மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?

தமிழ்த் தேசியப் பெருந்தலைவர் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மரியாதைக்குரிய அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம்.  நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; விரும்புகிறேன்.

‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுச்சாம்’ என்ற கதையாக இந்துத்துவ-சாதியத்தை அடித்தளமாகக் கொண்ட இந்திய தேசிய கொள்கையிலிருந்தும் பார்ப்பனியக் கொள்கையிலிருந்தும் விடுபட்டு தமிழ்த்தேசியக் களத்திற்கு வந்தால் இங்கும் அதே கொடுமை தலைவிரித்தாடினால் என்ன செய்வதய்யா?  அந்தக் கொடுமைகளை உங்களைப் போன்றவர்களும் முன்னெடுத்துச் செல்வதைப் பொறுக்க முடியாமல்தான், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளில் ஒருவனாகவும் இருந்து தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.

nedumaran_300உங்களைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அல்லது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடனோ இம்மடலை தங்களுக்கு எழுதவில்லை.  உங்களை, உங்களின் அரசியல் பயணத்தை மதிப்பவன் என்கிற உரிமையில் இந்த மடலை எழுதுகிறேன். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்லப்படுவதில்லை. ஒரே வார்த்தையில் அதை அவதூறு என்று சொல்லாமல் - மௌனமாக இருந்துவிட்டுச் செல்வீர்கள். முன்னர் எல்லா காலத்தையும் விட ஏராளமான இளைஞர்கள் இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஈர்ப்பாகி அமைப்புகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இனியும் ஏமாறக்கூடாது என்பதாலேயே இதை எழுதுகிறேன்.

அது ஒரு காலம்.  உங்களை வியந்து நிமிர்ந்து பார்த்த காலம். உங்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள மதுரை, விவேகானந்தா அச்சகத்திற்கு நடையாய் அலைந்த காலம் அது.  ‘விடுதலைப் புலிகள்’, ‘பிரபாகரன்’, ‘தமிழ்த்தேசியம்’ என்கிற வினைச்சொற்களை நீங்கள் பேசப் பேச என்னைப் போன்றவர்கள் அதுவாகவே மாறத் துடித்த காலம்.  இன்று, ‘ஈழத் தாய்’ என்று உங்களைப் போன்றவர்களால் அழைக்கப்படுகிற ஜெயலலிதா அம்மையாரின் கடந்தகால ஆட்சியில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா எனும் கொடுஞ்சிறையில் நீங்கள் அடைக்கப்பட்டபோது பொடா எதிர்ப்பு இயக்கம் கட்டி தமிழகம் முழுக்க விடுதலைப் புலிகளை ஆதரித்தும் ஜெயலலிதா அம்மையாரைக் கண்டித்தும் களமாடிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் என்னைப் போன்ற இலட்சக்கணக்கான சிறுத்தைகள் பின்தொடர்ந்தபோது ஜெயலலிதா அம்மையாரே ஆட்டம் கண்டதை நீங்கள் கடலூர் சிறைக்குள்ளிருந்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சிறை உடைத்து நீங்கள் விடுதலையாகி வெளியே வந்தபோது, கடலூர் நடுவண் சிறையிலிருந்து சென்னை வரை வழிநெடுக மாலை மரியாதையுடன் வரவேற்பு கொடுத்தவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.   இதையும் அய்யா அவர்கள் நேரில் பார்த்திருப்பீர்கள்.  அந்த அளவுக்கு உங்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின் மீதும் அடங்காப் பற்று கொண்டவர்கள் சிறுத்தைகள்.

கடலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தவுடன், உங்களைப் போன்று பொடாவில் சிறை சென்றோரின் விடுதலைக்காக தமிழகம் முழுக்கக் களமாடிய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களையும், பொடா எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அய்யா நல்லக்கண்ணு போன்றோரையும் சந்திப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நீங்கள் நேரடியாக கோபாலபுரம் சென்று இன்றைக்கு தமிழின துரோகியாக உங்களால் அடையாளங்காட்டப்பட்டுவரும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைச் சந்தித்து, தி.மு.க. கொடியைக் கையிலேந்தியபோதே உங்கள் அரசியல் உள்நோக்கம் அம்பலப்பட்டுப்போனது.

உங்கள் விடுதலைக்காக உண்மையாகக் களமாடிய விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரை சந்திக்க சிறுத்தைகள் அலுவலகம் செல்ல உங்களுக்கு எது தடையாக இருந்தது அய்யா?

