வழி வழியாகக் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்களையே மரபு என்கிறோம். மரபுகளின் வழியே மனித மனங்கள் சிந்திக்கின்றன. இதனைப் பொதுப்புத்தி மனநிலை என்று கூறவர். மரபுகள் சரியோ தவறோ எதுவாயினும் கேள்வியின்றி ஏற்றுக் கொள்ள மனம் தயாராகி விடுகிறது. மரபுகள் பெரும்பாலும் ஆதிக்கத்தின் வழி வந்தவையேயாகும். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகவும் மனித சுதந்திரத்திற்கு எதிராகவும் அவை பின்னப்பட்டிருக்கின்றன. மரபுகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்புபவர் கலகவாதியாகவும் அறிவிலியாகவும் சித்தரிக்கப்படுகிறார். கேட்பவரின் நியாயமான கருத்தைக் கூற அனுமதிப்பதில்லை. காலங் காலமாகத் தொடர்ந்து பின்பற்றப்படுவதாலேயே அது நியாயமானதாக எடுத்துரைக்கப்படுகின்றது. அடிமை மனநிலையும் ஆதிக்க மனநிலையும் ஒரு சேர மனித மனத்தில் இடம் பெற்றிருப்பதாலேயே இம் மரபுகள் கேட்பாரன்றித் தன் பயணத்தைத் தொடர்கின்றன. தனக்கு எதிராக இருக்கும் மரபுகளை ஒருவர் தனக்குச் சாதகமாக இருக்கும் மரபுகளை எண்ணிக் கடந்து போகிறார். சமன் செய்து கொள்ளும் இந்த மனநிலைதான் மரபுகள் வாழ்வதற்கான வழிகளாக இருக்கின்றன.
 
     மரபுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த மனித மனங்கள் விரும்புவதில்லை. காரணம் மரபு காரணமாகத் தனக்கு கிடைத்திருக்கும் சிறப்புகளையும் சலுகைகளையும் எண்ணி அது அமைதியாகி விடுகிறது. மேலும் மரபுக்கு மாறான சிந்தனையைக் கொண்டிருப்பவரை அல்லது கேள்வி கேட்பவரை அது சாடவும் தயங்குவதில்லை.

       ஒரு போட்டித் தேர்வின் போது தேர்வறையின் கண்காணிப்பாளர் தேர்வு அறையில் நுழைந்த ஒருவரை +நீங்கள் யார்+ என்று வினவுகிறார். வந்திருப்பவரோ தான் தேர்வுக்குரிய உற்று நோக்குநர் என்ற அதிகார போதையுடன் அவ் வினாவினை எதிர்கொள்கிறார். அறைக்குள் நுழையும் முன்பு அறைக் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்காததோ அல்லது தான் யார் என்பதற்கான அடையாள அட்டை அணியாததோ அவருக்குத் தவறாகத் தெரியவில்லை. மாறாக 'நீங்கள் யார்' என்ற வினாவினால் நிலை குலைந்து போகிறார், சினம் கொள்கிறார். அறைக் கண்காணிப்பாளர் தன்னை நினைவில் கொள்ளாமல் இருப்பதை அவர் வினவுகிறார். உயர் அதிகாரி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தான் யார் என்பதை அடையாளப்படுத்தும் அட்டையினை அணிந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராக இல்லை. மேலும் தன் பெயரைச் சொல்லுவதையே மிகுந்த அவமரியாதையாக நினைக்கிறார். அது மட்டுமின்றித் தான் அணிந்திருந்த 'டை'யைத் தனக்குரிய அடையாள அட்டையாக நினைவில் கொண்டு பேசுகிறார். தமிழ்ச்சூழலுக்கு ஒவ்வாத 'டை' அணியும் பழக்கமே ஒருவர் உயர் பதவியில் இருப்பதாக அறியப்படுகிறது. இதுவே மரபாகி விட்டது.

