10.05.1932- 06.07.2011

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவுச் செய்தி நமக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. பேராசிரியர் இல்லையென்ற உண்மையை உள்வாங்கிக்கொள்ள நீண்ட நாட்கள் பிடிக்கும். தமிழியலுடன் நமக்கான உறவு இன்னும் இன்னும் வலுப்பெறும் பொழுது பேராசிரியருடனான நமக்கான உறவுப் பிடிமானம் அரிதொரு பரிமாணம் பெறும். அந்தளவிற்குப் பேராசிரியர் தமிழியலுடன் வாழ்ந்தவர். நாமும் வாழ்வதற்கான தளமும் வளமுமாக இருந்தவர்.

பேராசிரியர் தமிழ்ச்சூழலில் கலைஞராக, பல்துறைப் புலமையாளராக, ஆய்வாளராக, விமரிசகராக அறுபது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வந்தவர். இவர் பல்கலைக்கழக மட்டங்கள், உயராய்வு நிறுவனங்கள் மற்றும் கலை இலக்கியப் பண்பாட்டு மையங்கள் முதலான வற்றின் செயற்பாடுகளில் தமது பங்களிப்பை வழங்கி வந்தவர்.

இருபதாம் நூற்றாண்டில் புதிதாக எழுச்சி பெற்ற தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தின் அறிகை மரபின் பிரதிநிதியாகவும் பேராசிரியர் உருவானார். அதாவது மரபுவழித் தமிழ்க் கல்விப் பாரம்பரியம் நவீன ஆங்கிலக் கல்விப் பாரம்பரியம் யாவும் இணைந்து புதிய புலமைத்துவ மரபை உருவாக்கியது. பல்கலைக்கழக மரபு வழிவந்த நவீன தமிழ்ச் சிந்தனைக்கான உள்ளீடுகளை மெய்யியல் நோக்குகளை உள்வாங்கிய அறிவுப் பண்பாடு பரிணாமம் பெற்றது. இந்த இயக்க மரபில் தோய்ந்து வெளிவந்தவர் தான் பேராசிரியர். பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைக்கின்ற தமிழ் ஆய்வு மரபையும் மேனாட்டு ஆய்வு முறைமையையும் பிணைக்கின்ற ஒரு தனித்துவப் பார்வை கண்ணோட்டம் உருவாகின்றது. இந்த மரபில் பேராசிரியர் சிவத்தம்பி இன்னும் தனித்துவமாக இயங்கி வந்துள்ளார்.

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வருகையினால் தமிழியல் ஆய்வு புதிய தடத்தில் அறிவியல் நெறியில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வுமுறை தமிழியல் ஆய்வை ஆழ அகலப்படுத்தியது. அறிவியல் வழிப்பட்ட ஆய்வுப் பண்பாடாகப் புதுப் பரிமாணம் பெற்றது. தொடர்ந்து பேராசிரியர் தெ.பொ.மீயின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் மற்றும் மொழியியல் புலமும் தமிழியல் ஆய்வு அறிவியல் வழிப்பட்ட ஆய்வாக மேலும் உயர்ச்சி பெறுவதற்குக் காரணமாயிற்று. இந்தப் பின்புலத்தில் மார்க்சியச் சிந்தனையின் தாக்கத்துக்குட்பட்ட ஆய்வாளர்களின் வருகை தமிழியல் ஆய்வை இன்னும் வெவ்வேறு புதிய தடங்களில் புத்தாக்கமாக திசைமுகப்படுத்தியது.

