கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

seeman 238இன்று 2021 ஏப்ரல் 2 இந்து தமிழ் திசை நாளிதழில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமானின் பேட்டி வெளி வந்துள்ளது. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்பதுதான் தலைப்பு. சீமானிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் விளக்கங்கள் இந்தப் பேட்டியில் கிடைக்கின்றனவா என்று படித்துப் பார்த்தேன்.

”இந்த இனம் இப்படி அதிகாரம் அற்று இருக்குங்கிறதுதான் வரலாற்று முரணா இருக்கு” என்று பேட்டியின் தொடக்கத்திலேயே சீமான் சொல்கிறார். உண்மை, தமிழ்த் தேசிய இனம் இந்தியாவில் அடிமைப்பட்டுள்ளது. 

இந்திய அரசமைப்பில் அது இறைமையற்று இருக்கிறது. சீமான் இதைத் தெளிவாக ஏற்றுக் கொள்கிறார். அடிமைப்பட்ட இனம் விடுமை பெறுவதற்கு, இறைமையற்ற இனம் இறைமை ஈட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வினாவிற்கு விடை எதிர்பார்த்து மேலும் படிக்கிறோம்.

“உங்களுடைய நாம் தமிழர் கட்சியின் இலக்கு என்ன? கடைசியாக அண்ணா விட்டுச் சென்ற கூட்டாட்சி எனும் புள்ளியின் தொடர்ச்சியா? அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் தொடக்கப் புள்ளியான தனிநாடு கனவா?” என்று பேட்டி கண்ட சமஸ் கேட்கிறார்.  நாம் தமிழர் கட்சியின் இலக்கு என்ன? என்று தெரிந்து கொள்ள ஆவலாய் சீமானின் விடையைப் படிக்கிறோம்.

இந்த முகன்மைக் கேள்விக்கு சீமானின் விடை “தனிநாடு அல்லது சுயாட்சி அதுஇதுன்லாம் நான் பேசப் போறதில்லை. என் இனத்துக்குத் தேவை அதிகாரம்.”

தனிநாடு என்றும் சொல்லப் போவதில்லை, சுயாட்சி என்றும் சொல்லப் போவதில்லை என்கிறார். ஆனால் அதிகாரம் தேவை என்கிறார். தேசிய விடுதலை என்றோ தேசிய இறைமை என்றோ அவர் சொல்லவில்லை. அப்படியானால் அதிகாரம் என்று எதைச் சொல்கிறார்?

” ’யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’ அப்படிச் செய்வோம்!” என்கிறார். ’மத்தியில் சுட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்பது அண்ணா முன்வைத்த முழக்கம். எல்லா தேசிய இனங்களுக்கும் அதுதான் சரி” என்றும் சொல்கிறார்.

அம்பேத்கரை நிறைய படித்து வரும் தோழர் சீமான் இந்தக் கூட்டாட்சி முன்மொழிவு குறித்து அண்ணல் என்ன சொன்னார் என்பதையும் தெரிந்து கொள்ளலாமே?

ஆக, இந்தியாவையே கூட்டாட்சியாக மாற்றுவதன் மூலம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போல் இந்திய ஐக்கிய நாடுகள் அமைப்பது,  தமிழ்த் தேசிய இனத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் அடங்கிய அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயாட்சி பெறுவது! இதுதான் நாம் தமிழர் கட்சியின் இலக்கு என்று புரிந்து கொள்கிறோம்.

இந்த இலக்கை நோக்கித்தான் நாம் தமிழர் கட்சி பயணம் செய்கிறது என்றால், அது எப்படித் தமிழ்த் தேசியம் ஆகும் என்று விளங்கவில்லை. இந்த இலக்கை நோக்கிய பயணப் பாதை எதையும் சீமான் வரைந்து காட்டவும் இல்லை; அவரது கட்சி ஆவணங்களிலும் இதற்கு விளக்கம் கிடைக்கவில்லை.

அதிகாரம் என்று சீமான் சொல்வது என்ன?

“இப்போதுள்ள ஆட்சிமுறையில் மாநில உரிமைகள் பறிபோய்க்கிட்டே இருக்கு. வட இந்தியர்கள்தான் முதன்மை அமைச்சர்கள் ஆக முடியும்ங்கிற சூழல் போதாதா, இங்குள்ள அக்கிரமச் சூழலைச் சொல்ல? இந்த நிலை மாற்றப்படணும். என் மக்களுக்கும் அதிகாரம் வேணும் இதைத்தான் நான் பேசுறேன்.”