தமிழ், தமிழினம், தமிழ்த்தேசியம், விடுதலைப் புலிகள் ஆதரவு, சாதி ஒழிப்பு என்று கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் தேசியக் களத்தில் களமாடி வரும் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைப் புறக்கணித்ததற்கான உங்களது உள்நோக்கம் இப்போதுதான் புரிகிறது.  என்னைப் போன்றவர்களுக்கு அது தாங்க முடியாத வேதனையாக அமைந்தது. ஏனென்றால் நீங்கள் வசித்த மயிலாப்பூர் பகுதியிலும், அடையாறு பகுதியிலும் மட்டுமே தெரியப்பட்ட தமிழ்த்தேசிய அரசியல், விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் என்கிற விடுதலை அரசியலை, நுழைய முடியாத கடைசிச் சேரியெங்கும் கொண்டு சென்றவர் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால் பொடா கொடுஞ்சிறை என்ற போதும் "கைது செய்து பார்!" என்று கொள்கைரீதியாகவும் உணர்வுரீதியாகவும் அறைகூவல் விட்டு தமிழகம் முழுக்க பொடாவை எதிர்த்து தமிழ்த் தேசிய அரசியல் நெருப்பைப் பற்ற வைத்தவர் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.  அன்றைக்கு உங்களைப் போன்றவர்களை பொடாவில் கைது செய்து விடுதலைப் போராட்டத்தை முடக்கிய ஜெயலலிதாவை - இந்துத்துவத்தை, பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஜெயலலிதாவை - இன்றைக்கு உங்களைப் போன்றவர்களாலேயே தமிழர்களுக்கு வாராது வந்த மாமணியாய், வேலுநாச்சியாராய் அடையாளம் காட்டப்படுவது எந்தவிதத்தில் சரி அய்யா?

கடந்த ஜனவரி 2, 2009 அன்று உலக நாடுகளின் உதவியோடு சிங்கள இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பிறகு, எமது தலைவர் உங்களைச் சந்தித்து அனைவரையும் ஒருங்கிணைத்துப் போராட அழைப்பு விடுத்தபோது, நீங்கள் அண்ணன் வைகோவை பெரியார் திடலுக்கு அழைத்து வருகிறேன் என்று உறுதியளித்துவிட்டு, பின் அழைத்து வராதது ஏன் அய்யா?

தலைவர்கள் கூடி முடிவெடுக்கிற நாளை, இடத்தை நீங்களே பலமுறை தள்ளித் தள்ளி வைத்தீர்கள்.  இதற்கான காரணத்தை என்றைக்காவது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா?

ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக, கேவலம் இந்துத்துவவாதிகளையும், பா.ஜ.க.வினரையும்கூடச் சந்திக்கும் நீங்கள், அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை, எமது தலைவர் தொல்.திருமாவளவன், ஆசிரியர் கி.வீரமணி, மருத்துவர் இராமதாசு ஆகியோர் சந்தித்ததை மட்டும் ஏன் அரசியலாகப் பார்த்தீர்கள்?

உங்களது நோக்கம் கலைஞரை இந்த விவகாரத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதா? அல்லது எமது தலைவரின் ஒருங்கிணைப்பில் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைவதை தாங்கள் விரும்பவில்லையா?

உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாததால், அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைக்க முடியாத அதிருப்தியாலும், மன உளைச்சலாலும் கடந்த ஜனவரி 14, 2009ஆம் ஆண்டு மறைமலை நகரில் சாகும்வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கிய எமது தலைவரின் போராட்டத்தில் நீங்களோ, மற்ற தமிழ்த் தேசியவாதிகளோ உடன் உண்ணாநிலையிருந்து அரசுக்குக் கூடுதல் நெருக்கடி கொடுத்திருக்கலாமே?  ஈழத்தில் மக்கள் கொத்துக்கொத்தாய் செத்துக் கொண்டிருந்தபோதும், போர் உக்கிரத்தை அடைந்து கொண்டிருந்தபோதும் ஜெயலலிதா தலைமையில் அணி கட்டத் துடித்துக் கொண்டிருந்த திரு. எம்.நடராசன் அவர்களோடு சேர்ந்து  அறிவிக்கப்படாத ‘ராஜகுரு’ போல தாங்கள் செயல்பட்டது ஏன் என்று விளக்க முடியுமா அய்யா?

