மணிப்பூரின் அமைதி மற்றும் சனநாயகத்திற்கான பிரச்சார இயக்க‌த்தின் தலைவர் மாலேம் நிங்தௌஜா மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக போராடிவருகிறார். டெல்லியில் சமீபத்தில் நடந்த காசுமீர் சந்திப்பின் பேச்சாளர்களில் அவரும் ஒருவர். தெகல்கா இதழ் அவருடன் நடத்திய உரையாடலின்போது காசுமீர் மற்றும் மணிப்பூரி ஆகியவற்றின் போராட்டங்கள் ஏன் ஒருமித்தது என்றும் அவைகள் ஏன் பிரிந்துபோக விரும்புகின்றன என்றும் அவர் விளக்கியுள்ளார். அதன் தமிழாக்கம் இதோ:

Malem_Ningthoujaஏன் மணிப்பூரின் அமைதி மற்றும் சனநாயகத்திற்கான பிரச்சார இயக்கம் (மஅசபி) காசுமீர் விடுதலையை ஆதரிக்கிறது?

மஅசபி வளர்ச்சி,அமைதி மற்றும் ஒற்றுமைக்காக போராடுகிறது. காசுமீர் பிரச்சனையை பொறுத்தவரை நாங்கள் இரண்டுவிதமான புரிதல்களைக் கொண்டுள்ளோம். முதலாவதாக காசுமீரின் அரசியல், சமூகம் சுயநிர்ணய உரிமையை விரும்புகிறது. அய்க்கிய நாடுகள் சபை காசுமீரை பிரச்சனைக்குரிய பிரதேசமாக அங்கீகரித்துள்ளது. ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் காசுமீரை ராணுவமயமாக்கி மோசமானதொரு யுத்தத்தை அங்கே நடத்திக்கொண்டுள்ளன. விடுதலையை விரும்பும் காசுமீரிகளால் இவ்விரு அரசாங்கங்களும் ஒடுக்குமுறையாளர்களாகவே கருதப்படுகின்றன.

காசுமீரைப்போலவே மணிப்பூரி இயக்கமும் பிரிவை விரும்புகிற இயக்கமா?

இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ஆயத தாங்கிய அமைப்புகளைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்களென்றால் என் பதில் ஆமாம். சுதந்திர மணிப்பூருக்கு போராடுகிறவர்களின் பரப்புரையின்படி நாம் பார்த்தோமென்றால் இது காலனிய எதிர்ப்பு இயக்கமென்றும், விடுதலை இயக்கமென்றும், பிரிவினைக்கான இயக்கமென்றும் அழைக்கப்படுகிறது.

மணிப்பூரி மக்கள் காவல்துறை மற்றும் இராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராகவே ஆயுதம் ஏந்தினார்கள். இந்திய அரசாங்கம் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றும் இந்திய மையப்பகுதி அளவிலான முன்னேற்றம் இந்தப்பகுதியிலும் வேண்டுமென்றும் மணிப்பூரி மக்கள் விரும்புகிறார்கள். ஆனாலும் முழுமையான விடுதலைக்காக போராடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

ஷூரியத் தலைவர் சையத் ஷா கிலானி காசுமீர விடுதலை காசுமீர் இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றால் மட்டுமே சாத்தியமென்று கூறினார். மணிப்பூரின் விடுதலைக்கான நிபந்தனைகள் என்ன?

இந்திய ஆட்சியின் கீழ் காலனியாதிக்கத்தில் மக்கள் வாழ்வதாக நினைத்து, அவர்கள் அதற்கு எதிராக இருந்தால், கண்கூடான முன்நிபந்தனை இந்தியாவிலிருந்து விடுதலை மட்டுமே.

டெல்லியில் நாகா தலைவரோடு மேடையை பகிர்ந்து கொள்வதென்பது நாகாலாந்து மற்றும் மணிப்பூரி இடையிலான பிரச்சனையை மனதில் கொண்ட ஒரு மனமார்ந்த அரசியல் முடிவா?

நாகாலாந்து மற்றும் மணிப்பூரி இடையே முரண்பாடு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனாலும் நாகாலிம் விடயத்திலும் மணிப்பூரி பகுதிகளின் ஒருங்கிணைப்பிலும் சில கோபதாபங்கள் உண்டுதான். இவ்விடயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையில் நிரந்தரமான தடையிருப்பதாக மஅசபி நினைக்கவில்லை. நாங்கள் பொதுவான சனநாயக பிரச்சனைக்களுக்காக ஒருங்கிணைந்து வேலைசெய்திருக்கிறோம்.

மணிப்பூரின் சில நாகாக்குழுக்கள் மணிப்பூரின் சில பகுதிகள் அகண்ட நாகாலாந்தோடு இணையவேண்டுமென்று விரும்புகின்றன. மணிப்பூர் முப்பத்தியாறுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட குழுக்களை கொண்டுள்ளதே?

