அமெரிக்க வல்லாதிக்கம் இரண்டு அணுகுண்டுகளை வீசி உருத்தெரியாமல் சப்பான் நாட்டை வேட்டையாடி, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. இரண்டாம் உலகப்போரின் போது, நடைபெற்ற இந்த மனிதத் தன்மையற்ற போரால் சப்பான் கடும் வீழ்ச்சிக்கு ஆளானபோதும், ஒன்று பட்ட,  உணர்வால் உந்தப்பட்ட சப்பானிய மக்களின் பேரெழுச்சியின் காரணமாய் மீண்டெழுந்து, இன்று உலக நாடுகளெல்லாம் வியக்கும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் முன்னிலை பெற்றுத் திகழ்கிறது. ஆனால் அண்மையில் நடைபெற்ற நிலநடுக்கமும், ஆழிப்பேரலைத் தாக்குதலும் அந்நாட்டை சின்னாபின்னமாக்கிவிட்டன. அதையும் தாண்டி அங்கிருந்த அணுஉலைகளெல்லாம் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி, கடுமையான கதிர்வீச்சுத் தாக்குதலுக்கும் இலக்காகி வருகின்றன. சப்பான் மிகச் சிறிய நாடாக இருந்தபோதும் அங்குள்ள அணுஉலைக் கூடங்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஐம்பத்தைந்து அணுஉலைக் கூடங்கள் சப்பான் மின் தேவையில் 30 விழுக்காட்டை (43,000 மெகாவாட்) உற்பத்தி செய்கின்றன.

தற்போது அங்கு நிகழ்ந்த விபத்தின் காரணமாய், உலக நாடுகள் அனைத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டன. முதல் அணு உலை வெடித்தது, இரண்டாவது அணுஉலை வெடிக்கப் போகிறது, மூன்றாவது அணுஉலையும் வெடிக்கும் என்பதாக உலக நாளேடுகள் அனைத்தும் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. கதிர் வீச்சின் பாதிப்பு நாடு கடந்து, கண்டங்கள் கடந்து பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயமும் இருப்பதை சூழலியல் வல்லுநர்கள் பெரும் அச்சத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.முன்னர் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலின் கோர விளைவுகளை சப்பானியர்கள் தற்போதும் எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போதைய அணு உலைக் கூட விபத்தும் சேர்ந்து கொண்டிருப்பது, சப்பானியர்கள் மீது கழிவிரக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இரசிய நாட்டின் நிதி மற்றும் மேலாண்மை ஆலோசனைகளோடு தமிழகத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டு இன்னும் சில மாதங்களில் தனது பணியைத் தொடங்கவிருக்கிறது கூடங்குளம் அணு உலை. அசுர அணு மின்சக்தி நிலையங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் கூடங்குளம் அணு உலையைப் போன்று, சப்பான் நாட்டிலும் 14 அணுமின் சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த மார்ச் 11ஆம் நாள் 9.0 ரிக்டர் அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் விளைவாக, சப்பான் அணுஉலைக் கூடங்களோடு, அணுஉலைத் திட்டங்களும் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றன. முப்பது அடிக்கும் மேலாக வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த பேரலைகள், புகுசிமாவில் அமைந்துள்ள நான்கு அணுஉலைக் கூடங்களை சின்னாபின்னமாக்கிவிட்டன. நல்லவேளையாக முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் காரணமாய் பெருமளவிலான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

உலகத்தின் மிக மோசமான அணு விபத்துக்களில் முதன்மை இடத்தில் இருப்பது செர்நோபிள் அணுஉலை விபத்தே. உலக அணுசக்தி ஆணையகம் செர்நோபிள் விபத்தை 7 (உச்சநிலை) ஆகவும், அமெரிக்காவின் திரிமைல் தீவு அணு உலை விபத்தை 5 என்றும், தற்போதைய புகுசிமா விபத்தை 4லிருந்து 5ஆகவும் அளவீடு செய்துள்ளது. அந்த அளவிற்கு சப்பான அணு உலை விபத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக அணுத் திட்டங்களின் வாயிலாக மின் உற்பத்தி செய்யும் முயற்சியையும் மறுபரிசீலனை செய்கின்ற அளவிற்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுவிட்டன. வேறு எந்த விபத்துகளைக் காட்டிலும் அணுஉலைக்கூடங்களில் நிகழும் விபத்துக்கள் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் நீண்ட கால விளைவினை ஏற்படுத்தக் கூடியவையாகும். தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக பாதிப்பினை ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆகையால் அணுத்திட்டங்கள் குறித்த மறுபரிசீலனை மிகவும் அவசியமாகிறது. இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