நீண்டகாலமாக இந்த இனத்திற்காகவும் ஈழத்திற்காகவும் தியாகம் செய்த எத்தனையோ பேர் இருக்க  நடராசனோடு கூட்டுச் சேர்ந்திருப்பது ஏன் என்பதைச் சொல்ல முடியுமா? தனிப்பட்ட முறையில் நீங்கள்  நடராசனோடு மட்டுமல்ல எவருடனும் நட்பு பாராட்டலாம். ஆனால் நீங்களும் நடராசனும் ஒன்றிணையும் புள்ளிக்கு தமிழர் அரசியல் என்ற ஜோடணை எதற்கு?

ஈழ மக்களைக் காப்பாற்றுவதைவிட கருணாநிதியை எதிர்ப்பதில்தான் உங்களுடைய முழு கவனமும் இருந்ததை என்னைப் போன்றவர்கள் பின்னர்தான் புரிந்துகொள்ள முடிந்தது.  இராஜபக்சேவைத் திட்டுவதைவிட, கருணாநிதியைத் திட்டுவதில்தான் உங்களுக்கு கவனமும் ஆர்வமும் இருந்தது.  அதைவிட, எமது தலைவர் திருமாவளவன் தலைமையில் எந்த அணியும் உருவாகிவிடக் கூடாது என்பதிலும் கூடுதல் அரசியல் கவனத்துடன் நீங்கள் இருந்தை அறிந்துகொள்ள முடிந்தது.  ஏனென்றால், ‘தி.மு.க. அணியும் வேண்டாம்; அதிமுக அணியும் வேண்டாம்.  தமிழ்த் தேசிய ஆற்றல்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டுவோம்!’ என்று எமது தலைவர் 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தொடர்ந்து அறைகூவல் விடுத்ததை, தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதற்கான நல்ல வாய்ப்பு என்று, உங்களைப் போன்ற மூத்த தமிழ்த் தேசியவாதிகள் முன்வந்து  களத்தில் குதித்திருக்கலாம்.  ஆனால் அமைதியாக, கம்யூனிஸ்டுகள், வைகோ போன்ற தலைவர்களை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைத்து, ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதில்தான் குறியாக இருந்தீர்களே தவிர, தமிழ்த் தேசிய அரசியல் ஆற்றல்களை ஒருங்கிணைக்க என்ன முயற்சிகள் செய்தீர்கள் அய்யா? அன்றைக்கு மூன்றாவது அணி உருவாவதைத் தடுத்து என்ன கண்டீர்கள், வைகோவுக்கு ஜெயலலிதா இழைத்த துரோகத்தைத் தவிர?

‘ஆஸ்பத்திரியில் இழுத்துக்கிட்டிருக்கும்போது ஒண்ணும் செய்யாம, கருமாதியில போய் அழுது கத்தினானாம் ஒருவன்’ என்பது போல, போர் நடக்கும்போது உங்களைப் போன்றவர்கள் அமைதி காத்துவிட்டு, இப்போது முள்ளிவாய்க்கால் நினைவுக் களம் கட்ட ஆரம்பித்திருக்கிறீர்களே அய்யா!

தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவு அடைந்த அந்தப் போராளிகள் மற்றும் பொதுமக்களின் வீரத்தை ஒவ்வொரு தமிழனும் உள்வாங்க வேண்டும்;  அந்தத் தியாகத்தை, அர்ப்பணிப்பை தமிழகம் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் நெஞ்சில் நிறுத்த வேண்டும் என்கிற உங்களது முயற்சி பெரும் பாராட்டுக்குரியதுதான்; போற்றுதலுக்குரியதுதான்.  ஆனால் அந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் கட்டுவதிலும்கூட நீங்கள் அரசியல் செய்வது நியாயந்தானா?

தமிழீழ விடுதலைக்காகவும், விடுதலைப் புலிகளை ஆதரித்தும், தமிழகத்தில், தமிழ்த் தேசியத் தலைவர்களிடத்திலும், இலட்சக்கணக்கான சிறுத்தைகளிடத்திலும், தமிழ்த் தேசியத் தொண்டர்களிடத்திலும் நிதி கோராமல், ஒரு சில முதலாளிகளிடம் மட்டும் பணம் பெற்று அந்தப் போராளிகளின் வீரத்தை, தியாகத்தை உங்களைப் போன்றவர்களே கொச்சைப்படுத்துவது நியாயந்தானா?

