“அவள் இப்போது எனது மகள் மட்டுமல்ல, இந்த தேசத்தின் மகளும் கூட.”

இது நாடு மறந்து போன அறப்போராட்டம்- அவருடைய பத்தாண்டு கால மன உறுதியின் சோதனை ஏறத்தாழ நாட்டின் மனசாட்சியிலிருந்து அழிக்கப்பட்டு விட்டிருந்தது. ஐரோம் சர்மிளாவின் கதையை மக்கள் நினைவுக்குக் கொண்டுவருவதற்கு, இந்தியாவின் தலைநகரின் மையத்தில், தேவைக்கும் மிகுதியாகப் பரபரபாக்கப்பட்ட இன்னொரு கிளர்ச்சியை சந்திக்க வேண்டியிருந்தது. அது தொலைதூர மணிப்பூரில் 2000 ஆண்டு நவம்பரிலிருந்து, மனதை வேதனைப்படுத்தும் வகையில், மாற்றம் எதுவுமின்றி நடந்து வருகிறது. அப்போது தான் சர்மிளா மணிப்பூரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு கோரி தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போதிருந்து அன்றாட வாழ்க்கை மாறிவிட்டது. அவர் இம்பாலின் ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் பலவந்தமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறார். அவர் மீது ‘தற்கொலை முயற்சி’ வழக்குத் தொடரப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சட்டப்படி ஓராண்டு தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யபட்டு, பின்னர் திரும்பவும் அவர் தனது உண்ணாநிலையைத் தொடர்வதும் திரும்பவும் கைதுசெய்யப்பட்டு கட்டாயப்படுத்தி உணவு செலுத்தப்படுவதும் நடந்து வருகிறது.

sharmila_370அன்னா ஹசாரே கிளர்ச்சியுடன், தவிர்க்க முடியாதவாறு ஒப்பிடப்பட்டு, இப்பொழுது கவனம் சர்மிளாவின் மீது திரும்பியிருக்கிறது. அவர் இந்த ஒப்பீடு குறித்து வருந்தவில்லை. தாம் அன்னா ஹசாரே மீது பெரிதும் மதிப்பு வைத்திருப்பதாகவும் அவருடைய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பயனளித்து வருவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவரது உண்ணாநிலையை 13 நாட்களில் முடிவுக்குக் கொண்டுவர முடிந்துள்ளது என்றும் கூறுகிறார். “அன்னா ஹசாரே மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அவரது போராட்டத்தை நான் வணங்குகிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு உயர்ந்த லட்சியம். டெல்லி வந்து அவரது இயக்கத்தில் சேர்ந்து கொள்ளுமாறு அவர் எனக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறு செய்வதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் நான் ஒரு கைதி. நான் இங்கு கட்டுண்டு கிடக்கிறேன் (தனது அறையைக் கைகாட்டுகிறார்).ஆம், இது தான் எனக்கும் அவருக்கும் உள்ள வேறுபாடு. நான் ஒரு கைதி, அவர் சுதந்திரமானவர். அவர் விரும்பும் எந்த இடத்திற்கும் செல்ல முடியும். அவரை இங்கு வருமாறு நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவரும் அவரது அணியும் இங்கு மிகவும் வரவேற்கப் படுகிறார்கள். இந்திய மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்திருந்தால் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்ற எனது கோரிக்கை இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.”

ஹசாரேயின் வெற்றியில் தனது சொந்தப் போராட்டத்தின் முடிவின் தொடக்கத்தை அவர் காண்கிறார்.“இறுதியாக, நேரம் வந்து விட்டது என்று நான் நினைக்கிறன்” என்று புன்சிரிப்புடன் கூறுகிறார். அதனால் தான் அன்னா ஹசாரேயின் அணியை அவர் மணிப்பூருக்கு அழைக்கிறார். “திடீரென்று ஒவ்வொருவரும் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு நீதிக்காக இங்கு ஒரு பெண் தனது இருபத்தியெட்டாவது வயதிலிருந்து பட்டினி கிடந்து வருகிறார் என்று உணர்ந்து கொண்டுள்ளனர்” என்று சர்மிளாவின் மூத்த சகோதரரும் அவருக்கு நெருக்கமான ஒருவருமாகிய ஐரோம் சிங்காஜித் கூறுகிறார்.

