கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் 200 நாட்களைக் கடந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பல முறை பலவிதமான இடர்ப்பாடுகளும், துன்பங்களும் வந்தாலும் மக்களின் போராட்டம் அதற்கேயுரிய வலுவுடன் வந்த சவால்களையும், சிக்கல்களையும் சமாளித்து வந்தது. ஆனால் இப்போதைய சூழல் மக்கள் போராட்டத்தினைச் சுற்றி மத்திய அரசும், மாநில அரசும் ஒரு மாபெரும் வலையினைப் பின்னி வருகின்றது. இந்த கொடும் வலை பல இடங்களில் கண்ணுக்குத் தெரிந்தும், பல இடங்களில் கண்ணுக்குத் தெரியாமலும் பின்னப்படுகிறது. போராட்டத்தினை இத்தோடு ஒழித்து விட வேண்டும் என்ற மூர்க்கம் மத்திய அரசிடம் வெளிப்படுவதும் அதற்கேற்றாற்போல் அவர்களின் நடவடிக்கைகள் தீவிரம் அடைவதையும் நாம் பார்க்கிறோம். இந்த சூழல் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழ்நிலையை போராட்டக்குழுவினருக்கும், போராடும் மக்களுக்கும் கொடுத்திருக்கிறது. போராட்டத்திற்கு எதிராக அபாயம் நிலவும் இந்தச் சூழலில், சூழலின் உண்மைத்தன்மையையும், அதன் பரிணாமங்களையும் மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சிகளையும் உணர்ந்து கொண்டு அதனை எதிர்கொள்ள நம்மை தயாரித்துக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

koodankulam_371அணு உலை பாதுகாப்பானது என்று உறுதி செய்யும்வரை அதன் செயல்ப்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசினை நோக்கிய கோரிக்கையுடன் முதல் கட்டமாக இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது. 50000 -மேல் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களுடன் சேர்ந்து கொள்ளவே தமிழகமெங்கும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. போராட்டத்தின் வலு அதிகரிக்கவே போராட்டக்குழுவினரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பின்னர் மத்திய அரசும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமருடனான பேச்சுவார்த்தையும் பலனிக்காமல் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இச்சமயத்தில் தமிழக அரசு மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அணு உலை செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றியது. போராட்டத்தின் இந்த முதல் கட்டம் வெற்றியாக அமைந்தது. 

தீர்மானம் இயற்றப்பட்ட பிறகும் அணு உலைகளில் வேலை தொடர்ந்து நடைபெறவே, மக்கள் மீண்டுமொரு உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கினர். இந்த இரண்டாம் கட்டப் போராட்டம் அதன் வளர்ச்சிப் போக்கில் வீரம் செறிந்த கூடங்குளம் அணு மின் நிலைய முற்றுகைப் போராட்டமாக மாறியது. இரவு பகலென்று பாராமல் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்கவே, போராட்டம் அணு மின் நிலைய செயல்பாடுகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வேலை செய்த ஒப்பந்த ஊழியர்கள் பெருமளவில் வெளியேறவே அணு உலை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படலாம், கட்டுமானப் பணிகளை தொடங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டோடு இந்த முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

உள்ளாட்சி தேர்தல் குறுக்கிட்டதால் அதற்கு மட்டும் சிறிது அவகாசம் கொடுத்துவிட்டு இடிந்தகரையில் தேதி குறிப்பிடப்பட்டு மூன்றாம் கட்டப் போராட்டம் துவங்கியது. போராட்டத்தின் கனலும், உக்கிரமும் தணிந்து விடாமலிருக்கவும், தமிழகம் முழுதும் இந்த போராட்டத்தை பரவச் செய்யவும், அணு உலையை மூட வேண்டும் என்னும் இலக்குகளை வைத்தும் இந்தப் போராட்டம் தொடங்கியது. 

போராட்டம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, புதுச்சேரி, சேலம், தருமபுரி, விழுப்புரம், கடலூர் போன்ற இடங்களில் தொடர்ந்து பரவலாயிற்று. இந்த மூன்றாம் கட்டப் போராட்டத்தின் பாதையில்தான் அப்துல் கலாமின் கூடன்குள வருகையும், அறிக்கையும், மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் மாநில அரசினால் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு, முத்துலிங்கம் தலைமையில் மத்திய அரசினால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு நாடகங்கள் நடந்தேறின. இதற்குள் மத்திய மாநில அரசுகள் போராட்டத்தினை குலைக்க, சிதறடிக்க, பிளவுபடுத்த பலவிதமான முயற்சிகளைச் செய்தன. மதப்பிரிவினை, சாதிப்பிரிவினை, மீனவர் பிரச்சனை, பகுதிப் பிரச்சனை, அவதூறு பிரச்சாரம், தேச வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தேசத்துரோகிகள் என்று பலவிதமான வழிகளில் முயற்சி செய்தார்கள். ஊடகங்கள் மூலமாக மக்களிடம் தொடர்ச்சியாக அணு உலைக்கு ஆதரவாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வழிநடத்தலும், அணு உலைக்கு எதிராக போராடும் மக்களின் உறுதியும் இந்த போராட்டம் சந்தித்த எதிர்ப்புகளை கடந்து சீரான பாதையில் இந்த போராட்டத்தை நடத்திச் செல்கிறது. 