ராஜீவ் கொலை வழக்கில் உலகிலே பெரிய நீதிமன்றப் படுகொலையாக 26 பேருக்கு தூக்கு என்ற தீர்ப்பு வந்தபோது மக்களிடம் நிதி திரட்டி நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்து வென்றோமே, நினைவில்லையா? ஐந்து ரூபாயும் பத்து ரூபாயும் கொடுத்த ஏழைத் தமிழனின் அந்த வெற்றிதானய்யா கனமானது.

கடந்த தை முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் தஞ்சையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் கட்டுவதற்காகத் தனது சொகுசுந்து, தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை ஏலம் விட்டு அதில் கிடைத்த 50 இலட்சம் ரூபாயை மேடையிலேயே உங்களிடம் கொடுத்ததை - ஏற்கனவே பலமுறை திரு. ம.நடராசன் அவர்கள் ஒத்திகை பார்த்துத்தானே அரங்கேற்றியிருப்பார்?

nedumaran_natarajan

திடீரென ஏலம் விடப்பட்டதாம்! அந்தக் கூட்டத்திலேயே 50 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாம்!  அந்தப் பணம் உங்களிடம் சேர்க்கப்பட்டதாம்! பின்பு அந்த மகராசன் சொகுசுந்து இல்லாததால் நடந்தே சென்றாராம்!  ஏன் இந்த கதை, திரைக்கதை, நாடகம்?  அந்தப் புதிய தமிழ்த் தேசியத் தளபதி, இனி அவர் இருக்கும் வீடான பெசன்ட் நகருக்கோ வெளியூருக்கோ பேருந்துகளில்தான் போகப் போகிறாரா?  ஏன் இந்த நாடக அரங்கேற்றத்திற்குப் பலியானீர்கள் அய்யா?  இந்த நாடகத்தின் இன்னொரு ‘துணை பாத்திர’மாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாத ஈழத்துக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களையும் பலியாக்கியது ஏன் அய்யா?

ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் புனைந்து கைது செய்யப்பட்ட 26 பேரின் விடுதலைக்காக உயிர்காக்கும் குழு அமைத்து தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க நிதி திரட்டிய தாங்களா இப்படியொரு முதலாளியிடம், அதுவும் அரசியல் புரோக்கராக இருக்கும் ம.நடராசன் போன்றவர்களிடம் மொத்தப் பணத்தையும் வாங்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகத்தை, அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்துவது? இது எந்த வகையில் சரி?  அந்தப் பணம் நியாயமான பணமா  அல்லது ஜெயலலிதாவின் ஆட்சியில் கிடைத்த ஊழல் பணமா என்கிற கேள்விக்குள் யாரும் போகவில்லை.  ஆனால் நடராசன் போன்றவர்களை உலகத் தமிழர்களிடத்தில் தமிழ்த்தேசியவாதியாகத் தூக்கி நிறுத்துவதன் நோக்கம்தான் புரியவில்லை.

ஒவ்வொரு தமிழனிடத்திலும் நிதி வசூல் செய்து அதன் மூலம் தமிழ்த் தேசியத்தைப் பொதுமைப்படுத்த-பரவல்படுத்த முயற்சிக்காமல் ம.நடராசன் போன்ற அரசியல் புரோக்கர்களிடம் பணம் வாங்குவதன் நோக்கம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை தனியுடைமை ஆக்கவா?  அல்லது சாதி ஆதிக்கப் பின்னணி உள்ள நடராசன் போன்றவர்களை பொதுமைவாதியாகக் காட்டுகின்ற முயற்சியா?

பார்ப்பனர்களுக்கும் மன்னார்குடி குழுவினருக்கும் போயஸ் கார்டனை கைப்பற்றுவது யார் என்று வந்த போட்டியில் பார்ப்பனர்கள் வென்று, மன்னார்குடி கும்பல் வெளியேற்றப்பட்ட நிலையில், நடராசனை தமிழர் அரசியலின் அடையாளச் சின்னமாக உருமாற்றம் செய்கின்றீர்களே நியாயமா?

கடந்த காலங்களில் ‘தமிழால் ஒன்றிணைவோம்’ என்று தமிழகத்தில் பல இடங்களில் தமிழகப் பெருவிழாக்களை நடத்திய ஆனாரூனா என்று அழைக்கப்படும் நா.அருணாசலம் கடைசியில் தமது ‘நந்தன்’ இதழில் (பேராசியர் சுபவீ ஆசிரியராக இருந்தபோது அல்ல) சாதிவெறியில் அம்பலப்பட்டு நின்றதுபோல நடராசன் போன்றவர்கள் பூலித்தேவன், மருதுபாண்டியர்கள் விழாக்களை நடத்தி தமிழகம் முழுக்க தமது சாதிவெறியை வெளிப்படுத்தி வந்தபோதும் தாங்கள் மட்டும், சாதிவெறியர்களோடு கைகோர்ப்பது தமிழினத்திற்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா?

