ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ…
பொல்லாத உலகமடா.!
புரிந்து கொண்டு வாழனுமடா..!
போராட்ட வாழ்கையடா..!
ஏழ்மையிலும் நேர்மையாக
வாழனும்டா என் கண்மணியே
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…

(சமூக உணர்வு கொண்ட ஒரு தாயின் தாலாட்டு)

பிறந்தது திருப்பூர் என்றாலும் வளர்ந்தது எல்லாம் தந்தையின் சொந்த ஊரான மோகனூரில்தான். காவேரி பாய்ந்தோடும் அழகிய கிராமம். வெத்திலை கொடிக்காலும், வயல்வெளிகளின் நெற்கதிர்களின் சிரிப்பும் பார்க்க பசுமையாக இருப்பதற்குக் காரணம் காவேரியின் வற்றாத பாசன வசதி. 18ம் படிக்குமேல் தண்ணீர் சென்றால் ஊரில் திருவிழா கோலம்தான்.

புளியமரக்கூட்டமும், ஆல மரக்கூட்டமும் நிறைந்த காக்காதோப்பு காவேரி ஆற்றிற்கு அருகில் அதன் ஓடும் பாதையில் எங்கள் வீடு. ஆற்றிற்கு யானையை குளிக்கவைக்க தினம் அந்தப் பாதையில் அழைத்து வரும்போது தூரத்தில் மணி ஓசை கேட்கும் போதே வீட்டிற்குள் ஓடி கதவு சந்தில் ஒளிந்து கொள்வேன். பாட்டியும், தந்தையும் எனது யானை பயம் போக்க தினம் தினம் முயற்சிப்பது வாடிக்கையாக இருந்தது. ஒரு நாள் தரதரவென என்னை இழுத்துப்போய் கதற கதற யானையின் சூடான சாணியை மிதிக்க வைத்து சாணியை மீதித்தால் பயம் போய் விடும் என சமாதானம் சொல்லி, பின்பு ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த யானையின் மீதேற்றி யானை பயம் போக்கினார்கள். யானைகள் அதற்குப் பிறகு எனக்கு நேசமாயின. பின்பு பல வருடங்கள் கழித்து யானைகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல் ஒன்றை நான் வெளியீட்டு சிறப்புரையாற்றியது மறக்க முடியாத நினைவு.

எனக்கான பெயரைத் தேர்வு செய்தது எனது சித்தப்பா சவுக்கத் அலி. வருங்காலத்தில் ஒரு கவிஞனாக வரவேண்டும் என்று விருப்பப்பட்டு அந்தப் பெயரை வைத்தாராம்.

பெரியசாமி, தாஸ், ஜனார்த்தனன் போன்ற தோழர்களோடு பொதுவுடைமை இயக்க வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த எனது தந்தையையும், எங்களையும் சேர்த்து பராமரித்து வந்தது எனது பாட்டி அலிமாதான். தீவிரமான மார்க்கப் பற்றாளரான எனது பாட்டிக்கும் எனது தந்தைக்கும் அடிக்கடி இயக்க வேலைகளால் கருத்துவேறுபாடு வந்தாலும் எனது தந்தை மீதான பாசத்தால் திட்டிக்கொண்டே செலவுக்கும் பணம் கொடுப்பார்.

ஒரு நாள் தோழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

"எவ்வளவு பணம் இருக்கு? பசிக்குது. பொட்டுக்கடலை வாங்கி சாப்பிடலாம்" தோழர் தாஸ்தான் கேட்கிறார்.

பசி வேலைகளில் பொட்டுக்கடலையும் தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு.

"என்னிடம் நாலணா இருக்கிறது. ஆனால் பையனுக்கு பழம் வாங்க வேண்டும். ரஸ்தாளி பழம் சாப்பிடாமல் இருக்கமாட்டான்" சேக்பரித் பதில் கூறி பொட்டுக்கடலை சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். ஆனால் தாஸ் விடுவதாக இல்லை.

"பழம் பார்க்காத எத்தனையோ குழந்தைகள் இந்த நாட்டில் உண்டு. உன் பையன் என்ன அதிசயமா..?"

"நிச்சயம் வாழைப்பழம் பார்க்காத குழந்தை இருக்கமுடியாது"

சேக்பரீத் பதிலுக்கு சவால் விடும் தோரணையில் பதில் கூற கோபம் வந்தது தாஸ்சுக்கு. நாளை நான் நிருபிக்கிறேன் என கோபமாகக் கூறி சபையை கலைத்தார் தோழர் தாஸ்.