          ஒருவரிடம் 'உங்கள் பெயர் என்ன' என்று கேட்பதே அவமரியாதை என்ற எண்ணம் மரபாக மாறிவிட்டதே அவரின் சினத்திற்கு அடிப்படையாகின்றது. ஆண்டான்-அடிமைச் சமூக நிலையில் அடிமையானவன் தன் எஜமானருக்கு எதிராக எந்த வினாவும் எழுப்ப முடியாத நிலையின் நீட்சியாகவே இந்நிலையினைக் கருத வேண்டியிருக்கிறது.

           'உங்கள் பெயர் என்ன' என்பதையோ 'நீங்கள் யார்' என்பதையோ மனித மனம் எதிர் கொள்ள மறுக்கிறது. ஆசிரியர் சமுதாயத்தைச் சான்றாக எடுத்துக் கொண்டால், பெரும்பான்மை ஆசிரியர்கள் தன்னிடம், மாணவர்கள் 'உங்கள் பெயர் என்ன' என்று வினவுவதை விரும்பாதவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையோர் தன் பெயர் என்ன என்பதை முதலில் அறிமுகப்படுத்தும் பழக்கமில்லாதவர்களாகவே இருக்கின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்களை மாணவர்கள் அடையாளப்படுத்தும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். கருப்பானவர், சிவப்பானவர், உயரமானவர், நெட்டையானவர், குட்டையானவர், கண்ணாடி அணிந்தவர், சொட்டை விழுந்தவர், தொப்பை உள்ளவர், ஒல்லியானவர், முழுக்கை சட்டையணிந்தவர், லிப்ஸ்டிக் போட்டவர் போன்ற அடையாளங்களால் அறியப்படுகிறார். உங்கள் பெயர் என்ன என்ற வினா அவமரியாதையாகப் பார்க்கப்பட்டதன் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்களின் பெயரினை அறிந்து கொள்ளமுடிவதில்லை. ஆசிரியரும் அதை விரும்புபவராக இருந்து பல்வேறு பெயர்களுக்கு உள்ளாகிறார். சொல்லியிருந்தால் ஒரு பெயருடன் (அவரின் சொந்தப் பெயர்) அழைக்கப்பட்டிருக்க வேண்டிய ஆசிரியர் தன் பெயரைச் சொல்லாததின் காரணமாகப் பல்வேறு பட்டப் பெயர்களுக்கு உள்ளாகிறார்.

       மெத்தப் படித்தவர்களாக அறியப்படுபவர்களிடம் தான் இந்நிலை காணப்படுகிறது. மேலை நாடுகளின் பல்வேறு பழக்க வழக்கங்களை 'ஏன்' என்ற வினாவின்றி அப்படியே பின்பற்றும் பழக்கமுடைய நாம், ஒருவரை முதலில் சந்திக்கும் போது வலிந்து தன் பெயரைக் கூறுபவராக இருப்பதில்லை. ஒருவரிடம் வலிந்து பெயரைக் கூறுவதும் ஒருவரிடம் நீங்கள் யார் என்று கேட்பதும் அவமரியாதை என்ற மரபு வழிப்பட்ட எண்ணமே இதற்கு அடிப்படை.