தமிழில் மார்க்சிய ஆய்வாளர்கள் விமரிசகர்களாக வெளிப்பட்ட தொ.மு.சி. ரகுநாதன், நா.வானமாமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்கள் முக்கியமானவர்கள். வரன்முறையான கறார்த்தன்மையுடன் கூடிய ஆய்வுகளை வெளிப்படுத்தியமையில் ஈழத்தவர்களான க.கைலாசபதிக்கும் கா.சிவத்தம்பிக்கும் முதன்மையான இடமுண்டு. பேரா.க.கைலாசபதி தனது ஆய்வுப் பயணத்தை 1982இல் நிறுத்திக்கொள்ள பேரா.கா.சிவத்தம்பி 2011 ஜூலை 6 வரை தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

பேரா.சிவத்தம்பியின் ஆய்வுத்தளம் விரிவானது, ஆழமானது. இது பல்துறை ஆராய்ச்சி அணுகுமுறையைக் கொண்டது. மார்க்சிய அணுகல் முறை இத்தகைய ஆய்வுக்கான களத்தை விரிவாக்கம் செய்தது. சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர் என்று அடையாளம் காணப்பட்டாலும் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழ்ப் பண்பாடு மட்டும் பேசியவர் அல்லர். மாறாக, தமிழியல் ஆய்வு என்பதற்கான விளக்கத்தை விரிவாக்கி தமிழ்மொழியின் தமிழ் இனத்தின் தமிழ்ப் பண்பாட்டின் அனைத்துப் படிநிலைகளையும் ஊடறுத்துச் செல்ல வேண்டுமென்பதை வலியுறுத்தியவர். அதாவது “தமிழியல் என்பது தமிழோடு தொடர்புடைய ஆய்வுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. இது அரசியலாகவும் தொல்லியலாகவும் மானிடவியலாகவும் சமூகவியலாகவும் தமிழை தமிழில் இருக்கும் எழுத்துகளைத் தமிழர் வாழ்க்கை பற்றிய சகல துறைகளையும் ஒன்றிணைத்து அந்தச் சமூகத்தை ஆய்வு செய்வதே தமிழியல் ஆய்வு” எனப் பேரா.சிவத்தம்பி கூறியுள்ளார்.

இந்தச் சிந்தனைத் தெளிவு சார்ந்துதான் பேராசிரியரது ஆய்வுப் பயணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். நாம் வசதிக்காகப் புரிதலுக்காகப் பேராசிரியரது ஆய்வுகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக்கொள்ளலாம். இங்கு இது முழுமையானது அல்ல. இன்னும் பலவாறு தொகுக்க முடியும்.

       -      பழைய இலக்கிய இலக்கணந் தொடங்கி இன்றைய நவீன இலக்கியம், மொழியியல் வரை.

       -      பண்டைய நாடகம் முதல் நவீன நாடகம் வரை இதன் மூலம் சமூக வரலாறு எழுதுவதற்கான கண்டடைவதற்கான தேடல் ஆய்வு (தமிழகம் & ஈழம்)

       -      தமிழில் இலக்கிய வரலாறு எழுதியல் தொடர்பான பிரச்சினை.

       -      தமிழர்களின் (தமிழகம் & ஈழம்) கலை இலக்கிய பண்பாடு வரலாறு பற்றியவை.

       -      தொடர்பூடகங்கள்

       -      பக்தி இலக்கியங்கள்

       -      தொல்காப்பிய, சங்ககாலக் கவிதையியல்

       -      தமிழகம் ஈழம் தொடர்பிலான அரசியல் போக்குகள்

       -      பல்பண்பாட்டுச் சூழலமைவு பற்றிய தேடுகையும் ஆய்வும்

       -      ஈழத்தின் பிரதேசப் பண்பாடுகள் தனித்துவம் கருத்துநிலை சார்ந்த ஆய்வுகள்

       -      திராவிட இயக்கம்

       -      தனித்தமிழ் இயக்கம்

       -      மார்க்சிய இயக்கம்

       -      தமிழ்த் தேசிய விடுதலை அரசியல்

இவ்வாறு பல்வேறு நிலைகளில் பல்வேறு தளங்களில் விடயப்பொருள் ஆய்வுப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது. தமிழியல் ஆய்வு சுட்டும் பொருள்கோடலுக்கேற்ப தமது ஆய்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அறிவியல் நெறியில் ஆய்வு முறை புதிய தடத்தில் வெளிப்பட வேண்டும் என்பதில் பேராசிரியர் சிவத்தம்பி உறுதியாக இருந்து செயற்பட்டுள்ளார்.

