கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. தமிழக வரலாற்றில் ஒப்பதும் மிக்கதுமற்ற தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு போராட்டம் இது. ஒரு பகுதியைச் சேர்ந்த வெகுமக்கள் அனைவரும், குறிப்பாகப் பெண்கள் இவ்வளவு நீண்ட காலம் உறுதியுடனும் ஒழுங்குடனும் ஓர் அறப்போராட்டத்தை நடத்தி இருப்பது இதுவே முதல்முறை எனலாம். போராட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனை என்றால் வலிமையும் வஞ்சகமும் நிறைந்த இந்திய வல்லாதிக்க அரசும், இறுதியாகப் பார்த்தால் அதன் கைக்கருவியாகச் செயல்படும் தமிழக அரசும் தாங்கள் நினைத்ததை உடனே நிறைவேற்றவிடாமல் இதுவரைக்கும் கூட தடுத்து வைத் திருப்பதைச் சொல்லலாம்.

இந்த சாதனைக்குரிய பெருமை முதலாவதாக, இடிந்தகரை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்களை, குறிப்பாகப் பெண்களைச் சாரும். இரண்டாவதாக, தோழர் சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தையும் போராட்டக் குழுவையும் சாரும். மூன்றாவதாக, போராட்டத்திற்கு வலுவாகத் துணை நின்ற அரசியல் குழு, அறிவியலர் குழு போன்றவற்றைச் சாரும். நான்காவதாக, தமிழக அளவில் கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இயக்கம் நடத்தி வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பையும், இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகளையும், இதில் இடம்பெறாமலும் கூட கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இயங்கி வரும் மற்றவர்களையும் சாரும்.

வெற்றிக் கணக்கு ஒருபுறமிருக்க, கூடங்குளம் அணுஉலைத் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை. அதனை இயங்கச் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன என்ற அளவில் இடிந்தகரைப் போராட்டம் இன்னும் தன் குறிக்கோளை அடைந்துவிடவில்லை என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது. அது மட்டுமன்று. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் கூடங்குளத் தோடு முடிந்துவிடக் கூடியதன்று. ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் கல்பாக்கம் அணுஉலையை இழுத்து மூடுவதும், நாட்டில் புதிய அணு உலை ஏதும் தொடங்க விடாமல் தடுப்பதும் அணுஉலை எதிர்ப்பின் குறிக்கோள்களாய் இருக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு தன் அணு விசை ஆதரவுக் கொள்கையைக் கைவிடும்படி செய்தாக வேண்டும்.

கூடங்குளம் போராட்டத்தை 'இடிந்தகரைக் குடியரசின்' எல்லை தாண்டி தமிழகம் தழுவிய மக்கள் போராட்டமாக விரிவுபடுத்த வேண்டும் என்ற விருப்பம் நம் அனைவர்க்கும் உள்ளது. தாங்கள் மட்டுமே தனித்து நின்று போராடி கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக நிறுத்திவிட முடியாது என்பதை இடிந்தகரை மக்கள் நன்கு அறிவார்கள். நாமும் அறிவோம்.

இவ்வாறு விரிவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. சென்னையில் 2012 பிப்ரவரி 7ஆம் நாள் நடைபெற்ற அணு உலை எதிர்ப்பு மாநாடு, இடிந்தகரை முற்றுகையிடப் பட்டபோது நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டம், தமிழகமெங்கும் இடிந்தகரைக்கு ஆதரவாக நடந் துள்ள பல்வேறு நிகழ்வுகள்... இத்தனையும் நன்முயற்சிகளே என்பதில் அய்யமில்லை. தமிழகத்தில் மின்வெட்டைச் சாக்கிட்டு கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக நடைபெற்ற பரப்புரை தமிழக மக்களிடம் பெருமளவு எடுபட்டது என்பதே மெய்! இந்தத் தப்பெண்ணத்திற்கு எதிராக எதிர்நீச்சல் இடுவது கடினமாய் இருந்த போதிலும் நாம் நமது பணியை விடாப்படியாகச் செய்தோம். நெய்வேலி மின்சாரம் அனைத்தும் தமிழகத்திற்கே! என்ற முழக்கம் நம் பரப்புரைக்கு ஓரளவு துணை புரிந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழக அளவில் அணு உலை எதிர்ப்பு இயக்கம் போதிய அளவு வலுப்பெறாமலே இருந்து வருகிறது. இதற்கு அமைப்பு சார்ந்த, உத்தி சார்ந்த காரணங்கள் இருக்கலாம். ஆனால், அடிப்படைக் காரணங்களை வேறிடத்தில்தான் தேட வேண்டியிருக்கும்.

அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடுத்து வரும் வாதங்கள் அனைத்தும் சரியானவை. எவ்வளவுதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும் அணு உலைகள் ஆபத்தானவையே. அணு உலைகளில் விபத்து நேரிட்டால் செர்நோபில், மூன்று மைல் தீவு போல் கணக்கிலடங்காத பேரழிவு நேரிடும். விபத்தே இல்லையென்றாலும் அணு உலைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உயிர்களுக்கும் பிற உயிர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பெருங்கேடு செய்யக் கூடியது. அணு உலைக் கழிவுகளுக்குத் தீங்கில்லாத் தீர்வு காண அறிவியல் இன்னும் வழி காணவில்லை. ஆபத்தில்லாமல் மின்னாக்கம் செய்திட எத்தனையோ வழிகள் இருக்க அணு உலை எனும் ஆபத்தை வலியப் போய் விலைக்கு வாங்க வேண்டாம். இவையும் இவை போன்ற காரணங்களும் உலகெங்கும் அணு உலை எதிர்ப்பாளர்களால் மறுப்புக்கு இடமின்றி வலுவாக நிறுவப்பட்டுள்ளன.

இவை தவிர, இந்தியாவுக்கென்று சொல்லப்படும் தனிக் காரணங்கள், கூடங்குளத்துக்கென்று குறிப்பிட்டுச் சொல்லப்படும் நிலவியல், கடலியல், பேரிடர் மேலாண்மை தொடர்பான காரணங்கள் அனைத்தும் சரியே!

ஆனால், அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை விரிவும் செறிவும் ஆக்க இந்தக் காரணங்கள் போதமாட்டா. இவற்றை செய்நுட்பக் காரணங்கள் என்று சுருக்கிக் காட்டி மறுப்பதற்கான செய்நுட்ப வாதங்களை அணு விசை ஆதரவாளர்கள் முன்வைப்பார்கள். இந்தக் கருத்துப் போராட்டம் செய்நுட்பங்கள் தொடர்பான முடிவற்ற விவாதமாக நீண்டு செல்லும். அணு உலை ஆபத்துக்கு நேரடியாக முகங்கொடுக்க வேண்டிய இடிந்தகரை, செய்தாப்பூர் போன்ற பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் இந்த செய்நுட்ப விவாதம் வெகு மக்களைப் பெரிதாக ஈர்க்கும் வாய்ப்பு குறைவே.

அணு உலைகளின் ஆபத்து குறித்து நாம் முன்வைக்கிற செய்திகள் இந்திய அரசுக்கோ தமிழக அரசுக்கோ அணு உலையை ஆதரிக்கும் மற்றவர்களுக்கோ தெரியாதவை அல்ல. பிறகு அவர்களிடம் ஏன் இந்தப் பிடிவாதம்? இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன்சிங் தெளிவாகச் சொல்கிறார்: "தொழில் வளர்ச்சிக்கு அணு உலைகள் இன்றியமையாதவை." அவர் சொல்லும் தொழில் வளர்ச்சி என்பதை மனத்தில் பதித்துக் கொண்டு மேலே படியுங்கள்.

இந்தியாவெங்கும் ஏராளமான ஆலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. மேலும் பல ஆலைகள் நலிவுற்றுத் தடுமாறிக் கொண்டுள்ளன. அவற்றுக்குச் சாவு நாள் இன்னும் வரவில்லை. ஒரு காலத்தில் துடிப்புடன் இயங்கி வந்த தொழிற்பேட்டைகள் பலவும் இன்று தூங்கி வழிகின்றன.

