கீற்றில் தேட...


‘என் நிலத்தை உழுகிறேன்
என்னுடைய மரத்திலிருந்து
காய்களைப் பறிக்கிறேன்
என் மனைவியைப் புணர்கிறேன்
அவனுடைய நீதி எனக்கெதற்கு?
வளமான காடு இருக்கிறது என்னிடம்
அவனிடம் என்ன இருக்கிறது
கொள்ளையடிக்கும் தந்திரங்களைத் தவிர?’

ஜீ. முருகனின் இந்தக் கவிதை அரசனின் அதிகாரத்தின் மீது தன் எதிர்க் குரலைச் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது அது சரியெனப்படுகிறது. வேறு ஒரு தளத்திலிருந்து பிரதிவாசிப்பு செய்து பார்க்கின்றபோது கவிதையே ஒரு வித அதிகாரத்தின் குரலாக வெளிப்படுகிறது என்பதையும் தன்னிடம் இருக்கக்கூடிய அதீத நம்பிக்கையால் பிறவற்றை அலட்சியம் செய்யும் போக்கையும் மிக எளிமையாக நாம் உணரமுடிகிறது. இது ஓர் சிறு உதாரணத்திற்காக குறிப்பிடுகிறேன். இதன் உள்ளடக்கத்திலிருந்து கலை-கலைஞர்-கோட்பாடு என்னும் குழும இயக்கத்தின் போக்கை நாம் விரிவுபடுத்தலாம்.

‘ஆய கலைகள் அறுபத்தி நான்கு’ என நாம் சிறு வயதில் கற்றபடி இப்போது உணரமுடியவில்லை. அத்துடன் அறிவின் உச்சப்படி மனித ஆற்றலால் உருவாக்கப்படும் அனைத்துமே கலை வடிவங்களுள் உள்வாங்கப்படுகின்றன என்ற கோட்பாட்டையும் பிறிதோர் இடத்தில் வெறும் பைத்தியக்காரத்தனம் என கர்த்தாக்கள் குறிப்பிட்டதையும் அறியமுடிகிறது. அப்படியானால் கலை என்பதற்கு நிலையான ஓர் புரிதல் இல்லையா எனக் கேள்வி எழுவது சாத்தியமே. “நமக்குத் தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு தெரியாதவற்றை அடைவதும் அடைந்தவற்றை மறுப்பதும் தெரியாதவற்றை உணர்ந்துகொண்டு தெரியும்படி கண்டுகொள்ள வைப்பதும் கலையின் பொதுப் பிரவாகமாகின்றது. அவரவர் மனப்புரிதல் அடிப்படையில் கலையின் நுண் பரிமாணங்களை அடைந்து விடுகிறார்கள். பின்னர் பொது விவாதங்களில் கலைகள் பற்றிய உரையாடலின்போது அவரவர்களுக்கான கோட்பாடுகளுடன் கலை-தனிநபர், மற்றும் குழுப்பிரசாரமாகிறது. ‘கலை’ என்னும் சொற்பதம் நிரந்தரமான ஒரு வரையைக் கொண்டிருக்கக்கூடியதல்ல. அது தன்னுள்ளே குழும இயக்கத்தின் செயற்பாட்டை உள்ளடக்கி ரசனை என்னும் வடிவத்தினூடாக வெளிப்படுவதால் மாறும் தன்மையுடையது. எல்லோருக்கும் புரிதல்-வெளிப்படுத்தல்- உணர்தல் என்பவற்றின் திறன்கள் வேறுபடுவது சாதாரணமான விடயமாகிலும் பொதுப்புத்தியை அடைய வேண்டிய அவசியம் கலை உருவாக்குன‌ர்களுக்கும் கலை நுகர்வோருக்கும் இருக்க வேண்டியது அடிப்படை அம்சங்களில் ஒன்றாகிறது. அதாவது, உருவாக்கம்-நுகர்வு என்னும் இரண்டு பெரும் மையங்களின் இணைப்புக் கோட்டை யார் தோற்றுவிப்பது என்பதான சிக்கல் நிலவி வருகிறது. இணைப்பு, இணைவு, இணக்கம் அவசியம் தானா என்பது இன்று மேலெழுந்த பேச்சு விடயம் ஆனாலும் இணைப்பு என்பது தோன்றவே வேண்டும் என்னும் விவாதமும் இருப்பது உண்மை. இங்குதான் பொதுப்புத்தியின் அவசியப்பாடு கட்டாயமாகின்றது. உலக ஒழுங்கு- சமூகப்போக்கு-கலைத்திறன்- கட்டுமானம்-(கலையின்)மீள் கட்டுமானம்-சிதைவு(மையக் கலையின் சிதைவு)-பின் சேர்வு(பகுதிக் கலையின் சேர்வு)-மாற்றுரசணை என இந்தச் சிக்கல் நிறைந்த போக்கை இரண்டு மையங்களும் நெருங்குவதே பொதுப்புத்தியென்பதாகும்.