மேனாட்டு வழிவந்த விமரிசன முறைமையானது பிரதானமாக நவீன இலக்கியத்தின் பாற்பட்டதாக அமைந்தது என்று கூறலாம். இருப்பினும் நவீன காலத்துக்கு முந்திய தமிழிலக்கியங்களையும் நவீன காலத் தமிழிலக்கியங்களையும் ஒருங்கு சேர வைத்து நோக்கும் தன்மை பொதுவாகப் பலரிடம் இருக்கவில்லை. பொதுப்போக்காகவும் வளரவில்லை. இது பெரும் குறைபாடாகப் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. புதிய தமிழிலக்கிய வகைமைப் பரிச்சயம் கொண்டவர்களுக்குப் பழைய தமிழிலக்கியப் பரிட்சயமில்லாதிருந்தமையும் பாரம்பரியத் தமிழறிஞர்களுக்கும் புதிய தமிழிலக்கியப் பரிச்சயமில்லாதிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது. இந்தப் பிளவை இல்லாமல் செய்யும் வகையில் பேராசிரியர் சிவத்தம்பியின் புலமை ஆளுமை வெளிப்பட்டது. நவீன இலக்கியத்துக்கு முந்திய பிந்திய இலக்கியங்கள் மீதான பார்வையும் பதிவும் மற்றும் ஆய்வுத் தேட்டமும் விரிவாக்கம் பெற்றது. இந்த அகல்விரிவுக் கண்ணோட்டத்தில் பேராசிரியர் சிவத்தம்பி புதிய தடம் அமைத்துச் செயற்பட்டுள்ளார். பல்வேறு நிலைகளில் இருந்து அறிவுபூர்வமான கோட்பாட்டு ரிதியில் கலை இலக்கியம் சார்ந்து பன்முக உரையாடல்களை நிகழ்த்தி உள்ளார். இதனூடு பல்வேறு ஆய்வுப் பிரச்சினைகளையும் எழுப்பியுள்ளார்.

ஆங்கிலமொழி வாயிலாக நம்மை வந்தடைந்த மேனாட்டுச்சிந்தனை, கல்விமரபுகள் பல நமது கண்ணோட்டங்களில் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளன. இதனால் நமக்கு, நாம் தமிழ்மொழியைக் கற்கும் முறையில் - வாசிக்கும் முறையில் - அறியும் முறையில் - புதிய நெறிமுறைகளை அறிமுகம் செய்துள்ளன. இந்த அறிகை மரபின் செழுமை ‘தமிழிலக்கிய வரலாறு’ எனும் கற்கை, ஆய்வுப் புலத்தில் பெரும் மாறுதல்களை உருவாக்கியுள்ளது. தமிழிலக்கிய வரலாறு ‘தமிழில் இலக்கிய வரலாறு’ வரலாறெழுதியல் ஆய்வாக விரிவாக்கம் பெற்றது. இந்த ஆய்வு முறைமைக்கான நெறிமுறைகளை வகுத்துக் கருத்துநிலைப் பிரச்சினைப்பாடுகளை விசாரணை செய்யும் மரபை பேராசிரியர் தனது “தமிழில் இலக்கிய வரலாறு” என்னும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இலக்கிய வரலாற்றைக் கட்டமைப்பதில் இழையோடும் ‘இலக்கியத்தின் அதிகார நிறுவனச் சார்புத் தன்மை’ குறித்து¥ பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றார். புதிதாக மாற்று ரீதியில் சிந்திப்பதற்கான உரையாடலை வளர்த்தெடுக்கின்றார்.

எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ் விமரிசன ஆய்வுச் சூழலில் மார்க்சியத்திற்குள்ளிருந்தான சுயவிமரிசனப் போக்குகள் வெளியிடப்பட்டன. ‘தமிழில் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் சிவத்தம்பி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பிரதிபலிப்புக் கொள்கை, அடித்தள மேற்கட்டுமானக் கருத்தாக்கம் போன்ற நடைமுறையில் உள்ள அறியப்பட்ட மார்க்சிய அணுகல் முறையைக் கேள்விக்குட்படுத்துகின்றார். அத்துடன் மார்க்சிய நோக்கிலான புதிய வாசிப்புகளையும் வரவேற்க வேண்டியவராகவும் மாறுகின்றார். புதிய தலைமுறையினருடன் சேர்ந்து இயங்க வேண்டியவராகின்றார். முன்னைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் பாலமாக இவர் தொழிற்படுவதற்கான சமூகச் சூழல் சாதகமாக உருவானது.

மார்க்சியம், அமைப்பியல், பின்-அமைப்பியல், பின்-நவீனத்துவம், பண்பாட்டு ஆய்வியல் தொடர்பிலான புதிய சிந்தனைகள் வாசிப்புகள் மீதான தனது அக்கறைகளைக் குவியப்படுத்திச் செயற்பட்டார். இதனால் மார்க்சிய அணுகல்முறை சார்ந்த புதிய சாத்தியப்பாடுகளின் விரிவுக்கான களங்கள் நோக்கிய ஆய்வுப் பயணத்தையும் மேற்கொண்டார். தனது உடல், உள நிலைமையின் மட்டுப்பாடுகளையும் இனங்கண்டு செயற்பட்டுள்ளார். எவ்வாறாயினும் மார்க்சிய சிந்தனைக்கான விரிந்த களம் உருவானது. இந்தப் பின்புலத்தில் ஆரோக்கியமான விவாதங்கள், உரையாடல்கள், ஆய்வுகள் மேற்கிளம்பின. இதற்குப் பேராசிரியர் சிவத்தம்பி மறைமுகநேரடி உந்துதலாகவே இருந்துள்ளார்.

பேராசிரியரது ஆரம்பகால தொடர்ச்சியான வாசிப்பு தேடல் அபாரமானது. இந்த வாசிப்புச் செயற்பாடானது அவரது இறுதி காலம் வரை மட்டுப்பாடுகளுடன் தொடர்ந்துகொண்டிருந்தது. வாசிப்பை, தேடலை உரியவாறு ஞாபகப்படுத்துவதிலும் அவற்றைப் பொருத்தமாக இணைத்துத் தருக்க ரிதியில் விளக்குவதிலும் இவருக்குத் தனித்துவமான ஆளுமை உண்டு. நேரடி உரையாடல்களில் இவர் எழுப்பும் கேள்விகள் அதனைத் தொடர்ந்து அவற்றுக்கான நியாயங்களைச் சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் நேர்மைத் தன்மையை இனங்காணலாம். இதைவிட தனதருகில் இருப்பவரது கருத்தையும் பொறுமையுடன் முழுமையாக உள்வாங்குவார். தனது கருத்தை மட்டும் கேட்டுவிட்டுப் போ என அடம்பிடிக்கும் பேர்வழி அல்லர். உரையாடலில் சனநாயகத் தன்மையைப் பேணுபவர்.

