான தற்கொலைப்படை தாக்குதல் மூலம் பல துருக்கி பாதுகாப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டதால், 1990கள் மத்தியில் கு.தொ.க.வின் பெண் போராளிகள் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளாயினர். அவர்கள் தங்கள் வயிற்றில் குண்டுகளை கட்டிக்கொண்டு கர்ப்பிணி பெண் போல் நடித்து குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

மார்க்சிய சித்தாந்தால் ஈர்க்கப்பட்ட ஒசல்லான் தென்கிழக்குப் பகுதியில் நசுக்கப்பட்ட குர்திஸ் பெண்களின் விடுதலை முக்கியமெனக் கருதியதாக தன் புத்தகமான "கு.தொ.க.வில் பெண்கள்" இல் ஆல்கான் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி அரசின் பாதுகாப்புப் படைக்கும் கு.தொ.க.விற்கும் சச்சரவுகள் உச்சத்தில் இருந்தபோது, 20 முதல் 25% பெண் போராளிகள் கு.தொ.க.வில் இருந்ததாகவும், இவர்கள் ஆண் போராளிகளோடு சேர்ந்து தாக்குவார்கள் எனவும், சில சமயத்தில் தனித்தே சண்டையிடுவார்கள் எனவும் பத்திரிக்கையாளர் ஒச்க்கன் தெருவிக்கிறார். கடந்த மார்ச் மாதம் தென்கிழக்கு துருக்கியின் வனப்பகுதியில் துருக்கி அரசின் பாதுகாப்புப் படைக்கும், கு.தொ.க.விற்கும் நடந்த சண்டையில் கு.தொ.க.வின் 15 பெண் போராளிகள் சுட்டுக் கொலப்பட்டனர். இதுவே பெண் கொரில்லா படையில் ஒரு நாளில் கொல்லப்பட்ட அதிகபட்ச போராளிகளின் எண்ணிக்கையாகும். துருக்கி பாதுகாப்புப் படையினர், தாங்கள் சண்டையிடுவது பெண் போராளிகளிடம் என்று அவர்கள் கொல்லப்பட்ட பின் சடலத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள். வடக்கு ஈராக்கில் ஆண் போராளிகளுக்கு கொடுக்கப்படும் அதே பயிற்சியே பெண் போராளிகளுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்கான பயிற்சிக் கூடாரம் தனியே இருந்தது.

துருக்கி மக்கள்தொகையில் 20% உள்ள குர்துகளுக்கான தனி நாடு வேண்டி துவக்கப்பட்ட கு.தொ.க. பின்னாட்களில் குர்துகளின் சம உரிமைக்காகவும் 1980இல் குர்து மொழிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தன.

1992இல் கு.தொ.க.வின் ஆயுதக்குழு பிரிவின் தலைவர் முராத் கராயிலானால்(Murat Karayilan) ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்ட கான்சிஸ், சிறிது காலம் ஜெர்மனியில் இருந்துவிட்டு பின் பாரிஸ் சென்று இயக்கத்திற்கான பணியினை மேற்கொண்டிருந்தார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய கோப்புகளில் கு.தொ.க. இயக்கத்தின் முக்கிய புள்ளிகளான ரிசா ஆல்டுன் (Riza Altun) மற்றும் கான்சிஸ் மட்டும் வருடத்திற்கு 50-100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஐரோப்பாவிலிருந்து கு.தொ.க. இயக்கத்திற்காக பெற்றுத்தர உதவியதாகத் தெரிவிக்கிறது. அமெரிக்கா மற்றும் துருக்கி நாடுகளில் கு.தொ.க. தீவிரவாத அமைப்பாய் கருதப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

"இரு மடங்காய் நமது முயற்சியைப் பெருக்கி எப்படியாவது பாரிசிலிருந்து வடக்கு ஈராக்கிற்கு (கு.தொ.க.வின் தலைமையகம்) செல்லும் நிதிகளை நிறுத்தவேண்டும், நிதி ஆதாரங்களைத் திரட்டும் அம் முக்கிய புள்ளிகள்தான் நமது இலக்கு" என்ற அமெரிக்க அதிகாரிகளின் நிலைப்பாட்டை விக்கிலீக்ஸ் விவரிக்கிறது.

இன விடுதலைக்கான நீண்டகாலப் போராட்டத்தில், ஆணாதிக்கம் நிறைந்த போராட்டக் குழுவில் அவர்களுக்கு நிகரான தலைமைப்பண்பும் உறுதித்திறனும் கொண்ட பெண்ணாய் உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த சாரா ஒரு அசாதரணமான பெண்மணி.

பயன்படுத்திய கட்டுரைகள் :

http://www.huffingtonpost.com/2013/01/11/sakine-cansiz-pkk-execution-kurdish-women_n_2457081.html

http://www.guardian.co.uk/world/2013/jan/10/sakine-cansiz-pkk-kurdish-activist

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35927

Pin It