சிகரம்

எந்தத் துறையாயினும் ஒருவரின் தொடர் சாதனைகளுக்கு இடைவிடாத பயிற்சியும் தேவைப்படுகிறது. அப்பயிற்சியை அருகிலிருக்கிறவர்களோ ஊடகங்களின் வாயிலாகவோ தான் பெற முடியும்.

தன் முன்னேற்றத்திற்காக ஒருவர் இக்காரியங்களைச் செய்தி கொண்டிருப்பதும், தான் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்வதும் இயல்பாக நடக்கக் கூடியது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக ஈரோட்டிலிருந்து பிறரின் முன்னேற்றத்தையே மூச்சாகக் கொண்டு சிறந்த தன் முனைப்பு வழிகாட்டியாக வெளி வந்துக் கொண்டிருக்கிறது ‘சிகரம்’.

உள்ளடக்கம் முழுக்க, துவண்ட மனதுக்கு நம்பிக்கை தருகிறது. களர் நில மனதை கொத்திச் சீராக்கி வீரிய விதைகளைத் தூவுகிறது. சாதிக்க நினைக்கிற துவக்க நிலை முயற்சியாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தித் தரும் சீரிய இதழாய் சிகரம் பயணப்படுகிறது.

பிற இதழ்களில் வெளியாகியுள்ள நம்பிக்கை வரிகளைக் கொண்ட கவிதை விதைகளை மறுவிதைப்பாக்கித் தருகிறது

விளையாட்டு பற்றிய கட்டுரை, தன் முனைப்புக் கதைகள், கவிதைப் போட்டி, மாணவர் பக்கம், நூல் மதிப்புரையென்று சிறப்புகள் பல உண்டு. முப்பத்திரண்டு பக்கங்களிலும் தன் முனைப்புச் செய்திகள் வாசகர்களுக்கு செறிவானதாயிருக்கிறது.

இதழ்: சிகரம் ஆண்டுக்கட்டணம்: ரூ.40/--
ஆசிரியர்: சந்திரா மனோகரன்
முகவரி: ஆசிரியர், சிகரம், சந்திரா இல்லம்,
45 ஏ டெலிகாம் சிட்டி,
செங்கோடம்பாளையம், திண்டல் அஞ்சல்,
ஈரோடு--638009.
அலைபேசி: 94438&41122.
அம்ருதா

தமிழகத்தில் இலக்கியச் சிற்றிதழ்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவற்றில் புதிய வரவாக அம்ருதா இருக்கிறது. கடந்த 1 வருடமாக சென்னையில் இருந்து வெளிவரும் அம்ருதா- கலை, இலக்கியம், கவிதை, திரைப்பட விமர்சனம், சிறுகதை, நூல் விமர்சனம், நேர்காணல்கள் போன்ற பல்வேறு பகுதிகளைத் தாங்கி வருகிறது.

சிறந்த அச்சு, வடிவமைப்பு போன்றவற்றுடன் வெளிவரும் அம்ருதா இன்னும் சிறிது முயற்சி எடுத்தால் தமிழ் சிற்றிதழ்களில் தனி இடத்தைப் பிடிக்கலாம்.

அம்ருதா,
நவீன கலை இலக்கிய மாத இதழ்
சிறப்பாசிரியர்: திலகவதி
முகவரி:
5, 5வது தெரு, சோமசுந்தரம் அவென்யூ,
சக்தி நகர், போரூர்,
சென்னை - 600 116
போன்: 22522277
தனி இதழ், ரூ.15
ஆண்டுச் சந்தா ரூ.180

கனவு

அசாதாரண நிகழ்வுகளும், வாழ்க்கை முறைகளில் தவறான அணுகுதல்களும், அதை நியாயம் போல் கற்பித்துக் கொள்ள பொய்க் கோட்பாடுகளுமாய் உலகு இயங்கிக் கொண்டிருக்க, கலை இலக்கியப் போக்குகளிலும் அதன் தாக்கம் இன்றைக்கு பெரும் வீரியமாய் வெடித்துக் கிளம்பியுள்ளது. மாற்றங்கள் தவிர்க்க இயலாதது. எனினும் இத்தகைய மாற்றங்கள் மக்களை சிக்கல்களிலிருந்து விடுவிக்கும் என்பதே சிந்தனைக்குரியது.

இம்மாற்றங்களின் விதைகளை ஊடகங்களே கைவசம் வைத்திருக்கின்றன. அவற்றின் விதைப்புகளே மக்களின் மனங்களை விளைச்சல் நிலங்களாகவோ, போலி விளைச்சல் நிலங்களாகவோ மாறுகின்றன. களர் நிலமாகவும் மாறிவிடுகின்றன.