பேராசிரியரது உரையாடல் பாணி, கருத்துரைக்கும் மொழிநடை சமதளத்தில் சுயசிந்தனைக்கான தன்மைகளைக் கையளிக்கும் பண்பு கொண்டது. அறிவியல் பூர்வமானது கோட்பாட்டாக்கப் பண்பு கொண்டது. இதனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேராசிரியருக்கும் நமக்குமான உறவாடல் நிகழும் பொழுது நாம் ஆற்றலுள்ளவர்களாக நிலை மாறும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் தன்மையை அவ்வப்போது நாம் இனங்காணலாம். அதேவேளை ஒருவரிடத்துக் குறித்த ஒரு சிறப்பு ஆற்றல் வளர்க்கப்பட வேண்டுமாயின் பேராசிரியருடன் பழகவும் இடைவினை கொள்ளவும் வாய்ப்புகள் பெருகும் பொழுது பேராசிரியர் குறித்த நிபுணத்துவ நடத்தைகளை நாம் கற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும். இந்தச் செயற்பாட்டின் தொடர்ச்சியால் பேராசிரியரது எழுத்துகளில் ஆய்வுகளில் எமது கவனம் குவிவதற்கு உரிய தருணங்களை உருவாக்கித் தரும். மேலும் தேடலை, வாசிப்பார்வத்தைக் கருத்தாடல் செய்வதற்கான தற்துணிவை நமக்கு உண்டாக்கும். இதுவே தமிழியல் ஆய்வு சார்ந்து வெளிப்படக்கூடிய கருத்துநிலை மற்றும் எண்ணக்கருக்கள், ஆய்வுப் பண்பாடு பற்றிய அரசியல் பார்வையையும் நமக்குக் கற்றுத்தரும். இதனால் திரும்பத் திரும்ப யாவற்றையும் மீள மீள நினைப்பதற்கும் வாசிப்பதற்கும் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே தருக்க வழியான ஞாபகம், தெரிவு செய்து கவனம் செலுத்துதல், தீர்மானங்களை மேற்கொள்ளல், ஆழ்ந்து கற்றல், மொழி வழியான கிரகித்தல் முதலிய தொழிற்பாடுகளில் நிலைமாற்றம் பெறுவதற்கும் உரிய சந்தர்ப்பங்களை உருவாக்கும். பேராசிரியர் சிவத்தம்பியை மையப்படுத்தி சிந்திக்கும் பொழுது இந்த அனுபவங்களை அறிகைத் தொழிற்பாடுகளை நாம் தெளிவாக உணரலாம்.

மனித இனம் தன்னைத் தக்க வைத்துக்கொள்வதற்குத் துணை நிற்கும் நடவடிக்கைகளுள் ஞாபகமும் ஒன்றாகும். பேராசிரியர் சிவத்தம்பி மீதான ஞாபகம் என்பது அவரது சிந்தனையும் எழுத்துகளும் அவர் தம் நடத்தைகள் பற்றியதாகவே நீளும். இங்கு ஞாபகம் அறிவையும் அனுபவங்களையும் திறன்களையும் தொடர்ந்து பிரயோகிப்பதற்கு உதவக்கூடியதாகும். ஆகவே சிவத்தம்பி எனும் ஞாபகம் தமிழியல் சார்ந்த மாணவருக்கு வலுவூட்டும் சக்தியாகின்றது. எமது அனுபவங்களைக் களஞ்சியப்படுத்தி வைத்தலும் வேண்டப்படும் பொழுது மீட்டெடுத்தலும் ஞாபகத்துடன் - சிவத்தம்பியுடன் தொடர்புடைய உளச் செயற்பாடாகவும், அறிவுச் செயற்பாடாகவும் எழுச்சி பெறும். இது தமிழியல் மாணவராக உயர்வுபெற, கற்றலை நினைவுகொள்ளச் செய்ய, தேடலை ஆய்வுகளை விரிவாக்க, நமக்கு ‘சிவத்தம்பி எனும் - ஞாபகம்’ புலமை ஆளுமையாக புதிதாக வழிகாட்டும்.

ஈழத்தைச் சேர்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆறுமுக நாவலர் வழிவந்த புலமை பாரம்பரியத்தில் கடைசிப் பிரதிநிதியாக இருந்தவர். அவர் மறைந்த போது பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய அஞ்சலிக் குறிப்பு “பண்டிதமணி ‘காலம்’ ஆனார்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் பண்டிதமணி காலம் ஒன்று இருப்பதை இனங்காட்டினார். இதுபோல் பேராசிரியர் சிவத்தம்பி தமிழியல் ஆய்வுலகில் கடந்த அறுபது வருடங்களாக இயக்கங் கொண்டு ஆய்வுச் செல்நெறியை திசைமுகப்படுத்தி வந்துள்ளார். பேராசிரியர் சிவத்தம்பி காலம் என கணிப்பிட்டு ஆய்வுகள் பெருகுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆகவே “பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலம் ஆனார்” என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். 

Pin It