இப்படி போராட்ட சூழல் குறைவான மற்றும் சிறிய அழுத்தங்களோடு போய்க்கொண்டிருந்த பொழுதுதான், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்திக்க போராட்டக்குழு சென்றபோது நடந்த தாக்குதல் சம்பவம் போராட்டத்தின் மீதான தமிழக அரசின் பார்வை மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது. காவல்துறை குவிக்கப்பட்டிருந்த போதும், போராட்டக்குழுவிற்க்கு பாதுகாப்பு தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்த பின்பும் மதவெறி அமைப்பான இந்து முன்னணி போராட்டக்குழுவினரை தாக்கும்போதும் காவல்துறை அமைதியாக வேடிக்கை பார்த்தது.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தமிழக அரசின் பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கவே தமிழக அரசு உடனடியாக எம்.ஆர்.சீனிவாசன் தலைமையில் ஒரு ஆய்வுக்குழு அமைத்தது. இந்த ஆய்வுக்குழுவின் உறுப்பினர்களாக இனியன், விஜயராகவன், அறிவுஒளி மற்றும் எம்.ஆர்.சீனிவாசன் ஆகியோரை நியமித்தபோதே தமிழக அரசின் உள்ளக்கிடக்கை தெளிவாகப் புலப்படலாயிற்று. 

மற்றொரு புறத்தில் சுப.உதயகுமார் தன் மீது நீண்ட நாட்களாக அவதூறு கிளப்பி வந்த நாராயணசாமியின் மீது வழக்கு தொடுக்கவே நாராயணசாமி மன்னிப்பு கேட்டார். நான் அப்படி சொல்லவே இல்லை என்று பேட்டியும் அளித்தார். தாமஸ் கொச்சேரி தொடுத்த வழக்கில் பொய்ச் செய்தி வெளியிட்ட தினமலரும் மன்னிப்பு கேட்டது. இவை இதுவரை நடந்த போராட்டத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்களாகும். ஆனால் இந்த நிகழ்ச்சிப் போக்குகளைத் தாண்டி மத்திய, மாநில அரசுகளால் பின்னப்படும் சதிவலைகள் நுணுக்கமானது. அவைகள்தான் போராட்டத்திற்கு எதிராக பொது மக்களை திருப்பும் வல்லமை கொண்டதாகவும், அரசு வன்முறையினை போராட்டத்தின் மீது ஏவுவதற்கான நியாயங்களாகவும் கற்பிக்கப்படப் போகின்றவை. போராட்டத்தைச் சுற்றி அமைக்கப்படும் சதி வலைகள் மேகங்கள் போல போராட்டத்தினை மூடிக் கொண்டிருக்கின்றன. அவற்றினை சற்றே விரிவாக அலசுவோம். 

கவிழும் மேகங்கள்

கூடங்குளம் அணு மின் நிலையத்தினுள் மறைமுகமாக பல வேலைகள் நடந்த வண்ணம் உள்ளன. பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுவதாகவும், கட்டுமானப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று அதன் தலைவர் காசிநாத் பாலாசி கூறும் அதே வேளையில் கடந்த பெப்ரவரி 18 ஆம் தேதி அன்று வழக்கத்திற்கு மாறாக நான்கு வண்டிகளில் கூடுதலாக வேலையாட்கள் அணு உலை வளாகத்தினுள் கொண்டு செல்லப்பட்டனர். விபரம் அறிந்த கூடங்குளம், இடிந்தகரை மக்கள் அங்கே கூடி இரவு வரை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். காவல்துறை பெருமளவில் குவிக்கப்பட்டது. அன்றுதான் எம்.ஆர்.சீனிவாசன் தலைமையிலான ஆய்வுக்குழு அணு உலையை ஆய்வு செய்ய வந்தனர். ஆய்வுக்குழுவினை உள்ளே செல்ல மக்கள் அனுமதித்தனர். ஆனால் உள்ளே சென்ற வேலையாட்களைப் பற்றி விசாரிக்கும்போது அணு கழகத்தால் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அளிக்கப்பட்டன. அடுத்த நாள் காவல்துறை எண்ணிக்கை கடுமையாக உயர்த்தப்பட்டது.

20 ஆம் தேதி சர்வதேச அணுசக்தி கழகத்தில் இருந்து இரண்டு அமெரிக்கர்கள் அணு உலையைப் பார்வையிட வந்தனர். அன்று இன்னும் மிக அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க அந்த இரு அமெரிக்க அதிகாரிகளும் வந்து சென்றனர். எதற்கு வந்தார்கள், என்ன பார்வையிட்டார்கள் என்ற தகவல்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன‌. மக்களை சந்திப்போம் என்று கூறிய எம்.ஆர்.சீனிவாசன் குழுவும் திருநெல்வேலியில் போராட்டகுழுவினரை சந்தித்து விட்டு அணு உலை பாதுக்காப்பாகத்தான் இருக்கிறது, மக்களிடம் அச்சம் இருக்கிறது என்று அச்சம் குறித்த கவலையை மட்டும் தெரிவித்து விட்டு அடுத்த நாள் காலை மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டோம், மக்களை சந்திக்க வேண்டியதில்லை, அதற்கு எங்களுக்கு அறிவுறுத்தப்படவும் இல்லை என்று பேட்டியளித்தனர். அணு உலையின் உள்ளே வேலைகளை முடித்துவிட்டு காவல்துறையின் பாதுகாப்போடு அணு உலையைத் திறந்து விடலாம் என்பதுதான் இந்த மறைமுக நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கலாம். 

