விடுதலைப் புலிகளுடைய தலைவர் பிரபாகரனுடைய 12 வயது மகனை சிரிலங்காவின் இராணுவம் 2009-இல் சுட்டுக் கொன்ற படங்கள் பரவலாக வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இராஜ பக்சேவின் தலைமையில் உள்ள சிரிலங்கா அரசாங்கம் புயலின் மையமாகி இருக்கிறது.

போரின் இறுதிக் கட்டத்தில், ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டனர். 22,000 விடுதலைப் புலி இயக்கத்தின் போராளிகள் கொல்லப்பட்டதாக சிரிலங்கா அரசாங்கம் மதிப்பிட்டிருக்கிறது. கொல்லப்பட்ட பொது மக்களுடைய எண்ணிக்கை 40,000-க்கும் மேல் இருக்குமென கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி, உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தின் துவக்கத்தில் 70,000 சிரிலங்காவின் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 3,00,000-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இடம் மாற்றப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர். கடைசியில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் சிறைக்கூடங்களில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும், பிற நாடுகளிலும் அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய சக்திகளுடைய செயல்பாடுகள் சிரிலங்காவிற்கு தன்னுடைய சொந்த மக்கள் மீதே இராணுவத் தாக்குதல்கள் நடத்த துணிவளித்திருக்கிறது. இஸ்ரேல் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது படுகொலைத் தாக்குதல்களை நடத்தி வருவதும், இந்திய அரசு காசுமீர், வட கிழக்கு மக்களை ஈவுஇரக்கமின்றி நசுக்கி வருவதும் அதற்கு துணிவளித்திருக்கிறது. எனவே, சிரிலங்காவில் மனித உரிமைகள் மீரல் குறித்து இந்தியா உட்பட பல்வேறு ஏகாதிபத்திய அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கும்போது, அதை ஒரு உள்நோக்கம் கொண்ட அரசியல் தந்திரமென புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

சிரிலங்கா, ஐரோப்பாவிற்கும் கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலுள்ள கடல்வழியில் இருக்கிறது. முக்கிய இடத்தை வகிக்கும் இந்த நாட்டை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டுமென்பதற்காக அமெரிக்காவும், பிற ஏகாதிபத்திய சக்திகளும் வெகு காலமாகவே முயன்று வந்திருக்கின்றன. அண்மைக் காலத்தில் சிரிலங்காவோடு சீனா ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா அங்கு ஒரு முக்கிய துறைமுகத்தைக் கட்டிவருகிறது. இதற்கு முன்னரும் கூட சிரிலங்காவின் உள்நாட்டு நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த நாட்டில் தங்களுடைய சொந்த நலன்களை முன்னேற்ற முயன்றிருக்கிறார்கள்.

தன்னுடைய மேலாதிக்க நோக்கங்களை முன்னேற்றுவதற்காக, சிரிலங்காவைப் பொறுத்த மட்டிலும் இந்திய அரசு ஒரு ஏகாதிபத்திய கொள்கையையே கடைபிடித்து வந்திருக்கிறது. அந்த நாட்டினுடைய உள்நாட்டு பிரச்சனைகளில் வழக்கமாகவே இந்தியா தலையிட்டு வந்திருக்கிறது. உள்நாட்டுப் போர் நடத்துவதற்கு பல்வேறு தமிழ் அமைப்புக்களுக்கு இது பயிற்சியளித்தது. பின்னர் எண்பதுகளில் இந்திய அமைதிப்படை (IPKF) என்ற பெயரில் தன்னுடைய இராணுவத்தை அந்த நாட்டிற்குள் அனுப்பியது. இந்த இராணுவத் தலையீட்டைப் பெரும்பான்மையான சிரிலங்க மக்கள் எதிர்த்தனர். எனவே இந்திய இராணுவம் அவமானத்தோடு திரும்ப வேண்டியாகியது. எனினும் இந்திய முதலாளி வர்க்கம் சிரிலங்காவின் மீது தன்னுடைய மேலாதிக்க ஆசைகளை விட்டுவிடவில்லை.