மனித மனதின் ஆளுமையென்பதே விசித்திரங்களில் பயணிப்பதாகும். தன்மையாலும் மற்மையாலும் கட்டமைக்கப்படுவதே கலைப்படைப்பு மனம். இந்தக் கலைப் படைப்பு மனம் ஒரே நேரத்தில் இருந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கும்போது இயங்கிக் கொண்டிருப்பதாகும்.

நாடகக் கலைக் கோட்பாட்டாளர் ‘ஸ்ரெனிஸ்லாவஸ்கி’ தனது நடிப்புக்கோட்பாட்டில் நடிப்புக் கலையின் ஆக்குவோர்-நுகர்வோர் ஆகிய இருண்டு மையங்களை பின் வருமாறு கட்டமைக்கிறார். அரங்கில் நடிகன் பாத்திரமாகவே தென்பட வேண்டும் உண்மையாக மாறக்கூடாது. ஆனால் பார்வையாளன் உண்மையென்று நம்ப வேண்டும். இங்கு இரண்டு பெரும் மையங்களும் பொய்யான தளத்தில் இயங்குகின்றபோதும் பொதுப்புத்தியின் புரிதலால் மாறுபட்ட உணர்வுத் தளங்களில் விரிசல் ஏற்படாமல் ஒரு இணைப்புக்கோட்டை உருவாக்க முடிகிறது. இதன் வெற்றியே இயற்பண்புவாதக் கோட்பாடாகும்.

இதை ஓர் எளிய உதாரணத்தினூடாக அறியலாம். மரணச்சடங்கில் சடலத்தின் முன்னிருந்து அழுகிறோம். சடலமும் அழுகையும் பொய்யானது. ஏனெனில் மரணம் உண்மையானது. மேற்படி நிகழ்வுகூட மனித இருப்பின்-இயங்கியலின் அவசியம் குறித்ததானது. ஆனால் நம்மைச் சூழ்ந்துள்ள பண்பாடு எனும் உறுதிப்பாட்டை இதன் மூலம் நாம் மீளமைக்கின்றோம். பல்வேறு தளங்களிலிருந்து வருவோரும் ஒரே கோட்டை அடைகிறார்கள். இது பொதுப்புத்தியின் சார்பால் சமூகத்தில் நிகழ்வது. பேதமைக்கு ஏற்ப சடங்கு கட்டமைவுக்கும் சிதைவுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தாலும் புரிதல் இங்கு சாத்தியமாகிறது.

ஓர் உலகத் தொலைக்காட்சி (Discovery) காட்டு மனிதன் எனும் நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்து வருகிறது. காட்டிலோ, பாலைவனத்திலோ தவிர மனிதர்கள் இல்லாத தூரப்பிரதேசத்திலோ தொலைந்து போகும் தனி மனிதன் எந்த வெளித்தொடர்பும் உதவியும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து மீண்டு வரும் வரைக்கும் எப்படி உயிரைத் தக்க வைத்துக் கொள்வது என்பதனை விளக்குவதாக அந்த நிகழ்ச்சி அமைகிறது. இதில் ஒரு பகுதியாகவும் சிறப்பம்சமாகவும் அந்த மனிதன் அனைத்து உயிரினங்களையும் தாவரங்களையும் பச்சையாக உண்பதை(வேகவைக்காமல்) தொலைக்காட்சியில் நிகழ்ச்சிக்குரிய கலை நயத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். நாங்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டுமாயின் எம்மிடம் இருக்கக்கூடிய எல்லா உணர்வுக்கலங்களையும் திறக்க வேண்டும். உதாரணத்திற்கு காட்டு மனிதன் ஒரு பாம்பையோ, தவளையையோ, அழுகிய மாமிசத்தையோ உண்ணும்போது நாம் தாங்க முடியாத அருவருப்புடன் சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக் கொண்டால் மாத்திரமே நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கவும் ரசிக்கவும் முடியும்.

