ஏப்ரல் மாதம் 1967-ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள நக்ஸல்பாரி என்கிற கிராமத்தில் இந்தப் பிரச்சினை உருவாகியது. நிலச்சுவான்தார்களின் கொடுமை - அட்டூழியங்களுக்கு எதிரான ஓர் இயக்கம் அது. மேற்கு வங்கத்தில் உரிய முறையில் நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் அந்த இயக்கம் அடங்கி விட்ட போதிலும் மற்ற பகுதிகளுக்கு அந்த இயக்கம் பரவத் தொடங்கியது. தற்சமயம் (2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம்) அந்த இயக்கம் நாட்டின் 23 மாநிலங்களில் அமைந்துள்ள 250 மாவட்டங்களில் 2,000 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளுக்குப் பரவி யுள்ளது. இப்பகுதிகளின் பரப்பளவு 92,000 சதுர கிலோமீட்டர் - அதாவது, நாட்டின் மொத்தப் பரப்பில் 40 விழுக்காடு ஆகும்.) மாவோயிஸ்டு களிடம் 20,000 ஆயுதமேந்திய போராளிகளும் 50,000 உதவிப் போராளிகளும் உள்ளனர். இதே காலகட்டத்தில் (1967 முதல் 2010 வரை) ஒட்டு மொத்தமாக மாவோயிசத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் போலீஸ் பட்ஜெட் 600 பங்கு அதிகரித்துள்ள போதிலும் மாவோயிஸம் பரவிக்கொண்டுதான் வந்துள்ளது.

maoists_3702010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள தாந்தேவாடா மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் மத்திய ரிஸர்வ் காவல் படைக் காவலர்கள் 76 பேர் மாவோயிஸ்டு களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மே மாதம் மற்றொரு சமயம் 36 காவலர்கள் மீண்டும் கொல்லப் பட்டனர். இப்போலீஸ் படுகொலைகள் காரணமாக மாவோயிஸ்ட் பிரச்சினை நாடு முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினையைப் பற்றி நாட்டின் நாளேடுகளில் பிரசுரமாகியுள்ள வாசகர் கடிதங்களிலிருந்து தெரிவது என்னவென்றால், பெரும்பான்மையான வாசகர்கள் அரசாங்கம் உடனடியாக மாவோயிஸ்டுகளை ஒடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இதுபோன்ற இன்னும் பல சம்பவங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்கம் அக்காவலர்களின் குடும்பங்களுக்குப் பெருமளவில் இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளதுடன் அவர்கள் குடும்பங்களிலிருந்து ஒரு நபருக்கு அரசுப் பணி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கைதான்.

ஆனால் மனித உயிர் விலைமதிக்க முடியாத தாகும். எவ்வளவு பெரிய நஷ்ட ஈட்டுத் தொகையும் இறந்துவிட்ட கணவனையும் வாழ்க்கைத் துணை யையும் விதவைக்கு மீட்டுத் தராது. அனாதையாகி விட்ட குழந்தைகளுக்கு அப்பா கிடைக்கமாட்டார். மகனை இழந்த தாய் தந்தையருக்கு மாண்டு போன மகன் மீண்டு வர மாட்டான்.

இதே காலகட்டத்தில் நூற்றுக்கணக்கில் மாவோ யிஸ்டுகளும் பழங்குடி மக்களும் கொல்லப்பட்டு உள்ளனர். சாமானிய மனிதன் மற்றும் அரசாங்கத்தின் பார்வையில் மாவோயிஸ்டுகள் நாட்டின் ஆளுமைக்கு எதிரிகள் - அவர்கள் கொன்று குவிக்கப்பட வேண்டியவர்கள். பழங்குடி மக்களை நாம் பார்த்ததில்லை - அவர்கள் யார் என்றே நமக்குத் தெரியாது. ஆகவே அவர்களது சாவு - ஒரு புள்ளி விவரம். அவ்வளவுதான்.

காந்தீயக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு உள்ள எனக்கு - எல்லா மனித உயிர்களுமே விலை மதிக்க முடியாதவைதான் - காவலர்களானாலும் சரி, மாவோயிஸ்டுகளானாலும் சரி, பழங்குடி மக்களானாலும் சரி.