அதிகரிக்கும் மின்வெட்டு

தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தல்களை உடனடியாக செயல்படுத்தாமல் இருப்பதால், போராட்டத்தின் மீது அடக்குமுறையை ஏவத் தயங்குவதால் மத்திய அரசு வேறு சில நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசினை நிர்பந்தித்து வருகிறது. முதலில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் மின்தொகுப்பில் இருந்து தரப்படும் 1000 மெகா வாட் மின்சாரத்தை நிறுத்தியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியையும் குறைத்தது. தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வழங்கிக் கொண்டிருந்த 3 தனியார் நிறுவனங்கள் திடீரென்று கட்டண நிலுவை என்று காரணம் காட்டி மின்சாரம் தருவதை நிறுத்தின‌. காற்றாலைகளுக்கு பலவித கெடுபிடிகளையும், தடைகளையும் கொண்டு வந்தது. இந்த காரணங்களால் தமிழ்நாட்டில் முன்னர் 2 -3 மணி வரை இருந்த மின்வெட்டு இப்போது 8 -10 மணி வரை உயர்ந்துள்ளது. இந்த கடுமையான மின் பற்றாக்குறை பொதுமக்கள், சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்வெட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோவை மற்றும் திருப்பூர் பகுதி தொழில் முனைவோர் வீதியில் இறங்கி, போராடும் அளவிற்கு இதன் பாதிப்பு உள்ளது. ஏற்கனவே கோவையில் மத்திய அரசு நிறுவனம் மூலமாக தூண்டிவிடப்பட்ட, நிர்பந்திக்கப்பட்ட தொழில் முனைவோர் தங்கள் தொழிலாளர்களை வீதியில் இறக்கி அணு உலை வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். 

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கு தடையில்லா, சலுகை விலை மின்சாரத்தை மத்திய அரசும்,மாநில அரசும் கொடுத்து வருகிறார்கள் என்பதை திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள். மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப ஆடும் செய்தி ஊடகங்களும் நிறைய பொய்களை மக்களிடையே விதைத்து வருகின்றன. பொதுமக்களும் இந்த மின்வெட்டால் கடும் கோபம் அடைந்துள்ளனர். அரசுக்கு எதிராக திரும்ப வேண்டிய இந்தக் கோபமோ திட்டமிட்டு அணு உலை எதிர்ப்புப் போராட்டதிற்கு எதிராக திருப்பப்படுகிறது. இப்படி சதி வேலை செய்வதில் மத்திய அரசு கணிசமான வெற்றியும் பெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ரஷ்யாவின் அழுத்தம் 

கூடங்குளம் அணு உலைகளை நிர்மாணிப்பதில் ரஷ்யாவைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. ஏற்கனவே கடும் பொருளாதார சிக்கலிலிருக்கும் ரஷ்யாவிற்கு இந்த அணு உலைகள் கைவிடப்பட்டால் ஏற்படும் இழப்பு கடுமையானதாக இருக்கும். அதன் 300 நிறுவனங்களும் கடும் இழப்பினை சந்திக்க வேண்டி இருக்கும். இந்தியாவிற்கோ ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் தேவைப்படுகிறது, அணு உலைகளில் இருந்து ப்ளுடோனியம் தேவைப்படுகிறது. அணு உலைகளை கைவிட்டு ரஷ்யாவிற்கு இழப்பினை ஏற்படுத்தினால் ரஷ்யாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இப்படி பல முனைகளில் இருந்து வரும் ரஷ்சிய அழுத்தமானது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் மீது குற்றம் சாட்டும் அளவிற்கு சென்று விட்டிருக்கிறது என்ற அளவில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் நல்லவை என்று நாம் சொல்ல வரவில்லை. 

தற்போது மன்மோகன் சிங், தான் முழு அடிமையாக இருக்கும் அமெரிக்க நாட்டின் நிறுவனங்களுக்கு எதிராகவே குரல் எழுப்பும் அளவிற்கு அவருக்கு தைரியம் வந்துள்ளது என்றால் அவருக்கு வரும் அழுத்தம் அத்தகையது. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் உள்ளது என்று மன்மோகன் சிங் கூறியதற்கு அதைதான் நாங்களும் நீண்ட நாட்களாக சொல்லி கொண்டிருக்கிறோம் என்று இந்தியாவிற்கான ரஷ்சிய தூதர் அலெக்சாண்டர் கடாகின் மூக்கை நுழைக்கிறார். ஒரு இறையாண்மை இருப்பதாக சொல்லப்படும் நாட்டின் உள்விவகாரங்களில் அயல்நாட்டினர் கருத்து சொல்வது வேறு எங்குமே நடக்காத விடயமாகும். இந்த அழுத்தத்தின் ஒரு பகுதியாகத்தான் ரஷ்சிய விஞ்ஞானிகளை திரும்பப் பெறுவோம் என்று ரஷ்யா அறிவித்தது. அதற்குப் பிறகு இந்தப் போராட்டம் தொடர்பாக இந்திய அரசின் உக்கிரம் அதிகரித்து கொண்டேதான் போகிறது. 