இந்திய நாட்டில் தற்போது வரை 20 அணுமின் நிலையங்கள் மிகப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயங்கி வருகிறது என்று சொல்லப்பட்டாலும், அவ்வப்போது அக்கூடங்களில் நடைபெறும் விபத்துக்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் உண்மை. கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் இந்தியாவின் தலைநகருக்கு அண்மையில் இயங்கிக் கொண்டிருந்த நரோரா அணுமின் நிலையத்தில் தீப்பிடித்து பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தால் உயிர்சேதமோ, கதிர்வீச்சோ நிகழவில்லை என்றபோதும், இயக்கத்தில் நேர்ந்த கோளாறும், மனிதத் தவறுமே இந்த விபத்திற்குக் காரணம். இது இந்தியாவின் முதல் அணுஉலை விபத்தாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் 1986ஆம் ஆண்டு 29ஆம் நாள் இரசிய நாட்டில் நிகழ்ந்த செர்நோபிள் அணுஉலை வெடிப்பின் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியம் மட்டுமன்றி, ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பாதிப்பிற்குள்ளானது. அவ்விபத்து நடந்து முடிந்து விவாதங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில்தான் தற்போதைய கூடங்குளம் அணுஉலைத் திட்டத்திற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் பேசி, சோவியத் ஒன்றியம் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் திருநாட்டில் உருவாக்கப்படும் அணுஉலைக் கூடங்களுக்காக அவ்வப்பபகுதியில் நடைபெறும் மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் அனைத்திலும் நேர்மையான, சனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அரசு என்ன நினைக்கிறதோ அதை அங்குள்ள மாவட்ட நிர்வாகங்களின் மூலமாக செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுஉலைக்காக நடைபெற்ற கருத்தறியும் கூட்டங்களிலும் இதனைத் தான் காண முடிந்தது. இந்திய கடலோரப் பகுதிகளில், குறிப்பாக தமிழகக் கடலோரம் ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு இலக்காகும் பகுதிகள் என்பதை கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சுனாமித் தாக்குதல் உறுதிபடத் தெரிவித்து விட்டது. அணுஉலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்த மேலாண்மை எத்தகையது? பேரிடர்க் காலங்களில் உலைக்கூடங்களைப் பாதுகாப்பதற்கான நிர்வாக நடைமுறைகள் என்ன? என்பது குறித்தெல்லாம் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை. ஆனால் அவ்வப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒத்திகை என்று சொல்லி அருகில் வாழும் மக்களை பீதிக்குள்ளாக்குவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆழிப்பேரலைத் தாக்குதல் நிகழ்ந்தால் உள்ளுக்குள் கடல்நீர் புகாத வண்ணம் 20 அடி உயரத்திற்கு வளாகச் சுவர் அமைத்திருக்கிறோம் என்கிறார்கள். 30 அடி, 40 அடி உயரத்திலெல்லாம் பேரலைகள் உருவாகின்றன என்பதற்கு சப்பானில் நிகழ்ந்த அண்மைப் பேரழிவே சான்று.

'2032ஆம் ஆண்டிற்குள் அணுசக்தி மூலம் 63000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆசைப்படுகிறது அணுசக்தித் துறை. 1987ஆம் ஆண்டிற்குள் 25 ஆயிரம் மெகாவாட், 2000 ஆம் ஆண்டில் 45 ஆயிரம் மெகாவாட் என்று கனவு கண்ட நம் அணுசக்தித் துறை பல்லாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கிவிட்டு, தற்போது வரை 3310 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்கிறது. தற்போதைய தமிழகத்தின் தேவை அதிக பட்சம் 8 ஆயிரம் மெகாவாட்தான். ஆனால் இப்போது உற்பத்தி ஆவது 10,100 மெகாவாட் மின்சாரம் ஆகும். அப்படியிருக்கும் போது ஆபத்தான அணு உலைகள் எதற்காக என்ற கேள்வி எழுகிறது' என்று கேள்வி எழுப்பினார் மறைந்த சுற்றுச்சூழல் போராளியும், குமரி மாவட்ட பத்திரிகையாளருமான அசுரன். அவர் எழுப்பிய கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அதற்கான பதில்கள்தான் அணுசக்தி வல்லுநர்களிடமோ அல்லது நம்மை ஆளுகின்ற நடுவண், மாநில அரசுகளிடமோ இல்லை. 'தென்னிந்தியாவிலுள்ள அணுஉலைகளால் இலங்கை மிகப் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறைந்த அணுஉலைகளால் விபத்து நேரிடும் பட்சத்தில் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்படும்' என்று கொழும்பு திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் சுமதிபால தெரிவித்துள்ளார்.

