தோழர் பெ.மணியரசனுக்கு மறுமொழி (6)
இந்தியத் தேசியம் என்ற ஒன்று உண்டா? இல்லையா? உண்டு, அது எதிர்வகைத் தேசியம் என்பது என் விடை. இந்தியத் தேசியம் என்பது பொய் என்கிறார் பெ.ம. ஆகவே இந்தியத் தேசியம் எதிர்வகைத் தேசியமா? பொய்த் தேசியமா? என்பதாகக் கேள்வி சுருங்கி விடுகிறது.
பெ.ம. சொல்கிறார்:
“வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பில் பொதுப் பகைவனுக்கு எதிராகப் பீறிட்டுக் கிளம்பிய மக்களின் ஒன்றுபட்ட உணர்ச்சியில் தந்திரமாக இந்து மத ஆரிய தேச உனர்ச்சிகளைத் திணித்து, இந்தியத் தேசியம் என்ற புனைவுக் கருத்தியலைத் தங்கள் நலனுக்காக ஆரியப் பார்ப்பனிய – முதலாளிய ஆற்றல்கள் உருவாக்கின. அவ்வாறான இந்துத்துவா புனைவு தேசியத்தைத்தான் தோழர் தியாகு எதிர்வகை இந்தியத்தேசியம் என்று ஞாயப்படுத்துகிறார்….”
”வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பில் பொதுப் பகைவனுக்கு எதிராகப் பீறிட்டுக் கிளம்பிய மக்களின் ஒன்றுபட்ட உணர்ச்சி” என்கிறீர்களே? அந்த உணர்ச்சிக்கு என்ன பெயர்? தேசிய உணர்ச்சி அல்லவா? நாம் என்ற உணர்ச்சி (we feeling), உளத்துருவாக்கம் (mental makeup) – இதற்குத் தேசிய உணர்ச்சி என்று பெயரில்லையா? இந்தத் தேசிய உணர்ச்சி இந்தியத் தேசிய உணர்ச்சியே அல்லவா? நீங்கள் இதற்கு வேறு பெயர் வைத்துள்ளீர்களா? இது இயல்பாய் எழுந்த தேசியமா? அல்லது புனைவுத் தேசியமா? இந்த உணர்ச்சியை உண்மை என்று ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லவா? இது பொய்யுணர்ச்சி என்று உங்களால் சொல்ல முடியுமா? மக்களிடையே தன்னெழுச்சியாக எழுந்த இந்தத் தேசியம் மெய்யானதல்லவா?
இந்த உணர்ச்சியை ”ஆரியப் பர்ப்பனிய - முதலாளிய ஆற்றல்கள்” தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதாலேயே இந்தத் தேசியம் பொய்யாகி விடுமா? இல்லாத ஒன்றாகி விடுமா? தேசியம் என்பது அனைத்துக்கும் முன்னதாக ஓர் உணர்ச்சி, நாம் எனும் உணர்ச்சி, உளத்துருவாக்கம் என்பதை பெ.ம. மறந்து விடுகிறார். தேசியம் என்றாலே கருத்தியலாகவும் அரசியலாகவும் மட்டுமே பார்க்கப் பழகியுள்ளார், அதுவும் தேசத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியம் என்ற எந்திரத்தனமான புரிதல் கொண்டுள்ளார்.
”பீறிட்டுக் கிளம்பிய மக்களின் ஒன்றுபட்ட உணர்ச்சி” என்று நீங்கள் வண்ணிக்கும் இந்தியத் தேசிய உணர்ச்சியை ஆரியப் பார்ப்பனிய – முதலாளிய ஆற்றல்கள் மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டார்களா? ராஜாராம் மோகன் ராய், பிபின் சந்திர பால், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றவர்களை இந்தியத் தேசியத்தின் கருத்தியல் முன்னோடிகள் என்று ’இன்றைய இந்தியா’வில் ரஜ்னி பாமி தத் குணங்குறிக்கிறார். இந்த மூவரும் யார்? இவர்களின் குமுகச் சீர்திருத்த முழக்கங்களை ஆரியப் பார்ப்பனியக் கருத்தியல் என்று உங்களால் சொல்ல முடியுமா? சந்திரசேகர ஆசாத், பகத் சிங் போன்றோரின் இந்தியத் தேசியக் கருத்தியலும் ஆரியப் பார்ப்பனியம்தானா?