இது போதாதென்று தமிழீழக் கவிஞர் காசிஆனந்தன் அய்யா அவர்களையும் சாதி வெறியர்களோடு கைகோர்க்க வைத்து, அந்த அப்பாவி மீது சாதியக் கறை படியவைப்பது நியாயம்தானா?

இப்படி ஒருபக்கம் சாதிவெறியர்களோடு கைகோர்ப்பது, கோவையில் இசுலாமியர்களின் தொழில் நிறுவனங்களை அழித்தொழிப்பதில் உறுதுணையாக இருந்த இந்துத்துவவாதி பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு உங்களது உலகத் தமிழர் பேரமைப்பு மூலம் உலகப் பெருந்தமிழர் பட்டத்தைக் கொடுத்து இந்துத்துவ மதவெறியர்களோடும் கை கோர்ப்பது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதில்லையா?

இந்திய தேசியத்திற்கு அடிப்படை இந்துத்துவம்.  அந்த இந்துத்துவத்திற்கு அடிப்படை சாதியம்.  இந்திய தேசியம், இந்துத்துவம், சாதியம் இந்த மூன்றும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவை மட்டுமல்ல, இவை மூன்றுக்கும் மாற்று தமிழ்த்தேசியம்தான் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல.  ஆனால் நீங்கள் தெரிந்தே இப்படி இந்துத்துவ மதவெறியர்களோடும் சாதி ஆதிக்க வெறியர்களோடும் கை கோர்ப்பது தமிழ்த் தேசியத்திற்குள் இருந்துகொண்டு தமிழ்த் தேசியத்தை முடக்கவும் அழிக்கவும் செய்யும் சதி இல்லையா?

செப்டம்பர் 11ஆம் நாள் மாவீரன் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மக்களைக் கூடவிடாமல் ஜெயலலிதா அரசு செய்த காட்டுமிராண்டித்தனமான செயலை நீங்கள் இதுவரை கண்டித்து அறிக்கை விடாததிலிருந்து உங்களது சார்பு நிலை எங்களுக்குப் புரிகிறது.  தமிழீழப் படுகொலைகளை நினைவுபடுத்தும் வகையில் தலித்துகள் பரமக்குடியில் கொல்லப்பட்டதைக் கண்டும் நீங்கள் அமைதி காத்தது ஜெயலலிதாவுக்காகவா? அல்லது நடராசனின் சாதிப் பின்னணிக்காகவா?  எந்த ஒரு பிரச்சனைக்காகவும் தினமணி ஆசிரியரைப் போல அந்த நாளிதழில் சிறப்புக்கட்டுரைகளை எழுதித் தள்ளும் நீங்கள் என்றாவது பரமக்குடி படுகொலை குறித்துக் கண்டித்து எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனோம்.

அது மட்டுமல்ல, தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் நடத்தும் பல கூட்டங்களிலும் போராட்டங்களிலும் தேவேந்திரர் கூட்டமைப்புத் தலைவர் திரு.பசுபதி பாண்டியன் அவர்களை அழைத்து வந்து உங்கள் அருகில் உட்கார வைத்து ‘பேலன்ஸ்’ செய்து வந்தீர்கள்.  கடந்த 10-1-2012 அன்று திரு. பசுபதி பாண்டியன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து துடித்துப்போய் எமது தலைவர் உள்ளிட்ட தலித் மக்களுக்காகப் போராடும் தலைவர்கள் மட்டுமே தூத்துக்குடி சென்று அஞ்சலி செலுத்தி வந்தார்கள். நீங்கள் இதனைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை;  அந்த இடத்திற்கும் போய் அஞ்சலி செலுத்தவில்லை. நடராசன் வருத்தப்படுவார் என்பதுதான் இதற்குக் காரணமா?  அல்லது தலித் தலைவர்களுக்கெல்லாம் அஞ்சலி ஒரு கேடா என்கிற சாதிய மனப்பான்மையா?

தூக்குக் கொட்டடியில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கெதிராக ஜெயலலிதா அரசு மேற்கொள்ளும் துரோகச் செயலைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கிறீர்களா?