இவ்வாறான வன்முறையையும், மனித உயிர்கள் பறிக்கப்படுவதையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏதாவது மார்க்கம் இருக்கிறதா? இக் கேள்விக்கு நேரடியாக விடை தருவது சற்றுக் கடினமானது மற்றும் விவாதத்திற்குரியது. அது பற்றிய விவாதத்தைத் துவங்குவதற்கு முன்பாக இந்தப் பிரச்சினையைச் சற்றுப் புரிந்துகொள்ள முயல்வோம்.

திட்டக் கமிஷன் நியமித்த நிபுணர்குழு

கடந்த 43 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் பிரச் சினை எந்த அளவிற்குப் பரவியுள்ளது என்பதை முன்பே விவரித்தோம். காவல்துறையின் உதவியுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்று மாநில - மைய அரசுகள் தோற்றுவிட்டன. இந்தச் சூழலில்தான் இப்பிரச்சினை பற்றி ஆய்வு செய் வதற்காக 2006-ஆம் ஆண்டில் திட்டக் கமிஷன் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அதிருப்தியும் அமைதியற்ற சூழலும் நிலவுவதற்கு என்ன காரணம்? காட்டுப் பகுதிகளில் மக்கள் ஏன் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற நேர்கிறது? அவர்கள் எப்படி எல்லாம் சுரண்டப்படுகின்றனர்? அவர்களது நில உரிமைப் பிரச்சினைகள் போன்ற கூறுகளை நிபுணர்குழு ஆய்வு செய்யுமாறு பணிக்கப்பட்டது. மேலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பஞ்சாயத்து சட்டத்தை எவ்வாறு அமல்படுத்த இயலும் என்பது பற்றியும் நிபுணர்குழு ஆய்வு செய்யும்.

பதினேழு நபர்கள் கொண்ட இக்குழுவிற்கு ஓய்வுபெற்ற இந்திய அரசுப் பணி அதிகாரியாகிய திரு.டி.பந்தோபாத்யாயா அவர்கள் தலைமை ஏற்றார். ஏனைய உறுப்பினர்களில் ஒருவர் பீகார் மாநிலத்தின் ஓய்வுபெற்ற முதன்மைச் செயலர். பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஓய்வு பெற்ற காவல்துறை டைரக்டர் ஜெனரல்கள். புலனாய்வு அமைப்பின் (இண்டலிஜென்ஸ் பீரோ) ஓய்வுபெற்ற இயக்குநர் (நாட்டிலேயே காவல் துறையின் மிக உயர்ந்த பதவி இது). பல்கலைக் கழகங்கள் நிதி கமிஷனின் தலைவர் திரு.சுகதேவ் தோரட், ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் ஆதிவாசிகள் துறையின் ஓய்வுபெற்ற கமிஷனர் பி.டி.சர்மா மற்றும் பல்வேறு துறைகளின் புகழ் பெற்ற வல்லுநர்கள் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்தனர்.

இக்குழுவிற்கு ஆய்விற்காகத் தரப்பட்ட விஷயங்கள் (டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ்):

1.            பழங்குடியினர் தாங்கள் தனிமைப்படுத்தப் படுவதாக நினைப்பதற்கான காரணங்கள். அவர் களுக்கெதிரான இன்னல்கள், சுரண்டல்கள், காட்டுப் பகுதிகளில் அவர்களது உரிமைகள், அவர்களிட மிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள், அங்கு நிலவும் சந்தை நிலவரம்.

2.            பழங்குடி மக்களின் மிகவும் பின்தங்கிய நிலைமைக்கான காரணங்கள், அவர்களது வாழ்க்கைத் தரத்தை நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு இணையாக உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்திட்டம்.

3.            அமைதியற்ற சூழலில் வசிக்கும் இம் மக்களுக்கு அமைதியான சூழலையும், கௌர வத்துடன் வாழ்வதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்.

4.            அங்குள்ள நிர்வாக அமைப்பினை மேம் படுத்தவும் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் நலத் திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்று அடைவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்.

5.            குறிப்பிட்ட காலத்திற்குள் அம்மக்களது வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தவும், சுகாதார வசதி மற்றும் சத்தான உணவு கிடைப்பதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் - கூடவே இவ்வாறான வசதிகளை அவர்கள் பெறுவதற்காக மைய மற்றும் மாநில அரசுகளில் சட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்.

6.            பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டங்களை அமல்படுத்து வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக் கைகள் - கூடவே அம்மக்களைப் பஞ்சாயத்து ஆட்சியில் பங்கேற்கச் செய்து வளர்ச்சிப் பணி களை அவர்கள் வாயிலாகவே அமல்படுத்துவதற் கான வழிமுறைகள்.

