தொழில் உறவுகளில் தொழில் நியதி சட்டம் வரைவை 2015 ஐ, தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மே 6, 2015 இல் இந்த சட்டத் திருத்தத்தை விவாதிக்க ஒரு முத்தரப்புக் கூட்டத்தை அது கூட்டியிருந்தது. முன்வைக்கப்பட்ட இந்த சட்டத்தை விமர்சித்த தொழிற் சங்கங்கள், இது பற்றி நடத்தப்படும் கலந்தாலோசனைகள் ஒரு "நாடகம்" என்று கூறினர். "சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூட்டம் (ILO) 141-இன் படி, இப்படிப்பட்ட சட்டத்தை எழுதும் போது அதில் ஆர்வம் கொண்டுள்ள எல்லா பிரதிநிதிகளையும் கூடிக் கலந்தாலோசிக்க வேண்டும். அரசாங்கம் இந்த வரைவை எங்கள் மீது திணிக்கிறது" என ஏஐடியுசி-யின் செயலாளர் தோழர் டி.எல்.சச்தேவா கூறினார். இத் திருத்தங்கள், தொழிலாளர்களுடைய உரிமைகளை மேலும் பறிக்கும் என்பதால், இவற்றை நாங்கள் கடுமையாக எதிர்ப்போமென மத்திய தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

44 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கியதாக தொழில் உறவுகள், ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன்கள் ஆகியவற்றை பற்றி, ஐந்து பரந்துபட்ட நியதிகளாக தொழில் உறவுகளில் தொழில் நியதி சட்டம் 2015 வரைவு தற்போதைய பாஜக அரசாங்கத்தின் முன்முயற்சிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமானது, தொழிற் தகராறுகள் சட்டம் 1947, தொழிற் சங்க சட்டம் 1926 மற்றும் தொழிற்சாலை வேலை (நிலையான உத்தரவுகள்) சட்டம் 1946 ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

முன்பிருந்த சட்டங்களிலிருந்து இதில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் என்ன?

இதில் இரண்டு முக்கிய மாற்றங்கள் உள்ளன.

முதலாவது, தொழிற் சங்கங்கள் பதிவு பற்றியதாகும். இது வரை எந்த ஏழு தொழிலாளர்களும் கூடி ஒரு தொழிற் சங்கத்தை அமைக்கலாம். இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருமானால், தொழிற்சாலை அல்லது நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்த பட்சமாக 10 சதவிகிதத் தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஒரு தொழிற்சாலையில் 1000 தொழிலாளர்கள் இருப்பார்களேயானால், ஒரு தொழிற் சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சமாக 100 தொழிலாளர்களாவது அதனுடைய உறுப்பினர்களாக ஆக வேண்டும். "வெளியாட்கள்" எனப்படும் தொழிற் சாலையில் வேலையில் இல்லாத தொழிற் சங்கவாதிகள், தொழிற் சங்கத்தின் உறுப்பினர்களாக ஆக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது முதலாளிகளுடைய வெகு நாளைய கோரிக்கையாகும். நமது நாட்டில் குறிப்பாக தனியார் துறையில், ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கும் பணியானது எவ்வளவு கடினமானது என்பது, தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தெரியும். தொழிலாளர்கள் ஒரு தொழிற் சங்கத்தை அமைப்பதற்காக முயன்று வருகிறார்களென கம்பெனி நிர்வாகத்திற்கு தெரிய வந்தவுடன், அந்தத் தொழிலாளர்கள் ஒழுங்கை மீறிவிட்டதாகவோ அல்லது வேறு ஏதாவதொரு காரணம் காட்டி வேலையிலிருந்து தூக்கியெறியப்படுவார்கள். அரசாங்கத்தின் தொழிலாளர் துறை அதிகாரிகளும் தொழிலாளர்கள் தொழிற் சங்கம் அமைப்பதற்கு உதவுவதற்கு பதிலாக அவர்களைத் தடை செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சி நடக்கிறது என்பதை கம்பெனி நிர்வாகத்திற்குக் காட்டிக் கொடுப்பதன் மூலம், மேலும் பல அதிகாரிகள் தொழிற் சங்கம் அமைக்கும் முயற்சியை அழிக்கிறார்கள்.