இது நாணயத்தின் ஒரு பக்கம்தான். நாட்டில் பன்னாட்டுக் குழுமங்களின் முதலீட்டுப் படையெடுப்பு நடந்த வண்ணம் உள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன. நாடெங்கும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

வனப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் காலங் காலமாய் வாழ்ந்து வந்த மக்களை வெளியேற்றி விட்டு சுரங்கம் வெட்டிக் கனிவளங்களைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் பன்னாட்டுக் குழுமங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் இந்தியப் பெருங் குழுமங்களும் அடக்கம். இதைத்தான் மன்மோகன்சிங் தொழில் வளர்ச்சி என்று மங்கலப் பெயரிட்டு அழைக்கிறார். இந்தத் தொழில் வளர்ச்சியின் கொடுமுரணை விளங்க வைக்கும் படியான சில போக்குகளை நாம் குறிப்பிடலாம்.

இந்தியாவிலிருந்து தன்னியக்க ஊர்திகளின் (Automobiles) ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. மறுபுறம் எளிய மிதிவண்டிகளும் விளை யாட்டுப் பொம்மைகளும் கூட சீனத்திலிருந்தும் பிற நாடுகளி லிருந்தும் இறக்குமதி செய்யப் படுகின்றன. மிதிவண்டித் தொழிற் சாலைகள் மூடப்படுகின்றன அல்லது நலிந்து மெலிந்து கிடக் கின்றன. மகிழுந்துத் தொழிற் சாலைகள், ஃபோர்டு, ஹ§ண்டாய் போன்றவை வளர்ந்து வருகின்றன. இங்கேயே கூட அதிகமானவர் களுக்கு வேலைவாய்ப்பு தரக் கூடிய பழைய தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் போன்றவை மூடப்பட்டு விட்டன.

வறுமை பெருகி வாங்குந் திறன் குறுகி சந்தை அருகிவிட்ட நிலையில் இந்த நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது பெரும்பாலும் மேட்டுக்குடியினரையும் அயல் நாட்டவரையுமே இலக்காய்க் கொண்டுள்ளது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் இவற்றின் உடன்பிறந்த ஊழல் மயம் என்ற பகைப்புலத்தில் தொழில் வளர்ச்சி என்பது மக்களை ஓட்டாண்டிகளாக்கவே பயன்படும். வளர்ச்சி என்னும் இந்த மாய வித்தை உழவையும் விட்டுவைக்க வில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக மானுடத்தின் வயிற்றுக்குச் சோறிடும் வேளாண்மையை விரைந்து பணம் சுரக்கும் ஊற்றாக்கி நிலவளத்தைக் கொள்ளையிட்டு உழவர்களைக் கொத்துக் கொத்தாய்த் தற்கொலைக்குத் தள்ளி விட்டது தான் மன்மோகனர் போற்றிடும் தொழில் வளர்ச்சி.

இன்றைய உலக முதலாளியத்தின் வளர்ச்சிக் கொள்கை இதுவே. இந்த வளர்ச்சிக் கொள்கையின் கொடிய விளைவுகளை உலகமெங்கும் காணலாம். எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பெருமளவிலான பட்டினிச் சாவுகள் முதன்மையாக இந்த வல்லாதிக்க வளர்ச்சிக் கொள்கையின் விளைவே ஆகும். நிலம், காற்று, நீர், வானம், வெளி அனைத்தையும் கைப்பற்றி ஆதாய வேட்டைக் களங்களாக மாற்றும் உலக முதலாளியத்தின் இலாப வெறிக் கொள்கை உலகின் வருங் காலத்தையே ஆபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த ஆபத்தின் ஒரு கூறுதான் அணு உலை ஆபத்து!

முதலாளியத்தின் இலாப வெறிக் கொள்கையை எதிர்த்து முறியடிக்காமல், அதன் அணு விசைக் கொள்கையை மட்டும் தனித்தெடுத்து நிலையாக தடுத்துக் கொண்டிருத்தல் அரிதே!

இந்திய அரசின் அணுவிசைக் கொள்கை என்பது மக்களின் உயிருக்கும் வாழ்வுரிமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள அதன் பொருளியல் வளர்ச்சிக் கொள்கையின் ஒருமுனைதான் என்பதை மறந்து விடக் கூடாது. இந்திய ஆளும் வர்க்கம் பல வகையிலும் இரட்டைத் தன்மை உடையது. அது ஒருபுறம் உலக வல்லாதிக்கங்களுக்கு சேவகம் செய்யக் கூடியது. மறுபுறம் தனக்குட்பட்ட தேசிய இனங்களை ஒடுக்கும் வல்லாதிக்கமாகவும், தன்னைச் சுற்றி இருக்கும் தேசங்களை அச்சுறுத்தி அடக்கியாள முயலும் விரிவாதிக்கமாகவும் இருப்பது. இந்தத் தன்மை அதன் பொருளியல், அரசியல் கொள்கையில் வெளிப் படுவது போலவே, படையியல் கொள்கையிலும் வெளிப்படுகிறது.