மறுநாள் ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு ஒரு தோழரின் வீட்டிற்குப் போய் இருக்கிறார்கள். அந்தத் தோழர் அரைப் படி அரிசி போட்டு அனைவருக்கும் கஞ்சி வைத்து கொடுத்திருக்கிறார். அந்தத் தோழரின் குழந்தையிடம் வாழைப் பழத்தை கொடுத்தவுடன் பயந்து போய் இருக்கிறது. அப்பொழுது விசாரித்தபோதுதான், அந்தக் குழந்தை இதுவரை வாழைப்பழத்தை பார்த்தது இல்லை என்று சேக்பரீத் அறிந்து கொண்டார்.

சமூகத்தில் நிலவும் கொடிய வறுமையும், பல வசந்தங்களை காணாத உழைக்கும் மக்களின் வாழ்நிலையும் அப்படித்தான் இருக்கிறது. நல்ல அரிசிச் சோற்றை பார்க்காத எத்தனை விவசாயிகள் அந்த நில‌த்தில் உழுபவன் அவன் தான், அதை அறுப்பவனும் அவன் தான், ஆனால் அதில் இருந்து ஒரு சில நெல்மணிகளைக் கூட எடுத்துச் செல்ல அவனுக்கு உரிமையில்லை. அரைப்படி நெல் கூலி அதிகமாகக் கேட்டதற்காக கீழ் வெண்மணி கிராமத்தில் 44 தாழ்த்தப்பட்ட ஏழை உழவர்களை ராமையாவின் ஓலைக் குடிசையில் போட்டு எரித்துக் கொன்றதையும் உழைப்பவர்களும், சமுக மாற்றத்திற்காய் இன்னும் தொடர் போரில் ஈடுபாடு கொண்ட போராளிகளும் மறக்க மாட்டார்கள்

உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம், வாழைப் பழம் பார்க்காத குழந்தை இருக்குமா என்று. ஆம் அப்பொழுது இருந்த மக்களின் வாழ்க்கை நிலை இதுதான். தீபாவளி, பொங்கல் என்றால்தான் அரிசிச் சோற்றைப் பார்க்கும் நிலை கொண்டிருந்த காலங்கள்.

சேக்பரீத் அந்த சம்பவத்திற்குப் பிறகு நாம் இந்திய கிராம நிலைகளைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாகவும், தன் குடும்பம், தனது குழந்தை என்ற சிறு வட்டத்தில் இருந்து சற்று விடுபட்டு இன்னும் கற்றுக்கொள்ளவும், பரந்துபட்ட சிந்தனை முறைக்கு தான் வரக் காரணமாக அந்த சம்பவம் இருந்ததாகவும் பின்னாளில் அடிக்கடி கூறுவார்.

5 வயதிற்குப் பிறகு மோகனூரில் இருந்து அதே காவேரி பாய்ந்தோடும் மறு கரையான ஈரோட்டிற்குக் குடி பெயர்ந்தோம்.

எனக்கு சற்று விபரம் தெரிந்த நாட்கள் அவை. லக்காபுரம் என்ற பகுதியில் முதலில் குடியிருந்து, பின்பு மோளக்கவுண்டன் பாளையாம் என்ற பகுதியில் வசித்து வந்தோம். அங்கு இருந்துதான் எனது முதல் நாள் முதல் வகுப்பு ஆரம்பமானது

காவேரியைத் தாண்டி, ரயில் ரோட்டைக் கடந்து காக்கிப் பையில் சிலேட்டும், மதியம் சாப்பிட அலுமனியத் தட்டும் எடுத்துக்கொண்டு முதல்நாள் பள்ளிக்கு வந்தது இன்னும் மறக்க இயலாத‌ நினைவு…

சி.எஸ்.ஜ ஆரம்பப்பள்ளியில் கையை உயர்த்தி காதைத் தொட 1ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். பள்ளியில் படித்ததை விட வீட்டிற்கு வந்ததும் பள்ளிப் பாடத்தை முடித்தவுடன், எனது முதல் ஆசிரியரான எனது தந்தையிடம் அவர் கொடுக்கும் அரசியல் பாடம்தான் என்னை பாடாய்படுத்தும். எனக்கு அந்த வயதில் புரியாத தடித்த சிவப்புப் புத்தகங்களை கொடுத்து வாய் விட்டு படிக்கக் கூறுவார். நான் சத்தமிட்டு படிக்க வேண்டும்.

அருகில் தலை வாரும் சீப்போடு அமர்ந்திருப்பார். தவறாகவோ அல்லது படிக்காமல் மலைத்து அமர்ந்தால் சீப்பால் அடி விழும். அந்த நாட்களில்தான் லெனினும், மார்க்ஸ்சும், ஏங்கல்சும், மாவோவும் எனக்கு அறிமுகமானார்கள்.