தமிழ்த் தேசிய இனத்துக்கு அதிகாரமில்லை என்பதற்கு அவர் கொடுக்கும் ஒரு சான்று: வட இந்தியர்கள்தான் முதன்மை அமைச்சர்கள்  (தலைமையமைச்சர்கள் அல்லது பிரதமர்கள்) ஆக முடியும்: என்கிற அக்கிரமச் சூழல்! வட இந்தியர்களுக்கு மாறாக தென்னிந்தியர்கள் பிரதமராகி விட்டால் தமிழினத்துக்கு அதிகாரம் வந்து விடுமா? ஆந்திரத்து நரசிம்ம ராவும் கர்நாடகத்து தேவ கௌடாவும் பிரதமர்கள் ஆன போது என்ன மாற்றங்கள் வந்தன? இந்திக்கு மாறாகத் தெலுங்கு அல்லது கன்னடம் ஆட்சிமொழியாகி விட்டதா?

2019 பாராளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு என்ற ஆவணத்தில் ’அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம்’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி அதிகாரம் பற்றிய தன் புரிதலை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய வல்லரசியம் (ஏகாதிபத்தியம்) தமிழ்த் தேசத்தையும் பிற தேசங்களையும் அடிமைப்படுத்தியுள்ளது என்ற பார்வையே நாதகவுக்கு இல்லை, யார் பிரதமர் என்ற பார்வையோடு அது தன்னைக் குறுக்கிக் கொள்கிறது என்பதே இந்த ஆவணத்திலிருந்து தெளிவாகிறது. இதற்கு அது சொல்லும் தீர்வு பிரதமர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்வதுதான்! சரி, இதற்கும் கூட அரசமைப்புச் சட்ட்த்தைத் திருத்த வேண்டுமே, அதற்கு என்ன வழி?

இந்த ஆவணம் இந்தியாவின் இறையாண்மை பற்றி அக்கறைப்படுகிறதே தவிர தமிழ்த் தேச இறையாண்மை பற்றிய கவலை துளியும் இல்லை. தமிழ்த் தேச இறைமைக்கு மாற்றாக சுழற்சி முறையில் பிரதமர் என்ற கற்பனைத் திட்டத்தை முன்வைக்கிறார் சீமான். 

அந்த ஒரு திட்டம் நிறைவேறவும் கூட தில்லி அரசோடு தமிழ்த் தேசம் புதிதாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஒப்பந்தம் செய்யக் கோருவதானால் அதற்கு முன் இறைமை பெற வேண்டும்.

இந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் அடிமை முறி என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் கருதுகிறது. தமிழ்த் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட மற்றத் தமிழ்த் தேசிய அமைப்புகளின் கருத்தும் இதுதான். 

தோழர் சீமான் என்ன கருதுகிறார்? இந்திய அரசமைப்பு தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட தேசிய இனங்களின் அடிமைமுறி என்று கருதவில்லை என்றால் தெளிவாகச் சொல்லி விடுங்கள். இந்திய அரசமைப்பு என்ற ஒன்றையே கண்டுகொள்ளாமல் தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கின்றீர்களா?.

தமிழ்த் தேசியக் குறிக்கோள்களை அடைவது இந்திய அரசமைப்புக்கு உட்பட்டா? அரசமைப்பைத் திருத்தம் செய்தா?  அரசமைப்பிலிருந்து வெளியேறியா? இந்தக் கேள்விக்கு நாதக விடை சொல்ல வேண்டும். 

அல்லது அரசமைப்பைக் கண்டுகொள்ளாமலே இந்தக் குறிக்கோள்களை அடைய முடியும் என்று அது நம்புகிறதா? சீமானின் இந்தப் பேட்டியில் இது குறித்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி என்று பேசும் போதெல்லாம் தமிழ்நாட்டின் மீதான அரசியல் அதிகாரம் என்பது இறுதிநோக்கில் தில்லி அரசிடம் இருப்பதை சீமான் அறிந்தோ அறியாமலோ மறைத்து விடுகிறார். 

தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும் என்று சீமான் ஓங்கிக் குரல் கொடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் சார்பில் நரேந்திர மோதி என்ற குசராத்தி நம்மை ஆள்வதற்கு எதிராக அவர் இப்படிச் சொல்வதில்லை. 

