மணிப்புரி சமுதாயத்தால், குறிப்பாக குடிமைச் சமுதாயக் குழுக்களால், தூண்டுதல் பெற்று வேறு தேர்வு இல்லாத நிலையில், ஐரோம் சர்மிளா ஒரு அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நீதிமன்றக் காவலில், மருத்துவமனையில் அடைக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக மூக்குத் துவாரங்கள் வழியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் குழாய் மூலமாக உணவு செலுத்தப்பட்டு, ஏறத்தாழ இப்போது 11 ஆண்டுகளாக ஒரே மாதிரி வாழ்ந்துவர வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளார். நண்பர்கள், உறவினர்களை விட காவல்துறையினரே அவரை எப்போதும் சூழ்ந்துள்ளனர். ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு முறை அவர் ஆம்புலன்ஸ் வண்டியில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறாரா என்று கேட்கப்படும் கேள்விக்கு ‘இல்லை’ என்று பதிலளிக்கிறார்.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்னும் பயங்கரச் சட்டத்துக்கு எதிராக 2000 ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து அவர் மேற்கொண்டு வரும் அமைதியான போராட்டம், அவருக்கு மணிப்பூரின் ‘இரும்புப் பெண்மணி’ என்ற பட்டதைப் பெற்றுத் தந்துள்ளது. ஏடறிந்த வரலாற்றில் மிக நீண்டகாலமாக நடந்துவரும் பட்டினிப் போராட்டத்தின் மூலம் சிறிதும் அறியப்படாமல் இருந்த மணிப்பூரை அவர் உலகப்படத்தில் இடம் பெறச் செய்துள்ளார். மணிப்பூர் சமுதாயம் முழுமைக்கும் அவர் ஓர் அடையாளச் சின்னமாக ஆகியிருக்கிறார்; எந்த தண்டனைக்கும் ஆளாகாமல் கொலை செய்யக் கூடிய அதிகாரத்தை பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியுள்ள சட்டத்துக்கு எதிராக மக்களின் முன்னணிப் போராளியாக அவர் இருக்கிறார்.

அஸ்ஸாம், மணிப்பூர் (இம்பால் நகராட்சிப் பகுதிகள் தவிர), நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகள், மேகாலயாவில் உள்ள அஸ்ஸாம் எல்லைப்பகுதியில் 20 கிலோ மீட்டர்கள் அளவுக்கு திரிபுராவில் சில காவல்நிலையப் பகுதிகள், மேலும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய ‘கலவரப் பகுதிகளில்’ ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நடப்பில் உள்ளது. மலோம் நகரில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் தனது பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போதிருந்து அந்த நிகழ்ச்சி மலோம் படுகொலை என்று அறியப்பட்டு வருகிறது. மக்களின் சார்பாக தனது போராட்டத்தை நடத்தி வருவது குறித்து குடிமைச் சமுதாயக் குழுக்கள் ஐரோம் சர்மிளாவைப் பெருமைப்படுத்தி வருகின்றன.

அவருடைய பட்டினிப் போராட்டம் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாராவது ஊகிக்கமுடியுமா? அவருக்கு 39 வயது ஆகிறது. ஏற்கனவே தனது இளமையைக் கடந்து விட்டார். கோவாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் குடிமை உறுப்பினரான டெஸ்மாண்ட் கூட்டினோ என்று அழைக்கப்படும் நபரை நேசிப்பதாக ஒரு இதழியலாளரிடம் அவர் ஒப்புக்கொண்டார். ஓராண்டு காலக் கடிதப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச்சில் ஒரு முறை அவரைச் சந்தித்தார். அப்போதிருந்து, அவரைப் போற்றி அவர் மீது பாசத்தைப் பொழிந்து வந்தவர்களுக்கு இப்போது அவர் மீது ஒரு மரியாதைக் குறைவு ஏற்பட்டுள்ளது.

ஒரே வீச்சில் அவர் மீது அவர்கள் கொண்டிருந்த பெருமிதம் நொறுங்கியுள்ளது. ஏன்? இதுவரை அவரை ஆதரித்து வந்தவர்கள், அந்த நிகழ்ச்சிப் போக்கில், அவரது 'தியாகத்தின்' மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையில் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் உருவான உணர்வா இது? இந்த நிகழ்ச்சிப் போக்கில் அவர்கள் 'அவருடைய' போராட்டத்தை 'நமது' போராட்டம் என்று தவறாக விளங்கிக் கொண்டார்களா? அதனால் தான் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழும் அவரது விருப்பம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதா?

எப்படியிருந்தாலும், குடிமைச் சமுதாயக் குழுக்களின் போராட்டம் ஒரு மிக நீண்ட விவகாரமாகும். 2004ல் மத்திய அரசாங்கம் வாக்குறுதியளித்தது போல அந்தச் சட்டத்திற்குப் பதிலாக கூடுதல் மனிதாபிமானமுள்ள ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதில் முன்னேற்றம் எதுவும் இல்லை. அந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கு பாதுகாப்பு அமைப்பு, குறிப்பாக படை, எதிர்ப்பு தெரிவிப்பதுதான் இதற்குக் காரணமாகும். இந்தப் பிரச்சனையில் அரசிற்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார்.