நிபுணர் குழு அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:

குழுவின் அறிக்கை 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. 87 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறப்பான அறிக்கையை நான் முற்றிலுமாகப் படித்துப் பார்த்தேன். அறிக்கையின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.

1. பாதுகாப்புத் தரும் சட்டங்களை உரிய முறையில் அமல்படுத்துதல்:

ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலவும் அமைதி யின்மை மற்றும் அவலநிலையைக் களையும் நோக்கத்துடன் அரசாங்கம் மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது; முறையே, பஞ்சாயத்து சட்டங் களை ஷெட்யூல்ட் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமல்படுத்துவதற்கான சட்டம், தேசீய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், ஷெட்யூல்ட் பழங்குடியினர் மற்றும் பரம்பரையாகக் காடுகளில் வசிக்கும் மக்களின் வன உரிமைச் சட்டம். இவற்றைத் தவிர பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுபற்றிய கொள்கை. இம்மக்கள் பல்வேறு சக்திகளாலும் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் நிர்ணயச் சட்டத்தில் தரப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து பாதுகாப்புத் தரும் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்.

2. நிலம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்:

கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காரணங் களால் பழங்குடி மக்களுக்குச் சொந்தமான நிலம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. அந்த நிலங்களைப் பழங்குடிகள் அல்லாதவர்கள் வாங்கு வதையோ, அனுபவிப்பதையோ சட்டம் அனுமதிக்க வில்லை. இருப்பினும், இச்சட்டத்தில் உள்ள குறை பாடுகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக நிலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தில் உள்ள குறைபாடுகளை அகற்றி சட்டத்தை உரிய முறையில் அமல்படுத்து வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பழங்குடி மக்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் மேல் முறையீடுகள் செய்யப்பட வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு பழங்குடி மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.

3. நிலத்தைக் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீண்டும் குடியமர்த்துதல் :

பழங்குடி மக்கள் தங்களது நிலங்களை இழந்து அகதிகளாக மாறியதற்கு அரசின் கட்டுப்பாடற்ற நிலங்களைக் கையகப்படுத்தும் செயல்களே முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறாக நிலங்களைக் கையகப்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்கள் நலன் அல்லது நாட்டின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது என்கிற சூழலைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்கும் நிலங்கள் கையகப்படுத்தப்படக் கூடாது.

4. வாழ்வாதாரங்களின் பாதுகாப்பு :

தேசீய ஊரக வேலை உறுதித் திட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கூடவே நீர் மேலாண்மைத் திட்டங் களையும் அமல்படுத்த வேண்டும். விவசாயம் தவிர, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தோட்டக்கலை, பட்டுப்பூச்சி வளர்ப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இப் பணிகளைச் சரியான முறையில் செயல்படுத்து வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள், பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது சில கிராமங்களடங்கிய பகுதிகளில் செய்யப்பட வேண்டும்.

4(ய) வன்முறை வாயிலாகவே அரசாங்கத்தைக் கைப்பற்றுவோம் என்கிற மாவோயிஸ்டுகளின் லட்சியத்தைப் பற்றி விமர்சிக்கும் இந்த அறிக்கை அவர்களது நோக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது. வறுமை ஒழிப்பு, இழந்துவிட்ட நிலங்களையும் கௌரவத்தையும் பழங்குடி மக்களுக்கு மீட்டுத் தருவதுதான் மாவோயிஸ்டுகளின் திட்டம். நாட்டின் பன்னிரண்டு மாநிலங்களில் அமைந்துள்ள 460 காவல் நிலையங்களின் எல்லைகளுக்குட்பட்ட ஏறத்தாழ 125 மாவட்டங்களில் மாவோயிஸ்டு களின் ஆதிக்கம் பரவியுள்ளதாக உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இந்த மாவட்டங்களின் அடிப்படைப் பிரச்சினை வறுமை ஒழிப்புக்கான அரசின் திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படாததும், நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளும்தான். இதன் விளைவாக கோபத்தில் உள்ள பழங்குடி மக்களைச் சமாதானப்படுத்துவதற்கான வழிமுறை அவர்களும் இந்திய சமுதாயத்தின் ஏனைய மக்களைப் போன்ற வர்கள்தாம்; காட்சிப் பொருள் அல்ல என்கிற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்ட கமிஷனும் மாநில அரசு, மாவட்ட, வட்டார, பஞ்சாயத்து நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் பழங்குடி மக்களுக்கு முழுமையாகக் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