“பல்வேறு தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து போராடினால் அது எதிர்வகைத் தேசியம் ஆகும் என்று யாருமே சொல்லவில்லை” என்கிறார் பெ.ம. வேறு யாரும் சொன்னார்களா இல்லையா என்பதன்று வினா. நான் சரியான பொருளில் சொல்கிறேனா இல்லையா? என்றுதான் ஆராய வேண்டும். இதற்கு முதலில் எதிர்வகை (negative) என்ற உரிச்சொல்லின் பொருளை உன்னிப்பாகக் கருதிப் பார்க்க வேண்டும்.
Negative என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் எதிர்மறை என்கிறோம். இதற்கு எதிர்ச்சொல்லாகிய Positive நேர்நிறை எனப்படும். Negatve x Positive, எதிர்மறை x நேர்நிறை. நேர் மின்சாரம் x எதிர் மின்சாரம் – போன்ற பல எடுத்துக்காட்டுகள் இயற்கை அறிவியலில் உண்டு. மருத்துவத் துறையில் நோகாண் ஆய்வில் நோய் இல்லை என்றால் negative result (இல்லை என்ற முடிவு) என்கிறோம். நோய் இருந்தால் positive result (உண்டு என்ற முடிவு) என்கிறோம்.
எதிர்மறை x நேர்நிறை என்பதைத்தான் சற்று இலகுவாக்கி எதிர்வகை x நேர்வகை என்று அரசியல் இலக்கியத்தில் ஆள்கிறோம்.
எதிர்மறை அல்லது எதிர்வகை (negative) x நேர்நிறை அல்லது நேர்வகை (positiuve) எவ்வாறு குமுக-அரசியல் இலக்கியத்தில் ஆளப்படுகிறது என்பது தோழர் பெ.ம.வுக்குத் தெரியாமலிருக்க முடியாது என நம்புகிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் பல குணங்களின் கலவையாக இருப்பதால் நல்ல குணங்களின் தொகுப்பை நேர்நிறை என்றும், கெட்ட குணங்களின் தொகுப்பை எதிர்மறை என்றும் பிரித்துப் பார்க்கிறோம். சுருக்கமாக நேர்க்கூறு, எதிர்க்கூறு என்று பிரித்துப் பார்க்கலாம்.
ஒரு கொள்கையின் நல்ல பக்கத்தை positive side என்றும் கெட்ட பக்கத்தை negative side என்றும் சொல்வதுண்டு அல்லவா? நம் ஆய்பொருளையே நெருங்கி வருவதானால், தேசியங்களில் நல்ல தேசியங்களும் கெட்ட தேசியங்களும் உண்டு. முன்னேற்றத்துக்கு உதவக்கூடியது, நீதியின் பாற்பட்டது நல்ல தேசியம். இது positive nationalism. நேர்நிறைத் தேசியம், சுருக்கமாக நேர்த் தேசியம். மாறாக முன்னேற்றத்துக்கு எதிரானது, அநீதியின் பாற்பட்டது கெட்ட தேசியம். இது negative nationalism. எதிர்மறைத் தேசியம், சுருக்கமாக எதிர்த் தேசியம்.
நேர்த் தேசியமும் எதிர்த் தேசியமும் வரலாற்றுவழிப்பட்டது. தேசியம் என்பதே வரலாற்று வழிப்பட்டதுதான். (All nationalism is historical). தேசியம் என்பது வரலாற்று நோக்கில் நிலையானதன்று, அசைவற்றதன்று. அது பாய்ந்தோடும் ஆறு, குத்துக்கல்லன்று. நேர் எதிராகலாம், எதிர் நேராகலாம்.
ஜார்ஜ் ஆர்வெல் ‘தேசியத்தின் ஆபத்துகள்’ பற்றி எழுதினார் சயோனிசத்தை negative natiuonalism (எதிர்த் தேசியம்) என்றே குணங்குறித்தார். சிங்களத் தேசியம் என்பதன் உள்ளடக்கம் வரலாற்றின் இந்தக் கட்டத்தில் சிங்கள பௌத்தப் பேரினவாதமே. சிங்களப் பேரினவாதத்தின் நிகர்ச் சொல்லாகவே சிங்களத் தேசியம் பயன்படுவதில் வியப்பில்லை. அது மொத்தத்தில் எதிர்த் தேசியமே. மாறாக ஈழத் தமிழ்த் தேசியம் என்பது முன்னேற்றத்துக்கும் விடுதலைக்குமான முற்போக்குத் தேசியமாகும். அது மொத்தத்தில் நேர்த் தேசியமாகத் திகழ்கிறது.
