இந்திய இலக்கிய மரபின் தொடக்கம் கவிதையே. தொடக்கத்தில் பாடல் என்று அழைக்கப்பட்டது. குறுங்கவிதைகள் என்பதே முந்தைய இலக்கியங்களில் வெகுவாக காணப்பட்டவையாகும். குறுங்கவிதைக்கு இலக்கணம் என்ன? அடிப்படை எது? வடிவம் எதுவாயிருப்பினும் வரிகளின் எண்ணிக்கை வைத்தே குறுங்கவிதை என அடையாளப் படுத்தப்படுகிறது. அவ்வாறே அழைக்கப்படுகிறது. ஒரு வரி தொடங்கி ஐந்து அல்லது ஆறு வரிகள் வரை குறுங்கவிதைக்கு எல்லை என அளவை வகுத்துக் கொள்ளலாம். நிர்ணயித்துக் கொள்ள்லாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு என்று தொடங்கும் திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. எனினும் ஒவ்வொன்றும் ஒரு குறுங்கவிதையே. இலக்கணப்படி அமைந்த இரண்டடி குறுங்கவிதையாகும். திருக்குறள் சங்க இலக்கியக் காலத்தவையாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென் கீழக்கணக்கு ஆகியவையும் சங்க இலககியங்களே. புறநானூறும் இக்காலத்ததே. புறநானூறிலும் ஏராளமான குறுங்கவிதைகள் உள்ளன.

களம்புகல் ஓம்புமின் தெய்வீர். போரெதிர்த்து
எம்முளும் உளன்ஒரு பொருநன, வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னானே அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்து யார் பாடிய குறுங்கவிதை இது. அடுத்து ‘வேள்பாரி’யைக் குறித்து கபிலர் பாடிய பாடல் பின் வருமாறு

‘பாரி பாரி’ என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு, ஈண்டு உலகு பரப்பதுவே

திருக்குறள் இரண்டு வரி எனில் புறநானூற்றில் இவை நான்கு வரி. வரிகள் அதிகரித்திருப்பினும் குறுங்கவிதையாகவே அiடாளப்படுகின்றன. தொடர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை மரபாகவே கவிதை இயற்றப்பட்டிருநதாலும் குறுங்கவிதைகளும் இடம் பெற்றிருந்ததை மறுக்க முடியாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு. மகாகவியின் காலம். புதுக்கவிதைக்கு வித்திட்டவர். அவர் பெரும்பாலும் எழுதியவை நெடுங்கவிதைகளே. காப்பியங்களும் மிகுதி. அவர் எழுதிய ஒரேயொரு குறுங்கவிதை ‘அக்கினிக் குஞ்சு. ’

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
 அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல்
 வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டசூh
 தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

பாரதியின் கவிதைகளிலேயே அதிகம் பேசப்பட்டதும் எடுத்துக்காட்டப்பட்டதும் இதுவே. இதுவும் மரபாகவே உள்ளது. இக்கவிதையை ஒரு முழுமையான புதுக்கவிதையாக சி. சு. செல்லப்பா கருதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியின் மீதுள்ள பெருமதிப்பால், பற்றால் பாரதிதாசன் என பெயர் சூட்டிக் கொண்டவர். மரபுக் கவிதையாலே பல காவியங்களை படைத்தவர். கவிதைகள் பல இயற்றியவர். அவரின் குறுங்கவிதை ஒன்று

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே. ‘யாத்திரை போகும் போது’ எடுத்துச் செல்ல வேண்டியவைகள் எவை எவை என பாட்டிலேயே பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். பொருள்களின் பெயர்களை வைத்தே எழுதப்பட்டு இருந்தாலும் மரபிலேயே எழுதப்பட்டுள்ளது இக்குறுங்கவிதை.

பாரதியைத் தொடர்ந்து கவிதை உலகில் பிரவேசித்தவர் ந. பிச்சமூர்த்தி. இவர் பாதை வேறு. நவீனத்துவவாதி. குறுங்கவிதைகள் எழுதவில்லை. அடுத்து நவீனக் கவிதையில் குறிப்பிடத் தக்கவர் நகுலன். ஏராளமான குறுங்கவிதைகள் எழுதியுள்ளார்.

அவர்கள் சென்ற பின்
இவர்கள் இடம் பெயராது
இருந்தனர்.

