ஒரு சமூகம் உயிர்த்திருக்கவும், தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் தினசரி பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. ஒரு நாட்டில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதொழில், குடிசைத் தொழில், சுரங்கத் தொழில், தொழிற்சாலைகளில் தளவாடங்கள், எந்திர பாகங்களை உற்பத்தி செய்தல் என பல்வேறு விதமான பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த பொருளாதார நடவடிக்கைகளை உற்பத்தி நடவடிக்கைகள் என்றும் மறுவுற்பத்தி நடவடிக்கைகள் என்றும் குறிப்பிடலாம்.
ஒரு சமூகம் உற்பத்தி செயல்பாடுகளை மீண்டும் தொடர்வதற்குத் தேவையான பொருளாயத நிலைகளையும், உற்பத்தி உறவுகளையும் தொடர்ந்து உருவாக்குவதே மறுவுற்பத்தி என அழைக்கப்படுகிறது.பொருளாயத நிலைகள் என்பது விவசாயம் தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்கள், உற்பத்தி சாதனங்களான எந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. உற்பத்தி உறவுகள் என்பது சமூக உற்பத்தியில் ஈடுபடும் போது சமூகத்தின் உறுப்பினர்களுக்கிடையே காணப்படும் சமூக, பொருளாதார உறவுகளைக் குறிப்பிடுகிறது. உற்பத்தியாளர்களுக்கும், உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களுக்கும் இடையிலான உறவு. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், சேவைகளை விநியோகிக்கும் (பங்களிக்கப்படும்) போது சமூகத்தின் வெவ்வேறு தரப்பினர் அதில் எவ்வளவு பங்கை பெறுகின்றனர் என்பதையும் உற்பத்தி உறவுகளே நிர்ணயிக்கிறது.
முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளராக முதலாளி வர்க்கம் உள்ளது. உற்பத்தி சாதனம் இல்லாததாக உழைக்கும் வர்க்கம் உள்ளது. ஆனால் உழைக்கும் வர்க்கமே உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகிறது. உழைப்பாளர்கள் தன் உழைப்பிற்கான முழு ஊதியத்தையும் பெறுவதில்லை. உழைப்பாளர்களின் வேலை நேரத்தில் உழைப்புச்சக்தியை ஈட்டுவதற்கான நேரம் போக எஞ்சிய நேரத்தில் செய்யப்படும் ஊதியமற்ற உழைப்பையும் அதன் மூலம் உருவாக்கப்படும் சரக்குகளையும் முதலாளி வர்க்கத்தால் தனதாக்கப்படுகிறது. இதுவே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. உழைப்புச் சக்தியை மீட்பதற்கு அவசியமான பொருட்கள்/சேவைகளை வாங்குவதற்குத் தேவையான பணமே கூலி எனப்படுகிறது. ஒரு சமூகத்தில் உழைப்பின் மூலமே புதிய மதிப்பு உருவாக்கப்படுகிறது. சமூகத்தின் மொத்த உற்பத்திப் பொருட்களும், வருவாயும் சமூகத்தின் அங்கத்தினரிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. உழைப்பில் ஈடுபட்டவர்கள் மட்டுமே வருவாய் பெறுவதில்லை. முதலாளித்துவத்தைப் போன்ற வர்க்க சமூகத்தில் உழைப்புச் சுரண்டல் நிகழ்வதால் உழைக்கும் வர்க்கம் அவர்களின் உழைப்பின் மதிப்பை விட குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். அவர்களால் உருவாக்கப்பட்ட உபரி மதிப்பு லாபமாகவும், வட்டியாகவும், வாடகையாகவும் முதலாளிகளுக்கும், நிதி முதலாளிகளுக்கும், நிலவுரிமையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒரு சமூகத்தில் பொருட்களும், சேவைகளும் ஏற்கெனவே இருந்த அளவிற்கே மீண்டும் உற்பத்தி செய்யப்படுமானால் அது எளிய மறுவுற்பத்தி எனப்படுகிறது. எளிய மறுவுற்பத்தியில் ஏற்கெனவே இருந்த அளவிலே பொருளாதாரம் நிலைநிறுத்தப்படுவதால் அது பொருளாதார வளர்ச்சியைக் குறிக்காது. சமூகத்தில் பொருட்களும், சேவைகளும் ஏற்கெனவே இருந்த அளவைக் காட்டிலும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்படுமானால் அது விரிவாக்கப்பட்ட மறுவுற்பத்தி எனப்படுகிறது. அது பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. ஒரு பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன் வளர வளர உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சேவைகளின் அளவும் அதிகரிக்கிறது.
பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவதற்குப் பல்வேறு குறியீடுகள் உள்ளன. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் ஏற்படும் வளர்ச்சியே பொதுவாக பொருளாதார வளர்ச்சியாக கருதப்படுகிறது.
ஒரு நாட்டில் ஓராண்டு காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள், சேவைகள் அனைத்தையும் கணக்கிடுவதன் மூலம் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு அளவிடப்படுகிறது.
ஒரு நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமைகளாக தொழிற்சாலை, அரசு நிறுவனம், வங்கித்துறை என பல்வேறு அலகுகள் செயல்படுகின்றன. அரசமைப்பைச் சார்ந்த பொதுத்துறை அமைப்புகள், நிறுவனங்களும், தனியார் துறையைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
அரசு நேர்முக வரி, சுற்றடி வரி மூலம் பெறும் வருவாயை சமூகத்தில் மறுவிநியோகம் செய்கிறது, நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கிறது. குடிமக்களுக்கு சமூகத்திட்டங்களின் மூலம் சேவைகளை வழங்குகிறது. சுகாதாரம், பாதுகாப்பு சேவைகளை அளிக்கிறது. அவை சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதில்லை; மாறாக அவை குடிமக்களால் கூட்டாக நுகரப்படுகின்றன அரசின் வரி வருவாயிலிருந்து இதற்கான நிதி பெறப்படுகிறது. அரசின் வரி வருவாயிலிருந்து நிறுவனங்களுக்கு மானியத்தொகை அளிக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை, வேலையின்மைக்கான உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் ஆகியவையும் அரசின் வருவாயிலிருந்து அளிக்கப்படுகிறது.
ஒரு தேசத்தின் பொருளாதாரம் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் போன்ற பல்வேறு தரப்பினரின் பொருளாதார நடவடிக்கைகளின் உதவியுடன் இயங்குகிறது. ஒரு நுகர்வோர் ஒரு கடையில் விற்பனையாளரிடம் 1 கிலோ அரிசியை வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அப்போது சரக்கான அரிசி விற்பனையாளரிடமிருந்து நுகர்வோருக்கு கைமாறுகிறது. சரக்குகள் உற்பத்தியாளரிடமிருந்து, விற்பனையாளருக்கும், அதன் பிறகு விற்பனையாளரிடமிருந்து நுகர்வோருக்கும் கைமாறும் போது, பணம் விற்பனையாளரிடமிருந்து உற்பத்தியாளருக்கும், நுகர்வோரிடமிருந்து விற்பனையாளருக்கும் கைமாறுகிறது. சரக்குகளின் ஓட்டத்திற்கு எதிர்த் திசையில் பணத்தின் ஓட்டம் உள்ளது.எளிதாக புரிந்து கொள்வதற்காக இவ்வாறு கூறலாம்; தொழிற்சாலையிலிருந்து வீடுகளை நோக்கி சரக்குகளின் ஓட்டம் உள்ளது. வீடுகளிலிருந்து தொழிற்சாலைகளை நோக்கி பணத்தின் ஓட்டம் உள்ளது. ஒரு நாட்டின் பல்வேறு முனைகளில் நடைபெறும் இந்தச் சரக்குகளின் ஓட்டத்தை அளவிட்டுத் தொகுப்பதன் மூலம் ஒரு நாட்டின் மொத்தப் பொருளாக்க மதிப்பு கணக்கிடப்படுகிறது, பல்வேறு முனைகளில் நடைபெறும் பணத்தின் ஓட்டத்தை அளவிட்டு தொகுப்பதன் மூலம் ஒரு நாட்டின் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
உற்பத்தியின் போது மூலப்பொருட்கள்/உள்ளீட்டுப் பொருட்களின் மதிப்புடன் உழைப்பின் மூலம் புதிய மதிப்பு கூட்டப்படுகிறது.இதுவே மதிப்புக் கூட்டல் எனப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் பொருளில் தொழிலாளரால் சேர்க்கப்படும் புதிய உழைப்பின் மதிப்பும், எந்திரங்களின் மூலம் சேர்க்கப்படும் பழைய இறுகிய உழைப்பின் மதிப்பும் அதனுடன் சேர்க்கப்படுகிறது. ஒரு நாட்டில் ஒரு வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் போது சேர்க்கப்பட்ட மொத்த மதிப்புக் கூட்டலின் அளவைக் கணக்கிடுவதன் மூலம் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு அளவிடப்படுகிறது.
