“எங்கெங்கு காணினும் சக்தியடா…. “ என்னும் புரட்சிக் கவிஞனின் வரிகளுக்குப் போட்டியாக, இப்போது .

‘எங்கெங்கு காணினும் ஊழலடா –அது

எம தரசியலாளர்கை வண்ணமடா..’ எனப் பாடுமளவுக்கு இந்தியத் திரு நாட்டில் ‘மலிந்து’ கிடப்பது ஊழல் ஒன்றே!

ஆனால் இந்த ஊழல் குறித்து எதிர்க் கட்சி அரசியலாளர்களும், பொது ஊடகங்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில அறிஞர்களும் அக்கறையுடன் பேசும் அளவுக்கு நாட்டு மக்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை.

இதற்கு என்ன காரணம்?

எமது தமிழ்ச் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வடிவேலு,எங்காவது ‘எக்குத்தப்பாக’ மாட்டிக்கொண்டு; பின் அதிலிருந்து வெளியேறியதும், “உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ?” என்பாரே, அது போன்று, நமது உடன்பிறப்புகளின் இந்த ‘அசமந்தப்’ போக்கிற்கான காரணத்தையும் நாம் உட்கார்ந்துதான் யோசிக்கவேண்டும் போலும்!

அவ்வாறு ‘உட்கார்ந்து யோசிக்கையில்’ என் எண்ணத்தில் எழுந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில், தமிழக வாக்காளர்கள் மிகவும் தெளிவாகவே இருப்பதாகப் படுகிறது.

இந்தத் தெளிவினை அவர்கள் எட்டுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்… அவற்றுள் தலையாயது…. ‘நமது அரசியல் வாதிகளையும், ஊழலையும் பிரித்தெடுப்பதென்பது ‘ரேஷன் கடை’ அரிசியையும்;அதில் கலந்திருக்கும் வண்டுகளையும் பிரித்தெடுப்பதற்குச் சமம்’ என்னும் அவர்களது அனுபவம் எனலாம்.

அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு ‘இன உணர்வும்’ மிகமிக அதிகம் என்றே படுகிறது. இந்த விஷயத்தில் சீமான் போன்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியடைய வேண்டும்!

இந்திய நாட்டின் மக்கள் தொகை 110 கோடி என வைத்துக் கொண்டால், அதில் சுமார் 7 கோடிப்பேர் தமிழர்கள். இது மொத்த மக்கட்தொகையில் 6.4 விழுக்காடு மட்டுமே.

இப்போது பரபரப்பாகப் பேசப்படும் 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.75,000 கோடி ரூபாய்கள் என்னும் மிகப் பெரிய தொகை ’ராசா’வின் செயலால் ‘மடை மாற்றப்’ பட்டிருக்கிறது என்கிறார்கள். உண்மையில் ராசாவுக்கும் அவரது ‘உயர்மட்ட’ ஆலோசகர்களுக்கும் இவ்வாறான ஊழல் மூலம் ’கசிந்த தொகை’ எவ்வளவாக இருக்கும் ?

ஒரு பேச்சுக்காக நாம் ராசாவுக்கு 70 கோடி ‘தேறி’யிருக்கும் என்று வைத்துக்கொண்டாலும் அந்தத் தொகை தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும்/மகளும் ஏறத்தாழ ஆளுக்கு ரூபாய் பத்தினை இழந்திருக்கிறார்கள் அல்லது நாம் ஒவ்வொருவரிடமிருந்தும் ‘அவர்’ ரூபாய் பத்தினை முறையற்ற வழியில் எடுத்திருக்கிறார் என்றுதானே பொருள் !