இந்திய அரசின் அணு உலை நாட்டம் தெற்காசியாவின் மின் சந்தையில் ஆதிக்கம் பெறும் நோக்கமுடையது. இங்கிருந்து கடல் வழிக் கம்பிவடம் அமைத்து இலங்கைக்கு மின்சாரம் அனுப்பும் திட்டம் இத்தகையது. கூடங்குளம் தமிழர்களின் கொலைக்களம் என்பதை இந்தப் பொருளிலும் விளங்கிக் கொள்ளலாம்.

இந்திய அரசின் பொருளியல், அரசியல் கொள்கையின் நீட்சிதான் அதன் படையியல் கொள்கை என்பதைப் புரிந்து கொள்வது எளிது. இந்திய அரசின் படையியல் கொள்கையில் அணு உலைகள் வகிக்கும் பங்கை அச்சத்துடனும் எச்சரிக்கையுடனும் பார்த்தாக வேண்டும். அணு மின்சாரத்தையும் அணு ஆயுதத்தையும் இருவேறாகப் பிரித்து வைக்க முடியாது என்பதைப் பண்டித ஜவஹர்லால் நேருவே அரசமைப்புப் பேரவையில் ஒப்புக்கொண்டார். ஆனால் அவரே 1957இல் தாராப்பூர் அணு உலையை நாட்டுக்குப் படையலாக்கினார். இந்திரா காந்தி தலைமையமைச்சராக இருந்த போது இந்தியா முதல் அணு வெடிச் சோதனையை நிகழ்த்தியது. இது முழுக்க முழுக்க அமைதி நோக்கங்களுக்காகவே என்று அறிவிக்கப்பட்டது. அதே இந்திராகாந்திதான் பிற்காலத்தில் அணுவாற்றலின் அமைதிவழிப் பயன்பாடு என்பதை ஆயுதப் பயன்பாடாக மாற்றினார். இதில் காங்கிரசுக்கும் இந்துத்துவ பாரதிய சனதாக் கட்சிக்கும் வேறுபாடு ஏதுமில்லை. வாஜ்பேயி தலைமையமைச்சராக இருந்த போது பொக்ரானில் புத்தர் சிரித்தார் என்ற குறியீட்டுப் பெயருடன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இப்போது இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே அணுகுண்டு வைத்துள்ளன.

அணுவிசை எதிர்ப்பாளர்கள் அனைவரும் அணு ஆயுதங் களையும் வன்மையாக எதிர்க்கிறார்கள். அதேபோது அணுவிசை ஆதரவாளர்கள் பொதுவாக அணு ஆயுதங்களை ஆதரிப்பவர்களாக உள்ளனர். கூடங்குளம் அணு உலையை நியாயப்படுத்தும் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான குருமூர்த்தி "நமக்கு அணு மின்சாரமும் வேண்டும்; அணு ஆயுதமும் வேண்டும்'' என்று எழுதியதை மறந்துவிட முடியாது.

அணு ஆயுதங்கள் இயல்பான போர்க் கருவிகள் அல்ல, பேரழிவுக் கருவிகள் என்பதால், அவற்றை யார் வைத்திருப்பினும் அது மனிதகுலத்தின் அமைதி வாழ்வுக்கு எதிரானது. மற்றவகை ஆயுதங்களைப் போல் போரியல் இலக்கை மட்டும் தாக்கி அழிக்கும் தன்மை அணு ஆயுதங்களுக்குக் கிடையாது. அணுகுண்டுக்கு சமயச்சார்போ இனச்சார்போ நிறச்சார்போ கிடையாது. மிகப் பெரும்பாலும் அப்பாவிப் பொதுமக்களை அழிக்கத்தான் அதனால் முடியும். 1945இல் சப்பானிய நகரங்கள் ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் இப்படித்தான் நடந்தது. யார் என்ன முயன்றாலும் வேறெப்படி நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. உலகில் மீண்டும் ஓர் அணுகுண்டுத் தாக்குதல் நடந்தால் இரோசிமா - நாகசாகியைப் போல் பன்மடங்கு பேரழிவு நிகழும் என்பதில் அய்யமில்லை.