      அரசின் சட்ட விதிகளின் படி அமைக்கப்பட்ட நிறுவனங்களில் மரபுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் விதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. விதிகளை மீறுவதே மரபாக இருப்பதால் மரபு முக்கியத்துவம் பெறுகிறது. நீதிமன்றங்கள், காவல்துறை, கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் மரபே ஆதிக்கம் செலுத்துகின்றன. விதிகளின் படி தவறிழைத்தவர் மரபுப்படி தப்பித்துக் கொள்கிறார். ஆனால் விதிகளின் படி சரியாகச் செயல்படும் ஒருவர் மரபு மீறாதவராக இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மரபுகளைக் கட்டிக் காப்பவர்கள் அம்மரபு குறித்தான விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதில்லை. மரபுகள் குறித்த விளக்கங்களையும் ஏற்பதில்லை. அது குறித்து விவாதிக்கவும் முன் வருவதில்லை. இம்மரபுக் காப்பாளர்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். குடும்பத்தில் தலைவனாக இருக்கும் ஆண், அவனின் ஏவலாளாக இருக்கும் பெண், அரசு நிறுவனங்களில் அதிகாரம் கொண்டிருக்கும் அந்நிறுவனத்தலைவர் என்று பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் மரபுக் காப்பாளர்களாக இருந்து அடிமைச் சமூக நிலையினை விரும்புபவர்களாக இருக்கின்றனர். அனைவருக்கும் பொதுவான விதிகளுக்கு, மாறானவையெல்லாம் மரபுகளாக அதிகார வர்க்கத்தினரால் மற்றவர்கள் மீது ஏவப்படுகின்றன. நாகரிக மனிதன் தனக்குத் தானே வகுத்துக் கொண்டதுதான் விதிகள். மரபு என்பது ஆதிக்க உணர்வுள்ளவர்கள் தனக்குக் கீழ் உள்ளவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டதாகும். மரபுகள் தனிமனித மாண்புகளுக்கும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பாக இருப்பின் அது போற்றப்படவேண்டியதே. ஆனால் மாறாக அது அடிமைச் சமூகத்தை உருவாக்கக் கூடியதாக இருப்பின் அதனை மாய்ப்பதில் தவறென்ன?

       இந்தியக் குடிமகனாக இருக்கும் குடியரசுத் தலைவர் ஒருவர் தேர்தலில் வாக்களிக்காமையே மரபாகப் போற்றப்பட்டு வந்தது. கே. ஆர். நாராயணன், அப்துல் கலாம் போன்றவர்கள் இம்மரபினை உடைத்து வரிசையில் நின்று வாக்களித்த போது அது மரபு மீறியதாக விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் குடிமகன் ஒருவனின் கடமை மீறலான 'வாக்களிக்காமை' என்பது விவாதத்திற்கு உள்ளாவதில்லை. மாறாக 'வாக்களித்தல்' என்ற கடமை கடும் விவாதத்திற்கு உள்ளாவது நகைப்புக்குரியது.

       இன்றைய நிலையில் சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து முன்னாள் முதல்வர் பெரும் வருத்தம் கொள்கிறார். 'மரபுகள் விடைபெறுகின்றன' என்று ஒப்பாரி வைக்கிறார். சட்ட விதிகளையே மதிக்காமல் செயல்படும் ஒருவர், மரபுகளை மீறுவது குறித்து வருத்தப்பட்டு பேசும் முன்னாள் முதல்வரின் அறியாமையை என்னவென்பது?

        மரபுகள் நடைமுறைக்கு ஒவ்வாததாக விதிகளுக்கு எதிராக இருக்கும் போது அதை உடைப்பதில் தவறென்ன? மரபுகள் மறு ஆய்வுக்குட்பட்டதேயொழிய சாகாவரம் பெற்றதவையல்ல.

சட்டப்படியான அமைப்புகள் விதிகளின் படியே செயல்பட வேண்டியவை. இங்கு மரபுகள் என்பது அனைவரின் வசதிகேற்பவே செயல்படுத்தப்பட வேண்டும். அது, குழுவாகப் பணியாற்றும் இடத்தில் ஒரே ஒருவருக்கு எதிராக இருந்தல்கூட அம்மரபினைக் கைவிட்டு விதிகளின் படியே செயல்படவேண்டும். மரபுகள் சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும் பட்சத்தில் அதனை விவாதத்திற்கு உட்படுத்தி விதியாக்கலாம். மாறாக மரபு வழியே நடத்தல் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தன்மையுடைய பச்சோந்தி வாழ்க்கையாகி விடும்.

Pin It