மணிப்பூரின் இளைஞர்களும் பெரியவர்களும் போராட்டத்திலும் சோர்விலும் தங்கள் சொந்தப் பங்கினைக் கொண்டுள்ளார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு சர்மிளா இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு உரிமை இல்லை என்று பொருளா? அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்ட பிறகே தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். பலரும் சந்தேகம் கொண்டுள்ளது போல அவர் இந்தக் காதல் விவகாரத்தில் தந்திரமாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளாரா?

நியாயமான அமைதிக்கான அறக்கட்டளையைச் சேர்ந்தவரும் சர்மிளாவின் நீண்டகால சகாவுமான மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமை செயல்வீரர் பப்லூ லோய்டாங்பம் சர்மிளாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கருத்துக் கூற மறுக்கிறார். “அவர் விரும்பும் போது அவருடைய பட்டினிப் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளலாம். அவர் விரும்புபவரைத் திருமணம் செய்துகொள்ளலாம், எங்கள் தரப்பிலிருந்து எந்தத் தலையீடும் இருக்காது.”

மாநிலத்தில் இழைக்கப்படும் தவறுகளுக்கு எதிராக சவுக்கை எடுத்த மீரா பைபிஸ் என்ன சொல்கிறார்? 2004 ஆம் ஆண்டு ஜூலையில் மீரா பைபிஸ் உலக அளவில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றார்- மக்கள் மீது பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட அத்துமீறலுக்கு எதிராக காங்க்லா கோட்டை முன்பு அவர்கள்-எதிர்ப்பின் இறுதியான வடிவமாக- தங்கள் ஆடைகளைக் களைந்து நின்றார்கள். அவர்கள் ஏன் சர்மிளாவை ஆதரிக்கவில்லை? அவர்கள் ஏன் இன்னொரு பெண்ணின் லட்சியத்தை ஆதரித்து நிற்கவில்லை?

ஆர்வம் கொண்ட தரப்பினர் இதில் ஒரு சதி இருப்பதாகப் பார்த்தனர். அவரது நேர்காணலைப் பிரசுரித்த செய்தித்தாள்களின் பிரதிகளை எதிர்த்தனர். மணிப்பூரில் அந்த செய்திதாளைத் தடை செய்தனர். ஏன்? சில குடியுரிமைச் செயல்வீரர்கள் கருத்துப்படி, சர்மிளாவுக்கும் டெஸ்மாண்டுக்கும் இடையில் உறுதியாக ஒரு உறவு உருவாகியிருந்தது. ஆனால் அந்த செய்திக்கு எதிராக நஞ்சு கக்கப்படுகிறது. “ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் உண்ணாநிலையின் பின்னணியில், அந்தக் கட்டுரை பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவரது லட்சியத்தை விட அவரது காதலைப் பற்றிக் கூடுதலாக கூறுவதாக இருந்தது. அந்தக் கட்டுரை அவருக்கும் எங்களுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகளை உருவாக்க முயற்சி செய்தது.... ஏன்? நாங்கள் அவரைச் சந்திக்கவே அனுமதிக்கப்படாத போது, நாங்கள் எப்படி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையீடு செய்ய முடியும்?" என்று ஒரு குடிமைச் சமுதாய செயல்வீரர் கேட்கிறார்.

ஆனால், எவ்வளவு நாட்களுக்குத் தான் குடிமைச் சமுதாய குழுக்கள் சர்மிளாவின் தோள்களில் சவாரி செய்வார்கள்? ஒருபுறம், இந்தக் குழுக்கள் பத்திரிகைச் சுதந்திரத்தை பலமாக ஆதரிக்கின்றன. இன்னொரு புறம், அவர்கள் அந்த செய்தித்தாள் சர்மிளாவின் நேர்காணலை வெளியிடுவதை மணிப்பூரில் தடை செய்கிறார்கள். இந்த இரட்டை வேடம் ஏன்?

நிகழ்வு என்னவாக இருந்தாலும், சர்மிளா பாபி சாண்ட்ஸ் போல முடிந்துபோவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. அயர்லாந்தின் தேசியவாத விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்திய சுதந்திரத்தின் புரட்சிகர உணர்வாக இருந்த பாபி சாண்ட்ஸ் 1981ல் அவரது பட்டினிப் போராட்டத்தின் 66வது நாளில் இறந்து போனார். மொழிவாரி மாநிலங்களின் மறுசீரமைப்பிற்காகவும் ஆந்திரப் பிரதேசத்தை அடைவதற்காகவும் தனது பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கிய அமரஜீவி போட்டி சிரீராமுலு 1952 டிசம்பரில் இறந்து போனார். இன்னும் கங்கையில் மணல் வாருவதைத் தடுக்கும் பட்டினிப் போராட்டத்தில் 2011 ஜூனில் இறந்து போன சுவாமி நிகமானந்த் போன்ற அறியப்படாத வேறு பலரும் இருக்கிறார்கள்.

நன்றி: இந்து நாளிதழ், 23.10.2011

தமிழில்: வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It