"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!” - என்ற நாமக்கல் கவிஞரின் சொற்றொடருக்கு சொந்தக்காரர்கள் நாம். ஆம்! அத்தகைய பெருமையை கொண்டவர்களாக இருந்தவர்கள் நாம். ஆனால், இன்று! அப்படியுள்ளோமா என்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அந்த சொற்றொடருக்கு தகுதி வாய்ந்தவர்களா என்று ஆராயப் புகுந்தோமானால் நிறைய சான்றுகள் நமக்கு கிடைக்கும். நிறைய தகுதிகளுடன் வாழ்ந்து இருக்கிறோம். நாகரிகத்தின் உச்சியிலும், பண்பாட்டின் உச்சியிலும் இருந்ததற்கான சான்றுகள் பல. வரலாற்று ஆய்வார்கள் பல சான்றுகள் வழங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இலக்கியங்களும் பல வழங்கியிருக்கிறது. ஆம்! அவை,

“வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேனே." - வள்ளலார்.

“யாதும் ஊரே , யாவரும் கேளீர்." - கணியன் பூங்குன்றனார்.

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்." - திருமூலர்.

“தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் உண்மை யான், இவ்வுலகம் உண்டு.”-புலவர்.

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!” - தாயுமானவர்.

“வந்தாரை வாழவைத்து சொந்தங்களை ஏங்க வைக்கும்" - கண்ணதாசன்.

“தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்

பண்ணன் சிறுகுடி”. அகம் 54.

“என் கடன் பணி செய்து கிடப்பதே!” -- திருநாவுக்கரசர்.

“எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணும்" என்ற எண்ணங்களுக்கு சொந்தக்காரர்கள் நாம்.

இவைகள் அனைத்தும் நாம் எவ்வளவு பண்பாட்டின் உச்சியில் இருந்தோம் என்பதை பறைச் சாற்றுகிறது.

இதில் “யாதும் ஊரே , யாவரும் கேளீர்." என்ற சொற்றொடர் நிப்பான் நாட்டு நாடாளுமன்றத்தின் முகப்பில் எழுதி வைத்துள்ளார்கள். 'யாதும் ஊரே , யாவரும் கேளீர்.' என்ற எண்ணம் மற்றவர்களையும் எவ்வளவுத் தாக்கம் செய்துள்ளது என்பதை அறியும் போது நம்முடைய எண்ண்ங்களின் பரந்த மனப்பான்மை பொதுமை நோக்கும் அறிய முடிகிறது.

மேலே கூறிய கூற்றுகள் நமக்கு உணர்த்துவது என்ன? நம் நினைவுகள் எல்லாம் ஒருவரைப் பற்றியோ, தன்னலமாகவோ இருக்காது, இருக்கவும் முடியாது.

எனவே தான், நாம், நமக்காக, நம் எண்ணங்களின் அடிப்படையாக கொண்டு, நம் பண்பாடு சீர்குலைவு ஏற்படாவண்ணம் ,நம் மண்ணுக்கான, நாம் யார் என்ற அடிப்படையில் நமக்காக ஏற்படுத்தப்பட்ட விழா, பொங்கல் விழா.

'விழா' என்ற சொல்லுக்கு, பொருள் உணர்த்தக் கூடியதாக அமைந்துள்ள விழா.

விழா என்ற சொல்லின் வரையறைக்கு உட்பட்டதாக உள்ளது.

'விழா' வின் வரையறையை அறிவோம்.

'விழா' என்பது விழைந்து செய்வது; விரும்பிச் செய்வது; நலன் கருதிச் செய்வது; அன்புடன் கூடுவது; பண்புடன் பழகுவது; மகிழ்ந்து கொண்டாடுவது; ஆடிப் பாடுவது; மனைவி மக்கள் சுற்றத்துடன் உண்பது; உறவினர்களுடன் உறவாடுவது; நண்பர்களுடன் நட்பாடுவது; புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் தருவது; ஊக்கம் ஊட்டுவது; ஆக்கம் அளிப்பது; வாழ்ந்த வரலாற்றை நினைவு கூர்வது; வாழ்கின்ற வாழ்வை ஆராய்வது; எதிகால வாழ்வுக்குத் திட்டம் தீட்டுவது; அம்மட்டோ! விழா, ஓர் இனமக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், வரலாறு, அரசியல், குமுகாயவியல் முதலியவற்றைப் முரசொலிப்பதாக அமைதல் வேண்டும். அந்த மக்களுக்கு உரிமை உணர்வையும், விடுதலை வேட்கையையும் உணர்த்துவதாக இருத்தல் வேண்டும்' - பாவாணரின் இலக்கணத்திற்குட்பட்டு ஏற்படுத்தப்பட்ட விழா தான் பொங்கல் விழா.