சுப.உதயகுமார் மீதான தொடர்ச்சியான அவதூறு பிரச்சாரங்கள் 

தலைமையை வீழ்த்தினால் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்ற திட்டத்தோடு உதயகுமார் மீது தொடர்ச்சியாக அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாராயணசாமி முதற்கொண்டு பல பேரைத் தாண்டி இன்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுமளவிற்கு இந்தப் பிரசாரம் கொடி கட்டிப் பறக்கிறது. நாகர்கோவிலில் இருந்த ஒரு ஜெர்மன் நாட்டவரை அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேற்றி விட்டு, அவர்தான் போராட்டத்திற்கு உதவி செய்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில்தான் தன மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் மன்மோகன் சிங்கின் பேச்சு இருக்கிறது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த ஜெர்மன் நாட்டவர் உதயகுமாருக்கு பணம் கொடுத்ததாக சொல்லப்படும் விடயத்தில் கூட உதயகுமார் கருத்து தெரிவிக்கும்போது "அந்த செர்மானியர் உண்மையிலேயே போராட்டதிற்குப் பணம் கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை காண்பிப்பதோடு, இந்தியாவிற்கு துரோகம் செய்ததற்காக அந்த செர்மானியரைக் கைது செய்து சிறையில் அல்லவா அடைத்திருக்க வேண்டும், அதை விடுத்து அவசரம் அவசரமாக வெளியேற்றியது ஏன்? அவரைத் தப்ப விட்டது ஏன்?" என்றார். இவற்றை நிருபிக்கவும் முடியாது. ஆனால் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் அரசு இது போன்ற கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. 

Koodankulam_370தொண்டு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம், நான்கு தொண்டு நிறுவனங்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறும் மத்திய அரசு, இன்னும் அந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு போராட்டத்தினோடு தொடர்பு இருப்பதாக நிருபிக்க இயலவில்லை. ஆனால் தொண்டு நிறுவனங்களை விசாரிக்கிறோம், முறைகேடாக பணத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டுபிடித்திருக்கிறோம் என்று செய்திகளை தொடர்ந்து பரப்பி இந்த செய்திகளை போராட்டத்தோடு சம்பந்தப்படுத்தும் வேலையைத்தான் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. பொதுவாக செய்தி படிக்கும் யாரும் தொண்டு நிறுவனங்கள் போராட்டத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றன என்றே புரிந்து கொள்வார்கள். சமீபத்தில் இந்தத் தொண்டு நிறுவனங்கள் போராட்டத்திற்கு உதவி செய்தனவா என்று கேட்டதற்கு ப.சிதம்பரம் அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை என்று பதில் கூறி இருக்கிறார். இப்படி மத்திய அரசினால் பரப்பப்படும் செய்திகளில் உண்மை கொஞ்சமும் இல்லை என்றாலும் மத்திய அரசும், மாநில அரசும் பொது மக்களுக்கு இந்தத் தகவல்களை எளிதாக உண்மையென நம்பும் வகையில் ஊட்டிவிடுகிறது. நமக்கோ உண்மைகளை உண்மை என்று நிரூபிப்பதற்கே அதிக காலம் தேவைப்படுகிறது. 

மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள்

அணு உலை வேண்டும் என்று நிலைபாட்டில் நிற்கும் கட்சிகள் காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.ஐ.(மார்க்சிஸ்ட்), சி.பி.ஐ, தி.மு.க. போன்ற கட்சிகள் இயல்பில், கொள்கையில் ஒன்றுகொன்று நேர் எதிரானவை. ஆனால் அணு உலை வேண்டும் என்னும் விடயத்தில் ஒருமித்த கருத்துகளை உடையவனவாக இருப்பதால் நிறங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தாராளவாத கொள்கைகளையும், நாட்டை ஏகமாக அந்நிய முதலாளிகளுக்கு திறந்து விட்ட கட்சியுமான காங்கிரஸ் கட்சி அந்நிய முதலாளிகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்தே ஆகவேண்டும். பா.ஜ.காவும் இந்தியா வல்லரசாவதற்க்கு அணுகுண்டு தேவை என்றும், அதன் ஆட்சிக் காலத்தில் அணு குண்டு சோதனை என்ற நாடகத்தையும் நடத்தி அரசியல் லாபம் தேடி கொண்டது. ஆனால் மகாராஷ்டிரத்தில் அதன் தோழமைக் கட்சியான சிவசேனாவோ ஜைதாபூரில் நிறுவும் அணு உலைகளை எதிர்த்து வருகிறது. 