இத்தனை ஆண்டுகளாக சர்மிளா வழக்கமான உணவை உண்பதில்லை, அவர் நாள் ஒன்றுக்கு மூன்று முறை கட்டாயப்படுத்தப்பட்டு சத்துக்களும் விட்டமின்களும் செலுத்தப்படுகிறார். “ஆம், நான் உணவு எடுத்துக் கொள்வதில்லை” என்று மனம்திறந்து கூறும் அவர் “அதனால் தான் நான் அதைப்பற்றி நினைப்பதில்லை, தேன் எனக்குப் பிடிக்கும், இளநீர் எனக்குப் பிடிக்கும். பாகற்காயும் கூட எனக்குப் பிடிக்கும். ஆனால் இனிப்புக்களையும் நான் விரும்புவேன். நான் உண்ணாநிலையைத் தொடங்குவதற்கு முன்தினம் நான் நிறைய மாவு அடை சாப்பிட்டேன். நான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்போது நான் உண்பேன். இப்பொழுது எனது வாயில் பஞ்சை வைத்துக் கொள்கிறேன், அதன் மூலம் எதையும் விழுங்காமல் இருக்கிறேன். நான் பல் கூடத் தேய்ப்பதில்லை அதன் மூலம் எதையும் விழுங்காமல் இருக்கிறேன்.” என்று ஒப்புக் கொள்கிறார்.

மணிப்பூர் மேளோம் கிராமத்தில் வசித்த, ஒரு பள்ளி மாணவர் மற்றும் 61 வயது மூதாட்டி உட்பட சாதாரண குடிமக்கள் 10 பேர் அசாம் அதிரடித் துப்பாக்கிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நாட்களுக்குப் பிறகு சர்மிளா தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். 11 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நாளின் பயங்கரத்தையும் துயரத்தையும் நினைவு கூறுகையில், கொல்லப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் தாயாரான தொய்பி தீபி உடைந்து போகிறார். “மாலை மூன்று மணி இருக்கும். அவனுடைய தந்தை அப்போது தான் வேலையிலிருந்து திரும்பியிருந்தார். எனது மகன் அறிவியல் பாடத்தில் தனிப்பயிற்சி வகுப்புக்குச் செல்ல, அவன் அப்பாவிடம் பேருந்துக்குப் பத்து ரூபாய் பணம் கேட்டான். பதினைந்து நிமிடங்களில் அவன் நிரந்தரமாகச் சென்று விட்டான்.”

மணிப்பூர் போன்ற “கலவர” மாநிலங்களில் திணிக்கப்பட்டுள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், கைது செய்யவும், விசாரிக்கவும், தடுப்புக் காவலில் வைக்கவும், சந்தேகத்தின் பேரில் கொல்லவும் கூட ஆயுதப்படைகளுக்கு விரிவான அதிகாரம் அளிக்கிறது. மோதல் மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மோசமான விளைவுகளைத் தாங்கிக் கொண்டிருப்பதையும் எப்போதும் தீவிரவாதிகளுக்கும் படைக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சிக்கிகொண்டிருப்பதையும் அவர்களது துயரத்தையும் சர்மிளாவின் போராட்டம் எடுத்துக்காட்டி கவனத்தை ஈர்க்கிறது.

எவ்வாறாயினும், இப்போது சர்மிளா செய்திகளில் வருகிறார். பிரிட்டிஷ் குடிமகனும் கோவாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும் 48 வயது எழுத்தாளரும் ஆகிய டெஸ்மாண்ட் கூட்டின்ஹோவுடன் அவருக்குள்ள உறவுக்காக செய்திகளில் வருகிறார். அவர்கள் ஏறத்தாழ ஓராண்டாக பரஸ்பரம் தொடர்பில் உள்ளனர், ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் ஒருமுறை இந்த ஆண்டு மார்ச்சில் சந்தித்துக் கொண்டனர். ஆம், நான் ஒருவரை நேசிக்கிறேன். நான் ஒரு அசாதாரணப் பெண்ணாக கூறப்படுகிறேன். என்னை ஒரு இரும்புப் பெண்மணி என்கின்றனர். ஆனால் நானும் மானுடப் பெண் தான். நான் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்வது போன்ற, ஒரு சாதாரணப் பெண் செய்ய விரும்பும் ஒவ்வொன்றையும் நானும் செய்ய விரும்புகிறேன். எனது கோரிக்கை ஏற்கப்படும் போது நான் அதைச் செய்வேன்.”