நாம் யார் என்று ஆராய்ச்சியின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது தான் இவ்விழா.

நாம் யார்?

'நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சாப்பிடுமாறு இறைவன் நமக்கு விதித்திருக்கிறான்' என்ற பைபிள் சொற்றொடரின்படி நாம் அனைவரும் வேளாண் குடிகள் ஆவோம்.

எனவே, நமக்கு ஏற்ற விழா இவ்விழா.

'வேளாண் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்' - (திரிகடுகம்), என்ற சொற்கோவைக்கு கட்டியம் கூறும் விழா பொங்கல் விழா.

இவ் விழா, நம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உணர்த்தும் விழாவாக அமைந்திருந்தாலும் பண்பாட்டை மிகவும் தூக்கிப் பிடிக்கிறது.

இக் கருத்தை நோக்கும்பொழுது நாகரிகம், பண்பாடு வெவ்வேறா, ஒன்றில்லையா எனக் கேட்க தோன்றுகிறது. ஆம்.

சுருங்கச் சொல்லின், உள்ளத்தின் செம்மை பண்பாடும், உள்ளத்திற்குப் புறம்பான உணவு உடை உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும் ஆகும். நாகரிகத்தினும் , உயர்ந்த நிலையே பண்பாடாயினும் ,நாகரிகமின்றியும் பண்பாடுண்டு என அறிய வேண்டும்.

இவ்வளவு சிறப்புகளையும் உள்ளடக்கிய விழா பொங்கல் விழா. அதை நாம் ஏன், எப்படி கொண்டாடுகிறோம் என்று அறிவோம். அதைக் கொண்டு மேலே கூறியவற்றிலிருந்து நாம் விலகியுள்ளோமா இல்லையா என அறிய முடியும்.

பொங்கல் விழா ஒரு தொடர்விழா. நான்கு நாட்கள் அடங்கிய விழா. பொங்கல் விழா என்று ஒட்டு மொத்தமாக கூறினாலும், ஒவ்வொரு நாளையும் வெவ்வேறு பெயர்களுடன் அழைக்கப்படுகிறது.

முதல் நாள், போக்கி திருநாள் என்று அழைக்கப்படுகிறது. 'போக்கி' என்பது போக்குதல் என்ற பொருளில் கொள்ளப்பட்டால், தூய்மை செய்தல் ஆகும். ஆம், பொங்கலுக்கு முந்தைய நாள், நம் புற அழுக்குகளை, பழையவற்றை அகற்றி, அதாவது பழைய துணிகள் , தேவையற்றப் பொருள்களை அகற்றி வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மைப் படுத்துவதும். மேலும், மனதிலுள்ள அழுக்குகளையும் நீக்கி இனி ஒரு புதிய சூளுரைக் கொள்ள செய்யவும் எடுக்கப்படும் விழாவாகும். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற சொல்லடைக்கு பொருந்துவதாகயுள்ளது.

இதே போக்கி நாளை, போகி நாள் என்றும் அழைத்தல் சரியே என்கிறார் கவிஞர் கண்ணதாசன். போகி என்ற சொல் 'போகம்' என்ற சொல்லிருந்து வந்தது என்று கூறுகிறார். போகம் என்றால் விளைச்சல் எனப்படும். விளைச்சலுக்குரியவன், போகத்துக்குரியவன் என்பார்கள். போகத்துக்குரியவர்கள் நிலச்சுவான்தார்கள் . அதனால்தான் அந்த விழா நிலம் உள்ளவர்களின் வீட்டில் மட்டும் தடபுடலாக இருக்கும். போகத்துக்குரியவன் விழா , போகி விழா என்பார்.

எந்த விளக்கமாக இருந்தாலும் நம் பண்பாட்டிற்கு உகந்த வகையில் அமைந்துள்ள விழாவாகும்.