தன் சொந்த மக்கள் நலனை விரும்பும் எந்தக் கட்சியும் அணு உலை அமைவதினை எதிர்க்கிறது. ஆனாலும் இந்தியக் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளோ பிராந்தியவாததிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டு அனைத்து பிராந்தியங்களுக்கும் பாரபட்சமின்றி தீங்கு இழைத்துக் கொண்டிருக்கும் வேலையை செய்து கொண்டிருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொண்டால் மற்றவர்களாவது அணு உலை வேண்டும் என்பதில் மக்களுக்கு எதிராக இருப்பதில் நேர்மையாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் போடும் பலவேடம்தான் இருப்பதிலேயே மோசமானதாகும். ஜைதாபூரில் அணு உலைகளை பிரெஞ்சு நிறுவனம் அமைப்பதால் அதற்கு எதிராகவும், கூடங்குளத்தில் ரஷ்யா அமைப்பதால் அதற்கு ஆதரவாகவும் போராடும் 'நேர்மையான' கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஜைதாபூரில் மக்கள் அச்சப்படுகிறார்கள், அதனால் அணு உலை வேண்டாம் என்பதும், கூடங்குளத்தில் மக்கள் அச்சப்படுகிறார்கள். அச்சத்தைப் போக்கி விட்டு அணு உலையை திறக்க வேண்டும் என்றும் இரட்டை வேடம் போடும் மக்கள் எதிரிகள் இவர்கள். இப்போது சி.பி.ஐயும் இவர்களோடு இணைந்து நிற்பது என்று முடிவெடுத்துப் பேசுகிறார்கள். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் வாழ்நாளில் ஈழ அழிப்பை நடத்தி முடித்து விட்டேன், தமிழக மக்களும் அழிந்தால் அதையும் பார்த்து இன்புறுவேன் என்பது போல கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்தக் கட்சிகளின் நிலைபாடுகள் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் போராட்டத்திற்கு எதிராக இவர்கள் அனைவரும் தொடர்ந்து வேலை செய்கிறார்கள், கருத்துகளை பதிவு செய்கிறார்கள், தங்கள் கட்சியினரை மக்களுக்காக நிற்காதபடி பார்த்துக்கொள்ளுகிறார்கள். இது கட்சிகளைச் சார்ந்து நிற்கும் பெருவாரியான மக்களை போராட்டத்திற்கு எதிராக நிறுத்துகிறது. அதனால் இவர்களின் நோக்கங்களை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்பதில் நமக்கு உறுதி வேண்டும். அவர்கள் மக்களுக்கு எதிராக இருக்கிறார்கள், தங்கள் சுயநலன்களுக்காகப் பேசுகிறார்கள் என்று அவர்களை அம்பலப்படுத்த இதை விட ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்காது. இந்த அத்தனை கட்சிகளையும் மக்கள் தூக்கி ஏறிய வேண்டும் என்பதனை நாம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்ய வேண்டும். 

தமிழக அரசின் நிலைப்பாடு

இன்றைய தமிழக அரசு இந்த போராட்டத்தின் துவக்கத்திலிருந்தே பலவிதமான நழுவும் அணுகுமுறைகளையே கடைபிடித்து வருகிறது. போராட்டத்திற்கு உறுதியான ஆதரவு, எதிர்ப்பு என்ற நிலைபாட்டினை எடுக்காமல் மத்திய அரசுக்கு எதிரான தனது துருப்பு சீட்டாக இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்துவதாகத்தான் தெரிகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போன்று எங்களுக்கு அணு வேலைகள் வேண்டாம் என்று திட்டவட்டமாக அறிவிக்க முடியவில்லை. அணு உலை வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்காமல் இந்த இரட்டை நிலைப்பாடு மிகவும் ஆபத்துக்குரியது. போராட்டக்குழுவினரை நம்பச்செய்து பின்னர் துரோகம் இழைப்பது போன்ற திட்டங்கள் அதனுள் இருக்கலாம். இல்லை என்னும் பட்சத்தில் மக்களுடன் இணைந்து நிற்பதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்க தேவையில்லையே! ஒரு குழு அமைப்பது, பின்னர் மற்றொரு குழு அமைப்பது இன்னமும் தமிழக அரசின் நிலைபாட்டினை உறுதியாக அறிவிக்காதிருப்பது போன்றவை முதல்வர் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக இந்தப் போராட்டத்தை பயன்படுத்துகிறார் என்ற அச்சமே பொதுவாக எழுகிறது. மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவோ அல்லது தமிழக அரசு அல்லது முதல்வர் மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது கிடைத்து விட்டால் இந்த சூழ்நிலை நொடியில் மாறிவிடும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். பெரும்பாலானவர்கள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் இருப்பவர்கள் அந்த கணத்தை எந்நேரமும் எதிர்பார்த்தபடியேதான் இருக்கின்றனர். 