கூட்டின்ஹோவுடனான அவரது உறவு அவரது ஆதரவாளர்களால் பகைமை கொண்ட ஐயத்துடன் காணப்படுகிறது. இது அவருக்கு மன உளைச்சலையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது சகோதரர் சிங்காஜித் கூட ஒப்புக்கொள்ள மறுக்கிறார்: “அந்த மனிதர்- டெஸ்மாண்ட்- ஒரு அரசாங்க உளவாளி. அவர் அவளைப் பலவீனப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவருடைய ஒரே குறிக்கோள் சர்மிளாவைத் திருமணம் செய்து கொண்டு அவரை அழைத்துச் சென்று விடுவது தான். நாங்கள் அது நடக்க விடமாட்டோம். அவள் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கிறாள். ஒரு மனிதரைக் காதலிப்பதற்காக அவள் எப்படிப் போராட்டத்தைக் கைவிட முடியும்?”

தனது போராட்டத்தைக் கைவிடப் போவது இல்லை என்றும் லட்சியத்திற்கு துரோகமிழைக்க மாட்டார் என்றும் சர்மிளா கூறுகிறார்.“இல்லை. நான் அப்படியே ஒடி விட முடியாது. நான் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கிய போது அது இத்தனை காலத்திற்கு நீண்டு செல்லும் என்று நான் நினைக்கவில்லை. நான் ஒவ்வொரு கணத்துக்குக் கணம் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் அதைப்பற்றி அளவுக்கு மிகுதியாக சிந்திக்க முயற்சி செய்வதில்லை. நான் கடவுளை நினைக்கிறன், அவரிடமே அனைத்தையும் விட்டுவிடுகிறேன். வாழ்நாள் முழுதும் ஒரு மருத்துவமனைச் சிறையில் மூக்கில் குழாயைச் செருகிக் கொண்டு கைதியாக வாழ்வதற்கு ஒருவரும் விரும்பமாட்டார் என்று நான் நினைக்கிறன்.”

சர்மிளா காவலில் படிப்பதும் எழுதுவதுமாகத் தனது நேரத்தைச் செலவழிக்கிறார். அவரது விருப்பத்துக்குரிய புத்தகங்கள்? கீதையும் பைபிளும். இப்போது கூட அவர் பினாயக் சென் பற்றி மின்னி வாய்த் எழுதிய புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த நூலாசிரியர் தானே அந்த நூலை அவருக்குப் பரிசாக அளித்துள்ளார்.” அவர் என்னைப் பற்றிக் கூட ஒரு நூலை எழுத விரும்புகிறார். ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை” என்று சர்மிளா கூறுகிறார்.

கொங்க்பால் கொங்ஹாம் லெய்காய் போரோம்பால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சர்மிளாவின் தாயார் ஐரோம் சாக்ஷி, எந்த ஒரு தாயாரையும் போல தனது மகளுக்குத் தாமும் சோறூட்ட விரும்பினாலும் தனது மகளை வீட்டுக்குத் திரும்பி ஒரு முழுமையான உணவை உண்ணுமாறு கேட்பது பொறுப்பற்றதாக இருக்கும் என்று கூறுகிறார்.“நான் அவளைச் சென்று பார்க்கவே இல்லை, அது அவளைப் பலவீனப்படுத்தும், மேலும் அது என்னையும் பலவீனப்படுத்தும். அவளுடைய உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடுமாறு நான் ஒருபோதும் கேட்கமாட்டேன், ஏனென்றால் அவள் மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறாள். ஆம், ஒன்பது குழந்தைகளில் அவள்தான் கடைக்குட்டி, ஆனால் எனது குழந்தையாக மட்டுமே அவள் இப்போது இல்லை, அவள் இப்போது தேசத்தின் மகளும் கூட.”

செப்டம்பர்-2011.-அவுட்லுக் இதழில் டோலா மித்ரா

தமிழில்: வெண்மணி அரிநரன்

Pin It