2ஜி அலைக்கற்றை ஊழலில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை பொதுத் தணிக்கை ஆணையம் மிக அதிகமாக மதிப்பிட்டுள்ளது என்று தொலைதொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். மேலும், உண்மையில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்றும், மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகின்றது என்றும் ஒரே போடாகப் போட்டுள்ளார்.

திமுகவினரும் இதைத்தான் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறைந்த விலைக்கு ஏலம் விட்டதனால் உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குகின்றன என்றும், அதனால் மக்கள் பயன் பெறுகின்றனர் என்றும் வாதிடுகின்றனர். இந்த விலைக்கு கொடுத்தாலும் தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் வருகின்றது என்பதை இவர்கள் வசதியாக மறைத்து விடுகின்றனர். இல்லை என்றால் ஏலம் எடுத்த உடனேயே சில நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபத்திற்கு வேறு நிறுவனங்களுக்கு விற்றிருக்கின்றன. அப்படி பல்லாயிரம் கோடி லாபம் கொடுத்து வாங்கிய பின்னரும் அந்நிறுவனங்கள் இப்போது என்ன கட்டணத்தில் சேவை வழங்கிக் கொண்டிருக்கின்றனவோ அதே கட்டணத்தில்தானே சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அலைக்கற்றை ஊழல் ஆதரவாளர்கள் அதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்?

இப்போது நமது கேள்வி என்னவென்றால், ஏலம் எடுத்து வேறு நிறுவனங்களுக்கு என்ன லாபத்திற்கு விற்றார்களோ அந்த லாபத்தை மட்டும் கணக்கு போட்டால் கூட அதுவே இப்போது மதிப்பிடப்படும் தொகையை எட்டும். தாண்டினாலும் தாண்டும்.

அலைக்கற்றை உரிமங்கள் ஒரு சேவை வட்டத்திற்கு 2001ம் ஆண்டு விலையான ரூ1658 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு வாங்கிய நிறுவனங்கள் தங்களின் பங்குகளின் ஒரு பகுதியை அந்நிய நிறுவனங்களுக்கு விற்றுள்ளன (யுனிடெக் நிறுவனம் தன்னுடைய 60 சதவீத பங்குகளை ரூ6000 கோடிக்கு டெலிநார் எனும் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. ஸ்வான் டெலிகாம் தன்னுடைய 45 சதவீத பங்குகளை எலிஸ்டாட் என்கிற எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு 6000 கோடிக்கு விற்றுள்ளது. ஸ்வான் நிறுவனத்தில் அமைச்சர் ராசாவிற்கும், அதிகாரத் தரகர் நிரா ராடியாவிற்கும் பங்கு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவை போல் ஜப்பானின் டொகோமோ நிறுவனத்திற்கு தன் பங்குகளை விற்ற டாடா நிறுவனம் உள்பட வேறு பல நிறுவனங்களும் விற்றுள்ளன.).  அதை ஒப்பிட்டால் மட்டும் ஒரு உரிமம் ரூ 7758 கோடியிலிருந்து 9100 கோடி வரையிலான மதிப்பைப் பெறுகின்றது. அந்த கணக்கின்படியே அரசாங்க கஜானாவிற்கு 58,000 கோடி ரூபாயிலிருந்து 68,000 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கும் என்று பொதுத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகின்றது.

அரசு கஜானாவிற்கு வர வேண்டிய பணம் தனியார் முதலாளிகளின் மூலதனமாக மாறிவிட்டது. அதனால்தான் பிரபாத் பட்நாயக், சி.பி. சந்திரசேகர் உள்ளிட்ட மார்க்சிய அறிஞர்கள் இதை மார்க்ஸ் குறிப்பிட்ட ஆதிமூலதனத் திரட்டலுடன் ஒப்பிடுகின்றனர்.

தனியார்மயம், தாரளமயம், உலகமயம் ஆகிய கொள்கைகள் செயல்படுத்தப்பட துவங்கியதிலிருந்து இப்படி மூலதனத் திரட்டல் என்பது படுவேகமாக பல்வேறு வழிகளின் மூலம் நடந்து வருகின்றது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரிலும், மற்ற காரணங்களின் பெயரிலும் விவசாயிகளின் நிலங்களும், அரசு நிலங்களும் பெருமுதலாளிகளுக்குக் குறைந்த விலையில் தாரை வார்க்கப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகின்றது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சிறுஉடமைகள் ஒரு சில முதலாளிகளின் பெரும் மூலதனமாக ஆக்கப்படுகின்றன. பழங்குடியினரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, கனிம வளங்கள் மீது பெரு முதலாளிகளுக்கு உரிமம் வழங்குவதன் மூலம்  அவர்களது மூலதனப் பெருக்கத்திற்கு வழிவகுக்கப்படுகின்றது. தொலை தொடர்புக்கு ஆதாரமாக இருக்கும் காற்றிலுள்ள மின்காந்த அலைகளும் ஒரு இயற்கை வளம்தான். அவற்றை அடிமாட்டு விலைக்கு முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதன் மூலம் அவர்களது மூலதனத் திரட்டலுக்கு அரசாங்கம் உதவி செய்கின்றது. ஆட்சியிலிருப்போரும், அதிகாரிகளும் அதில் ஒரு பங்கைப் பெறுகின்றார்கள். தொலை தொடர்புத் துறை அரசாங்கத்தின் வசமே முற்றிலும் இருந்திருந்தால் இப்படி ஒரு ஊழல் நடக்க வாய்ப்பு இருந்திருக்குமா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