4(b) காணாமல் போய்விட்ட சமூகப் பொது வளங்கள் : பழங்குடி ஏழை மக்களுக்கு ஓரளவுக்கு வருவாய் அளித்து வந்த சமூகப் பொது வளங்கள் காணமால் போய்விட்டது பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலங்களை அபகரிக்கும் மாஃபியா கும்பல் இவ்வாறான பொது வளங் களையும் (குளம், குட்டை, மேய்ச்சல் நிலம் முதலியன) அபகரித்துவிட்டது. இதன் காரண மாகவே பெரும்பாலான பொது வளங்கள் காணாமல் போயின. எஞ்சியுள்ளவை மக்களுக்குப் பயன்தரக் கூடியவை அல்ல. இவ்வளங்களை மக்களுக்கு மீட்டுத் தருவதற்குத் திட்ட கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. அடிப்படை சமூக நல சேவைகளை எல்லோரும் பெற வேண்டும்

ஆரம்பக் கல்விக்கான கட்டமைப்புகள் வலுப் படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கூடவே ஒவ்வொரு கிராமத்திலுமோ அல்லது பத்து கிராமங்களுக்கு ஒன்று என்ற அளவிலோ ஒரு தொழில் பயிற்சிப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்குமிட (ஹாஸ்டல்) வசதியுடன் கூடிய பள்ளி - ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு ஒன்றுமாக அமைக்கப்பட வேண்டும்.

பொது சுகாதார மற்றும் சத்துணவு சேவைக் காக ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்பட வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளில் இயங்கும் மையங்களின் தரத்திற்குச் சமமான தரம் கொண்ட வையாக இம் மையங்களும் திகழ வேண்டும் - மலைப் பகுதிகளில் 3000 மக்களுக்கு ஒரு மையமும், சமவெளிப் பகுதிகளில் 5000 மக்களுக்கு ஒரு மையமும் இப் பழங்குடிகள் வாழும் மாவட்டங்களில் அமைக்கப் படவேண்டும். கூடவே சமுதாய சுகாதார மையங் களும் அமைக்கப்பட வேண்டும்.

கிராமங்களில் மின்சாரம் வழங்குகிறோம் என்கிற பெயரில் மின்கம்பங்களை மட்டும் நட்டால் போதாது; வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் வீடுகளுக்கு மின்சாரமும் வழங்கப்பட வேண்டும்.

நான் இங்கு நிபுணர்குழு அறிக்கையின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிடவில்லை; சில பகுதிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இந்த அறிக்கை தரும் அறிவுரைகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

“நக்சலைட் இயக்கம்” காரணமாக விளையும் வன்முறைகளை எதிர்கொள்வதில் மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. அரசு நலத்திட்டங்களின் பயன்கள் பழங்குடி மக்களைச் சென்றடையவில்லை என்பதையும் மக்களின் பல்வேறு குறைகள் தீர்க்கப் படாமல் உள்ளன என்பதையும் அரசு உணர்ந்திருந்தும் கூட நாட்டின் பாதுகாப்பிற்கு நக்ஸலைட்டுகளால் விளையக்கூடிய அபாயத்தைப் பற்றித் தான் அரசு சிந்திக்கிறது. அந்த வன்முறையைக் கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் முக்கியம் என்பது அரசின் நிலை. வளர்ச்சிப் பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் முன்னுரிமை பெறுகின்றன. நக்சலைட் வன்முறை எந்தச் சூழலில் உருவாகியது என்பது பற்றிச் சிந்திக்க அரசு தயாரில்லை. அவர்களை ஒடுக்குவதற்காகக் காவல் துறையினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பழங்குடி மக்கள் பாதிக்கப்படு கின்றனர் என்பது பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக, சில பழங்குடி மக்களைக் கொண்டே நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களுக்குப் பயிற்சியும் ஆயுதங் களும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பயிற்சி பெற்ற பழங்குடி மக்கள் நக்சலைட் மட்டுமின்றி அவர்களது ஆதிக்கத்தில் உள்ள பழங்குடி மக்கள் மீதும் ஏவிவிடப்படுகின்றனர். அதாவது, பழங்குடி மக்களே தங்களுக்குள் போராடி இன அழிவுப் பாதையில் செல்வதற்கான திட்டத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து விட்டனர்.

