கீற்றில் தேட...

 

அண்மையில் பாதல் சர்க்காரின் மறைவை ஒரு முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட செய்தியினூடாகத்தான் தெரிந்துகொண்டேன். இது – அவரின் இறப்பு ஒன்றும் அதிர்ச்சியான செய்தியல்ல. ஆனால் மனதை நெருடும் செய்தி. இழப்பு - இந்திய, தமிழ் நாடகச் சமூகத்துக்கு. மறைந்து போனது பாதல் சர்க்கார் என்னும் ஆளுடல்தான். ஆளுமையல்ல.
 
மிகவும் அரிதான ஆளுமைகளை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது பேறு. அது பல நேரங்களில் கிட்டியிருக்கிறது. அவர்களே ஆசானாகவும் கிடைப்பது அதனிலும் பேறு. பாதல் சர்க்கார் எனக்கும்கூட ஆசான். அவருடன் இருந்து கலந்துகொண்ட இரு பட்டறைகள் மூலமாகச் சந்திக்க முடிந்தது. இது கையகப்படுத்தும் செய்தியல்ல, பட்டறிவின் பகிர்தல்.
 
பாதல் உண்மையில் நாடகத்தை மட்டும் கற்பிக்கவில்லை. கற்பிப்பதில்லை. ஏறக்குறைய வாழும்முறையையும் உலகை மற்றிப்பார்க்கவும் மாற்றப்பார்க்கவும் சிந்திக்கத் தூண்டுவதாகவுமே அவரது நாடகப்பயிற்சிகள் இருக்கும்.  
 
வெளி ரங்கராஜனாகவும் பிரபஞ்சனாகவும் அருட் தந்தை பிரிட்டோவாகவும் ராமசாமியாகவும் அ.மங்கையாகவும் லண்டனில் வசிக்கும் எனது நண்பர் பிரின்ஸ் சார்ள்ஸ் ஆகவும் பரீக்சா ஞானியாகவும் அருட்சகோதரி கிளார் ஆகவும், பேராசிரியர் ஆல்பர்ட்டாகவும் என எத்தனையோ பல சமூகப்பணி சார்ந்தவர்களாகவும் நாடகக் கலைஞர்களாகவும் பாதல் சர்க்கார்  ஆளுமை உயிர் வாழ்கிறது. இங்கு பெயர் குறிப்பிடாத பெருந் தொகையான பலர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வனுபவத்தின் குறிப்பிடத்தகுந்த ஓர் மாற்றத்தை நிகழ்த்தும் புள்ளியை பாதலின் நாடகப்பட்டறை செய்திருக்கும்.
 
90களின் தொடக்கத்தில் மதுரையில் நடத்தப்பட்ட பட்டறையின் இறுதி நாள்; பயிற்சியின் போது நடந்த ஓர் நேர்வைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் ஏதாவது ஒரு பொருளை வைத்துக்கொண்டு அதனுடன் உறவாடும்படி சொன்னார் பாதல். ஆளாளுக்கு ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டோம். எடுத்துவைத்திருந்த பொருளை தடவிப்பார்த்தோம். உருவத்தை உணர்ந்து பார்த்தோம். அதன் சுமையைப் பார்த்தோம். பின்னணியில் பாதல் இவற்றைப்போன்று அந்தப் பொருளுடன் நாம் உறவை ஈடுபடுத்தக்கூடிய தூண்டுதல்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அரைமணிநேரம் இருக்கலாம். இந்த உறவாடல் நிகழ்ச்சியின் இறுதியாக, அனைவரையும் அவரவர்களின் உறவுப் பொருட்களைத் திருப்பி வைக்கச் சொன்னார். சிலர் உடனேயே வைத்தாயிற்று. சிலர் மெதுவாக ஆசுவாசப்படுத்தி வைத்தார்கள். இரண்டு மூன்றுபேர் வைக்கவில்லை. இறுதியில் அவற்றைப் பிரிந்துகொள்ள முடியாமல் இருவர் கதறி அழத்தொடங்கிவிட்டார்கள். பொருட்களைப் பிரித்து வைத்து அவர்களை ஆசுவாசப்படுத்த தனியே, வெளியே கொண்டுபோகவேண்டியதாயிற்று.
 