இந்திய அரசின் மூர்க்கம்

இந்திய அரசின் நேரடி செயல்பாடு நிகழவும் வாய்ப்புகள் உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். மேற்கு வங்கம் ஹரிபூரில் முடியாது என்று ஆகிவிட்டது. அங்கே அமைக்க முடியாத உலைகளையும் கூடங்குளத்தில் அமைக்கப்போவதாக பிரதமர் அறிவித்தார். ஜைதாபூரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடங்குளத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது ஆந்திர மாநிலம் கொவ்வடாவிலும் போராட்டம் துவங்கியாகி விட்டது. இவைகள் வெறும் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் மட்டுமல்ல, இந்திய அரசின் அதன் வல்லாதிக்கத்தின், பேராசையின், அதன் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம். இதில் ஏற்படும் தோல்வியினை எந்த இந்திய அரசும் விரும்பாது. அதன் பகுதியாகத்தான் பல ரகசிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அணு உலை கட்டுமான வேலைகளை ரகசியமாக நடத்துவது, பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அணு மின்சார உற்பத்தியைத் துவக்குவது உள்ளிட்ட சில. அதற்கு முன்னேற்பாடாக போராடும் மக்களையும், போராட்டத்தையும் நசுக்குவது என்பது திட்டங்களுக்குள் அடங்கிய விடயமே. சர்வதேச அணு சக்திக் கழகத்தின் விஞ்ஞானிகள் ஏன் வந்தனர்? எதற்கு வந்தனர்? என்ற தகவல்கள் சிறிதும் இல்லை. ஆனால் காங்கிரஸ் அமைச்சர்கள் பலர் அணு உலை வந்தே தீரும் என்று அறிவிக்கின்ற‌னர். ஒருவேளை தமிழக அரசு மக்களின் பக்கம் நின்றால் தமிழக அரசையும் தாண்டி தனது ராணுவ பலத்தின் மூலம் அணு உலைகளைத் திறக்க முயற்சி செய்யும் என்றே தோன்றுகிறது. இவற்றிற்கு நியாயமான காரணங்களும், சூழ்நிலைகளும் நிலவுகிறதாலேயே இந்த கருத்துகளுக்கான அவசியம் ஏற்படுகிறது. 

காத்திருக்கும் வன்முறை

பன்னாட்டு முதலாளிகளின் நலன்களைக் காப்பாற்ற இந்திய அரசு முனைகிறது. தங்களது உடைமைகளைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் போராடுகிறார்கள். இந்த முரண்பாடு பெரும்பாலும் மோதல்களில், மக்களின் மரணங்களில்தான் முடிகிறது. மக்கள் மாய்ந்தாலும் முதலாளிகள் அவர்களது கல்லறைகளின் மீது உட்கார்ந்து விருந்து சாப்பிடும் நிகழ்ச்சியினை நாம் அடிக்கடி காண்கிறோம். வேதாந்தா, போஸ்கோ, நியூட்ரினோ, ந‌ர்மதா அணை போன்ற திட்டங்களுக்காகவும், நிறுவனங்களுக்காகவும் மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அவர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுகிறார்கள். இது போன்ற போராட்டங்கள் அது தொடர்பான சம்பவங்கள் நடக்கும்போதாவது சிறிது கவனம் அவர்கள் மீது செலுத்தப்படும். ஆனால் அதன் பின்னரோ அவர்கள் கவனிப்பாரற்று சிறிது சிறிதாக செத்து மடிவதைப் பற்றி யாருக்கும் கவலை இருக்காது. இப்போது ஈழ மக்களுக்கு நேர்ந்திருக்கும் நிலையினைப் போல...

மக்களின் போராட்டங்களை ஒடுக்க அரசு எடுக்கும் இறுதி செயல்வடிவம் எப்போது வன்முறை நடவடிக்கையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதற்கு இந்தப் போராட்டமும் விதிவிலக்காக அமையாது என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது. அந்த வன்முறை எந்த சந்தர்ப்பத்தில் நிகழும், நிகழ்த்தப்படும் என்பதற்கான கால இடைவெளியின் கணக்குகள் பற்றியதான கவலையில் நம்மில் பலரும் இருந்து வருவார்கள் என்று நினைக்கிறேன். கூடன்குளப் போராட்டத்தின் மீதும் வன்முறையை ஏவிவிட அரசு பலமுறை முயற்சி செய்தது. காவல்துறை அடக்குமுறைகள், அவமரியாதைகள், மதவெறி அமைப்புகளை, கூலிப்படைகளைத் தூண்டிவிட்டு போராடும் மக்களை வன்முறையில் இறக்கிவிட்டு பின்னர் அடக்குமுறையை ஏவி போராட்டத்தை நசுக்குவது என்று தொடர்ந்து முயற்சிகள் நடந்தன. போராட்டகுழுவும், போராடும் மக்களும் மிகுந்த கட்டுப்பாடும், பொறுமையும் இலக்கின் மீதான உறுதியையும் வெளிப்படுத்துவதினாலேயே இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் இருக்கின்றனர். அனால் அரசின் நேரடி ஒடுக்குமுறை மக்களின் இந்த கட்டுப்பாட்டையும், உறுதியினையும் சோதித்துப் பார்க்கவே செய்யும். அப்போது அவர்கள் போராடும் வழிமுறைகள் நந்திகிராம், சிங்கூர் பகுதி மக்கள் அரசுக்கு எதிராக உறுதியாகப் போராடியதை நினைவில் கொள்ள வேண்டும். உறுதியாக நிற்கும் வழிமுறைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதும், போராட்டத்தில் வெற்றிகொள்ள தேவைப்படும் கட்டுப்பாட்டையும், பொறுமையையும், வியூகங்களையும் இப்போதே வகுத்துக் கொள்ள வேண்டும் . 