ஒரு நாட்டில் மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும், சேவைகளும் விற்பனை செய்யப்படும் போது பெறப்படும் வருவாய் பல்வேறு தரப்பினருக்கும் விநியோகிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் கூலியைப் பெறுகின்றனர். நில சொந்தக்காரர், நில வாடகையைப் பெறுகிறார், முதலாளி லாபம் பெறுகிறார், கடன் அளித்தவர் வட்டி பெறுகிறார். இந்த பல்வேறு தரப்பினரும் பெரும் வருவாய்களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவதன் மூலமும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பை அளவிட முடியும்.
நாட்டின் குடிமக்கள் தாங்கள் பெற்ற வருவாயை தினசரி நுகர்வுக்காகவும், புதிய முதலீடுகளுக்காகவும் செலவிடுகின்றனர்.தொழிலாளர் தான் பெற்ற கூலியை தன் குடும்பத்திற்குத் தேவையான உணவுக்காகவும், வீட்டு வாடகைக்காகவும், இதர அத்தியாவசியப் பொருட்கள் சேவைகளுக்காகவும் செலவிடுகிறார். முதலாளி, தன் லாபத்தின் ஒரு பகுதியை தினசரி நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள், ஆடம்பரப் பொருட்களுக்காக செலவிடுகிறார். லாபத்தின் மற்றொரு பகுதியை தொழில் நடவடிக்கைகளைத் தொடரவும், விரிவுபடுத்தவும் தேவையான முதலீடுகளை செய்வதற்காகவும் செலவிடுகிறார், லாபத்தின் இன்னொரு பகுதியை வருங்கால செலவுகளுக்காவும், முதலீடுகளுக்கான மூலதனத்தைத் திரட்டுவதற்காகவும் சேமிக்கிறார். ஒரு நாட்டின் பல்வேறு தரப்பினரும் மேற்கொள்ளும் மொத்த செலவுகளின் கூட்டுத் தொகையைக் கணக்கிடுவதன் மூலமும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பைக் கணக்கிட முடியும்.
ஆகவே மூன்றுமுறைகளில் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பை அளவிட முடியும்.ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், சேவைகளில் சேர்க்கப்பட்ட புதிய மதிப்புக் கூட்டலை அளவிடும் உற்பத்தி முறையின் மூலமும், நாட்டின் குடிமக்களின் மொத்த வருவாயைக் கணக்கிடும் வருவாய் முறையின் மூலமும், நாட்டின் பல்வேறு தரப்பினரும் மேற்கொள்ளும் மொத்த செலவுகளை அளவிட்டு ஒரு நாட்டின் மொத்தப் பொருளாக்க மதிப்பைக் கணக்கிட முடியும். ஆகவே உற்பத்தி முறை, வருவாய் முறை, செலவீட்டுமுறை என மூன்று முறைகளின் மூலமும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பையும், தேசியவருவாயையும் கணக்கிடமுடியும்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் தனக்குள் மட்டும் பரிவர்த்தனை செய்து கொள்ளும் மூடிய அமைப்பாக இருப்பதில்லை, வெளிநாடுகளுடனும் பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறது.ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முழுவதும் அந்த நாட்டிலே நுகரப்படவேண்டும் என்ற அவசியமில்லை. உற்பத்திப் பொருட்களில் ஒரு பகுதி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம்.அதன் மூலம் அந்நாடு ஏற்றுமதி வருவாயைப் பெறும். அதே போல் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டும் தான் குடிமக்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெளிநாடுகளிலிருந்து பொருட்களும் சேவைகளும் இறக்குமதி செய்யப்பட்டு நிறுவனங்களாலும், இல்லங்களாலும் பயன்படுத்தப்படலாம்.
