வர்ணாசிரம தர்ம அடிப்படையிலான ஒரு மூடநம்பிக்கை மக்களிடத்திலே வலுப்பெற்றுத் தொடர்வண்டிகளே இந்த தேசத்துக்குள்ளே வரக்கூடாது என்கிற ஒரு பெரிய தடை ஏற்பட்டிருக்குமானால், அதை ஏற்றுக் கொண்டு அரசாங்கமும் அதை நிறுத்தியிருக்குமானால், இன்றைக்கும் நம்முடைய நாடு மிகப்பெரிய பின்னடைவிலேதான் இருந்திருக்கும்.

1870 இல் தான் இந்தியாவுக்கு முதன் முதலில் தொடர் வண்டிகள் அதாவது ரயில்கள் வந்தன. அப்போது புகையைக் கக்கிக் கொண்டு வந்ததினாலே அதை நாம் புகைவண்டி என்று அழைத்தோம்.

இன்றைக்கும் ஈழத்திலே புகை இரத வண்டி என்றுதான் சொல்கிறார்கள். இப்போது நாம் தொடர்வண்டி என்று சொல்லிப் பழகி இருக்கிறோம்.

அந்தத் தொடர் வண்டிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வந்தன. அவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றன என்று அப்போது உணரப்படவில்லை. அந்த ரயில்கள் வரவேற்கப் படவும் இல்லை. மாறாக மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு இருக்கின்றன. மக்கள் அந்தத் தொடர்வண்டிகளைப் பார்த்து அச்சப்பட்டு இருக்கிறார்கள். இரவு நேரங்களில் பெரிய விளக்கு, புகை இப்படி வருகிற அந்த தொடர் வண்டியைப் பார்த்து ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு வருகிறது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். கொள்ளிவாய்ப்பிசாசு என்றுதான் ரயில்கள் அந்த மக்களிடத்திலே அன்றைக்கு அறிமுகமாகியிருக்கின்றன.

நீராவி என்ஜினை ஜேம்ஸ்வாட் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலே கண்டுபிடித்துவிட்டார். ஆனாலும் இந்தியாவிலே அறிமுகமாவதற்கு ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகாவது இங்கே வந்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சி இல்லாமல், அன்றைக்கு இருந்த சூழலில் அது என்ன என்று புரியாத நிலையில் மக்கள் அதை இரண்டு மூன்று காரணங்களுக்காக எதிர்த்திருக்கிறார்கள்.

ஒரு காரணம், வயல்களையெல்லாம் அழித்து அவர்கள் தண்டவாளங்கள்போடும் பணியைச் செய்தபோது நம்முடைய நிலங்கள் எல்லாம் போகிறதே என்கிற கோபம் மக்களுக்கு இருந்திருக்கிறது.

இரண்டாவதாக இது ஏதோ ஒன்று என்று கருதி. இதை எதற்காகவோ வெள்ளைக்காரர்கள் கொண்டு வருகிறார்கள் என்ற ஐயமும் மக்களுக்கு இருந்திருக்கிறது.

வேதாரண்யத்திற்குப்பக்கத்திலேயே நடந்த ஒரு நிகழ்ச்சியை அந்த ஊரைச் சேர்ந்த ஒரு நண்பர் சொன்னார். அங்கு இருக்கிற பனைமரங்களையெல்லாம் அழித்து விட்டுத் தண்டவாளங்களைப் போடுகிறபோது, மக்கள் எல்லாம் இந்தப் பனை மரங்களை அழிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் கேட்கவில்லை. காரணம் எல்லா ஊர்களிலும் எதிர்ப்பு வரும் அப்படிப் பார்த்தால் அந்தப் பணியை நிறைவு செய்யமுடியாது. எனவே அந்தப் பனை மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்தனர். சில நாட்களுக்குப் பின்பு அந்தஊரைச் சேர்ந்த ஒரு பெரியவர் ஒரு காரியம் செய்திருக்கிறார். அந்தப் பனை மரங்களிலே இருந்து நுங்குகளையெல்லாம் எடுத்து அந்த நுங்குகளுக்கெல்லாம் வெல்லம் சேர்த்து அங்கே வந்த அதிகாரிகளுக்கு அந்த வெல்லமும் நுங்கும் சேர்ந்த கலவையைக் கொடுத்திருக்கிறார். அதை உண்டு மகிழ்ந்த அவர்கள் அடடா மிக அருமையாக இருக்கிறதே. இது என்ன என்று கேட்டிருக்கிறார்கள். நீங்கள் வெட்டுகிற பனை மரத்தினுடைய நுங்குதான் இது, அதனுடைய சுவைதான் இது என்று சொன்ன உடனே அவர்களுக்கே கொஞ்சம் மனம் இளகி வேண்டாம்.... இந்த தண்டவாளத்தை வேறு பாதையிலே போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள் என ஒரு செய்தி உண்டு. எனவே இப்படிப் பல்வேறு காரணங்களால் தொடர் வண்டியை மக்கள் எதிர்த்திருக்கிறார்கள்.