உளவியல் போர் 

29.02.2012 அன்று தமிழக முதல்வரை சந்தித்த அணுசக்திகெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் "மத்திய அரசு எங்களுடன் உளவியல் போர் நடத்துகிறது" என்று சொன்னார். இங்கு நம்மிடையே பலர் சேது சமுத்திரத் திட்டம் தேவையானது என்று வாதாடியவர்களாக இருப்போம். இப்போதும், அணு உலைகள் வேண்டும் என்று கூட வாதாடுபவர்களாக இருப்போம். இந்த உளவியல் அல்லது கருத்துக்கள் நம்மிடம் எப்படி வந்து சேர்ந்தன என்பதைப் பற்றி நாம் ஒரு போதும் யோசித்ததில்லை. நமக்கு அவற்றைப் பற்றியதான முழு உண்மைகளோ, தொழிற் நுட்பங்களோ, சூட்சமங்களோ, அறிவியல் அறிவோ, அதன் சாதக பாதகங்கள் பற்றிய விவரங்களோ தெரியாமல் இருக்கும். ஆனால் அந்த விடயங்கள் தேவை என்று உறுதியாக நம்புவோம். இந்த உறுதி எங்கிருந்து வந்தது? இந்த நம்புதல் எங்கிருந்து வந்தது? 

நமது பள்ளி, கல்லூரி, பாடப்புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், நம்மிடையே செல்வாக்காக இருப்பவர்கள், நடிகர்கள், சூழல் இவற்றை நமக்களித்தன. அவை யாவும் முற்று முழுதான அறிவியல் உண்மைகள் என்று நாம் நம்புவோம். ஆனால் இந்த உண்மைகளில் பெரும்பாலானவை (நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளைத் தவிர்த்து) நமக்காக நம்மை ஆளும் முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ கருத்தியலாளர்கள் தயாரித்து அளித்தவை என்பதை நம்புவதற்கு நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது. 

அணு மின்சாரம் பாதுகாப்பானது, தூய்மையானது, கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் மின்வெட்டு சரியாகி விடும், போராட்டக்காரர்கள் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள், அறியாமையினால் அணு உலையை எதிர்க்கிறார்கள், அணு ஆயுதம் இந்தியா வல்லரசாவதற்கு அவசியம் என்பது போன்ற செய்திகள் மக்களின் பொதுக்கருத்தாக அரசினால் எளிதாக மாற்றப்படுகிறதே, அதில் எத்தனை சதம் உண்மை இருக்கிறது என்று யார் எப்போது பரிசோதித்து பார்த்தனர்? இந்து செய்தித்தாளில் வந்தால் சரியாகத்தான் இருக்கும், தினமலர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புபவர்கள் அநேகம் பேர் இன்னும் இருக்கின்றனர். இது போன்ற ஊடகங்களில் சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று நம்புவதையே பொது மக்கள் தங்கள் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உளவியலாளர்கள் சொல்லுகின்றனர். செய்திதாள்களால் சொல்லப்படாதவை பொய் என்றும் செய்திதாள்களுக்கு வெளியே ஒன்றுமே இல்லை என்னும் அளவிற்கு நம்புபவர்கள் கூட நம்மிடையே இருக்கிறார்கள். செர்நோபில் விபத்து, போபால் விஷ வாயு விபத்து, புகுஷிமா விபத்து போன்ற பல பேரிடர்களில் செய்திகளைக் கட்டுபடுத்தும் அரசாங்கங்களின் உண்மை முகத்தினைப் பார்க்கலாம். அரசு நிறுவனங்களுக்கு சார்பாகவே செயல்படும் செய்தி நிறுவனங்கள், அரசின் நலனை முன்னிருத்துவதற்கேற்ப செய்திகளை உருவாக்கி மக்களை நம்ப வைக்கும். 

தேவைப்பட்டால், விஞ்ஞானிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், மக்களுடன் செல்வாக்கு மிகுந்தவர்களை தங்கள் கைக்குள் கொண்டு வந்து பொய்களை உண்மையாக்கி சொல்லச் செய்வார்கள். ஒரு சராசரி இந்தியக் குடிமகனது கருத்து என்பது அரசு, செய்தித்தாள், விஞ்ஞானிகள், கல்லூரி பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், மக்களுடன் செல்வாக்கு மிகுந்தவர்களது கருத்துகளைத் தாண்டி இருக்காது என்பது நிதர்சனமான உண்மை. இந்த கருத்துக்களே பொதுமக்களது உளவியலை பெரும்பாலும் கட்டமைக்கின்றன. இவற்றை விட்டால் வேறு எப்படி விடயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்று கேட்டால் அது சொல்லப்படும் செய்திகளை ஆராய்வதே, ஆராய்ந்து தெளிவதே. 