அடுத்த நாள், தை முதல் நாள். அந்த நாள் பொங்கல் திருநாள் எனக் கொண்டாடுகிறோம். வேளாளண் ஆகிய நமக்கு மறைமுகமாக துணைபுரியும் கதிரவனுக்கு நன்றி மறவாமல் கொண்டாடும் திருநாள். அன்றைய நாள், புதுப் பானையில், புது நெல்லிட்டு , புது மஞ்சள் கட்டி, புதுக் கரும்பு வைத்து, புது அடுப்பில் திறந்த வெளியில், கதிரவனை நோக்கி பொங்கலிட்டு கதிரவனுக்கு தன் நன்றியை கூறிடும் திருவிழா. வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்குரிய விழாவாகும்.

இதே நாளை 500 புலவர்கள், மறைமலையடிகள் அவர்கள் தலைமையில் கூடி தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு பிறப்பு என்று முடிவு செய்தனர். அதே நேரத்தில் இத்தொடர் ஆண்டை திருவள்ளுவர் ஆண்டு என பெயரிட்டனர். இப்போதைய ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் தற்பொழுதைய திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும் என்றும் அறுதியிட்டனர். தமிழர்களாகிய நாம் இத் திருநாளை தமிழர்களின் புத்தாண்டு பிறப்பாக கொண்டாட வேண்டும். “தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்" என்ற முதுமொழி இதை அடிப்படையாக கொண்டு உருவானதுதான்.

மூன்றாம் நாள், தை இரண்டாம் நாள். தன்னுடனிருந்து உழவுக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையிலும், உயிரற்ற பொருள்களான மண்வெட்டி, களைகொத்தி, கடபாரை போன்ற பொருட்களையும் கொண்டு கொண்டாடப்படும் திருவிழா மாட்டுப் பொங்கல் திருநாள்.

அடுத்த நாள், காணும் பொங்கல் திருநாள் அல்லது கன்னிப் பொங்கல் திருநாள் என்று கூறுகிறார்கள். உழவர்கள் தன் சுற்றத்தாருடனும், உற்றாருடனும் கூடிக் குலாவி, மகிழ்ச்சியுடன் பேசி பழகி மகிழ்ச்சியாக இருக்கவும், வருங்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும், எதை நோக்கிச் செல்லவேண்டும் என்ற திட்டமிடலுக்காவும் கொண்டாடப்படும் திருநாள் காணும் பொங்கல் திருநாள். உணவைப் பகிர்ந்துக் கொள்ளும், நிலமும் இல்லாத, விவசாயமும் செய்யாத பொது மக்களின் விழா என்றும் கவிஞர் கண்ணதாசன் செப்புகிறார். மற்றொரு கரணியமும் கூறப்படுகிறது. அதாவது, கன்னியர்கள் தன் உள்ளக்கிடங்கை கூறி பொங்கலிட்டு வணங்கும் திருநாள் என்பதால் இதை கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் காரணப் பெயர்களைக் கொண்டு நடத்தும் விழாவை நம் குடும்ப விழாவாக மட்டும் நடத்தப்படாமல் நம் நாட்டின் தேசிய விழாவாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன்.

விழா என்பதற்கான வரையறைகளை உள்ளடக்கிய விழாவாக எந்தவிதத்திலும் மாறாத விழா, இயற்கையோடு இழைந்து இயற்கையை வணங்கும் பண்பு தமிழர் பண்பு என்று பறைசாற்ற கொண்டாடும் திருநாள், பொங்கல் திருநாள்.

இனி , இப் பொங்கல் திருநாள் முதல் நாம் பொங்கல் விழாவையும், தமிழனின் புத்தாண்டு பிறப்பாக தை முதல் நாளையும் தமிழராகிய நாம் அனைவரும் கொண்டாட சூளுரைக் கொள்வோமாக!

கட்சி என்ற காட்சிகளைக் கலைத்து, சாதி என்ற சனியனை சாய்த்து, மதம் என்ற மாச்சரியங்களை மாற்றி அனைவரும் பொங்கல் விழா கொண்டாடுவதன் மூலம் தமிழர் என்ற ஓர்மை உணர்வை உலகுக்கு பறைச் சாற்றுவோம். நம் மீது போர்த்தப்பட்டுள்ள கட்சி, சாதி, மதம் என்ற போர்வையை நீக்கி, என்றும் தமிழர்கள் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.

இத் திருநாளில் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

பா. சந்திரசேகரன்,

பட்டதாரி ஆசிரியர் (கணிதம்),

3, மறைமலை அடிகள் வீதி ,

சீனிவாசநகர் & அஞ்சல் ,

பீர்க்கன்காரணை ,

சென்னை 600 063.

Pin It