இன்னொரு மோசமான காரணமும் அன்றைக்கு இருந்திருக்கிறது. 1875–76 இல் ஒரு மிகப்பெரிய பஞ்சம் இந்தநாட்டிற்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்த தாது வருடப் பஞ்சம் என்று இன்றைக்கும் சொல்வார்கள். தாது என்கிற வருடம் வருகிறபோதெல்லாம் பஞ்சம் வருமோ என்கிற அச்சத்துக்கு மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிற வருடங்களிலே தாது என்று ஒரு ஆண்டு இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளிலே அந்தச் சிக்கல் நமக்கு இருக்காது. தை 1 தான் புத்தாண்டு என்று ஆனதற்குப் பிறகு தாது, நள, பிரபவ என்கிற அந்த வருடப் பெயர்கள் இனி இல்லை நமக்கு. ஆனாலும் அந்த தாது வருடப் பஞ்சம் அன்றைக்கு வந்தபோது மக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள். என்ன கருதி இருக்கிறார்கள். என்ன கருத்து பரப்பப்பட்டிருக்கிறது என்றால், ரயில் வந்தது அதனால்தான் பஞ்சம் வந்தது. விஷ பேதி வந்தது என்று கூறியுள்ளனர்.

ரயிலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றால் ரயில் வந்ததால் இந்த நாட்டினுடைய ஆச்சாரம் கெட்டுப் போய்விட்டது. ஆச்சாரம் கெட்டத்தினாலே தான் கடவுள் இந்தப் பஞ்சத்தையும் நோயையும் தந்திருக்கிறார் என்று அன்றைக்கு ஒரு கருத்து பரப்பப்பட்டிருக்கிறது. திட்டமிட்டே பரப்பப்பட்டிருக்கிறது.

அந்த ரயிலால் என்ன கெட்டுவிட்டது என்று இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் குழப்பமாக இருக்கும். ஒரு தொடர் வண்டி ஒரு ஊருக்கு வருவதால் போக்குவரத்து வசதி வாய்ப்புகள்தான் கூடுமே தவிர அதனால் எப்படி ஒரு அமைப்பினுடைய, சமுதாயத்தினுடைய பண்பாடு கெட்டுப்போய்விடும்? வேறு ஒன்றுமில்லை அன்றைக்குப் பேருந்துகளில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமில்லை. அவர்களை ஏற்றுவதில்லை. ஆனால் வெள்ளைக்காரன் கொண்டு வந்திருக்கிற தொடர் வண்டியில் யார் பயணச் சீட்டு எடுத்தாலும், யார் காசு கொடுத்துப் பயணச்சீட்டு எடுத்தாலும் தொடர்வண்டியிலே ஏறிக்கொள்ளலாம். யார் வேண்டுமானாலும், யாருக்குப் பக்கத்திலே வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம். பேருந்துகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற முடியாது என்கிற சட்டமே இருந்திருக்கிறது.1923 இல் நீதிக்கட்சி ஆட்சி இருக்கிறபோது, சுயமரியாதைச் சுடர்சவுந்திர பாண்டியனார் தான்சட்டம் போட்டு அதை மாற்றியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களைப் பேருந்துகளில் ஏற்றமாட்டோம் என்று எந்தத் தனியார் நிறுவனம் சொன்னாலும், அவர்களுக்கான உரிமை (லைசென்சு) நீக்கப்படும் என்று சொன்னதற்குப் பிறகுதான் அது மாறியிருக்கிறது.

இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால், பேருந்துகளிலே இன்ன சாதியினர்தான் இதைப் பயன்படுத்தலாம், இன்ன சாதியினருக்குப் பக்கத்தில் இன்ன சாதியினர், உட்காரக்கூடாது என்றெல்லாம், அந்த சாதிய ஏற்றத் தாழ்வுகள், வர்ணாசிரம தர்மங்கள் நடைமுறையிலேஇருந்தபோது வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த அந்தத் தொடர் வண்டியிலே யார் வேண்டுமானாலும் ஏறலாம். யாருக்கு பக்கத்தில் வேண்டுமானாலும் அமரலாம் என்கிற நிலை வந்ததால்தான் இந்த நாடு கெட்டுபோயிற்று. ஆகையினாலேதான் இந்தப் பஞ்சம் வந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இது ஒரு பெரிய அறியாமை, பெரிய மூடநம்பிக்கை என்பதோடு மட்டுமல்ல, மக்களிடத்திலே இருக்கிற ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்திக் கொள்வதற்காக, சாதிய வேறுபாட்டைக் காப்பாற்றுவதற்காக எவ்வளவு பெரிய பொய் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்பதை இன்று நாம் கருதிப் பார்க்கிறோம்.

அதையெல்லாம் மீறித் தொடர் வண்டி ஓடியதினாலே அறிவியல் வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி என்று பல்வேறு வகையான வளர்ச்சிகளை நாம் இன்றைக்குப் பார்க்கிறோம். ஒருவேளை அன்றைக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இதுபோன்ற வர்ணசிரம தர்ம அடிப்படையிலான ஒரு மூட நம்பிக்கை மக்களிடத்திலே வலுப்பெற்றுத் தொடர் வண்டிகளே இந்த தேசத்துக்குள்ளே வரக்கூடாது என்கிற தடை ஏற்பட்டிருக்குமானால், இன்றைக்கும் நம்முடைய நாடு மிகப் பெரிய பின்னடைவிலேதான் இருந்திருக்கும். இன்னும் அந்த நிலை முற்றிலுமாக மாறி விடவில்லை. அன்று தொடர் வண்டிகள் தடுக்கப்பட்டன.

இன்று சேதுக்கால்வாய்த் திட்டக் கப்பல்கள் தடுக்கப்படுகின்றன. அறிவியலும், மதமும் எப்போதும் முரண்பட்டே நிற்கின்றன.

Pin It