விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மீண்டும் ஒருமுறை நீட்டித்திருக்கிறது இந்திய அரசு. 1991 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையைக் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி முதல் மேலும் இரண்டாண்டுகள் நீட்டித்திருக்கிறது.

“விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டனர். அதன் முன்னணித் தலைவர் கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டனர். ஆயிரக்கணக்கான விடுதலைப் புலி வீரர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுவிட்டனர். இந்தியா, சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற உலக நாடுக ளின் உதவியோடு விடுதலைப்புலிகள் இயக்கமே இல்லாமல் செய்துவிட்டோம்” என்கிறது இலங் கை அரசு. தமிழ் மக்களை மட்டுமன்றி, தமிழ் நிலங்களையும் அழிக்கும் வகையில் இப்போது அங்கே சிங்களக் குடியேற்றம் தொடங்கி யுள்ளது

prabakaran_400ஆனால் விடுதலைப் புலிகளின் செயல் பாடுகள் அறவே இல்லாத இந்தியாவில் மட்டும், அந்த இயக்கத்திற்குத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு ‘வேடிக்கை விநோத வினையாட்டு’ என்று சிறிதளவே செய்தி அறிந்துள்ளவர்களும் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள நாடாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் ராஜபக்சேவுக்கு இந்தியா செய்துவருகின்ற உதவிகளில் இதுவும் ஒன்று. விடுதலைப் புலிகள் மீது இந்தியா தடை விதித்த காரணத்தால், உலக நாடுகள் ஒவ்வொன்றாக அந்த இயக்கத்தைத் தடை செய்யத் தொடங்கின. இதன் விளைவு, அந்நாடுகளில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எந்த நாட்டைவிட்டு உயிரைக்காத்துக் கொள்ள ஓடிவந்தார்களோ, அதே கொலைக்களத்திற்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இராஜபக்சேயின் இனஅழிப்பு வேலையை இந்த விதத்திலும் இந்தியா இலகுவாக்கித் தருகிறது. இல்லாவிட்டால், இல்லை என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன் ?

இலங்கை அரசின் நோக்கமும், இந்தியா வின் நோக்கமும் ஏறத்தாழ ஒரே மாதிரியானது தான். தமிழின விரோதப் போக்கு இரண்டு நாடுகளின் தாரக மந்திரமாக இருக்கிறது. எனவேதான் நாடுகடந்த தமிழீழ அரசைப் பயங்கரவாத அமைப்பு என்று தடைவிதித்து, கடல் கடந்தும் ஈழத்தமிழர்களை அழிக்கத் துடிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை, உலக நாடுகள் பலவும் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் ராஜபக்சேவை, தமிழர்க ளின் வாழ்வோடு விளையாடிய ராஜபக்சேவை காமன்வெல்த் போட்டியை முடித்து வைக்க அழைத்து வந்தது மத்திய அரசு. இந்தியாவின் தலைமை அமைச்சரோ, தலைவாழை இலை போட்டு விருந்தே வைத்தார். தமிழர்களின் உணர்வுகளை இதை விடக்கொச்சைப்படுத்திட முடியாது.

புலிகள் மீதான தடை நீட்டிப்பு சரியா, தவறா என்பதை விசாரிக்கும் ஒரு நபர் நடுவர் மன்றத்தின் விசாரணையின் போது, அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது அங்கீகரிக்கப் பட்ட உறுப்பினர்கள்தான் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க முடியும் என்பது விதி என்று சொல்லப்பட்டது. இலங்கை அரசால் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என்று அறிவிக்கப் பட்ட பிறகு யார் வந்து வாதாடுவார்கள்? எல்லாம் குழப்பமாக - திட்டமிட்ட குழப்பமாக உள்ளது. ஏதோ அனிச்சை செயல்போல இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் தடை நீட்டிக்கப்பட்டு விடுகிறது.

ஈழத்தில் நடந்து முடிந்த இனப்படு கொலையைத் தொடர்ந்து இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்? அங்கே நடந்தது இனப்படு கொலைதான், சர்வதேச போர்விதிகளை இலங்கை அரசு அப்பட்டமாக மீறியிருக்கிறது, எனவே இராஜபக்சே சகோதரர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதாரங்களோடு செய்திகளை வெளியிட்டதைப்போல, இந்தியாவும் செயலாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் அமைதி இலங்கைக்கு ஆதரவாக அனைத்தையும் செய்து முடித்தது.