எனவே அணு ஆயுதங்கள் எந்த வகையிலும் போர் நெறிகளுக்கு உட்பட்டவை அல்ல. தற்காப்பின் பெயரால் அவற்றை நியாயப் படுத்த வழியே இல்லை.

சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் அமெரிக்க வல்லாதிக்கத்திற்குப் போட்டியாக அணு ஆயுதங்களைக் குவித்து வைத்ததை நாமறிவோம். அவற்றால் அந்நாட்டின் வீழ்ச்சியைத் தடுக்க முடிய வில்லை என்பது மட்டுமல்ல, ஒரு வகையில் பார்த்தால் அணு ஆயுதப் பொருளியல் அந்நாட்டின் சிதைவுக்கு ஒரு காரணமாகவே அமைந்துவிட்டது எனலாம்.

இந்தியாவில் அணு விசையை மட்டுமின்றி அணு ஆயுதத்தையும் நியாயப்படுத்துகிற அணியில் இடதுசாரிகளும் உண்டு என்பதை நாமறிவோம். பொக்ரான் அணுவெடிச் சோதனை நடைபெற்ற செய்தி வந்த போது தமிழகச் சட்டப் பேரவையில் துள்ளியெழுந்து அதைப் பாராட்டியவர் ஒரு மார்க்சியத் தலைவரே. இந்திய இறையாண்மையின் பெயரால் அணுகுண்டுக்கு ஆதரவு தெரிவிக்கிற புரட்சிகர இடதுசாரி களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். அணு ஆயுதங்கள் தொடர்பான இந்தக் குறைப்பார்வை இவர்களிடமிருந்து தொடங்குவதன்று.

இரண்டாம் உலகப் போர் தொடங்கவிருந்த நிலையில் 1938 திசம்பரில் இட்லரின் செர்மனியில் யுரேனியம் அணுவைப் பிளப்பதில் அந்நாட்டு அறிவியலர் வெற்றி கண்டனர். செர்மானிய நாஜிகளால் யூதர்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த ஆபத்தைக் கண்ட அறிவியலர் சிலர் செர்மனி அணுகுண்டு தயாரித்துவிடும் என்று அச்சமுற்றார்கள். எனவே அமெரிக்க வல்லரசு உடனடியாக அணுகுண்டு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ப்ரேங்கிளின் ரூஸ்வெல்ட்டுக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள். இப்படி எழுதியவர்களில் முதன்மையானவர் செர்மானிய யூதரும் உலகப் புகழ்பெற்ற அறிவியலருமாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

அமெரிக்கா செய்த அணுகுண்டுகள் ஹிரோசிமா நாகசாகியில் வீசப்பட்டுப் பேரழிவு ஏற்படுத்தியதைக் கண்ட ஐன்ஸ்டின் அதிர்ச்சியுற்றார். அணுகுண்டு செய்யத் தூண்டி அமெரிக்க அதிபருக்கு எழுதிய மடலில் ஒப்பமிட்டது என் வாழ்க்கையில் நான் செய்த பெருந்தவறு என்று இறப்பதற்கு ஐந்து மாதம் முன்பு 1954 நவம்பரில் அவர் வருத்தப்பட்டார்.

அணு ஆயுதங்களற்ற உலகைப் படைக்க வேண்டும் என்ற அமைதி நோக்கத்தை வலியுறுத்தி அறிவியலர் ஐன்ஸ்டின், பேரறிஞர் பெர்ட்ரான் ரசல் உள்ளிட்ட உலகச் சான்றோர் வெளியிட்ட கூட்டறிக்கை புகழ் பெற்றதே தவிர பயன்தராமல் போய் விட்டது. ஏனென்றால் ஸ்டாலின் தலைமையி லான சோவியத்து அரசே அந்தக் கூட்டு வேண்டுகோளை ஏற்க வில்லை. இவ்வளவு காலம் கழித்துப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கும் பொழுது சோவியத் ஒன்றியம், செஞ்சீனம் போன்ற அரசுகள் அணுகுண்டு செய்ய மறுத்து அமைதி இயக்கத்தில் ஊன்றி நின்றிருந்தால் அந்நாடுகள் பொருளியல் வளம் பெற்றிருப்ப தோடு, அணு வல்லாதிக்கங்கள் உலக மக்களிடம் தனிமைப்பட்டு, அவற்றின் அணுகுண்டுகள் வெறும் அட்டைப் புலிகளாகவே இருந்து விட்டிருக்கும் என்பதை உணர முடிகிறது.

