தமிழ்த் தேசம் இதழை மீண்டும் மீண்டும், மீண்டு மீண்டு உங்களிடம் கையளித்தோம். இம்முறை வீழ்வதற்கும் அதனால் மீள்வதற்கும் இடம் கொடாது தொடர்ச்சியாகப் பயணிக்க உறுதி ஏற்கிறோம். புரட்சிகரக் கருத்தியல் தளத்தில் எமது இதழ் காலூன்றாமல் இருப்பது இழப்பு என்பதை நன்கு உணர்ந்து, இதுவரை கிடைத்த படிப்பினைகள் கற்று, தவறுகள் களைந்து வந்திருக்கிறோம். இதை வெகு மக்கள் இதழாக மக்கள் துணையுடன் மாற்ற முடியும் என உறுதியாக நம்புகிறோம்.

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணிநேரக் கேளிக்கை எனும் கோரிக்கைகள் கொண்டு தொடங்கப்பட்டதே மே நாள் போராட்டம். இதைத் தொடர்ந்து ஸ்பைஸ், ஃபிஷர், எங்கெல், பார்சன் ஆகிய தொழிலாளத் தலைவர்கள் நவம்பர் 11 ஆம் நாள் அமெரிக்க முதலாளித்துவ அரசால் தூக்கிலிடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். தூக்குத் தீர்ப்பு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போதே நால்வரில் ஒருவரான ஸ்பைஸ் இப்படி முழங்கினார்: ‘.....இதோ ஒரு தீப்பொறியை நீங்கள் மிதித்து அணைக்கும் போதே, அங்கே உங்களுக்குப் பின்னாலும் முன்னாலும் எங்கெங்கும் தீச்சுடர்கள் தாவி எழுகின்றன. இது நிலப்பரப்பின் கீழே இருக்கும் நெருப்பு, இதை உங்களால் அணைக்க முடியாது. உண்மை பேசத் துணிந்தமைக்காக மீண்டும் ஒரு முறை மரண தண்டனை விதிப்பீர்களானால்... அந்த அடாத விலையை அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்திக் கொடுப்பேன். இந்தப் பாதையில் எங்களுக்கு முன் பயணப்பட்டிருப்பவர்கள் ஏராளம், ஏராளம். தொடர்ந்து செல்ல நாங்கள் அணியமாய் உள்ளோம்.’

மே நாள் போராளிகளுக்கு செவ்வணக்கம் செலுத்தித் தமிழ்த் தேசம் திங்களேட்டைக் கையளிக்கிறோம். இது வாழ்நாள் பயணமாகத் தொடரும் என்ற நம்பிக்கையை உங்களுள் முதற்கட்டமாய் விதைப்பதற்கே நீடித்த பொறுமை, தன்னளிப்புடன் பெரும் பாடாற்ற வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம். உணர்ந்ததைக் கொண்டு உழைப்பைக் கொடுப்போம். அதேபோது, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், சனநாயக ஆற்றல்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஒடுக்குண்ட மக்கள் என அனைவரும் தமிழ்த் தேசத்திற்கு துணை நிற்க வேண்டுகிறோம். தமிழ்த் தேசியச் சமூகநீதிக் குடியரசை நோக்கமாய்க் கொண்டு வெளிவரும் எமது இயக்கத் திங்களேட்டை அனைவரும் ஒன்றுபட்டுக் காப்போம்.

தொழிலாளர் எழுச்சிக்குக் கலங்கரை விளக்காய் வரலாற்றில் நிலைத்துவிட்டது மே நாள். தூக்குக் கயிறு தலைக்கு மேல் தொங்கும் போதும், தொழிலாளத் தலைவனின் கொள்கை உறுதி கொண்ட உள்ளம் எடுத்து நமக்குள் விதைத்துப் பயணிப்போம். தமிழ்த் தேசிய சமூகநீதிப் புரட்சி படைப்போம்! அதற்கான கருத்தியல் படைக்கலனாம் ‘தமிழ்த் தேசம்’ காப்போம்.

Pin It