பொருளாதாரம் சர்வதேசத் தொடர்புகளுடன் திறந்த அமைப்பாக இருப்பதால் ஒரு நாடு உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து மட்டும் வருவாய் பெறுவதில்லை. அந்நாட்டின் குடிமக்கள் தற்காலிகமாக, ஒரு வருடம் வரை பணி நிமித்தம் வெளிநாடு சென்று பெறும் வருவாயும் தேசிய வருவாய் கணக்கில் சேர்க்கப்படும். வெளிநாடுகளிலிருந்து பணி நிமித்தமாக நம் நாட்டில் வேலை செய்பவர்கள் பெறும் வருவாய் வெளி நாட்டு வருவாய் கணக்கில் சேர்க்கப்படும். இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடே வெளி நாட்டிலிருந்து பெறும் நிகர வருவாயாக கணக்கிடப்படும். வெளிநாட்டிலிருந்து பெறும் வருவாய் அதிகமாக இருக்கும் போது இதன் மதிப்பு நேர்நிறையாகவும், நம் நாட்டிலிருந்து வெளி நாட்டுக்கு அளிக்கும் வருவாய் அதிகமாக இருக்கும் போது எதிர்மறையாகவும் இருக்கும்.
ஒரு நாட்டில் குடும்பங்களும், தனியாட்களும் தங்கள் வருவாய் முழுவதும் நுகர்வுச் செலவிற்கு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. அதில் ஒரு பகுதி வங்கிகளில் சேமிக்கப்படலாம். குடும்பங்கள், நிறுவனங்களின் உபரி பணம் வங்கிகள், நிதி நிறுவனங்களில் சேமிக்கப்படுகிறது. பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் சேமிப்புகள் முதலீடுகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து பெறும் மூலதனத்தைக் கொண்டும் ஒரு நாட்டில் முதலீடுகள் செய்யப்படலாம். வெளிநாடுகளிலிருந்து பெறும் நிகர மூலதன வரவு நேர்நிறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம். உலகின் பிற நாடுகளில் இருந்து கடன் வாங்குவது அதிகமாக இருக்கும் போது இதன் மதிப்பு நேர்நிறையாகவும், உலகின் பிற பகுதிகளுக்கு கடன் வழங்குவது அவற்றிடம் கடன் வாங்குவதை விட அதிகமாக இருக்கும் போது எதிர்மறையாகவும் இருக்கும்.
பொருளாதாரத்திற்குள்ளும், வெளி நாட்டிலிருந்தும் பெறப்படும் சேமிப்புகளை உள்நாட்டின் மூலதன உருவாக்கத்திற்குத் தான் பயன்படுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை, அதை வெளி நாடுகளில் முதலீடு செய்வதற்கும் பயன்படுத்தலாம். வெளிநாட்டு நிகர முதலீட்டின் மதிப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். வெளி நாட்டில் முதலீடு செய்யப்படும் மூலதனத்தின் அளவு, வெளிநாட்டால் உள்நாட்டில் செய்யப்படும் மூலதனத்தை விட அதிகமாக இருக்கும் போது இதன் மதிப்பு நேர்மறையாகவும், வெளிநாட்டில் முதலீடு செய்யப்படும் மூலதனத்தின் மதிப்பு, வெளிநாட்டால் உள்நாட்டில் செய்யப்படும் மூலதனத்தை விட குறைவாக இருக்கும் போது எதிர்மறையாகவும் இருக்கும்.
வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கும் பணம் அனுப்பப்படலாம். இது ஒரு தலைப்பட்சமான பண மாற்றம் எனக் குறிப்பிடப்படுகிறது. அதே போல் நம் நாட்டிலிருந்தும் பிற நாடுகளுக்கு ஒரு தலைப்பட்சமாக பணம் அனுப்பப்படலாம். இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு உலகின் பிறபகுதிகளிலிருந்து பெறும் நிகர பணமாற்றல் எனப்படுகிறது.
ஒரு நாட்டின் மொத்தப் பொருளாக்க மதிப்பும், தேசிய வருவாயும் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு நாட்டில் உற்பத்தி, மறுவுற்பத்தி ஆகியவை தொடர் செயல்முறையாக உள்ளன. உற்பத்தி செயல்பாடுகளிலிருந்து வருவாய் பெறப்படுகிறது, வருவாயிலிருந்து செலவு செய்யப்படுகிறது. செலவுகளின் ஓட்டம் மீண்டும் உற்பத்தி ஓட்டத்தை உருவாக்குகிறது. உற்பத்தி, வருவாய், செலவு ஆகியவை ஒன்றிணைந்த இந்த பொருளாதார சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரும் செயல்முறையாகிறது. ஒரு நாட்டின் உற்பத்தி, வருவாய், செலவு ஓட்டங்களை அளவிடுவது தேசிய வருவாயை அளவிடுவதற்கான மூன்று முறைகளை அளிக்கின்றன.
ஒரு பொருளாதாரத்தின் தேசிய வருவாயை அளவிட மூன்று முறைகள் உள்ளன. அவை:
1) உற்பத்தி முறை அல்லது மதிப்பு கூட்டப்பட்ட முறை,
2) வருவாய் முறை, மற்றும்
3) செலவு முறை.
தேவையான முழு புள்ளிவிவரங்களும் கிடைக்குமானால் இந்த மூன்று முறைகளின் மூலம் அளவிடப்படும் போதும் தேசிய வருவாயின் மதிப்பு ஒரே அளவாக இருக்கும். ஆனால் உண்மையில் அனைத்து தரவுகளும் கிடைக்காமல் போவதால் இந்த மூன்று முறைகளையும் கலந்து பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
ஒரு பொருளாதாரத்தின் தேசிய வருவாயை அளவிடுவதற்கான முதல் படி பொருளாதாரத்தை பல்வேறு தொழில் வகைகளாக பிரிப்பதாகும். ஒரு தேசத்தின் பொருளாதாரம் விவசாயம், சுரங்கம், மரம் வெட்டுதல், உற்பத்தி, கட்டுமானம், நிலத்தரகு, அரசு சேவைகள், போக்குவரத்து சேவைகள், வணிக சேவைகள் எனப் பல தொழில் வகைகளாக பிரிக்கப்படும்.
தரவு கிடைக்கும் தன்மையைப் பொறுத்து எந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் உற்பத்தி புள்ளிவிவரங்கள் எளிதாகக் கிடைக்கும், ஆகவே உற்பத்தி அல்லது மதிப்பு கூட்டல் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் துறைகளின் பங்களிப்பு கண்டறியப்படுகிறது. கட்டுமானத் துறையில் செலவீடுகளுக்கான புள்ளிவிவரங்கள் மிகவும் எளிதாகக் கிடைக்கிறது என்பதால் தேசிய வருவாயில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு
செலவு முறையைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகிறது. இந்த இரண்டிற்கும் மாறாக, கட்டுமானத் துறைக்கு உற்பத்தி முறை, செலவீட்டு முறை இரண்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இறுதியாக, சேவைத் துறைக்கு, வருவாய் புள்ளிவிவரங்கள் மிகவும் எளிதாகக் கிடைக்கும், என்பதால் வருமான முறையின் அடிப்படையில் தேசிய வருவாயில் சேவைத் துறையின் பங்களிப்பு மதிப்பிடப்படுகிறது.
- சமந்தா