அன்றாட ரயில் பயணத்தில் எனக்குக் கிடைக்கிற முக்கியமான ஒரு வாய்ப்பு - பழக்கமாகிவிட்ட, முன்பின் பழக்கமில்லாத - சக பயணிகளோடு கலந்துரையாடி விவாதிக்கவும் விளக்கம் பெறவும் முடிகிறது என்பது. ஒரு நாள் சோதிட நம்பிக்கைகள் குறித்த ஒரு விவாதம் அலுவல்களுக்கான அந்த காலைநேரப் பயணத்தின் அலுப்பைப் போக்கியது.
கிளி சோதிடம், நாடி சோதிடம், ஏடு சோதிடம், கை ரேகை சோதிடம் என்று பலவற்றைப் பற்றியும் தாங்கள் அறிந்த, கேள்விப்பட்ட தகவல்களை நண்பர்கள் பகிர்ந்துகொண்டார்கள். இவற்றையெல்லாம் ஓரளவுக்கு மேல் நம்ப முடியாது என்றார்கள். ஆனால் கோள்களின் இருப்பிடங்கள் அடிப்படையில், எந்தெந்த நட்சத்திரம் எந்தெந்த கோணத்தில் இருக்கிறது என்ற வானியல் அறிவின் ஆதாரத்தில் கணிக்கப்படுகிற ஜாதகம் மட்டுமே நம்பகமான சோதிடம் என்று திட்டவட்டமாகக் கூறினார்கள். (அங்கேயும்) சிறுபான்மையினராக இருந்த பகுத்தறிவாளர்கள் எதிர் வாதங்களை முன்வைத்தார்கள்.
சரியான முறையில் ஜாதகம் எழுதப்பட்டிருக்குமானால், சரியான சோதிடர் அமைந்து, சரியாக அவர் அதைக் கணக்கிடுவாரானால் எவரொருவரின் எதிர்காலத்தையும் துல்லிதமாகக் கணித்து விட முடியும் என்கிறார்கள். இப்படி ஜாதகம் குறிக்கப்படுவது முதல், கணிக்கப்படுவது வரையில் எல்லாமே சரியாக அமைவது கூட இறைவனின் சித்தம்தான் போலும்! இப்படியான வாதத்தில் ஒரு வசதி இருக்கிறது - கணிப்புக்கு மாறாக நடக்கிறபோது, ஜாதகக் குறிப்பில் அல்லது சோதிடரின் கணக்கில் பிழை ஏற்பட்டுவிட்டது என்று கூறி தப்பித்துவிடலாம்!
அது சரி, எதிர்காலத்தைத் துல்லிதமாகக் கணித்து என்ன ஆகப்போகிறது? வரக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கலாம் அல்லது அதன் தாக்கத்திலிருந்து பெருமளவுக்கு விடுபடலாம், சரியான முறையில் திட்டமிட்டு தோல்விகளைத் தடுக்கலாம், உரிய பரிகாரங்களைச் செய்து வெற்றி பெறலாம் என்கிறார்கள். இப்படியெல்லாம் எதிர்காலத்தை அறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றால், எதிர்காலத்தில் இப்படியிப்படித்தான் நடக்கும் என்ற சோதிடக்கணிப்பு பொய்யாகிவிடுகிறதே!
நாளை எனக்கு என்ன நடக்கும் என்றறிய ஆசைப்படுவது ஒரு ஆர்வத்துடிப்பு (கியூரியாசிட்டி), அதை நிறைவு செய்கிறது சோதிடம். இதனால் மனம் நிம்மதி அடைகிறது என்கிறார்கள்.
நாளை என்ன நடக்கும் என்பது தெரியாமல் இன்றைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற உள்ளக்கிளர்ச்சி (திரில்) அனுபவத்தை நான் ஏன் இழக்க வேண்டும்? வாழ்க்கை ஒரு மர்ம நாவல் என்றால், கடைசிப்பக்கம் கிழிக்கப்பட்ட நாவலாகவே அது இருந்துவிட்டுப் போகட்டும். ஏனென்றால் வாழ்க்கை என்பது என்னோடு முடிந்துவிடுவதல்ல, அது என்னிடம் தரப்பட்ட அனுபவ அறிவுச் சுடரை அடுத்தடுத்து கைமாற்றுகிற தொடர் ஓட்டம். அரசியல், சமுதாயம், நாட்டின் பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை பற்றிய அறிவோடு சேமிப்பு, காப்பீடு போன்ற நிதிநிலை முன்னேற்பாடுகளை எவரும் செய்துகொள்ளலாம். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான கல்வி, அதற்கான பயிற்சி என எவரும் மேற்கொள்ளலாம்.
இத்தகைய திட்டமிட்ட வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்வதற்கோ, எதிர்கால லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கோ, நிகழ்காலத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அந்த சக மனிதர்களுக்குத் தோள் கொடுக்கும் சமஉரிமைப் போராட்டங்களில் ஏதேனும் ஒரு வகையில் பங்கேற்றுப் பாருங்கள். சோதிடம் பார்க்காமலே, இறைவனின் சித்தத்தை அறியாமலே, பரிகாரங்கள் செய்யாமலே ஒரு மனநிறைவு உங்களுக்குள் கிளைப்பதை அனுபவியுங்கள். ஈடு இணையற்ற அனுபவமாய் அது அமைவதை உய்த்துணர்வீர்கள்.