உலகத் தரத்தில், சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறுவப்பட்ட சப்பான் அணுஉலைகளுக்கே இன்று மிகப் பெரிய ஆபத்து நேர்ந்திருக்கும் நிலையில், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள், இன்னமும் அணுசக்தி என்பதில் ஏன் இவ்வளவு நாட்டம் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய அணுஉலைகளை ஆய்வு செய்யவும், ஆழிப்பேரலை, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களைத் தாங்கும் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்த இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், அணுசக்தி அதிகாரிகளுக்கு இப்போது ஆணையிட்டுள்ளார். இந்திய அணுஉலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து இந்தியத் தலைமை அமைச்சருக்கே ஐயம் இருக்கிறது என்பதைத்தானே இந்த ஆணை காட்டுகிறது.

ஐஎஸ்ஓ-9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தித்துறை பெருமைப்பட்ட கூடங்குள சிமிட்டித் தள ஆய்வுக்கூடம், சில ஆண்டுகளுக்கு முன்பாக இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். கட்டுமான நிலையிலேயே இப்படியொரு விபத்தினைச் சந்தித்துள்ள கூடங்குள அணுஉலை, உற்பத்தியின் போது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தவிருக்குமோ தெரியவில்லை. கடந்த ஆழிப்பேரலைத் தாக்குதலின் போது, கல்பாக்கம் அணுஉலையில் கடல் நீர் உட்புகுந்து சேதங்களை விளைத்ததாகவும், பணியிலிருந்த ஊழியர்கள் சிலர் இறந்து போனதாகவும் அப்போது தகவல் பரவியது.

'பொதுமக்கள் ஆண்டிற்கு ஆயிரம் சீவர்ட் அளவு கதிர்வீச்சை உள்வாங்கலாம். அணுசக்தி நிறுவனங்களில் பணிபுரிவோர் ஆண்டிற்கு 50 ஆயிரம் சீவர்ட் அளவு உள்வாங்கலாம். இது இயல்பானது. ஜப்பான் கடலோரம் பூகம்ப மையத்திற்கு அருகிலேயே இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்திய அணுஉலைகளைப் பொறுத்தவரை முறையான பாதுகாப்புடன் உள்ளது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்கினாலும், சில வினாடிகளிலேயே தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும், பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து அணு உலைகளைப் பெற்றாலும், நம்நாட்டு சூழ்நிலைக்கேற்ப இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம். கூடங்குளத்தில் அதிகபட்ச பாதுகாப்புடன் அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது' என்று இந்திய அணுமின் கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கே.ஜெயின், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் ஆகியோர் சப்பான் அணு விபத்திற்குப் பிறகு கல்பாக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கியுள்ளனர்.

பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த மருத்துவர் இரமேஷ், சேது சமுத்திரம் தொடர்பான தனது ஆய்வறிக்கையில், தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலோரம், ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு எப்போது வேண்டுமானால் இலக்காகலாம் என்றும், அக்குறிப்பிட்ட பகுதிகளில் நிலநடுக்க மையங்களும், தூங்கும் எரிமலைகளும் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி, அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை இக்கடலோரம் புயல், சூறாவளி, பெருமழை போன்ற இடர்களுக்கு ஆளாகின்ற பகுதியுமாகும். இதையெல்லாம் கணக்கிற் கொண்டு, அணுத்திட்டங்களின் வாயிலாக மின் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு, மாற்று ஆற்றலின் வழியே இதற்கொரு தீர்வினைக் காண முனைவதே அறிவிற் சிறந்த செயலாகும்.

இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவரும், அறிவியலாளருமான இலால்மோகன், 'அணுஉலைத் திட்டங்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் திட்டத்தைக் கைவிட வேண்டும். அணுஉலைக் கழிவுகளால் விபத்து நடக்காது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை' என்று கூறுகிறார். தற்போது உலகம் முழுவதும் 939 அணுஉலைகள் இயங்குகின்றன. அணுசக்தியால் இயங்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் உலவுகின்றன. இவையெல்லாம் பூமிப்பந்தை எந்த நேரத்திலும் சுக்கு நூறாக்கும் திறன் கொண்டவை. இப்படியொரு ஆபத்தை எதிர்கொண்டு, மக்களுக்கான மின் தேவையை, ஆற்றல் தேவையை நிறைவேற்றத்தான் வேண்டுமா? இந்தியாவில் நிறைந்து கிடக்கும் சூரிய ஆற்றலை சிறப்புடன் பயன்படுத்தினாலே மின் தேவையை ஈடு கட்ட இயலும். அதற்கான தொலைநோக்குத் திட்டங்களை இயற்றுவதற்கு நமது நடுவண், மாநில அரசுகள் முனைப்புக் காட்டுவதே புத்திசாலித்தனம். இல்லாவிடில் இப்போது சப்பானுக்கு நேர்ந்தது, நாளை தமிழகத்திற்கும்..! புரிந்து கொள்வார்களா நமது அணுசக்தி அறிவியலாளர்கள்?

- இரா.சிவக்குமார்

Pin It