34 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது. இப்புத்தகக் காட்சி சனவரி 4 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இதில் 650 அரங்குகள் பல்வேறு புகழ்பெற்ற பதிப்பகங்களால் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய புத்தகக் காட்சி, ஒவ்வோர் ஆண்டும் பொங்கலை ஒட்டி நடைபெறும் சென்னைப் புத்தகக் காட்சிதான். இந்தியாவின் முன்னணி பதிப்பகங்களின் வெளியீடுகளை ஒரே கூரையின் கீழ்க் கொண்டு வந்து கொடுக்கிறது சென்னைப் புத்தகக் காட்சி.

1977 ஆம் ஆண்டு, முதல் சென்னை புத்தகக் காட்சி தொடங்கப் பட்டது.  இது டிசம்பர் 14 முதல் 24 வரை நடைபெற்றது. இக்காட்சியில் 22 அரங்குகள் இடம்பெற்றன. கொஞ்சம் கொஞ்சமாக இது விரிவடைந்து இன்று 650 அரங்குகளைக் கொண்ட புத்தகக் காட்சியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்குத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) அரும்பணியே காரணம்.

தொலைக்காட்சியும், இணையத்தளமும் மனிதர்களைத் தனித்தனித் தீவுகளாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் மக்களிடையே  புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவிடவில்லை. வெறும் 22 அரங்குகளுடன் தொடங்கப்பட்டு இன்று ஏறத்தாழ 1 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சென்னைப் புத்தகக் காட்சியே இதற்குச் சான்று.

அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும். புத்தகம் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் என்றார் ஓர் அறிஞர். புத்தகங்கள் அறிவாயுதங்கள். தங்களுடைய இன வரலாற்றினைத் தெரிந்து கொள்ளவும், இனிவரும் உலகினை எதிர்கொள்ளவும், நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் வழங்க வேண்டிய முதல் முகாமையான சொத்து புத்தகங்கள்தான்.

புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, சிந்தனையைத் தூண்டும், அறிவை வளர்க்கும் நல்ல புத்தகங்களைத் தெரிவு செய்யக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அவர்களை அவையத்து முந்தியிருக்கச் செய்வது நம்முடைய கடமை.

புத்தகங்கள் அறிவாசான் அம்பேத்கரையும், பேரறிஞர் அண்ணாவையும், மார்க்சியப் பேராசான் கார்ல் மார்க்சையும் நமக்குப் புடம் போட்டுத்தந்தன. நம்முடைய பிள்ளைகளிலும், அம்பேத்கரும், அண்ணாவும், கார்ல் மார்க்சும் இருக்கக்கூடும்.

கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.குடும்பம் குடும்பமாகப் புத்தக்காட்சிக்குச் செல்வோம். புத்தகங்களில் முதலீடு செய்வோம், செய்வதற்கும் கற்றுக் கொடுப்போம்.

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துகள்!

Pin It