இது கடுமையாக சுரண்டப்படும் சிறு நிறுவனங்களில் மட்டும் நடப்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்களிலும் இதுவே உண்மையாகும். மானேசரில் உள்ள மாருதி சுசூகி தொழிலாளர்கள், தொழிற் சங்கம் அமைப்பதில் சந்தித்துவரும் கடுமையான பிரச்சனைகளை நமது நாட்டினுடைய தொழிலாளி வர்க்க இயக்கம் அறியும். இதே நிலை தான் சிரிபெரும்புதூரில் உள்ள உண்டாய், மறைமலை நகரில் உள்ள போர்டு தொழிலாளர்களும், பிற பன்னாட்டு நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்களும் சந்தித்து வருகிறார்கள். இப்படி, தங்களுக்குப் பிடித்த தொழிற் சங்கத்தை அமைக்கும் உரிமை, அண்மை ஆண்டுகளில் இந்தியத் தொழிலாளர்களின் ஒரு பெரிய போராட்டக் களமாக ஆகியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக வேலை செய்யும் மத்திய அரசாங்கம், தொழிலாளர்கள் தங்களை ஒரு தொழிற் சங்கத்தில் அணிதிரட்டிக் கொள்ளும் உரிமையை நடைமுறையில் மறுக்க வேண்டுமென்ற ஏகபோகங்கள் மற்றும் முதலாளி வர்க்கத்தின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது தான் தொழிற் சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் கொண்டுவரப்பட இருக்கும் மாற்றத்தின் சாராம்சமாகும்.

முந்தைய தொழிற் சட்டத்தில் கொண்டு வரப்படும் இரண்டாவது முக்கிய மாற்றமானது, தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும், நிறுவனங்களை மூடுவதற்கும் உள்ள அதிகாரம் பற்றியதாகும். முன்பிருந்த தொழிற் தகராறுகள் சட்டத்தின்படி, ஒரு தொழிற் சாலை அல்லது நிறுவனத்தில் 100-க்கு மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை செய்வார்களானால், அந்த நிறுவனம் அரசாங்கத்தின் அனுமதியின்றி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவோ, மூடவோ முடியாது என்பதாகும். தற்போது இந்த வரையறையை 300 தொழிலாளர்களென உயர்த்தப்படுகிறது.

தொழிற்சாலை உடமையாளர்கள் வேலை நீக்கம் செய்யவோ, மூடிவிடவோ தீர்மானித்துவிட்டால், அதைத் தடுப்பதற்கு தொழிலாளர்கள் மிகவும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது என்பது நன்கு தெரிந்ததே. இருந்தபோதிலும், தொழிற் தகராறுகள் சட்டத்தின் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி சில தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு, தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். இந்தத் திருத்தத்தினால், குறிப்பாக 300-க்கும் குறைவான எண்ணிக்கையுடைய தொழிற்சாலைகளில் வேலை நீக்கம் செய்வதும், மூடுவதும் முதலாளிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

"தற்போதைய தேவைகளுக்கு" ஏற்ப இந்தத் திருத்தங்கள் இருப்பதாக, இந்தச் சட்ட மாற்றங்களை நியாயப்படுத்தி தொழிலாளர் துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் பேசியிருக்கிறார். இந்தியாவில் முதலீடு செய்யும் போது, தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படுவதன் மூலமும், அவர்களுடைய எல்லா உரிமைகளும் மறுக்கப்படுவதன் மூலமும், அதிகபட்ச இலாபத்திற்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டுமென இந்திய மற்றும் அயல்நாட்டு மிகப் பெரிய முதலாளிகளுடைய கோரிக்கைதான் இது. இந்தியாவில் முதலீடு செய்யவும், தொழிற் சாலைகளை இங்கு நிறுவ வேண்டும் என்பதற்காகவும், இந்திய மற்றும் அன்னிய பெரும் ஏகபோக முதலாளிகளைக் ஈர்க்க வேண்டுமென ஆளும் வர்க்கம் எல்லாவற்றையும் செய்து வருகிறது. இதற்கு வழி வகுப்பதற்காக, நில கையகப்படுத்தும் சட்டத்திற்கும், நம்முடைய இயற்கை வளங்களையும், சுற்றுப்புறத்தையும் பற்றிய பிற சட்டங்களுக்கும் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசாங்கம் முயற்சிக்கிறது.

தொழில் உறவுகள் பற்றிய வரைவுச் சட்டத்தை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் முழுமையாக கண்டிக்கிறது. உழைக்கும் வர்க்க உரிமைகள் மீது முதலாளி வர்க்கத் தாக்குதல்களை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். தொழிலாளர்களுடைய வாழ்வுரிமை மீதும், உரிமைகள் மீதும் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களுக்கு எல்லா தொழிற் சங்கங்களும், தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புக்களும் ஒன்றுபட்டு சரியான பதிலடியைத் தரவேண்டுமென தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

Pin It