அணுகுண்டுக்கு அணுகுண்டு மாற்றாகாது என்பதை இன்றுங் கூட வட கொரியா, ஈரான் போன்ற அரசுகள் உணராமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

ஒரு பேட்டை 'ரவுடி' இடுப்பில் கத்தியைச் செருகிக் கொண்டு அனைவரையும் மிரட்டிக் கொண்டிருப்பது போல் ஒரு வல்லரசுக்கு உலக நாடுகளை அச்சுறுத்த அணுகுண்டு வைத் திருப்பது தேவையாக உள்ளது. வீசுவதற்கென்று இல்லாவிட்டாலும் வலிமை காட்டுவதற்காவது அது தேவைப்படுகிறது. பெரிய வல்லரசுக்கு ஆயிரம் அணு குண்டுகள் என்றால் இந்தியா போன்ற குட்டி வல்லரசுக்கு நூறு அணுகுண்டுகளாவது தேவையல்லவா? இந்தியா நல்லரசாக இருப்பதைக் காட்டிலும் வல்லரசாக வளர்வதிலேயே குறியாக இருக்கும். அப்துல் கலாம் போன்றவர்கள் அணுகுண்டு வேண்டும் என்பது இதற்காகவே. இந்தியாவின் அணு விசைத் திட்டத்தையும் அணு ஆயுதத் திட்டத்தையும் ஆதரிப்பதுதான் தேசப்பற்று என்ற எண்ணத்தை ஆளும் வர்க்கம் திட்ட மிட்டு வளர்க்கிறது.

ஆக, அணு ஆற்றலுக்கு எதிர்ப்பு என்பதை அணு ஆயுதத்துக்கு எதிர்ப்பு என்பதாகச் செறிவூட்ட வேண்டும். அணு விசை, அதற்கான தேவையை உண்டாக்கும் தொழில் வளர்ச்சிக் கொள்கை, இவ்வகை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கொள்கை, இந்தப் பொருளியலின் மேலெழும் அரசியல் கொள்கை, இந்த அரசியலுக்குப் பொருத்தமான படையியல் கொள்கை, இந்தப் படையியலின் ஒரு கூறாக அமைந்திடும் அணு ஆயுதக் கொள்கை... இவை யாவும் மக்களுக்கு எதிரானவை. அதாவது தேசிய இனங்களுக்கும், பழங்குடிகளுக்கும், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை வகுப்புகளுக்கும், தொழிலாளர்கள் உழவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், அனைத்து வகை உழைக்கும் மக்களுக்கும் எதிரானவை. இந்த வல்லாதிக்கக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில்தான் இந்தப் பல்வேறு மக்கள் பிரிவுகளையும் அணிதிரட்ட இயலும்.

அணு உலைகளுக்கு எதிரான போராட்டக் கருத்தியலை இந்தத் திசையில் விரிவாக்கவும் ஆழப்படுத்தவும் வேண்டும். அணு ஆற்றலுக்கு எதிரான இயக்கத்தை அணு வல்லாதிக்கத்திற்கு எதிரான இயக்கமாக மாற்றுவதற்குப் பொறுமை யாகவும் உறுதியாகவும் உழைத்திடல் வேண்டும். இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். ஏனென்றால் வெற்றிக்குக் குறுக்குவழி ஏதுமில்லை.

இந்திய அணு வல்லாதிக்கத்திற்கு எதிரான நீண்ட நெடிய போராட்டப் பயணத்தை ஒளிச்சுடர் தந்து தொடங்கி வைத்தவர்கள் என்ற பெருமை இடிந்தகரை மக்களுக்கு என்றென்றும் உண்டு.

Pin It