பழங்குடி மக்களைத் தனிமைப்படுத்துவதற்கும் ஊடகங்களையும் சமூக ஆர்வலர்களையும் அம் மக்களை அணுகமுடியாதபடி தடைகளை ஏற்படுத்துவதற்கும் நிபுணர்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அதே போல் அம்மக்களுடனோ, நக்சலைட்டு களுடனோ தொடர்பு கொள்பவர்கள், அங்குள்ள நிலவரம் பற்றி எழுதுபவர்களைத் தண்டிப்பதும் தவறு என்கிறது நிபுணர்குழு. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது மட்டுமல்ல; தவறான பின் விளைவு களைத் தோற்றுவிக்கக் கூடியதாகும். இந்த நிலை மையை மாற்றி ஊடகங்களும் ஆர்வலர்களும்

பழங்குடியினர் மற்றும் நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு கொள்வதை ஆதரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் அங்குள்ள நிலவரம் பற்றி நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கும் என்கிறது நிபுணர் குழு. அவ்வாறான தகவல்கள் அரசிற்கும் தனது கொள்கைகள்பற்றி நிர்ணயம் செய்ய உதவியாக இருக்கும்.

மேலும் அவர்களின் ஆதரவு இன்றி நக்சல்களின் பிடியைத் தளர்த்திவிட இயலாது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் உருப்படியாக எதுவும் செய்ய வில்லை என்று நிபுணர்குழு தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது. முக்கியமான அரசியல் கட்சிகள் இவ்விஷயத்தில் தங்களது பொறுப்பினைத் தட்டிக் கழித்துவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

பச்சை வேட்டை நடவடிக்கை மாறுபட்ட குரல்கள் :

சமீப காலத்தில் (மார்ச் 2010) இந்திய அரசின் உள்துறை அமைச்சர் “மாவோயிஸ்டுகளை மூன்று ஆண்டுகளுக்குள் ஒழித்துவிடுவோம்” என்று கூறினார். இதற்குப் பின்புதான் ஏப்ரல் மாதம் தாந்தேவாடாவில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சார்ந்த 73 காவலர்கள் நக்சலைட்டுகளால் கொல்லப் பட்டனர். இச்சம்பவம், நடந்த சில நாட்களுக் குள்ளாகவே (14-4-2010 அன்று) மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளருமான திரு. திக் விஜய் சிங் அவர்கள் எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களுக்குப் பகிரங்கமாகவே சவால் விடுத்துள்ளார். “பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று சிதம்பரம் அவர்களுக்குத் தெரியவில்லை. நக்சலைட் பிரச் சினையைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் சிதம்பரம் அவர்கள் - காவல் துறையினரது நடவடிக்கை அங்கு வசிக்கும் பழங்குடி மக்களையும் பாதிக்கும் என்பதை உணரவில்லை.

“மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் படவேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் கட்சியின் இதழாகிய ‘சந்தேஷில்’ எழுதியுள்ளார் (பார்வை: ஹிந்து நாளேடு 14-5-2010).

டெல்லியில் 13-5-2010 அன்று நடந்த இந்தியத் தொழிலதிபர்களின் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய சிதம்பரம் அவர்கள் “மக்களது நம்பிக்கையும் ஒத்துழைப்பும் இல்லாமல் நக்சலைட் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாது” என்று கூறியுள்ளார் (ஹிந்து நாளேடு 14-5-2010).

இரண்டு மூன்று நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் விடுத்த ஓர் அறிக்கையில் நக்சலைட் பிரச்சினைக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசின் நக்சலைட் கொள்கை பற்றி 13-5-2010 அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் தலை யங்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா மாவட்டத்தில் 17-4-2010 அன்று 12 விசேஷ காவலர்கள் உள்பட 36 நபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பயனற்றுப் போனதைத்தான் காட்டுகிறது. இதன் காரணமாக பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது. இவ்விஷயத்தில் அரசாங் கத்தின் கொள்கை என்ன என்று புரியவில்லை. அமைச்சரின் மாறுபட்ட பேச்சுக்கள் கேலிக் கூத்தாக உள்ளன.”

சமீப காலத்தில் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் அரசாங்கம் நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.

உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கை பற்றி :

“மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகச் செயல் படும் நபர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரப் பட்டு அவர்கள் பத்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று உள்துறை அமைச்சகம் 6-5-2010 அன்று ஓர் அச்சுறுத்தல் அறிக்கையை வெளியிட்டது. “அவ்வாறு ஆதரவாகச் செயல்படும் நபர்களில் பல வி.ஐ.பி.க்கள் உள்ளனர். உதாரணத்திற்கு மம்தாபானர்ஜி மற்றும் அவரது கட்சிப் பெருந் தலைகள், திரு.மணிசங்கர அய்யர், திரு. திக்விஜய்சிங் மற்றும் ராகுல் காந்தி அவர்கள்” என்று 18-5-2010 தேசிய ஹிந்து - பிசினஸ்லைன் நாளேட்டின் தலையங்கத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதன்மைச் செயலர் திரு.பி.எஸ்.ராகவன் அவர்கள் கூறியுள்ளார்.

“நாட்டின் விடுதலைக்காக இந்தியர்கள் போராடிய காலத்தில் கூட உலகின் மாபெரும் வல்லரசாகத் திகழ்ந்த இங்கிலாந்து நாட்டின் இந்திய காலனி அரசு இப்படி ஒரு பயங்கரமான அறிக்கையை வெளியிடவில்லை” என்றும் திரு. ராகவன் கூறுகிறார்.

இப்பிரச்சினையைச் சற்றுக் கனிவுடன் அணுகி எவ்வித நிபந்தனையுமின்றி மாவோயிஸ்டுகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும்படி திரு.ராகவன் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “இப்பேச்சு வார்த்தைகள் - உடனடியாகச் சிறிது காலத்திற்கு அமைதியான சூழலை உருவாக்கும் - நீண்ட காலத்திற்குக் கூட அமைதி உருவாவதற்கு வாய்ப்பு உண்டு” என்றும் அவர் கூறுகிறார்.

பிரச்சினையின் தீர்வுக்கு நாம் என்ன செய்யலாம்?

நிபந்தனைகளின்றி நக்சலைட்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வரவேற்பதற்குரிய நடவடிக்கைதான். மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் சென்றடையவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மாவோயிஸ்டுகள் அரசுப் பணிகளை நடத்த அனுமதிப்பதில்லை என்கிற அரசாங்கத்தின் குற்றச்சாட்டிலும் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது. அதை விட்டு விடுவோம். நக்சலைட்டுகளின் ஆதிக்கப்பகுதியை ஒட்டி - அவர்களது ஆதிக்கத்தில் இல்லாத பகுதிகளில் கல்வி சுகாதாரம் சத்துணவுத் திட்டங்களின் பயன்கள் பழங்குடி மக்களுக்குக் கிடைக்கின்றன என்று அரசால் கூறமுடியுமா? நிச்சயமாக முடியாது. அங்கு நிலவும் வரையறையற்ற லஞ்ச ஊழல் காரணமாக அரசு ஊழியர்களும் குத்தகைக்காரர்களும் உள்ளூர்ப் பெருந்தலைகளும் பணத்தைச் சாப்பிட்டு ஏப்பமிட்டு விடுவதால் மக்களுக்கு மிகவும் குறைந்த அளவிலேயே பயன்கள் கிடைக்கின்றன. இந்தச் சூழலில் மாவோயிஸ்டுகளை எப்படிக் குறை கூற முடியும்?

அரசு உறுதியுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும். இன்றளவும் அரசில் நன்னடத்தையும் திறமையும் வாய்ந்த ஊழியர்கள் உள்ளனர். அந்த மாதிரியான ஊழியர்களை மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் பணியமர்த்தி அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அப்பகுதிகளில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களையும் நலப் பணிகளில் ஈடுபடுத்தலாம். இவ்வாறு செய்வதன் வாயிலாக மாவோயிஸ்ட் ஆதிக்கத்திலுள்ள பகுதிகளுக்குள்ளும் திட்டங்களை எடுத்துச் செல்வதற்கான சூழல் உருவாகும். அப்பகுதிகளுக்கும் சில அரசு சாரா நிறுவனங்களின் வாயிலாக மாவோயிஸ்டுகளின் ஒத்துழைப்புடன் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. இது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் முடியாத காரியம் என்று கூறுவதற்கில்லை.

இதுபோன்ற முற்போக்கான நடவடிக்கைகளை அரசு கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். இக்கட்டுரையின் முற்பகுதியில் நான் குறிப்பிட்டு உள்ளதுபோல் மனிதனின் உயிர் விலைமதிக்க முடியாதது. அது போலீசானாலும் சரி, பழங்குடி மக்களானாலும் சரி, மாவோயிஸ்ட்டானாலும் சரி. “வன்முறையைக் கைவிட்டு அமைதியான வழியில் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்” என்கிற உறுதி மொழியை இப்போது நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

Pin It