ரசிய நாடகக்காரரான ஸ்ரனிஸ்லாவ்ஸ்கி(Konstantin Stanislavsky)இனுடைய நாடக அணுகுமுறையில் பாத்திரத்தில் நுழைதல் அல்லது அடையாளப்படுத்துதல் (identifying/being with the character) என்று ஒரு நுட்பம் கூறப்பட்டிருக்கும்.  பின்னாளில் ஜெர்மனிய நாடக ஆசிரியர் பெர்டோல்ட் பிரக்ற் (Bertolt Brecht) அதை மாற்றியமக்க விளையும் தன்மையை வலியுறுத்தினார். பிரெக்ட் நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளர் அந்நியமாகிச் சிந்திக்க வழிவகுக்கும் தூண்டுதலை ஏற்படுத்த வலியுறுத்தினார். ஸ்ரனிஸ்லாவ்ஸ்கியின் நாடகப் பயிற்சி முறையே இன்றளவும் சிறந்த நடிகர்களை உருவாக்கியுள்ளது. ஆயினும் பாதலைப் பொறுத்தவரை இரண்டு தன்மைகளையும் - ஏன் வேறு பல அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகளைக் கொடுப்பார். அதன் நோக்கம் நடிக்கப் பழகுவோருக்கும் நாடகம் செய்யப் பழகுவோருக்கும் நாடகம் பற்றிய – நிகழ்த்துதல் பற்றிய புரிதல் தெளிவடைய வேண்டும் என்பதுதான்.
 
முதன்முதலில் ‘மனதில் பதிந்த காலடிச்சுவடுகள் வழியாகவே’ எனக்கு பாதலைத் தெரிந்ததது. அதைப் படித்ததும் பொறாமையாக இருந்தது. ஊரில் இருந்தே பல நாடக நிகழ்வுகளில் பலவழிகளிலும் ஈடுபட்டுவிட்டு தமிழகத்தில் வந்து ஒருவரையும் தெரியாமல் நூலகமே எனது கதி என்று பாளையங்கோட்டை மாவட்ட மத்திய நூலகத்தைக் குடைந்து கொண்டிருந்த காலம் அது. மனதில் பதிந்த காலடிச்சுவடுகளை குறைந்தது மூன்று முறையாவது வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அவருடைய நாடகங்களின் தொகுப்புகள் ஒன்று ஆங்கிலத்தில் வந்ததையும் எடுத்து வாசித்திருக்கிறேன்.
 
பொறாமையாகிக் கனவாகிப்போன, கவனவான பாதல் எனக்கு நிசத்தில் முன்னால் வந்து நிற்கும் வாய்ப்பு ஒன்றல்ல இரண்டு தரம் கிடைத்தது.  சென்னை  லயோலா கல்லுரியின் பண்பாட்டு தொடர்பாடல் மையத்தில் பணிபுரியும் நாட்களில் ஏற்பட்ட வட்டம், தமிழக கத்தோலிக்க சமூக சேவைப்பிரிவினர், மற்றும் icuf மையத்தினர் எனப் பல வழிகளில் இது எனக்கு சாத்தியமாகியது.  
 
எளிமை. எளிமையை நோக்கி நாடகத்தை நகர்த்துவதே பாதலின் பணியும் பாணியும். நாடகத்தில் தொடக்கத்திலிருந்து தனது தேடலுக்கூடாக வந்தவர் பிறகொரு இந்ததிரஜித் செய்யப் புறப்படுகையில் அது செலவிற்கும் அரங்கிற்கும் மாநடிகர்களிற்கும் எனப் பிறரில் நாடகம் தங்கி இருப்பதை மாற்ற எடுத்த முதல் அடி எனலாம். கொல்கொத்தாவின் பூங்காக்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட நாடகம். மேடையிலிருந்து நாடகத்தைக் காப்பாற்றி மக்களின் நடுவில் கொண்டு வந்து நிறுத்தியது. இதைப்போலப் பலரும் ஒருவகையில் உலகின் பல பாகங்களிலும் தங்கள் தங்கள் அளவுகளில் நாடகங்களில் செய்து பார்த்த முயற்சிதான். நாட்டார் கலைவடிவங்கள் (உண்மையான) பலவும்  இவ்வாறு பிறவற்றைச் சாராமல் இயங்குபவைதான்.
 