ஆனால், இவ்வாறு எடுத்திருந்தாலும், தேர்தல் வரும் போது அவரைச் சார்ந்த கட்சி தலைக்கு 10,000 வரை அன்பளிப்பாக வழங்குவதற்கு முன்வருவதன் மூலம் எமக்கு இந்த ஊழல் அரசியலால் லாபமே என்பது இவர்களின் (பொது மக்களின்) எண்ணம். இதில் ‘இன உணர்வு’ எங்கே வருகிறது என்கிறீர்களா?

இந்த ‘ராசா’ யார் ? ஒரு தமிழர், அதுவும் கலைஞர் சொல்வது போல், ஓர் தலித் தலைவர். அவருக்கு ஊழல் செய்வதன் வழியாகக் கிடைத்த தொகை உண்மையில் நாட்டின் 110 கோடி மக்களும் வழங்கும் வரிப்பணத்தில் இருந்து வருவதுதானே…. ஏன் நமது அரசியல்வாதிகள் தேர்தல் அண்மித்ததும் நம் மீது அக்கறை கொண்டு அளிக்கும் ‘இலவசங்கள்’ கூட அவர்கள் பாடுபட்டு உழைத்த பணம் அல்ல. அனைத்தும் மக்களின் வரிப்பணமே…. என்றாலும், ஊழல் செய்யும் ஓர் அரசியல்வாதி சுருட்டும் தொகையில் ஒரு பகுதி மீண்டும் ஓரளவு வசதி குறைந்த மக்கள் சிலரிடம், தேர்தல் அன்பளிப்பாக வந்து சேர்கிறது. இந்த ராசாவின் இடத்தில் வேறொருவர் (அதாவது தமிழகத்தைச் சாராத ஒருவர்) இருந்திருப்பின் இந்தத் தொகை எப்படியும் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் போயிருக்கும்! அவ்வாறு நடந்திருப்பின் அதில் ‘கணிசமான’ தொகை சம்பந்தப்பட்ட அமைச்சரின் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது அங்குள்ள மக்களிற் சிலருக்கு ‘அன்பளிப்புகளாக’ வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நமது ‘ராசா’ ஒரு தமிழராகையால் அவருக்குக் கிடைத்ததில் ஒரு பங்கினை மீண்டும் எமக்கே ‘பரிசாக’ அளிக்கும் நிலை ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் சாதாரண அமைச்சர் ஒருவர் இதன் மூலம் கோடீஸ்வரராகும் வாய்ப்பினையும் பெறுகிறார்.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் இழப்பது ஆளுக்குப் பத்து ரூபாயாக இருப்பினும் ஓர் தமிழ் அமைச்சரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் கோடீஸ்வரர்களாக்குகிறோம். தேர்தல் காலத்தில் இந்தத் தமிழ்க் கோடீஸ்வரர்கள் எமக்கு அளிக்கும் தொகைகளையும் பெறுகிறோம். இன உணர்வுடன் இதனை அணுகுபவர்கள் இதுபோன்ற ‘ஊழல்கள்’ ‘மாபாதகச்’ செயல் எனச் சொல்லமாட்டார்கள்!

இந்தப் புரிந்துணர்வும்(?), இனப் பற்றுந் தாம் எமது மக்களை இவ்வூழல் பேர்வழிகள்மீது கோபங் கொள்ளச் செய்யாது மன்னிக்கும் மனப்பாங்கினையும், மறக்கும் நிலையினையும் தோற்றுவிக்கிறது என் நினைக்கிறேன்.

நேர்மையற்றவர்களையும்; பாதகம் செய்பவர்களையும் பழிக்கவும் அவர்களுக்குப் பாடம் புகட்டவும் இன்றைய மக்கள் முன்வருவதில்லை. தங்களளவில் கிடைப்பது லாபம் என்னும் எண்ணமே மேலோங்கி இருக்கிறதேயல்லாமல், சமூக அக்கறையுடன் தவறுகளைக் களையவும், தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும் துணியும் வரை;

‘ஊழல் - அரசியல்வாதிகளின் உரிமை’ என்னும் நிலையே நீடிக்கும்.

Pin It