பொருத்தமான விதைகளைத் தூவி வரும் சிற்றிதழ்களின் வரிசையில் கனவு இதழுக்குப் பெரும் பங்குண்டு. மக்களின் மனதில் வல்லமை வாய்ந்த காட்சியூடகமாயிருக்கிற திரைப்படங்களை அறிமுகப்படுத்திய பெருமை கனவு இதழுக்கு உண்டு. அதே போல் மாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் இன்றைக்குக் குறும்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு முன்னோடியாக இருந்ததும் இவ்விதழே!

கனவு இதழில் கவிதை படைத்த பல கவிஞர்கள் முன்னணிக் கவிஞர்களாகவும், தரமான படைப்பாளிகளாகவும் இன்றைக்கு வலம் வருகிறார்கள். படைப்பிலக்கியத்தில் அனைத்துவிதமான சோதனை முயற்சிகளுக்கும் இடம் தரும் இதழாகவும் இருக்கிறது. இதுவரை ஐம்பத்தாறு இதழ்களைக் கடந்து தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிறுகதைகள், தரமான கவிதைகள், புதிய புத்தகங்களின் அறிமுகம், பயிற்சிப் பட்டறைகளென்று சரியான இலக்கியத்தடத்தில் இதழ் பயணிக்கிறது.
இதழாசிரியர் சுப்ரபாரதி மணியன் இளம் கலைஞர்களை வஞ்சனையற்று சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிற உன்னத படைப்பாளி. அவரின் கனவுப் பயணம் தொடரட்டும். வாழ்த்துவோம்!

இதழ்: கனவு. தனி இதழ் ரூ.8/-
ஆசிரியர்: சுப்ரபாரதி மணியன்.
முகவரி: 8/176 (2635) பாண்டியன் நகர்
திருப்பூர் /- 641602.
தொ.பே: 0421-2350199, 9846101003.


ஊற்று

புதுக்கவிதைகளின் வீச்சும் ஆழமும் அகன்று பரந்து விரிந்த பின் மரபுக் கவிதைகளின் வருகை குறைந்து விட்டது. எனினும் மரபுக் கவிதைகளின் வீரியம் குறையவில்லை. மரபுக் கவிதையில் விருத்தத்தை அட்டையில் தாங்கி ‘ஊற்று’ பீறிட்டிருக்கிறது.

‘உண்மையும் உழைப்பும் உயர்வு தரம்’ என்ணகிற லட்சிய அறிவிப்போடு பெங்களூரிலிருந்து ஊற்று வரவு. சமுதாயத்திற்கு தேவையான கட்டுரைகள் இருப்பது ஒன்றே இதழுக்கான பெருமை தான். விவசாய நாடு என்று சொல்லிக் கொண்டாலும் உழவுத் தொழில் நசிந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிற நிலையிலேயே வேளாண்மைத் துறை இருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டுகிற தன்மையும் இதழின் சிறப்புக்குச் சான்று.

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்திலிருந்து இவ்விதழ் கடந்த முப்பதாண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் இவ்விதழ் தமிழ் கற்றுக் கொடுக்கிற பணி, கூட்டங்களின் மூலம் தமிழ் பணியாற்றுதல், பல்வேறு அறிஞர்களை சிறப்பித்தல் என்று இதழ் ஆக்கப்பூர்வமாய் நடைபோடுகிறது.

விழிப்புணர்வூட்டும் கவிதைகள், மதிப்புரை, இயக்கச் செய்திகள், உழைப்பால், உயர்ந்த தமிழர்கள் பற்றிய செய்திகள் என ஊற்று பரிணமிக்கிறது.

தமிழ் வளர்ச்சி, தமிழனின் வளர்ச்சி, இறை நம்பிக்கை பற்றிய தெளிவான கருத்துக்களென சிறப்புற்று விளங்கும் ஊற்றுவின் வருகை பெங்களூரிலிருந்து என்பது பாராட்டத் தக்கதாகும்.

இனி உங்கள் சிற்றிதழ் வாசிப்பில ஊற்றும் சுரக்கட்டும்.
இதழ்: ஊற்று தனி இதழ்: ரூ.5/-
ஆசிரியர்: ப.சண்முக சுந்தரம்
முகவரி: ஊற்று, பெங்களூர்த் தமிழ்ச்சங்கம்
59, அண்ணாசாமி முதலியார் சாலை,
பெங்களூர் -560042
தொலைபேசி: 08025510062.
Pin It