நம் காலத்தில் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை negative nationalism எதிர்த் தேசியம் என்று சில ஊடகர்கள் கண்டிப்பதுண்டு. நரேந்திர மோதியின் கொள்கைகளும் கூட இதே பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இந்த எதிர்த் தேசியத்தின் பார்வையில்தான் நாம் தேசப் பகைவர்களாக (anti-nationals) வசை கூறப்படுகிறோம்.
இந்தியத் தேசியமும் மொத்தத்தில் நேர்த் தேசியமாக இருந்துதான் எதிர்த் தேசியமாயிற்று. மொத்தத்தில் என்று சொல்வது ஏனென்றால் அப்போதே பல எதிர்க்கூறுகளையும் கருக்கொண்டிருந்தது. அதே போல் எதிர்த் தேசியத்திலும் பல நேர்க்கூறுகள் இருக்கலாம். எல்லாத் தேசியங்களும் சார்பியல் தன்மை கொண்டவைதாம். எதுவும் அறுதியானதன்று. (All nationalism is relative, nothing is absolute.) எங்கேயும் எப்போதும் காதல் என்பது போல் எங்கேயும் எப்போதும் தேசியம் என்பது அறிவியல் வகைப்பட்டதன்று. இது தமிழ்த் தேசியத்துக்கும் பொருந்தும்.
இதுதான் மார்க்சிய நோக்கில் தேசியம். பெ.ம. நோக்கு வேறா? என்று அறிய விரும்புகிறேன். அவர் தமிழ்த் தேசியத்தை மட்டும் எந்தக் குமுக அறிவியலுக்கும் அடங்காத, வரலாற்று வழிப்படாத அறுதித் தேசியமாகக் கருதிக் கொண்டால் நாம் பொறுப்பாக மாட்டோம்.
ஆனால் நான் இந்தியத் தேசியத்தை எதிர்வகைத் தேசியம் என்பது மேற்சொன்ன பொருளில் அன்று. Negative x positive என்ற சொல்லாட்சிக்கு வேறொரு பொருட்சாயலும் உண்டு. ஒருவர் அலல்து ஒன்று கடைப்பிடிக்கக் கூடாத எடுத்துக்காட்டாகக் கருதப்படும் போது negative example என்கிறோம். எடுத்துக்காட்டானவர் என்றால் அவரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று பொருள். வேறொருவர் என்ன செய்கிறாரோ அதைச் செய்யாமலிருப்பதுதான் நல்லது என்றால் அவர் எதிர்வகை எடுத்துக்காட்டு எனப்படுவார்.
தோழர் மா சே-துங் எதிர்ப்புரட்சித் தலைவர் சியாங் கே-ஷேக்கை எதிர்வகை ஆசிரியன் (negative teacher) என்று குறிப்பிட்டார். எதெல்லாம் கூடாது என்பதை அவரிடமிருந்து கற்கலாம் என்று பொருள். கணக்கு ஆசிரியர், தமிழ் ஆசிரியர் எனப்து போல் எதிர்வகை ஆசிரியர் என்று ஒரு வகை உண்டா? அப்படி யாராவது சொல்லியிருக்கிறார்களா? என்று தோழர் பெ.ம. கேட்கக் கூடாது.
தேசியம் என்பதற்குரிய பொதுவான அடிப்படைகள் இருக்கும் போது அது நேர்நிறைத் தேசியம், நேர்வகைத் தேசியம், சுருக்கமாக நேர்த் தேசியம் (poisitive natuionalism) ஆகிறது. இந்த அடிப்படைகள் இல்லாமல் வரலாற்றுக் காரணிகளால் ஒரு தேசியம் எழும் போது, அது எதிர்மறைத் தேசியம், எதிர்வகைத் தேசியம், சுருக்கமாக எதிர்த் தேசியம் (negative nationalism) ஆகிறது.
இந்த வரலாற்றுக் கட்டத்தில் இந்தியத் தேசியம் எதிர்வகைத் தேசியமாகவும், தமிழ்த் தேசியம் நேர்வகைத் தேசியமாகவும் உள்ளன.
(தொடரும்)
- தியாகு