ஈழப்போரும் அறப்போராகத்தான் ஆரம்பித்தது
ஆனால் அறப்போர்களை ஆட்சியில் இருப்போர்கள்
ரத்தச் சேற்றில் அழுத்தியதால்
அவை - புறப்போர்களாகப் புலம் பெயர்ந்தன
அந்த மறப்போர்களை இனி மறப்போர் யாரும் தமிழரில்லை

அந்த நெடிய வரலாற்றில்
சோழக்கொடியே ஈழக்கொடியாயிற்று
கொடிச்சின்னமே படைச்சின்னமாயிற்று
முழுப்படை முதிர்ந்து முப்படையாயிற்று
இருநூறாண்டு இழிவுகளையயல்லாம்
கால்நூறாண்டிலேயே கடக்க முனைந்தது

நாளை விடியப் போகிறது நாடு என்று
நாள் குறித்து வைத்திருக்கும்
வேளை விடிவதற்குள்
வரலாறு பின்னோக்கிச் சுழன்றது
 
இமாலயத்தின் இருபெரும் நாடுகள்
ஆசியத்தின் இரண்டு வல்லினக் கரங்கள்
தேசியத்தின் ஒரு மெல்லினப்பூவை
அரும்பும் போதே அழித்துவிட்டன

அந்த இனப்பேரழிவைத் தடுக்கத்
தாய்த் தமிழகம் துடித்தது ;
பதைத்தது திரும்பிப் பார்க்கவில்லை டெல்லி
சட்டமன்றத் தீர்மானம், தமிழரசின் தனிக்கவனம்
எத்தனையோ நோன்பிருந்தும் இளகலையே டெல்லி மனம்
செத்தோமே தீக்குளித்துத் தீர்ப்பே கொடுக்கலையா?
சிங்களத்தீ அணைவதற்குத் தீர்வே கிடைக்கலையா?

இல்லை, இல்லை, இல்லை
தீர்வுமில்லை, தீர்ப்புமில்லை டெல்லிக் கொள்கையில் - கலைஞர்
தினம் வரைந்த கடிதமெல்லாம் குப்பைக்கூடையில்
இலங்கையோடு கூடிக்குலவும் தேசக்கொடிகளே - அங்கே
எரியும் ரத்தம் சொரியும் எங்கள் தொப்புள் கொடிகளே

முள்ளிப் போர் முனை முகத்தில் மூத்தவர்கள் சரணடைய
வெள்ளைக் கொடி வீசி வந்தாரை விதி மீறிக்
கள்ளக் கொலை செய்த காட்டுவெறி காண்கிலையோ
பிள்ளைக்கறி கேட்கும் பேயர்களின் பலிக்களமாம்
முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ
கொள்ளையர்தம் கொடுங்கரத்தில் குமரிகளைச் சீரழிக்கும்
வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ?

ஐயோ உலகே, ஐயோ பேருலகே
பொய்யோ உலக சபை? புனைவுகளோ சபை விதிகள்
கையேந்தி வந்தாரைக் கரமேந்திக் காத்த இனம்
கையேந்தல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்?
ஒரு குவளை நீருக்கும் ஒரு கவளம் சோறுக்கும்
இரவலரைப்போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ?

எல்லாம் இழந்தோம்
இனி இழப்பதற்கு ஏதுமில்லை.

கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்
துணியினை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்
தனது மண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம்... நியாயம்...

எரிசரம் பொழியும் போதும் இடைவிடாச்சாவின் போதும்
குருதியால் தேசத்தாயைக் குளிப்பாட்டிவிட்ட நாட்டின்
உறுதியைக் கண்டோம் ; அந்த உதிரத்தில் உதித்தெழுந்த
பரிதியைக் கண்டோம் ; ஆனால் பயத்தினைக் கண்டோமில்லை

பலதலை தந்து லட்சம் பலிகளைத்தந்து ரத்த
அலைகளில் நீந்தியேனும் விடுதலை பெறுதலைத்தான்
தலையயனக் களம் அமைத்து விலையயன உயிர்கொடுத்து
உலகையே மலைக்க வைத்த உயிர்த்தியாகம் கேட்டதுண்டா?

தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத்துள்ளும் ; கழுகு
தூக்கிடும் குஞ்சு காக்கத் துடித்தெழும் கோழி ; சிங்கம்
மூர்க்கமாய்த் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்
சாக்கடைக் கொசுக்களா நாம்? சரித்திரச்சக்கரங்கள்!

சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்
பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்
பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும் போதும்
மறித்தவன் வென்றதுண்டா? மறுத்தவன் நின்றதுண்டா?

புலியோடிப் படர்ந்திருக்கும் நவகோடித் தமிழினமே
கவிபாடுகின்ற இந்தக்கவி வாக்குப் பொய்க்காது
தமிழா நீ,
இழப்பதற்கு ஏதுமில்லை
இழக்கப்போவது அடிமைச்சங்கிலிகளைத்தான்
பெறப்போவதோ
ஒரு பேருலகம் பொன்னுலகம்
அதுதான் தமிழுலகம்!
அதுதான் தமிழுலகம்!

(தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி)

Pin It