இங்கு உருவாக்கப்படும் கோட்பாடு எதுவெனில் நீங்கள் அழைக்கப்படாத ரசனையாளர். நிகழ்ச்சியுடன் பொருந்தாத நபர். உங்களுடைய வழமையான மொழி, நம்பிக்கை, ரசனை, எதிர்பார்ப்பு, ஆசைகள், பழக்கங்கள் அனைத்துமே தகர்க்கப்படுகின்றன. புலப்படாத உலகிற்குப் புதிய பாதையில் பயணிக்கிறீர்கள். வலி மிகுந்த அனுபவம் இறுதியில் உங்களிடம் எஞ்சியிருக்கக்கூடும். தேவையேற்படும் போது மலத்தை உணவாக்கவும் சிறுநீரை உடல் முழுவதும் பூசி கிருமித் தாக்கத்திலிருந்து தற்பாதுகாப்புத் தேடவும் காட்டு மனிதன் பயிற்சியளிக்கும்போது முன்கூட்டியே நாம் இவை இரண்டையும் கழிவுப்பொருட்களுடன் இணைத்துப் பார்க்கும் முறை கேள்விக் குறியாகிறது. இப்படிப் பல்வேறு புதிய அனுபவங்கள் அந்த நிகழ்ச்சியில் காட்டப்படுகின்றன.

வியப்பு மிக்க விடயங்கள்-நிகழ்ச்சியைத் தொகுக்கும் முறை-வெளிப்படுத்தும் திறன்- காட்டுமனிதனின் ஆற்றல்-இயற்கையோடு இயைந்து வாழமுடியும் எனும் நம்பிக்கையூட்டல்-மனித மனம் விரும்பும் சவால்-அனுபவங்களை நுகர்வோருடையதாக மாற்றுதல்-எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நிகழ்ச்சியின் சிக்கல்களைப்பற்றி நாம் பலரிடமும் பேசிக்கொண்டிருக்க வைக்கும் ஒழுங்குச் சிதைவு எனப் பலதும் சேர்ந்து இந்த நிகழ்ச்சி வலிமை மிக்க கலைப் படைப்பாகிறது. காட்டு மனிதன் போன்ற நிகழ்ச்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வழக்கமான தொலைக்காட்சிப் பெருங்கதையாடல் நிகழ்ச்சிகளைத் தகர்த்து ரசனைக் கோட்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

உண்மையான வாழ்வும் ஆசையைத் தூண்டும் தருணமும் திருப்தியான ஏது என்று சொல்லமுடியாத உணர்வும் இன்னும் பலதும் மறைப்புகளுக்குள்தான் தங்கியிருக்கிறது. ஆனால் தொன்மக் கலைகள் பெரும்பாலுமே நிர்வாணக் கோட்பாட்டையே சார்ந்திருந்தன. மறைப்புகளைத் திறந்து பார்க்கின்ற போது ஏற்படும் உண்மை எம்மை முடமாக்குகிறது. அவற்றிலும் மொழியூடாகப் புரிதல், பார்வையூடாகப் புரிதல் என்பது வெவ்வேறு திறன் சார்ந்த ஊடகங்களாகக் கொள்ளப்படுகின்றது. மொழியை மிகப் பிற்போக்குத்தனமாகப் பயன்படுத்தும் கலைஞர்கள், கர்த்தாக்கள் அவற்றால் உருவாக்கப்படும் கோட்பாடுகளை முன்னிறுத்தி நிர்ப்பந்திப்பது அபத்தமானது. மொழியால் உருவாக்கம் பெறும் கலைக்கோட்பாடுகள் நழுவல் தன்மையில் அதன் மையத்தை வைத்திருக்க வேண்டும். எழுத்துக்கள்-மொழிகள் எல்லாவற்றையும் புரியவைத்துவிடும் அளவிற்குப் பட்டவர்த்தனமாக இருப்பதில்லை. இதன் கருத்தாக்கங்கள் என்பதுவும் தெள்ளத் தெளிவானவை என்று சொல்ல முடியாது. கருத்தாழம் மிக்க படைப்புகளை அணுகுகின்றபோது எரிச்சலூட்டும் தன்மை ஏற்படுவதும் மொழித்திறன் சார்ந்த விடயமே. சாதாரணப் புரிதல் மொழியால் படைக்கப்படும் மிக அதிகமான படைப்புகள் ஒரே வாசிப்பில் அதன் இலக்கை எட்டுகின்றன என்று முடியுமானளவு நம்பமுடிகிறது, பேசப்படுகின்றது. மாற்றுச் சாத்தியம் அதே மொழியில் இருப்பதுவும் உண்மை.

