ஏப்ரல் மாத முதலில் ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேசாசலம் காடுகளில் நடைபெற்ற "எதிர் மோதல்" என காவல் துறை கூறும் நிகழ்வில், 20 ஏழைத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது பற்றி நம்முடைய மே மாத இதழில் நாம் ஏற்கெனவே எழுதியிருக்கிறோம்.

மேலும் மேலும் பல உண்மைகள் வெட்ட வெளிச்சமாக, இந்தக் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி எதிர்மோதல்கள் என்பது மென்மேலும் தெளிவாகி வருகிறது. நாட்டின் பல்வேறு பாகங்களிலும், இப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஈடுபடுவது காவல் துறைக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் வழக்கமாகி வருகிறது. துயரத்தில் வாடும் இறந்த தொழிலாளர்களுடைய உறவினர்களும், பல்வேறு அமைப்புக்களுடைய செயல்வீரர்களும் இந்தக் கொலைகளுக்கு பின்னால் உள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்காக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இறந்த உடல்கள் மீது தீக் காயங்களும், சித்தரவதை செய்யப்பட்டதற்கான பிற அடையாளங்கள் இருப்பதையும், கால் பாதங்கள் வெட்டப்பட்டிருப்பதையும், மூக்கு வெட்டப்பட்டு நீக்கப்பட்டிருப்பதையும், பற்கள் உடைக்கப்பட்டிருப்பதையும், கண்டிருக்கிறார்கள். இவை, பலியானவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பிடிக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

மும்பை உயர் நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ஓஸ்பெட் சுரேஷ் அவர்கள் தலைமையில் சென்ற எட்டு உறுப்பினர்களைக் கொண்ட உண்மை அறியும் குழு, இதை காவல் துறையின் பயங்கரவாதச் செயலென்றும், கொல்லப்பட்டவர்கள் வேறு இடத்தில் கொல்லப்பட்டு, ஒரு எதிர் மோதல் நடைபெற்றது போன்ற நாடகத்தை நிகழ்த்துவதற்காக, அவர்களுடைய உடல் காட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தீர்மானிக்கிறது. தடவியல் நிபுணர்களும் வல்லுனர் குழுவும், அவர்கள் மீதுள்ள சித்தரவதை அடையாளங்களை அழிக்க உடல்கள் பல மணி நேரங்கள் வெயிலில் காய விடப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். காவல் துறைக்கு எதிராக ஐபிசி பிரிவு 302 கொலையின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டுமென ஐதிராபாத் உயர் நீதி மன்றத்தின் ஆணையைச் சுட்டிக்காட்டி, சம்மந்தப்பட்ட காவல் துறைக்கு எதிராக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டுமென நீதிபதி சுரேஷ் வலியுறுத்தியிருக்கிறார்.

உண்மை அறியும் குழுவின் எட்டு உறுப்பினர்களில் ஒருவரும், தேசிய மனித உரிமைக் குழுவின் (NHRC) முன்னாள் உறுப்பினரும் ஆகிய சத்தியபராட்டா பால், இந்த "எதிர்மோதலை" திட்டமிட்ட, கொடூரமான கொலை என்று குறிப்பிட்டுள்ளார். தேசிய மனித உரிமைக் குழுவின் ஒரு உறுப்பினராக தான் இருந்தபோது, நூற்றுக் கணக்கான வழக்குகளைத் தான் பார்த்திருப்பதாகவும், ஆனால் இப்படிப்பட்ட கொடூரமான மனிதாபிமானமற்ற கொலையைத் தான் சந்தித்ததில்லை என்றும் கூறியிருக்கிறார்.

ஒரு எதிர் மோதலில் வழக்கத்திற்கு மாறாக, எந்தவொரு தொழிலாளியும் அடிபட்டு உயிர் பிழைக்காதது எப்படி என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். 20 பேர்கள் கொல்லப்பட்ட இந்த "எதிர் மோதலில்", நடந்ததைச் சொல்ல ஒருவர் கூட அடிபட்டு பிழைக்கவில்லை.

"20-30 வயதுள்ள 13 பெண்கள் இப்போது விதவையாக்கப்பட்டுள்ளனர். இந்த இளம் விதவைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் வயதாகிய பெற்றோருக்கும் என்ன எதிர்காலம்?" என்று நீதிபதி ஓஸ்பெட் சுரேஷ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பலியானவர்களின் சிலருடைய தோல் வழக்கத்திற்கு மாறாக கருப்பாக இருக்கிறது. சிலருடைய உடல் எரிக்கப்பட்டது போல, உடலில் தோலே இல்லை என வழக்குறிஞர் பி.எஸ். அஜிதா அறிவித்திருக்கிறார். இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜீவஹரியுலா, ஐஎஸ்ஐஎஸ் நடத்திய கொடுமைகளைக் காட்டிலும் ஆந்திரப் பிரதேச காவல்துறையின் செயல்கள் கொடூரமானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

20 தொழிலாளர்கள் ஆந்திரப் பிரதேச காவல்துறையால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதும், 5 முஸ்லீம் இளைஞர்கள் காவலில் வைத்துக் காட்டுமிராண்டித் தனமாக தெலுங்கான காவல்துறையால் கொல்லப்பட்டிருப்பதும், நாடெங்கிலும் ஒரு எதிர்ப்பு அலையை உருவாக்கியிருக்கிறது. அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புக்களும் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்தி, அரசு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென்றும், சீருடை அணிந்துள்ள கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.

Pin It