கடந்த 18-1-2012 அன்று மலையாளிகளால் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட திருவேற்காடு சாந்தவேலு உடலை ஜெயலலிதாவின் காவல்துறையே தூக்கிச் சென்று திருட்டுத்தனமாக எரித்ததே...  அதையாவது கண்டித்து அறிக்கை விட்டீர்களா?   திருவேற்காடு சாந்தவேலு உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தமிழ் உணர்வாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததே ஜெயலலிதா போலிசு,  இதனைக் கண்டிக்க முன்வராததன் நோக்கம்தான் என்ன?

இப்போதுதான் உங்களது உள்நோக்கம் எமக்குப் புரிகிறது.  ஜெயலலிதாவின் அரசியல் புரோக்கரான நடராசனின் செயல்திட்டம் - கருணாநிதியை வீழ்த்தி, ஜெயலலிதாவை அரியணையில் அமர வைப்பது.  அதற்கு நீங்களும் உதவியாயிருந்தீர்கள். இப்போது உங்கள் வேலை முடிந்து விட்டது.  இந்துத்துவப் பார்ப்பனியத்தின் நோக்கத்தை நீங்கள் நிறைவேற்றி வைத்தீர்கள்.  உங்களது தமிழ்த் தேசியப் பணி இவ்வாறு தொடர்கிறது.

தமிழகத்தில் நீங்கள் காங்கிரசுப் பேரியக்கத்தின் தலைவராக இருந்ததிலிருந்தும், அதற்கு முன்பிருந்தும் சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடிக்கொண்டுதான் இருந்தன... இருக்கின்றன.  விழுப்புரம், ஊஞ்சனையிலிருந்து மேலவளவு, பரமக்குடி வரை தலித்துகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.  வீடு, வாசல்களை இழந்து ஊர் ஊராய் உறவினர்களின் வீடுகளில் ஓடி ஒளியும் தலித்துகளின் வாழ்நிலை, ஈழத் தமிழர்களின் வாழ்நிலைக்குச் சற்றும் குறைந்ததல்ல.  சிங்கள இனவெறியர்களைப் போல சாதி வெறியர்களும், சிங்களக் கொடுங்கோன்மை அரசைப் போல தமிழக ஆட்சியாளர்களும் அரச பயங்கரவாதத்தை தலித்துகள் மீது பாய்ச்சியபோது கண்டித்துப் போராட முன்வராத உங்களது தமிழ்த் தேசியம் உண்மையானதாக எப்படி இருக்க முடியும்?

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விடுதலை அரசியல்தான் தமிழ்த்தேசியம்.  சாதித் தமிழன் செத்தால்தான் குரல் கொடுப்போம்! போராடுவோம்!  தலித்துகள் செத்தால் கண்டுகொள்ள மாட்டோம் என்கிற மனநிலை மனிதநேய மனநிலையா?  ஒடுக்குமுறை எங்கு நிகழ்ந்தாலும் அங்கு நிற்பவன்தான் விடுதலையை நேசிப்பவனாக இருப்பான்.  ‘ஈழ விடுதலைக்காக மட்டும் நிற்பது; தலித் விடுதலைக்கு எதிராக இருப்பது’ என்கிற உங்களது இரட்டை நிலைப்பாடு மேதகு பிரபாகரன் அவர்களின் நிலைப்பாட்டிற்கு, கொள்கைக்கு எதிரானது.

2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டில் பேசிய எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், "தமிழீழ விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் போராட்ட வெற்றிக்குப் பின் கிடைக்கும் தமிழீழத்தில் சாதி ஒழிக்கப்பட வேண்டும்.  சாதியற்ற தமிழ்த்தேசம் அமைய வேண்டும்" என்று பேசினார்.  இதற்குப் பதிலளித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கவிஞர் புதுவை ரத்தினதுரை, "தம்பி பிரபாகரன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தின் ஊடாகவே சாதியை ஒழித்து வருகிறோம்.  சாதி ஒழிக்கப்பட்ட தமிழீழம்தான் எமக்குத் தேவை.  சாதி அமைப்புடன் கூடிய தேசம் எங்களுக்குக் கிடைத்தால், அப்படியொரு தேசமே எமக்குத் தேவையில்லை" என்று பேசினார்.

மேதகு பிரபாகரன் அவர்களின் வழிநடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அய்யா நெடுமாறன் அவர்களே, இப்போது சொல்லுங்கள், உங்கள் வழி மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?

மிக்க வேதனையுடன்

- வன்னிஅரசு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
மாநில செய்தித்தொடர்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

(படம் நன்றி: தினமணி)

Pin It