மொழியின் விளைபொருளாக அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் அவை யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. நம்பிக்கைகள்-மதிப்பீடுகள்-மூலாதாரக் கோட்பாடுகள் அனைத்துமே இருக்கிறது எனும் பொது, தன்னிலை சார்ந்து பெற்றுக் கொள்ளும் அனுபவம் மாத்திரமே. கலையின் அர்த்தங்கள்,கோட்பாடுகள்,விளக்கப் பொருள்கள் அனைத்தும் நமக்கு வெளியே அது வேறு எங்கோ திட்டமிட்படி இயங்குகிறது எனலாம். அதிகாரம் என்னும் குறிப்பானுடன் இணைந்து பலவற்றில் அழுத்தம் ஏற்படுத்தும் கர்த்தாக்கள் மற்றமைகளைத் தகர்க்கும் வாதப்பிரதி வாதங்களைக் கோட்பாடாக்க முனைகின்றனர். இதன் அழுத்தம், மொழி-கலை-கலைஞர்-கோட்பாடு-அரசியல்-பொருளாதாரம் ஆகியவற்றில் தாக்கம் புரிகிறது. மக்கள் விரும்பும் அறம்-அரசியல் இரண்டையும் கர்த்தாக்கள் நெருங்க முனைகிறார்களா என்பதுதான் சிக்கல் நிறைந்த கேள்வியாகும்.

இலங்கை கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் சற்று மேலாகப் போரால் பாதிக்கப்பட்டுத் தற்போது போர் ஓய்ந்திருப்பதாக நம்பப்படும் இச் சூழல் பல்வேறு கலைஞர்களையும் கர்த்தாக்களையும் உலகிற்கு அறிமுகம் செய்கிறது.

ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட நிலத்திற்கும் குடியிருப்பிற்கும் எதிராகக் குரல் கொடுத்தல் (ஆக்கிரமிப்பின் எதிர்க்குரல்)

சிதைவுக்குட்பட்ட நிலத்தையும் குடியிருப்பையும் மனிதர்களையும் போட்டோ பிரதிமையாக்கி கலையாக்குதல் (கலைக்குரல்)

இங்கு ஒரே வகையினர் கலைஞராகவும் கர்த்தாவாகவும் செயற்படும் அதே வேளை இவர்களால் கட்டமைக்கப்படும் கோட்பாடுகளாலும் கருத்துருவாக்கங்களாலும் நிகழப்போவது யாதொன்றுமில்லை என்னும் பொதுப்புத்தியும் இதற்குள் ஊடறுத்துச் செயற்படுகின்றது.

இதற்கான விளக்கக் கோவையொன்றை முன்வைப்பதினூடாக மாறுபட்ட பிரச்சினையின் முகங்களை உணர முடியும். ஆக்கிரமிப்பின் எதிர், சார்புக் கருத்தியலாளர்களாகச் செயற்படும் இயக்கர்கள் அடிப்படையில் கலகக் காரர்களாகவே விளங்குகின்றனர். சிதைக்கப்பட்ட நிலம்-குடியிருப்பு- மற்றும் மனிதர்களுக்காக ஆதரவு நிலையிலும் (அரசுக்கு எதிர்) அரசுக்குச் சார்பாகவும் கருத்துக்களை உருவாக்குவதை இவர்கள் மேற்கொள்கின்றனர். இவர்களுடைய நோக்கம் கர்த்தா நிலையிலிருந்து கோட்பாடுகளை உருவாக்குதல் மாத்திரமே. நிலம்- குடியிருப்பு- மனிதர்கள் என்பவற்றின் மீதான இவர்களுடைய புரிதல் நிலை சந்தேகம் தரக்கூடியது, மிகக் கீழ்த்தரமானது, தன்னிலை சார்ந்தது, பன்மைத்துவம் கொண்டிராததோடு முதற் கட்டமைப்பை மாத்திரமே கொண்டியங்குவதுமாகும். உலக ஒழுங்கைப் புரிந்து கொண்டு சரியான மதிப்பீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு நீண்ட அவகாசமும் பெறுமதியான மௌனமும் தேவை. மேற்படி நிலைப்பாட்டிலிருந்து மீறியிருப்போர் நாடோடிக் கலகக்காரர்களாக, கருத்தாழமற்றவர்களாக விளங்குகின்றனர். கலகத்தைக் கலையாக்குவது ஒரு வகை முரண்நகை உத்தியாகவும் அதுவே இவர்களது நோக்காக இருப்பினும் அது ஒரு போதும் கலையாகாது என்பதே யதார்த்தம்.

ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட நிலம்-குடியிருப்பு-மக்கள் ஆகியவை நீண்டகாலப் போர்த்தாக்கத்திற்கு உட்பட்டு எல்லாவிதமான நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்தவை. உடல் உளரீதியாகச் சிதைவுக்குட்பட்ட மனிதர்கள் தமது ஊக்கத்தின் முனைப்பால் மாத்திரமே மீள் வாழ்வை உணரமுடியும். அரசியல் நிலைப்பட்ட கருத்தியல் கர்த்தாக்கள் பாதிக்கப்பட்ட எல்லாத் தரப்பிற்குமான சமநிலைக் கோட்பாடுகளை உருவாக்குதல் அவசியம். பொருளாதாரம்-சமூகமேம்பாடு-சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அரச அங்கீகார ஸ்தாபனம்-காவல்துரை மற்றும் நாட்டின் சட்டத்துறை என்பவற்றின் ஆதரவு-அரச ஆதிக்க சக்தியினரின் கண்ணோட்டங்களை மதிப்பீடு செய்தல் மதிப்பீட்டை சமுதாயத்தில் இருக்கக்கூடிய அனைத்துத் தரப்போடும் பகிர்ந்து கொள்ளல் போன்ற வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மீண்டும் பகைமை ஏற்படக்கூடிய அரசுக்கெதிரான எல்லாவிதமான அறைகூவல்களும் கருத்துருவாக்கங்களும் நிறுத்தப்படல் வேண்டும். இவ்வாறாக முனைகையில் பாதிக்கப்பட்ட இனக்குழுக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக பயனாளிகளாக வாய்ப்பிருக்கிறது. ஒரு வகையான எதிர்ப்பு நிலையிலிருந்து எடுக்கப்பட்ட முடிபுகள் அனைத்துமே பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்வை சில நூற்றாண்டுகளின் பின்னே கொண்டு நிறுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு வேறு ஒரு பண்பாட்டுத்தளத்திலிருந்து அரசியல் ஆதிக்க சக்தியின் வரையரைகளைக் கடக்க வேண்டும். ஆதிக்கக் கர்த்தாக்களின் கருத்தியல்களை “வெறும் கட்டுக் கதைகள்” என்று தகர்க்கும் வகையில் சாணக்கியத் தளங்களை உருவாக்குவது அரசியல் நிறுவனங்களின் உச்சக்கட்ட வேலைப்பளுவாகவேண்டும்.

சொற்களின் ஆதிக்கத்தால் கோட்பாடுகளை உருவாக்கும் கலைஞர்கள்,கர்த்தாக்கள் சொற்களும் அவற்றாலான வார்த்தைகளும் நம்பகத்தன்மையுடைய அதேகணம் அவை அர்த்தமற்வை (மாறும் இயல்பினால்) என்பதையும் உணரத் தலைப்படவேண்டும்.

சொற்களின் மரணம்

சொற்களின் நிதானம் என்பவற்றின் புரிதல்களாகப் பார்க்கின்றபோது சொற்களின் மரணம் ஆக்க கர்த்தாவுடன் நின்றுவிடும். சொற்களின் நிதானம் என்பதே சிக்கல் நிறைந்ததாகிறது. சொற்கள் இயங்குநிலையில் வார்த்தைகளாகின்றபோது அவற்றின் நிதானம் முக்கிய குறிப்பானாகி உணர்வுத்திறனாகிறது. ஆழ் நினைவிலிருந்து மீண்டும் முழுமையின் அர்த்தத்தையும் குறைந்த பட்சம் பிரதியையும் அது தேடுவதோடு உயிர்ப்புடன் வாழ்வதுமாகும். கலைக் கர்த்தாக்கள் உருவாக்கும் கோட்பாடுகளில் மொழிவிளையாட்டுகள்-புனைவுகளின் பிரதி-மயக்கமூட்டும் வாசகங்கள்-திரிபுகள்-அதிகாரத்திற்கு எதிரான,சார்பான அதிகாரக் கோசங்கள் எனப் பல நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதை விவரிக்க முடியும்.