இப்படியெல்லாம் மாற்றப்பட்டு, உருவாக்கப்பட்டு, திரிக்கப்பட்டு மக்களிடையே உலவ விடப்படும் கருத்துக்களைத்தான் நாம் தினம் தினம் இந்தப் போராட்டக்களத்தில் எதிர்கொள்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி உருவாக்கப்பட்டு உலவ விடப்படும் கருத்துக்களை நமது விடாப்பிடியான போராட்டத்தாலும், உண்மை என்னும் பிரச்சாரத்தாலும், தெளிவு என்னும் அறிவினாலும் எதிர்த்து முறியடிக்க வேண்டும். இந்த உளவியல் போருக்கு நாமும் தயாராக வேண்டும். 

காத்திருக்கும் கடமைகள்

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளை மூடக்கோரும் போராட்டத்தில் வெற்றி பெறுவதுதான் ஒரே இலக்கு. ஆனால் வெற்றி ஈட்டுவதற்கு பல நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியிருக்கும். அப்படி நம் முன்னே காத்திருக்கும் கடமைகளை பார்ப்போம். 

1.போராட்டதிற்கு எதிரான மன நிலை உடைய பொதுமக்களின் கருத்தினை மாற்றுவது.

2.தமிழக அரசின் உறுதியான ஆதரவைப் பெறுவது. மின்வெட்டுக்கு எதிரான போராட்டத்தைத் துவக்குவது.

3.மத்திய மின் தொகுப்பிலிருந்து குறைக்கப்பட்ட 1000 மெகா வாட் மின்சாரத்தைக் கேட்டு போராடுவது.

4.நெய்வேலி மின் கழகத்தை தமிழ்நாட்டிடம் ஒப்படைக்கக் கோரி போராடுவது.

5.போராடும் மக்களுக்கு துணை நிற்பது.

6.போராட்டத்தினை தமிழகத்தின், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது.

7.ஐந்து லட்சம் மக்களை போராட்டக்களத்திற்கு கொண்டுவரப் பாடுபடுவது.

8.போராட்டத்தினைப் பற்றி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் செய்வது.

9.இடிந்தகரையில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் இது போன்ற உண்ணாவிரதங்கள் துவங்குவது.

10.மத்திய அரசின் சூழ்ச்சிகளை உடனுக்குடன் அம்பலப்படுத்துவது.

11.ஆதரவு கொடுக்கும் கட்சிகள், இயக்கங்களை இணைத்து தொடர் போராட்டங்கள் நடத்துவது.

12.அரசு வன்முறையை ஏவினால் மக்கள் ஒன்றாக நிற்பதன் மூலமாக மட்டுமே எதிர்கொள்ளமுடியும். நந்திகிராம், சிங்கூர் பாடங்களை மக்களிடம் பிரசாரம் செய்வது.

13.போராட்டத்தினுள் மாணவர்களையும், இளைஞர்களையும் கொண்டு வருவது.

14.போராட்டம் சார்பாக செய்தித்தாள் கொண்டு வருவது.

15.அணு உலைகளுக்கு எதிராக பிற மாநிலங்களில் போராடும் இயக்கங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வது.

16.அணு உலைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடும் இயக்கங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தி கொள்வது.

17.கூடங்குளம் அணு உலைப் பிரச்சனையுடன் தமிழ்நாட்டில் நிலவும் மற்ற பிரச்சனைகளையும் இணைத்துப் போராடுவது-மீனவர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை இணைத்துப் போராடினால் போராட்டத்தின் பலம் கணிசமாகக் கூடும்.

18.அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்துடன் தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பது.

இடிந்தகரை-கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் அணு உலை எதிர்ப்பு போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் இந்த போராட்டம் இடர் மிகுந்த பாதையினூடே பல அனுபவங்களைப் பெற்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மக்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை, பாதிப்புக்குள்ளாகப் போகின்ற அனைத்து மக்களின் நலனுக்காகவும் போராடுகிறார்கள். இந்த எளிய மக்களின் நாட்டுப்பற்றும், அனைத்து மனித உயிர்களின் மீது உள்ள நல்லெண்ணமும், தங்கள் சொந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நல்லெண்ணமும் உயர்ந்த விடயங்களாகும். நாமும் எதிர்காலத்தில் நமது சந்ததியினருக்கு ஒரு சிறந்த தேசத்தைத் தர விரும்பினால் இந்தப் போராட்டத்தில் நிச்சயம் பங்கு கொள்ளவேண்டும்.

எந்த அரசும் ஒரு சிறந்த தேசத்தைக் கட்டி அமைப்பதில்லை, போராடும் மக்களே ஒரு சிறந்த தேசத்தை கட்டி அமைக்கிறார்கள். அந்த வகையில் தன் சொந்த மண்ணுக்காக போராடும் இந்த மக்களே இந்த தேசத்தின் மீது உண்மையான பற்றுறுதி கொண்டவர்களாவர். இவர்களோடு இணைந்து நின்று போராடுவதே ஒவ்வொருவரின் கடமையாகும். தமிழ்நாட்டின், தமிழர்களின் எதிர்காலம் சிறந்து விளங்க, ஒரு உயரிய வாழ்க்கையினைப் பெற ஒவ்வொருவரும் தங்களை இந்த மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.

- தமிழ்க்குமரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It