ஆயினும் இந்தியாவில் நவீன காலத்தின் நாடகங்களை கொண்டு வந்து இந்த இடத்தில் வைத்தவர்களில் பாதல் பங்கு பெருமளவானது. மேலே சுட்டியிருக்கும் ஆளுமைகளின் பெயர்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் இடதுசாரி, வலதுசாரி, நடுச்சாரி என அனைத்து சாரியினரதும் சமூகச் செயற்பாட்டு நாடக வடிவங்களுக்கு பாதலின் பாணி கைகொடுத்திருப்பது புலப்படும்.
 
ஆனாலும் மீண்டும் மீண்டும் வண்ண ஆடைகளையும் விளக்குகளையும பெரும் அரங்குகளைளையும் பெருமெடுப்பிலான அசசிடல் ஊகங்களையும் சார்ந்தே தங்கள் நாடகங்களை பலரும் சிந்திக்கிறார்கள்.
 
சில நேரங்களின் வரலாற்றில் முன்னுக்குபின்னாக சரியான திசையில் போவதை திசைதிருப்பும் வகையில் நிகழ்வுகள் அமைவதுண்டு. அதைப்போலவே பாதல் தமிழகத்தில் இட்டுச் சென்ற பல ஆண்டுகள் தொடர்ந்த, பல பயிற்சிப் பட்டறைகளின் பின் டெல்லி நாடகப் பள்ளியினர் தமிழ்நாட்டில் பட்டறைகளை நடத்தினர். கவலைக்குரிய வகையில் இவர்களின் நாடக பாணி மேடையில் உட்கார்ந்திருந்தே சிந்தித்தது. அதன் விளைவுகள்தான் பின்னர் இன்று ஓர் அலையாக ஓடிக்கொண்ருப்பதைப் பார்க்கமுடிகிறது என நினைக்கிறேன். இதற்கிடையில் அல்லது இந்த காலகட்டம் மருவிக்கொண்டு போகையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் பலவும் கிளைவிட்டு பட்டிதொட்டியெங்கும் சென்றவுடன் நாடகத்தின் மாற்றுத் தேவை குறைந்துவிட்டதையும் பார்க்கமுடிகின்றது. ஆனால் இன்றும் எளிமையாகவும் நுட்பமாகவும் கையில் எடுத்துக் கொடுக்கும் உணவுத்துண்டைப்போல நாடகத்தினால் மட்டும்தான் மக்களிடம் எதையும் கொடுக்கமுடியும் - அந்தளவில் சிறந்த மாற்றூடகமாக இன்னும் நாடகம் இருக்கிறதுதான்.
 
அரங்குகள் மண்டபங்களில்தான் நாடகம் நடத்தலாம் என்பதும் ஒரு பாணியேயானாலும் நாடகம் கார்ப்பொரேட் வலைப்பின்னலில் இருந்து மீழ்வதற்குப் பதிலாக அதிலே மாள்கிறதைப் பார்க்கமுடிவது பாதல் மறைவையொட்டி நினைத்து வருந்ததத் தக்கதே. எளிமையிலிருந்து விலகிப்போய் கனவுலகில் நிகழும் நாடகம்- இந்த நாடகம் பாதல் தவிர்க்க நினைத்த வகை.
 
பாதல் எதிர்கொண்டு மாற்ற நினைத்தது ஏற்கெனவே சிறப்பாயிருந்த இந்திய நாடக மரபை. சிதிலமாக இருந்ததையல்ல. அதனால் அவர் ஆனது ஆக்கினார். முன் சென்னதுபோலவே தமிழகத்தில் பல  நாடக இயக்கங்களிலும் நாடகமால்லாத துறைகளிலும் பாதலின் இருப்பு வாழ்கிறது.

- ரஃபேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)