தமது கருத்தியல்கள் உண்மையானவை என்பதற்கும் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்கும் போட்டோப் பிரதிகளை இணைத்து மிகு முட்டாள் தன செயற்பாட்டாளர்களாகின்றனர். உதாரணத்திற்கு யுத்தத்தில் ஏற்பட்ட நிலைமைகளை சொற்களால் விரிக்கும் முயற்சியின் நடுவே புகைப்படக் கலையை இணைத்தல் என்பதானது இரண்டின் நம்பகத்தன்மையையும் சிதைக்கும்; அதே வேளை மூன்றாவது நிகழ்ச்சித் திட்டத்தையும் உருவாக்குகிறது. அதாவது ஆதிக்க சக்திகள் சாட்சிகளைத் தேடிச் சிதைக்கும் முயற்சியாகும்.

இப்படித்தான் கருத்துருவாக்கங்களும்-சிதைப்புகளும்-எரிச்சலூட்டும்; கோட்பாடுகளும் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஆதிக்கத்திற்கு எதிரானகுரல்-இதன் போது நிலம் சிதைக்கப்பட்டது. பின்னர் எதிர்க்குரல்-குடியிருப்புகள் சிதைக்கப்பட்டன. எதிர்க்குரல்-மனிதர்கள் சிதைக்கப்பட்டனர். எதிர்க்குரல்-மனிதர்கள் இடம் பெயர்க்கப்பட்டனர். எதிர்க்குரல்-முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர். எதிர்-ஏதிலிகளாகவிரட்டப்பட்டனர். மீண்டும் ஆதிக்கத்திற்கு எதிரான குரல்-நிலம் பறிக்கப்படுகிறது. எதிர்- என மேற்படி நிலை ஒரு காலமாகிறது. காலம் கடந்த காலமாகிக், கடந்த காலம் வட்டமாகி, வட்டம் வரலாறாகிறது.

ஆதிக்கத்திற்கு எதிரான கருத்தாக்கங்களும் செயற்பாடுகளும் பிழையானது எனும் வாதம் உண்மையில் தவறானதுதான். ஆனால் குறிப்பிட்ட செயற்பாட்டிற்குப்; பின் இருக்கக்கூடிய முடிவு முன்பே ஓரளவு தெளிவாகத் தெரிய வேண்டும் என்பது அவசியம். ஒரு வழி தகர்ப்புக்கு உள்ளாகும் போது அவசரமாக மற்றமையைக் கண்டடைய முயற்சித்தல் முயற்சி தாமதமானதும் அபாயகரமானதுமாகும். ஏற்கனவே மூன்றாவது மற்றமையில் பயணித்துக் கொண்டிருத்தல் புத்தி பூர்வமான செயற்பாடாகும். இதை வாதத் தகர்ப்பு என்று கூறலாம்.

கலைஞர்கள், கர்த்தாக்கள் அவநம்பிக்கைவாதங்களைத் தொடர்ந்து பேணி வருவதை ஊடகங்கள் மூலம் நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதன் அபத்தம் பாதிக்கப்பட்ட இன மக்கள் அவநம்பிக்கையானர்களாகவும் ஆதிக்க இனம் முன்னோக்கி வளர்ச்சியடையவும் மறைமுகமான சுதந்திரமளிக்கிறது. முடிவு மக்கள் வதிக்கும் நிலத்திலிருந்து மட்டுமல்லாது வாழும் நாட்டிலிருந்தும் வெளித்தள்ளப்படுவர். புகழிட நாடுகள் தண்டணைகள் பற்றிய கருத்தாக்கங்களை ஏறக்குறைய எல்லாத் தேசிய அரசாங்கங்களிலும் ஒரே வகையாக இருப்பதாகக் கூறி குறிப்பிட்ட இன மக்களைக் குற்றவாளிகளாக்கும். இந்தக் கருத்து நிலை ஓர் உயர் கற்பனை என இப்போது தோன்றலாம்.