மக்கள் மன்ற தலைவர் தோழர் செல்லப்பன் ஈரோட்டில் பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றி பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து வரும் போக்கை எதிர்த்து அண்மையில் போராட்டம் நடத்தினார். பயணிகளுக்கு அதிக பேருந்து வசதிகள் கிடைக்காமலும், பேருந்துகளில் செல்லும் போது அதிக பயணிகளை ஏற்றி மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகிறார்கள். குறிப்பாக பெண்களும், பள்ளி செல்லும் மாணவர்களும், வயது முதியவர்களும் கும்பல் நிறைந்த பேருந்துகளில் பயணம் செய்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

பேருந்துக்கள் போதிய எண்ணிக்கைகளில் இருப்பதில்லை. மேலும் அவை மக்களுடைய தேவைகளையொட்டி எல்லா நேரமும் இயக்கப்படுவதில்லை. பயணிகள் குறைவாகப் பயணம் செய்யும் நேரங்களிலும், பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், எல்லா நேரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. நெரிசல் தனியார் பேருந்துகளில் மட்டுமின்றி அரசு பேருந்துகளிலும் பயணிகள் ஏற இடமின்றி இயக்குகின்றனர். இந்தப் பிரச்சனைகளையெல்லாம் மையப்படுத்தி, தோழர் செல்லப்பன் தலைமையில் மக்கள் மன்றத் தோழர்கள் ஈரோட்டில் ஆர்பாட்டம் நடத்தினர்.

பேருந்து உரிமங்கள் கொடுக்கும் பொழுது வெறும் 35 பயணிகளும் 2 ஓட்டுனர்களும் இருப்பதற்காக கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் பல மடங்கு அதிகமாக மக்களை ஏற்றிக் கொண்டு சென்றாலும் அரசு அதிகாரிகளும் காவல் துறையும் கேள்வி எழுப்புவதோ, அபராதம் விதிப்பதோ அல்லது அனுமதியை திரும்பப் பெறுவதையோ செய்வதில்லை. மாறாக அவர்கள் கொள்ளை இலாபமடிக்கும் தனியார் முதலாளிகளுக்கு துணையாக உள்ளனர், இதனால் மக்களுக்கு எதிராக செயல் படுகின்றனர்.

பயணிகளுடைய பிரச்சனைகள் குறித்து தோழர் செல்லப்பன் பலமுறையும் ஆட்சித் தலைவரிடமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடமும், தமிழக அமைச்சர்களிடமும், நீதி மன்றத்திலும் பலமுறை மனுக்களைக் கொடுத்திருக்கிறார். ஆயினும் அரசு அதிகாரிகள் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். மக்களுடைய போக்குவரத்துப் பிரச்சனை மீண்டும் வலியுறுத்துவதற்காக அண்மையில் அமைதியான முறையில் போராட்டம் செய்த மக்கள் மன்றத்தின் நம் தோழர் செல்லப்பனை காவல்துறையினர் கைது செய்தனர். தொழிலாளர் ஒற்றுமை குரல் இதை வன்மையாகக் கண்டிக்கிறது.

போக்குவரத்துத் துறையில் தனியார்மயத்தை அறவே ஒழித்துவிட்டு, போக்குவரத்தின் எல்லா செயல்பாடுகளையும், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதும், மக்களுடைய பொதுத் தேவைகளில் அரசு போதுமான அளவு முதலீடு செய்வது தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகும். இதற்காகத் தொடர்ந்து போராடுமென்பதில் மக்கள் மன்றம் உறுதியோடு நிற்கிறது.

Pin It