அதை அகண்ட நாகாலாந்து என்றோ தெற்கு நாகலாந்து அல்லது நாகலிம் அல்லது ஜோக‌ம் என்றோ அழையுங்கள். பொதுவான பிராந்தியத்தின் முக்கிய பங்குதாரராக கொண்ட ஒவ்வொரு சமூகத்தையும் உள்ளடக்கியதொரு பொருளாதார உறவால் இணைப்பு அல்லது பிரிவு நிபந்தனையாக்கப்படவேண்டும்.

காசுமீரும் நாகாலாந்தும் அவ்வப்போது இந்திய அரசாங்கத்தோடு தங்களது வேண்டுகோள்களை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஆனால் மணிப்பூர் இதுவரை முதல் அடி கூட எடுத்துவைக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே. அதுபோன்றதொரு முயற்சியை எடுக்க மணிப்பூருக்கு நேரம் வந்துவிட்டதா?

பெரும்பான்மையாக பிராந்தியவாரியான துணைக்குழு கட்டமைப்புக்கான மேற்பூச்சு பொருளாதாரத் திட்டங்கள், காவல்துறை நவீனமயமாக்கல், மற்ற பல கருப்புச்சட்டங்கள், மணிப்பூரி காவல்துறை அதிரடிப்படையினர், கிராம பாதுகாப்புப்படை, ஒடுக்குமுறை மற்றும் பிரித்தாளும் தந்திராயோபங்கள் போன்றவற்றால் அரசாங்கம் பதிலளிக்கிறது. இவையனைத்தும் சனநாயகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு எதிரானவைகள்.

கிளர்ச்சிக்குழுக்களால் கட்டவிழ்த்துப்படும் வன்முறை பற்றி?

நாங்கள் சமாதானத்திற்காக நிற்கிறோம். நாங்கள் எல்லா வடிவிலான அரசியல் பயங்கரவாதத்திற்கும் எதிரானவர்கள்.

ஒடுக்குமுறையான இந்திய அரசாங்கத்திலிருந்து மணிப்பூர் விடுவிக்கப்பட்டால் வன்முறை குறையுமா?

மக்கள் சனநாயகத்தில் நீதி இருக்கும், அரசியல் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ இடமிருக்காது.

இந்திய அரசாங்கத்தின் குறைகளோடு மோத எது மிகச்சரியான வழியென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான குரலை வெளியிடுவதில் குறிப்பிடத்தகுந்ததொரு பாத்திரத்தை ஊடகங்கள் ஆற்றி அரசால்  கட்டவிழ்க்கப்படும் அரசியல் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவேண்டும்.

காசுமீரில் கல்லெறியும் மக்களின்மீது சுட்டால் ராணுவம் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் ராணுவம் ஆயுதந்தாங்கிய மணிப்பூர் கிளர்ச்சிக்காரரை சுட்டுக்கொன்றால் அவருக்கு அதேபோன்ற ஈவிரக்கம் காட்டப்படுவதில்லையே, ஏன்?

2004ல் அசாம் துப்பாக்கிப்படையினரால் தங்கஜம் மனோரமா வல்லுறவுள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டபோது அவர் தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலைப்படையின் உறுப்பினர். அதற்குக் கிளம்பிய பரந்தளவிலான எதிர்ப்பு இந்திய அரசாங்கத்தால் நீதிபதி ஜீவன்ரெட்டி விசாரணைக்குழுவை நிறுவுவதற்கு இட்டுச்சென்றது. ஒரு தலைமறைவு ஊழியர் அல்லது பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற குறிப்பான சம்பவத்திற்கு எதிராக மக்கள் போராடுவது அரசாங்கத்தின் ஒடுக்குமுறையையும் அதற்கெதிரான மக்களின் எதிர்ப்பையும் பொறுத்ததே.

சர்மிளாவும் மணிப்பூர் பெண்கள் இயக்கமும் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருகிறார்கள். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறார்கள்?

இதுபோன்ற தனிப்பட்ட முயற்சிகள் சனநாயக இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகத்தான் பார்க்கப்படவேண்டும். மணிப்பூரி மக்கள் இந்திய அரசாங்கம் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவேண்டி பத்து ஆண்டுகளாக உண்ணாநோன்பு போராட்டத்தைக் கைக்கொண்டுள்ள இராம் சர்மிளாவின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இதுபோன்ற அமைதியான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அரசாங்கத்தால் போதுமான அளவு கண்டுகொள்ளப்படவில்லை. இது துரதிருஷ்டவசமானது.

நீங்கள் வன்முறை வடிவிலான எதிர்ப்புகளை ஆதரிக்கிறார்களா?

நாங்கள் வன்முறை வடிவிலான எதிர்ப்புகளை உற்சாகப்படுத்துவதில்லை. ஆயினும் காவல்துறை அல்லது ராணுவத்திற்கெதிரான வன்முறை வடிவிலான எதிர்ப்புகள், தீவிரவாதம் மற்றும் கிளர்ச்சி ஆகியவை ஆட்சியாளர்களின் வன்முறை குணத்திற்கெதிரான பதிலே. மணிப்பூரிலிருந்து ராணுவத்தை அகற்றவும் கொடூரமான சட்டங்களை நீக்கவும் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டுகிறோம்.