இந்திய அரசமைப்பின் கீழ் நாம் இருக்கும் வரை தப்பித்தவறி ஒரு பச்சைத்தமிழரே தலைமையமைச்சர் ஆனால் கூட அது தமிழர் ஆட்சியாக இருக்காது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை அயலான் ஆளக் கூடாது என்றால் இந்திய இறைமையிலிருந்து தமிழ்த்தேச இறைமையை மீட்பதற்காகப் போராட வேண்டும்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைத்தான் சீமான் திரும்பத்திரும்ப அரசதிகாரம் என்று கருதிக் கொள்கிறார். அந்தப் பதவியிலும் கூட சீமான் பார்வையில் தூய தமிழரான ஒருவர்தான் அமர வேண்டுமானால் அதற்கான சட்ட வழிவகை என்ன? தமிழ்நாட்டுக் குடிமக்கள் யார்? என்ற வரையறை இல்லாமல், இன்னார் ஆட்சிப் பொறுப்புக்கு வரலாம், இன்னார் வர முடியாது என்று சட்டம் செய்யாமல் தமிழரல்லாதார் முதலமைச்சராவதைத் தடுப்பது எப்படி? தமிழ்நாட்டுக் குடியுரிமை என்ற கோரிக்கை சீமானிடம் உள்ளதா?  குடியாட்சியம் (சனநாயகம்) என்பது சட்டத்தின் ஆட்சியே தவிர ஒரு முதலமைச்சர் தன் விருப்பம் போல் ஆட்சி செய்வதன்று என்ற அடிப்படை உணர்வே சீமானிடம் இருப்பது போல் தெரியவில்லை.

“தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும்” என்று தில்லி வல்லாதிக்கத்துக்கு எதிராக முழங்க வேண்டியவர் தில்லி வல்லாதிக்கத்துக்கு அடிபணிந்த முதல்வர் பதவிக்காகவே முழங்குகிறார். 

இந்த வகையில் அவர் நடத்தும் அரசியல் தமிழ்நாட்டுக்குப் புதியதன்று. ’திராவிட அரசியல்’ இதைதான் செய்தது. திராவிடத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு சீமானும் அதையே செய்கிறார் – செயலளவில்!

மக்களின் செயலாற்றல், அமைப்பின் தேவை எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் தனியொரு தலைவன் அல்லது தலைவியை ஏற்றிப் போற்றி அவரையே எல்லாமாக்கி விடும் நோய் திராவிட இயக்கத்திலிருந்து நாம் தமிழர் கட்சிக்குத் தொற்றியுள்ளது. சீமானே அதை வெளிப்படையாக ஊக்கப்படுத்துகிறார்.

இந்தப் பேட்டியில் அவர் சொல்கிறார்:

”எது ஒண்ணுமே சாத்தியத்திலிருந்து பிறப்பது கிடையாது தேவையிலிருந்துதான் பிறந்தது. என்னுடைய அரசியலும் அப்படித்தான். இது தமிழ் மக்களின் தேவையிலிருந்து பிறப்பது. சீமான் பிறந்தது காலத்தின் தேவை. நான் புரட்சியாளன். அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம்னு பேசுறேன்….”

இதன் உண்மைப் பொருள் என்ன தெரியுமா? சீமான் முதல்வராவது சாத்தியமா? என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள் சீமான் அப்படி இப்படிப் பேசி முதல்வராக வேண்டியது தேவை! ஏனென்றால் அவர் புரட்சியாளர்! நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்!  வாக்களிப்பது ஒன்றுதான்! மற்ற எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்வார்!

என்ன சொல்வது? தமிழ்நாட்டில் புரட்சி என்ற சொல் மீண்டும் ஒரு முறை காயப்படுகிறது.

பேட்டியின் முடிவில் சீமான் சொல்கிறார்:

(இளைஞர்கள்) “உலகநாடுகளோட தானும் தமிழ்நாடும் எங்கே இருக்கோம்னு ஒப்ப்பிடறாங்க. தமிழனுக்கு அதிகாரம் வேணும்;  அப்படின்னா டெல்லியில் உள்ள அதிகாரமும் நிர்வாகமும் உடைஞ்சு பரவலாகணும்னு கருதறாங்க. இதுக்கெல்லாம் நான் பேசுற அரசியல்தான் சரின்னு நம்புறாங்க. அடுத்த அஞ்சு வருசத்துல பாருங்க, என்னோட படைதான் தமிழ்நாட்டுலயே பெரிசா இருக்கும்!”

இளைஞர்களின் கருத்துக்கும் சீமான் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குமான முரண்பாடு எப்படித் தீர்க்கப்படப் போகிறது?  அவர்களின் கருத்துக்கு ஏற்ப நாம் தமிழர் கட்சியும் சீமானும் தங்கள் அரசியல் வழியை மாற்றிக் கொள்ளப் போகிறார்களா? அல்லது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் இன்னுமொரு வாக்கரசியல் படையைக் கட்டப் போகின்றார்களா? தமிழ்நாட்டில் இது ஒன்றும் புதிதல்லவே?

- தியாகு