முன்னர் அரசுத் துறையாக இருந்த போது இதில் ஊழல் நடக்கவேயில்லையா என்றொரு கேள்வி எழலாம். அதிகபட்சமாக என்ன நடந்திருக்கும் என்றால், இந்தத் துறைக்குத் தேவையான உதிரிபாகங்கள், உதிரி சேவைகள் வாங்குவது போன்றவற்றில் ஊழல் நடந்திருக்கும். அதாவது கமிஷன் அடித்திருப்பார்கள். அதிகபட்சமாக அவ்வளவுதான்.  போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ராஜீவ்காந்தி 65 கோடி கமிஷன் வாங்கினார் அல்லவா, அது போல.
ஆனால் மும்மயக் கொள்கைகள் அமலுக்கு வந்தபின்பு ஊழல்களின் அளவும், எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. 65 கோடி எங்கே, 1,76,000 கோடி எங்கே? (இந்த 1,76,000 கோடி என்பது சாதாரண தொகை அல்ல என்பதை அனைவரும் அறிவோம். அதன் இன்னொரு முக்கிய பரிமாணத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 2008-09ம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக உருவான மொத்த மூலதனத்தில் 10 விழுக்காடு இந்தத் தொகை என்கிறார் சி.பி.சந்திரசேகர்.

இன்னுமொரு முக்கிய உதாரணத்தையும் பார்க்க வேண்டும். எஸ்டெல் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் அலைக்கற்றை உரிமத்திற்கு கூடுதல் விலை கொடுக்கத் தயாராக இருந்தன. அந்த நிறுவனம் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூடுதலாக 6000 கோடி ரூபாய் தரத் தயராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பின்னர் அதையும் ரூ13,752 கோடியாக அதிகரித்து அமைச்சர் ராசாவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. ஒரு வேளை இதே தொகையை வேறு எதுவும் நிறுவனங்கள் கொடுத்திருந்தால் இன்னும் அதிகரிக்கவும் தயாராக இருப்பதாக அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. (ஆதாரம்:சந்தீப் தீட்சித், தி ஹிந்து, 11.1.11).

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது ராசாவோ கண்டு கொள்ளவில்லை. 13000 கோடி அல்ல, 20000 கோடி கொடுத்தாலும் நாங்கள் 1658 கோடி என்று தீர்மானித்துவிட்டோம், அந்த விலைக்கு எல்லாவற்றையும் விற்றுவிட்டோம் என்று கொள்கைக் குன்றுகளாக இருந்துள்ளனர். பிரதமரின் ஆலோசனையை ராசா மீறிவிட்டார், அதைப் பார்த்துக் கொண்டு பிரதமர் சும்மா இருந்தார் என்பதெல்லாம் கட்டுக்கதை. அவருக்கே ஒரு நிறுவனம் நேரடியாகக் கடிதம் எழுதியிருக்கின்றது. அப்போதும் மனிதர் ஒன்றும் செய்யவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்?

1980களில் நிதி வருவாய் சம்பந்தப்பட்ட ஊழல்கள் மொத்தம் எட்டு மட்டுமே நடந்திருந்தன. மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் (1991 முதல் 1996 வரை) மட்டும் 26 ஊழல்கள் நடந்துள்ளன. அவர் பிரதமராக இருக்கும் இந்த ஆறரை ஆண்டுகளில் சிறு நாடுகளின் பட்ஜெட்டையே மிஞ்சுகின்ற அளவிற்கு ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. (சபா நக்வி, அவுட்லுக், நவம்பர் 29, 2010). இன்னும் என்னென்ன வரவிருக்கின்றதோ நமக்குத் தெரியாது.  அதாவது புதிய தாரளமயக் கொள்கைகள் அமலாக்கப்படும் காலத்தில்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் சில மாதங்கள் நிரா ராடியாவின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டு உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் நடந்தபோதும் சரி, நடந்து முடிந்து அரசாங்கம் அமைக்கப்பட்ட போதும் சரி ராடியா டேப்புகள் இருக்கின்றன என்பது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் தெரியும். முன்னர் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கும், பின்னர் நிதியமைச்சராக ஆன பிரனாப் முகர்ஜிக்கும் தெரியும். ஆ.ராசாதான் தொலை தொடர்புத் துறைக்கு அமைச்சராக வேண்டும் என்று டாடா உள்ளிட்ட முதலாளிகளும், அவர்களது சார்பாக நிரா ராடியாவும் லாபி செய்ததும் தெரியும். ஆனாலும் ராசாவை அந்த இலாக்காவின் அமைச்சராக ஆக்கியுள்ளார்கள். இத்தனைக்கும் பின்னர் இப்போது ராசா மட்டும்தான் குற்றவாளி என்பதோ அல்லது ராசா குற்றமே செய்யவில்லை என்பதோ காதில் பூ சுற்றும் வேலையாகும். பிரதமர் நல்லவர் என்பது முழுப் பூசணிக்காயைக் கையளவு சோற்றில் மறைக்க முயற்சிப்பதாகும்.

- அசோகன் முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It