மூன்று வரி முதல் பல குறுங்கவிதைகள் உள்ளன. மரபிலிருந்து மாறுபட்டு புதுக்கவிதைக்கு மாறியுள்ளது. எளிமையாக இருந்தாலும் எண்ணத்தை விரிவுச் செய்கிறது. இவ்வரிசையில் இடம் பெற்ற மற்றொரு கவிஞர் பிரமிள். படிமக் கவிதைகள் இயற்றுவதில் வல்லவர். அவர் சில குறுங்கவிதைகளே எழுதியுள்ளார். ‘இடம்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அக்கவிதை

மீனுக்குத் தண்ணீர்
மிருகத்துக்கு
பிராண வாயு
மனிதாத்மாவுக்கோ
மனம்தான்

வெளி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மாறு பட்டாலும் குறுங்கவிதைகளின் பயணம் ஒவ்வொரு கவிஞராலும் ஒவ்வொரு விதமாய்த் தொடரவே செய்கிறது.

புதுக்கவிதைத் தடத்தில ஓரு புதுத்தடத்தை ஏற்படுத்தியவர் கவிஞர் சி. மணி. கவிதை மொழியில் ஒரு தனி ‘நடை'யைக் கைக் கொண்டவர். இவர் எழுதியது அதிகம் குறுங்கவிதைகளே. எல்லாமே எடுத்துக் காட்டுக்குரியவை எனினும் இக்கட்டுரைக்காக ஒன்று

எண்ணம் வெளியீடு கேட்டல்
இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல
ஒன்றென்றால்
மூன்றான காலம் போல் படைப்பாளியின் மனத்தை அங்கதத்துடன் பேசுகிறது இக்குறுங்கவிதை. ஹைக்கூ வடிவம் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட அவரது குறுங்கவிதைகள் சிறப்பானவை. சமூக விமரிசனமாகவும் கருதலாம்' என எழுத்தாளர் ஜி. டி. குறிப்பிட்டுள்ளார். (நடவு இதழ் 24 - ஆகஸ்ட் 2009).

குறுங்கவிதைகள் சிறுகவிதைகள் என்றும் குறும்பா என்றும் அழைக்கப்படுவதுண்டு. முதன் முதலில் ‘குறும்பா’ நூலை எழுதி வெளியிட்டவர் ஈழத்து மகாகவி. அதில் எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை எழுதிய முன்னுரையில் 'குறும்பாவால் தமிழ்க்கவிதை நகைச்சுவை ஆழமும், அகலமும், இறுக்கமும் இலகுவும் பெற்று,ஒரு புதிய உச்சத்தை அடைய வழி பிறக்கின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார். (சென்னி மலை கிளியோப்பாத்ராக்கள் - ஈரோடு தமிழன்பன்). தமிழ்க் கவிதை வரலாற்றில் குறுங்கவிதைகளின் வளர்ச்சியும் அதன் பாதிப்பும் தவிர்க்க இயலாதது என்பதையே எஸ். பொன்னுத்துரை வலியுறுத்தியுள்ளார்.

கவிஞர்களில் முன்னோடியாக விளங்கியவர் கவிஞர் மீரா. புதுக்கவிதைகளைப் படைத்ததுடன் புதுக்கவிஞர்கள் பலரையும் உருவாக்கியவர். அவரின் ‘ஊசிகள்’ சமுதாயத்தை குண்ப்படுத்தும் குறுங்கவிதைகளாக விளங்கின. அவரின் ‘குக்கூ’ என்னும் தொகுப்பு முழுக்க குறுங்கவிதைகளாலே நிறைந்ததாகும்.

விழும் போதெல்லாம்
மீசையில் ஒட்ட வேண்டும்
இந்தச் செம்மண்
ஏனெனில் எம்மண்

இக்குறுங்கவிதையில் மீராவின் மண் பற்று அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது.

எழுத்தாளராக வெகுவாக அறியப்பட்ட. புகழ் பெற்ற சுந்தரராமசாமி ‘பசுவய்யா’ என்னும் பெயாpல் ஏராளமான நெடுங்கவிதைகள் எழுதியுள்ளார். குறுங்கவிதைகள் எழுதியது அரிது.

இந்த ஒளியின் இயக்கத்தில் ஓசை இல்லை
அதிகாலை ஓசையின்றி நெடுகிலும் பரவி
மாலையில் விடைபெற்றுச் செல்கிறது
இந்த ஒளியின் இயக்கத்தில் ஓசை இல்லை

என்னும் ‘மௌன ஒளி’ முற்றிலும் வடிவத்தில் வேறுபட்டுள்ளது. ‘மௌன ஒளி’ யை மெல்ல ஒலிக்கச் செய்துள்ளார்.

கவிதையை ஓர் இயக்கமாகக் கொண்டு இயங்கியது ‘வானம்பாடி இயக்கம்’. வானம்பாடியருள் ஒருவரே கவிஞர் தமிழ்நாடன். அவர் பல கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டு இருந்தாலும் மண்ணின் மாண்பு, நட்சத்திரப் பூக்கள், காம ரூபம் ஆகியவை குறுங்கவிதைகளால் அடங்கிய தொகுப்புகளாகும். அவைகளில் ‘காம ரூபம்’ தொகுப்பே வரவேற்பும் பெற்றது. விமரிசனமும் கொண்டது.