மக்களின் விருப்பத்திற்கு கீழ்படியும் பொதுவாக்கெடுப்பு நடத்த காசுமீர் ஒத்துக்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம் சுதந்திர மணிப்பூருக்கு ஒத்துக்கொண்டால், மேற்சொன்னது போன்ற வாக்கெடுப்பு நடத்தப்படுமா?

பிரிவு அல்லது இணைவுக்கான சூத்திரம் என்னவென்பது பிரச்சனையில் பங்குபெறுபவர்களால் முடிவு செய்யப்படும். மக்களின் விருப்பங்களைப் பொறுத்தளவில், சனநாயகரீதியான விருப்பங்களை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் வெளிப்படுத்த ஒரு மேடை இருக்கவேண்டும் என்பதே.

இந்த காரணத்திற்குப் போராடுவதற்கு மணிப்பூரி மக்கள் எந்த வடிவத்தைப் பயன்படுத்த வேண்டும்?

நாங்கள் ஒரு பிரச்சார அமைப்பினர். நாங்கள் வளர்ச்சி, அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிய மக்களின் சனநாயக விருப்பங்களை முன்கொண்டுசெல்கிறோம். நாங்கள் அதைத்தாண்டி செயலாற்றுவதில்லை. மணிப்பூரி மக்கள் புரட்சிகரமானதற்கும், பிற்போக்கானதற்கும் இடையிலான வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். விடுதலை அவர்கள் கையில்தான் இருந்தது, ஆனால் விழிப்புணர்வும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தால் அவர்கள் அதை உணரவில்லை.

சமீபத்தில் தேசம் என்ற பதம் அனைத்து விதமான அடையாளங்களையும் மறைக்க பயன்படுத்தப்படும் துருப்புச்சீட்டு என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள்? எனவே இந்தியா என்பது வெறும் கருத்துருவாக்கம்தானா?

ஸ்டாலினினின் தேசத்திற்கான கறாரான வரையறையின்படி இந்தியா ஒரு தேசமல்ல என்று நான் சொன்னேன். தேசத்திற்குள்ளே பல்வேறு ஒருங்கிணைக்கப்பட்ட அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் இந்தியாவை தேசமாக பார்ப்பது காலத்திற்கு முரண்பாடானதாக இருக்கும். கற்பிக்கப்பட்ட இந்தியாவின் புள்ளிவிவர மாயத்தோற்ற தாழ்நிலையான – ஒடுங்கிய ஊடுருவலின் நிறுவனமயமாக்கப்பட்ட வழிமுறையைப்பற்றித் தெரிவிக்காமல் காசுமீரை[ம் வடகிழக்கையும் உள்ளடக்கியதோர் இந்திய தேசத்தைப் பற்றிய பார்வை இந்திய மக்கள்தொகையின் குறிப்பிட்ட பகுதியினரின் மனசாட்சியில் மெல்ல மெல்ல ஊடுருவி பரவியிருக்கிறது. இந்திய தேசம் என்ற பதம் இந்தியாவுடன் இருக்க விரும்பாத மக்களின் உண்மையான இயக்கத்தை மறுகட்டுமானம் செய்கிறது. உதாரணமாக இந்திய தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் கொலைகளும், துன்புறுத்தல்களும். இடம்பெயர்ப்புகளும், அடிமைப்படுத்தல்களும், சுரண்டல்களும் இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் இந்தியா என்பது இந்திய ஆளும்வர்க்கத்தினர் தமது சுயநலன்களைப் பூர்த்தி செய்வதற்காக அரைக்காலனிய நிலைமையை நீடித்திருக்கச் செய்ய கட்டுப்பாடில்லா ஆயுதபலத்தை பிரயோகிக்கும் ஒரு பூகோள வெளிப்பாடே.

எல்லா இந்திய மாநிலங்களும் தனிதேசம் கோரவேண்டுமா?

இந்தியா பல்வேறு நாடுகளாக உடையவேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் அடக்குமுறையோ ஒடுக்குமுறையோ இருக்கக்கூடாது என்பதுதான். அய்ரோப்பிய கூட்டமைப்பு எல்லா உறுப்பினர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய அடிப்படையானதொரு செயல்முறைக்கு வந்திருக்கிறது. இந்த உரிமையை பிரயோகிக்க விரும்பும் அனைத்து சமூகத்தினருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான நீதியும் அங்கீகாரமும் அளிக்கப்படவேண்டும். எனது எளிமையான கேள்வி என்னவென்றால் ஒருவர் விடுதலையை விரும்பினால் அதில் என்ன பிரச்சனையிருக்கமுடியும்?

நன்றி: தெகல்கா, நவம்பர் 19, 2010

மொழியாக்கம் சார்லசு அன்ரனி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It