கொஞ்சமாகிலும்
இருக்கிறதா ஞானம்
சொற்களை ஆளுதல்
அவள்மேல்
மூர்க்கமாய் படர்ந்து
காட்டிய பராக்ரமம்
இதெல்லாம் வாழ்க்கையில்
என்றார்

எது என்றதற்குப்
பதிலில்லை
தடித்த புத்தகங்கள்
தானே பக்கங்களைப்
புரட்டிக் காட்டும்
ஊற்றுப்படியென
தெரிந்துகொள்ள
ஏதுமில்லை
எதற்கிந்த சிரமம்
என்று புரண்டு படுத்தல்
சுகமாயிருக்கிறது.

வாழ்க ஒழிக
கோஷமிட்டே
நாள் கழிப்பவர்கள்
சொல்கிறார்கள்
அர்த்தமற்ற வாழ்வு
உனதென
பழிசொல்ல
எப்போதும் காத்திருக்கும்
இவர்களை
காலம் கூட
தண்டிப்பதில்லை

என் உலகம்
ஆகாயமாய்க்கூட
இருக்கலாம்

முற்றாய் நிராகரிக்கும்
தவத்திற்கு இரங்கி
ஒரு நூலிழை வரலாம்
பற்றிக்கொண்டு
மேலோக
முட்டாள்களுக்கும்
புரியும் என்
விடுதலை.

காலமும் காலமும்

வாகை சூடிய
பெருமை வழிய
என் முப்பாட்டன்
ஜீவித்திருந்தான்
வெற்றுச்சொல் சூழ

இரத்தம் வழியும்
வரலாற்றின்
பக்கங்களில்
வரிசையாய் நாங்கள்

என்
சாமராஜ்ய பரப்பு
பெரிதாய் இருந்தது
ஒருகாலத்தில் என்
மீசை முறுக்குவதும்
வழக்கமாயிருந்தது

பெண்கள் முனகுவதில்லை
எப்போதும்
அது வழக்கமுமன்று
பத்திருபது பேர்
வீட்டின்முன்
கை கட்டி காத்திருப்பர்
ஆணை கேட்க

சுவைக்கவும் அணைக்கவும்
தனியே பெண்கள் கூட்டமென
வாழ்ந்தது குறித்துப்
பேசும் தின நடைமுறை
வில்வண்டிச் சத்தம் கூட
ஒழிந்து போயிற்று . . .

கூரையற்ற வெளியில்
நிலவு துணையாக
உறக்கம் தொலைத்து
மௌனித்திருக்கும்
எல்லோரும்
சுட்டிக்காட்டுவது
காலத்தின்மேல்
பழிபோட்டு

Pin It