தலைமறை இடைவெளி பற்றி
நரைத்தலை “hனி ஆராய்ந்தார்
இடைக்குறை ஸ்டேனோ உதவியோடு
தொடர்ந்தது ஆராய்ச்சி
மறைந்தது இடைவெளி.

ஒரு சமூக அவலத்தை அவருக்கேயுரிய மொழியில் அழுத்தமாக விமரிசித்துள்ளார். இவ்வாறான குறுங்கவிதைகள் வரவேற்பு பெற்ற காலம் அது.

காதல் என்னும் நுண்ணுருச் சிலையைக்
காமச் சம்மட்டி துகளாய் மாற்றும்
காதலிப்பது இனிய போராட்டம்
பொது போக்குக் காதல் சமூக அவலம் என குறுங்கவிதை மூலம் பொழுதுபோக்குக் காதலைச் சாடியுள்ளார் “hனன்.

காலம் மாறியது. கவிஞர்களும் புரிது புதிதய் உருவாகிக் கொண்டே வந்தார்கள். ஒரு புதிய தலைமுறை உருவானது. புதிய தலைமுறையின் புகழ் பெற்ற கவிஞர்களாக விளங்கியவர்கள் கலாப்பிரியா, கல்யாண்ஜி. இவர்களின் குறுங்கவிதைகள் மிகப் பிரசித்திப் பெற்றவை.

எச்சியிலைத் தொட்டியில்
ஏறி விழும்
தெரு நாயின்
லாவகம் எனக்கொரு
கவிதை
தரப்பார்க்கிறது (தலைப்பு - மூலதனங்கள் ) - கலாப்பிரியா

நீண்ட காலமாக
இந்தக் கவிதையை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
நீண்ட காலமாக
இந்தக் கவிதை
முற்றுப் பெறாமலே இருக்கிறது - கல்யாண்ஜி

இருவரும் சமகாலத்தவர். இருவரின் கவிதைகளும் கவிதையை வைத்தே எழுதப்பட்டுள்ளது.

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் குறுங்கவிதைகள் எழுதப்படுவது தொடர்கிறது. குறுங்கவிதையை எழுதாதவர்களே இல்லை என உறுதியாக கூறுமளவிற்கு ஒவ்வொரு படைப்பாளியும் எழுதி வருகின்றனர். கவிஞர் தபசி ‘காதலியர் மேன்மை’த் தொகுப்பில் குறுங்கவிதைகள் என்னும் தலைப்பிலேயே பல கவிதைகள் எழுதியுள்ளார்.

கடவுளிடம்
நாமாகவே
எதுவும் கேட்கக் கூடாது
அவராகவே
எதுவும் தரமாட்டார்

கடவுளை நம்புவர் கைவிடப்படுவார் என்னும் எதிர்மறை சிந்தனையை விதைத்துள்ளார்.

குறுங்கவிதைகள் எழுதப்படுவது தொடக்கத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு விதமாய் எழுதியுள்ளனர். உருவத்தில, உள்ளடக்கத்தில், வெளிப்பாட்டில் என பல வகைகளில் குறுங்கவிதைகள் இலக்கியப் பாதையெங்கும் காணக்கிடைக்கின்றன. நெடுங்கவிதைகளை விட குறுங்கவிதைகளிலேயே வீச்சும் மிகுதி. வேகமும் அதிகம். வாசிப்புக்கும் எளிதானது. வாசகர்களையும் எளிதாக ஈர்ப்பது. கால வெள்ளத்தில் குறுங்கவிதைகள் கரைந்து போகாமல் இலக்கியத்தில் ஒரு தனித்த இடத்தைத் தனக்காக தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேற்றுப் போல இன்று போல நாளையும் குறுங்கவிதைகள் தொடரும். பெயர் மாறினாலும் தளம் மாறினாலும் குறுங்கவிதைகள் சுயம் மாறாமல் பயணிக்கும். ”நெடிய கவிதைகளைப் பெரிதும் தமிழ்ப் புதுக்கவிதையில் காண முடியவில்லை. சிறிய கவிதைகளும் துணுக்குக் கவிதைகளும் தமிழில் பெருகியுள்ளன” என கவிஞர் சிற்பி ‘கவிதை நேரங்கள்’
தொகுதியில் எழுதியுள்ளது எடுத்துக்காட்டத்தக்கது.

எந்த மலர்
என்னிடம் பேசும்
என்னிடம்
ஒரு கவிதை இல்லாத போது- என ஒரு குறுங்கவிதையில் வினவியுள்ளார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். கவிதை எப்போதும் வேண்டும் என்கிறார். கவிதையே வாசம் வீசும் ஒரு மலர்தானே கவிதை? குறுகினாலும் வாசம் குறுகாது.

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

9003344742, 9865809969

Pin It