இந்தியாவின் நிலைப்பாட்டைத்தான் இலங்கைக்கான அளவுகோலாக உலக நாடுகள் கொண்டுள்ளன. ஈழத்தில் இன அழிப்புப்போர் உச்சகட்டத்தை எட்டியபோதும் இந்தியாவின் அசைவைப் பொறுத்தே உலக நாடுகளின் நடவடிக்கைகள் அமைந்தன. இந்தியாவே வலியப்போய் இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை வழங்கியது, மற்ற நாடுகளும் தாராளமாக, அதிபயங்கர ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கக் காரணமா யிற்று. கடந்த காலம் இப்படி இருக்க, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருப்பதன் மூலம், உலக நாடுகளில் பரவலாக வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறது இந்திய அரசு.

இந்தியாவைப் பொறுத்த வரையில், விடுதலைப்புலிகளானாலும் சரி, ஈழத்தமிழர் களின் உரிமைப்போரானாலும் சரி அது தமிழ்நாட்டோடு மட்டுமே தொடர்புடையது, தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது தான் பிற மாநிலங்களின் கருத்தாக இருக்கிறது. எனவேதான், அங்கே நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் கூட அந்த இனப்படுகொலையைக் கண்டிக்க அவை முன்வரவில்லை. ஈழத்தில் நடந்த வினைகளுக்கு எதிர்வினையாற்றியது தமிழ்நாடு மட்டுமே. அதற்காக வழக்குகளைச் சந்தித்ததும், சிறைகளுக் குள் அடைபட்டுக் கிடந்ததும் தமிழ்நாட்டு அரசியல் இயக்கத் தலைவர்களும், உணர்வாளர் களும்தான். விக்ரம் அஜித் சென் - ஐ நீதிபதியாகக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன் வாதிடவந்த போதும், அவர்களுடைய வாதங்களுக்குத் தீர்ப்பாயம் அனுமதி மறுத்துள்ளது.

அண்ணா பிறந்தநாளில் ஆயுள்தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுவித்தால், சுப்பிரம ணியசாமி உடனே வழக்குப் போடுகிறார். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள்கைதி களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்ப தால் அவருக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட் டுள்ளதா? ஆனாலும் சம்மனே இல்லாமல் சுப்பிரமணிய சாமியால் ஆஜராக முடிகிறது. ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக நம்மால் வாதிட இயலவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மான் விடுவிக் கப்படுவதாகத் தடா நீதிமன்ற நீதிபதி கே.தட்சி ணாமூர்த்தி அறிவித்திருக்கிறார். இலங்கைத் துணைத் தூதரகம் மற்றும் இலங்கை அதிகாரிகள் அளித்துள்ள கடிதங்களின் அடிப்படையில், பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக நாங்கள் நம்புகிறோம். எனவே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. பல்நோக்குக் குழு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே தடா நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. ஒரு இயக்கத்தின் தலைமையே இல்லை என்று மத்திய அரசின் புலனாய்வுத் துறையே அறிவித்த பிறகு இந்தத் தடை நீட்டிப்பு நாடகம் யாருக்கு உதவுவதற்காக?

புலிகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது, அவர்களின் ஆதரவாளர்களும் வாதங்களை முன்வைக்க முடியாது என்றால் அந்த விசாரணை மன்றமும், இத்தனை அமர்வுகளும் எதற்காக?

இல்லை என்று சொல்லுகின்ற ஒரு இயக்கத்திற்குத் தடையும், தடை நீட்டிப்பும் செய்கின்ற நாடு உலகிலேயே இந்தியாவாகத் தான் இருக்கமுடியும். எந்த விதத்தில் பார்த் தாலும் நியாயமே இல்லாத இந்தத் தடையை இந்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் உலக அரங்கில், இந்தியா ஒரு மக்களாட்சி நாடு என்பது கேள்விக்குள்ளாகி விடும்.

Pin It