அன்பார்ந்த அய்யா/அம்மா:
வணக்கம். கடந்த யூலை 1, 2012 அன்று இடிந்தகரையில் நடத்தப்பட்ட மாநாடு பற்றி தாங்கள் அறிவீர்கள். மாநாடு முடிந்ததும், பல இயக்கத் தலைவர்களும், தொண்டர்களும் கலந்தாலோசித்து கீழ்காணும் முடிவுகளை எடுத்திருக்கிறோம். தங்களின் அனுசரணையும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
[1] கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுஉலை எதிர்ப்பினை தங்கள் கட்சியின்/இயக்கத்தின் செயல்திட்டமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
[2] தங்கள் கட்சியின்/இயக்கத்தின் தொண்டர்களுக்கு/உறுப்பினர்களுக்கு இந்த கொள்கை முடிவை தெளிவாக அறியத் தாருங்கள்.
[3] தங்கள் கட்சியின்/இயக்கத்தின் பல்வேறு கிளைகள், துணை அமைப்புக்கள் இந்த முடிவினை ஏற்று தம்மால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தயவு செய்து ஏற்பாடு செய்யுங்கள். (கருத்தரங்குகள், பயிலரங்கங்கள், கண்காட்சிகள், பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது, புத்தகங்கள், துண்டு பிரசுரங்கங்கள், ஆவணப்படங்கள் மற்றும் பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள் வெளியிடுவது போன்றவை.)
[4] ஆகஸ்ட் மாதம் ஆறாம் நாள் ஹிரோஷிமா தினத்தன்று தமிழகம் முழுவதும் கீழ்காணும் நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தங்கள் கட்சியின்/இயக்கத்தின் சார்பாகவோ அல்லது மற்ற கட்சிகள்/இயக்கங்கள் உடன் கைகோர்த்தோ தங்களால் இயன்ற நிகழ்வுகளை நடத்த அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
· சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் போன்ற நகரங்களில் ஆகஸ்ட் 6 அன்று பெருநிகழ்வுகள் நடத்துவது.
· கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டுவது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, முழக்கங்கள் எழுப்புவது, துண்டறிக்கைகள் விநியோகிப்பது.
· பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துவது.
· தெருமுனைப் பிரசாரங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களே தீர்மானங்கள் இயற்றுவது போன்ற நடவடிக்கைகள்.
· ஹிரோஷிமா, நாகசாகி, செர்னோபில், புகுஷிமா போன்ற இடங்களில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது, மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்துவது இன்னபிற.
· இவை போன்ற வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது.
தங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டு அமைகிறேன். நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
சுப. உதயகுமார்
ஒருங்கிணைப்பாளர்: அ.எ.ம.இ.
9865683735
ம. புஷ்பராயன்
9842154073