ஒரு மணி நேரத்தில் அந்த தடித்த புத்தகங்களை இந்த நாட்டில் படித்து முடித்தவன் நானாகத்தான் இருக்கும். எப்படி என்கிறீர்களா..?

எனக்குப் புரிகிறதோ இல்லையோ வேகமாக படிப்பேன். அப்பா பார்க்காதபோது பத்து பக்கங்களை ஒரு நொடியில் தாண்டிவிட்டு, அதில் இருந்து படிப்பேன். அந்த வயதில் எனக்கு சிரமத்தைக் கொடுத்தாலும் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. பின்னாளில் சாப்பிடும்போது கூட புத்தகமும் கையுமாக இருக்கும் அளவிற்கு சிறு வயதில் என் தந்தை என்னிடம் படிப்பார்வத்தை ஏற்படுத்தினார்.

பல தொழில்கள் புரிந்த தந்தையின் தொழில்கள் நஸ்டத்தால் குடும்பம் வறுமையின் கோரப் பிடியில் தத்தளித்தது. எங்கள் வறுமையில் பங்கு கொள்ள குடும்பத்தில் எனக்கு இரண்டு வயது இளையவளான எனது தங்கை அஜிதாவும் சேர்ந்திருந்தாள். கேரளத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் அன்று வீரியமாக செயல்பட்டுக் கொண்டிருந்த பல புரட்சியாளர்களில் அஜிதாவும் ஒருவர். அவரைப் பற்றிய பல உணர்வுமிக்க கதையாடல்கள் அன்று பேசப்பட்டன. வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் போராட்டத்தில் முன்னணியாக இருந்த அஜிதா காவல் நிலையத்தையும் தாக்கி காவலர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தில் கை நனைத்து காவல் நிலைய சுவர்களில் அச்சு பதித்து, முடிந்தால் பிடித்துக்கொள் என்று சவால் விட்டு வந்ததாக ஒரு கதையாடல் அன்று பரவலாக பேசப்பட்ட காலம். அப்படியான ஒரு புரட்சிக்காரரின் பெயரைத்தான் எனது தங்கைக்கு வைத்தாக தந்தை அடிக்கடி கூறுவார்.

பழைய இரும்பு வியாபாரம். ஒரு மரப்பெட்டியை சைக்கிளில் கட்டிக்கொண்டு 'பழைய இரும்பு இருக்கா பழைய இரும்பு' என சத்தமிட்டுக்கொண்டு வீதி வீதியாக வரவேண்டும். அன்றைக்கு வியாபாரம் ஏதேனும் கிடைத்தால் வீட்டில் அடுப்பு எரியும். இல்லை என்றால் பட்டினிதான். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கூட நாங்கள் சாப்பிட்டோமா இல்லையா என்று தெரியாது. 'உங்கள் வீட்டில் என்ன குழம்பு' என்று கேட்டால், எனக்கு சட்டென்று உடனே வாய்க்கு வரும் பெயர் பருப்பு குழம்பு என்பதுதான். ஆனால் எங்கள் வீட்டில் அன்று எதுவும் இருக்காது. தண்ணீர் மட்டுமே எங்களுக்கு உணவாக இருந்திருக்கும்.

இந்த நிலையில் இருந்துதான் நான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். பள்ளிக்குப் போவதில் எனக்கு இரண்டு லாபங்கள் இருந்தன. மதியம் பள்ளியில் பெரும்பாலும் சாம்பார் சாதம் அல்லது கோதுமை உப்புமா கொடுப்பார்கள். நான் வேக வேகமாக முதல் ரவுண்ட் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் போய் சாப்பாடு வாங்குவேன். அந்த சாப்பாட்டை கொண்டு வந்திருக்கும் தூக்கு போசியில் போட்டுவைத்து விடுவேன். மணி எப்போழுது ஆகும், பள்ளி எப்போது விடும் என்ற காத்திருப்பில் நேரம் போகாது. மணி அடித்தவுடன் ஒடுவதற்குத் தயாராக இருப்பேன். மனம் முழுவதும் வீட்டில் இருக்கும் அம்மா, தங்கை அஜிதாவை சுற்றியே இருக்கும். பள்ளி விட்டதும் சுமார் மூன்று கிலோ மீட்டர் இருக்கும் எங்கள் வீட்டை நோக்கி ஒடுவேன்.

சில நாட்கள் வீட்டில் பசியோடு சுருண்டு படுத்திருக்கும் அம்மாவிற்கும் தங்கைக்கும் அந்த சாப்பாடு பசியை போக்கியது. அதற்கும் ஒரு நாள் ஆப்பு வந்தது. சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் சாப்பாடு வாங்குவதை கவனித்து வந்த ஆயாம்மா ஒருநாள் பிடித்து தலைமை ஆசிரியையிடம் கொண்டு போய் என்னை நிறுத்தி விட்டார்.

எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவமானம் ஒரு பக்கம், வீட்டில் இருப்பவர்கள் பசி ஒரு பக்கம். வீட்டின் வறுமையைக் கூற தன்மானம் தடுத்து நின்றது.

அது அரசு உதவி பெறும் கிருஸ்த்துவப்பள்ளி. என்னைப் பற்றி புகார் வாசித்த ஆயாம்மாவை பார்த்து விட்டு என்னைப் பார்த்தார் தலைமை ஆசிரியை. எனக்கு சற்றும் பொருந்தாத அரைக்கால் டவுசரை இழுத்து, அரைஞாண்கயிற்றில் சொருகியும், பின்புறம் கிழிந்திருந்த பாகங்களை பல ஒட்டு போட்டு தைத்திருந்ததையும் பள்ளி பிள்ளைகள் பார்த்து தபால் பெட்டி என்று கிண்டலுக்கு ஆளாகும் ஒரு பையன் என்று ஊகித்த தலைமை ஆசிரியை அன்பாக, 'வீட்டுக்கு சாப்பாடு கொண்டு போகிறாயா' என்று கேட்டார். நான் 'ஆமாம்' என்று தலையாட்டியதும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஆயாவிடம் 'இவனுக்கு தினமும் சாப்பாடு கொடுத்தனுப்பு' என்று கூறி என்னை தட்டிக் கொடுத்து அனுப்பினார்.

வீட்டில் நடந்ததைக் கூற 'இனி மேல் சாப்பாடு எடுத்து வரக்கூடாது' என்று கண்டிப்பாக அம்மா கூறி விட்டதால் சாப்பாட்டு போசி எடுத்துப்போவதில்லை. வீட்டில் சாப்பாடு இல்லா வேலைகளில் பள்ளியில் நான் மட்டும் சாப்பிடும் நேரங்களில் பெரும்பாலும் அழுதுகொண்டே சாப்பிடுவேன்.

குடும்ப வறுமை சிறிது மாறிய வேலைகளில் சுவையான உணவுகள் கிடைத்தன. நீலகிரி பேக்கரியில் இருந்து ரொட்டியும், கறியும் சேர்த்து சாப்பிடும் வேலைகளும் உண்டு. சில நாட்கள் கண்விழித்துப் பார்த்தால் அன்றைக்கு பிரபலமாக இருந்த க்ளாஸ்கோ பிஸ்கட்டும், ஹார்லிக்ஸ்சும் இருக்கும். தொடர்ந்து நாள் முழுவதும் எதுவும் கிடைக்காத நாட்களும் வரும்.

சிறு வயதில் இருந்தே செங்கொடி மீது எனக்கு ஒரு வித ஈர்ப்பு. அந்தப் பகுதியில் செங்கொடியுடன் ஏதாவது ஊர்வலம் என்றால் அதில் நானும் இருப்பேன். ஆசையாக செங்கொடி ஒன்றை வாங்கிக்கொண்டு 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று அவர்களுடன் கத்திக்கொண்டு ஒடுவேன். அவர்கள் இடதா..? வலதா..? என்பதெல்லாம் தெரியாது. செங்கொடி மட்டுமே எனக்குத் தெரியும். அப்படி ஒவ்வொரு முறையும் போகும்போது நான் சேகரித்த செங்கொடியுடன் என் வயது உள்ளவர்களை சேர்த்துக்கொண்டு எங்கள் தெருவில் 'இன்குலாப் ஜிந்தாபாத், புரட்சி ஓங்குக..!' என்று சுற்றிவருவோம்

எனக்கு அந்த வயதில் எந்தத் தெரு விளையாட்டும் தெரியாது. எனக்கு அப்பொழுது தெரிந்தது எல்லாம் செங்கொடி….

புரட்சி, காரல்மார்க்ஸ், லெனின், துப்பாக்கி தூக்கி வர்க்க எதிரிகளை ஒழிக்கவேண்டும். ஏழைகள் இந்த நாட்டை ஆளவேண்டும்… அதற்கு புரட்சி வரவேண்டும். இது மட்டும்தான் எனக்கு அப்பொழுது புரிந்த உணர்வுகள்…

பட்டினி கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்கால்
பாரினில் கடையரே எழுங்கள்
வீறு கொண்டு தோழர்கால்
கொட்டு முரசு கண்டனம்
முழக்கம் எங்கும் குமறிட
கொதித்து எழு புது உலக
வாழ்வினை சமைத்திட…

-சர்வதேச கீதம்-

நினைவுகள் தொடரும்…

Pin It