பிரிட்டிஷ் காலனியவாதிகளில் துவங்கி அவர்களுக்குப் பிறகு பல்வேறு அரசியல் சக்திகளாலும் சிரிலங்காவின் ஆட்சியாளர்களாலும் தொடர்ந்து கடைபிடித்து வந்த பிளவுபடுத்தும், இனவெறி கொள்கைகள் உருவாக்கிய ஒரு சிக்கலான சூழ்நிலை இன்றைய நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தானைப் போல, சிரிலங்காவும் ஒரு பல் தேசிய நாடாகும். ஆனால், சிரிலங்காவின் அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் மக்களுடைய தேசிய உரிமைகளை அங்கீகரிக்க மறுத்து விட்டனர். தமிழ் மக்கள் ஒடுக்குமுறையை சந்தித்து வருவதோடு, பாரபட்சமாகவும் நடத்தப்பட்டு வருகிறார்கள்.

அரசியல் தீர்வு காண, ஆயுதப் போராட்டத்தை முற்றிலுமாக அழிப்பது அவசியமான நிபந்தனையாகும் என்று கூறி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலை ராஜபக்சே அரசாங்கம் நியாயப்படுத்தியது. இத்துடன் மக்களைப் படுகொலைகள் செய்வதும், பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த வடக்குப் பகுதியின் உள்கட்டமைப்பு அழிப்பும் நடத்தப்பட்டது. சிரிலங்காவில் தமிழ் மக்களின் வாழ்விடம் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் எதிர்பார்த்தது போலவே தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. பிரச்சனைக்கு அடிப்படையான சிரிலங்கா அரசாங்கத்தின் பாரபட்சமான, தேசிய ஒடுக்குமுறையை குறிவைக்காமல், தமிழ் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குகின்ற கொள்கை, நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது என்பதை வாழ்க்கை அனுபவம் காட்டுகிறது. தமிழ் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதோடு, எந்த மூலையிலிருந்தும் எழும் எல்லா எதிர்ப்புக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் நசுக்கும் கொள்கையை சிரிலங்கா கடைபிடித்து வருகிறது. மனித உரிமை செயல்வீரர்கள், இதழியலாளர்கள், அரசியல் எதிரிகள் என அனைவரும் ஈவுஇரக்கமின்றி தாக்கப்பட்டு வருகிறார்கள்.

இராணுவ தாக்குதல்கள் முடிவுற்ற பிறகும், வடக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். மக்களுக்கு எதிராக கொடூரமான ஒடுக்குமுறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. நாட்டின் பிற பகுதிகளில், தமிழ் மக்களை "வெளியாட்களாக" நடத்தும் ஒரு கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கிறது. அவர்கள் எங்கு வசித்து வந்தாலும், காவல்துறையிடம் அவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. பல தமிழ் மக்கள் கூட்டிக்கொண்டு செல்லப்பட்டு கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், அல்லது "மறைந்து போகச்" செய்வதாகவும் அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

சிரிலங்காவில் உள்ள நெருக்கடிக்குத் தீர்வு, தேசிய இனவெறிக் கொள்கைகளையும், தமிழ் தேசிய இனத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதையும் முறியடிப்பதன் மூலம் அந்நாட்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் முற்போக்கு சக்திகள் மேற் கொள்ளும் செயலூக்கங்கள் மூலம் மட்டுமே வர இயலும்.

நமது நாட்டிலுள்ள காசுமீரம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய தேசியப் பிரச்சனைகளைப் போலவே, சிரிலங்காவில் உள்ள தமிழ் தேசியப் பிரச்சனைக்கும் ஒரு அமைதியான அரசியல் தீர்வு தேவைப்படுகிறது. அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க, வன்முறையைப் பயன்படுத்துவதை கொள்கை அடிப்படையிலேயே எதிர்க்கப்பட வேண்டும். அது போலவே, வெளியாருடைய தலையீட்டையும் ஒரு கொள்கை அடிப்படையில் எதிர்க்க வேண்டும். ஏனெனில் தங்களுடைய பிரச்சனைகளை வெளியாருடைய தலையீடு ஏதுமின்றி தீர்த்துக் கொள்ளும் உரிமை சிரிலங்காவின் மக்களுக்கு உண்டு.

சிரிலங்கா அரசின் பயங்கரவாதத்தின் கொடூரத்தை சந்தித்து வரும் தமிழ் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, தன் சொந்த நாட்டு மக்களையே கொடூரமாகக் நடத்தும் சிரிலங்கா அரசாங்கத்தை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வன்மையாகக் கண்டிக்கிறது.

Pin It