“மக்களுக்குப் புரியும்படியாக எங்களுக்குப் பேசத் தெரியாது. அவர்களைப் போலக் கடவுள் துதி பாடி அல்லது தலைவர் துதி பாடி ஏமாற்றத் தெரியாது. பதுக்கி வைக்கத் தெரியாது; அதை மறைப்பதற்குப் பஜனை பாடவும் தெரியாது. எங்களுக்கு அரசியலும் தெரியாது; மதவெறியும் கிடையாது. பசி எடுக்கும்போது வசதிப்பட்டால் நாங்களாகவே தின்போம்; வசதியில்லாவிட்டால் மனிதர்கள் போடுவதைத் தின்போம்.

kuthuoosi_gurusamyசென்னையிலுள்ள நாங்கள் பசிக் கொடுமை காரணமாகக் குப்பைக் கடுதாசியைக்கூடத் தின்பதுண்டு! இது மட்டுமன்று. சென்னையிலுள்ள பால்கார பக்தர்களில் பலர் எங்கள் குழந்தைகள் குடிக்க வேண்டிய பாலைக்கூட எங்களிடமிருந்து கறந்து (முதலாளிகள் தொழிலாளிகளிடம் கறப்பது போல!) அவைகளை அற்பாயுளில் சாகடித்து, அவற்றின் வயிற்றைக் குடைந்து எடுத்துவிட்டு உள்ளே வைக்கோலைத் திணித்து நான்கு குச்சிகளைக் கால்களாக நட்டு வைத்து எங்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு, பால் கறப்பதற்கு முன்பு எங்கள் கண் முன்பு வைத்து விட்டுக் கறந்து கொண்டிருக்கிறார்கள்! எங்களது உண்மைப் பிள்ளைக்கும் இந்த வைக்கோல் பிள்ளைக்கும் உள்ள வேற்றுமை கூடவா எங்களுக்குத் தெரியாது? கஞ்சிக்குப் பதிலாக சுண்ணாம்பு நீரை வைத்தால் கடித்து விடுவோமா, என்ன? இவர்கள் அறிவு இவ்வளவுதான்! ஆனால் பக்தியிலோ இவர்களுக்கு ஈடு–இணை கிடையாது. கடந்த மாட்டுப் பொங்கல் அன்றுகூட இதே "வைக்கோல் கன்று' பக்தர்கள் எங்களைக் குளிப்பாட்டி, குங்குமம் வைத்து, சூடம் கொளுத்தி, மாலை போட்டுக் கும்பிட்டார்கள்! கும்பிடுக்கும் கொலைக்காரத் தன்மைக்கும் எவ்வளவு நெருங்கிய உறவு "பார்த்தீர்களா'?

“இனி, இன்னொரு அவசர சங்கதி! எங்களுக்கு அடிக்கடி "கோமாரி'' என்ற தொத்து நோய் வருகிறது! திடீர் திடீரென்று செத்து மடிகிறோம்! சென்னை – மாதவரம் பால் பண்ணையிலுள்ள எங்கள் இனத்தாரில்கூடப் பலர் இப்படிச் செத்து விட்டனர். இதற்காக இப்போது சில நாட்களாக விலங்கு மருத்துவ நிபுணர் எங்கள் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார். அவர் உதவி இல்லாவிடில் அத்தனை பேரும் ஒரே நாளில் இடுகாட்டுக்கு (அதாவது மனிதன் வயிற்றுக்கு)ப் போயிருப்போம்!

“கடவுளே! (குறிப்பாக, இடைவிடாமல் பாலாபிஷேகம் செய்து கொள்ளும் பழனி ஆண்டவனே!) மடையர்கள் உங்கள் தலை மீது ஊற்றுகின்ற பாலை ஏற்றுக் கொள்கிறீரோ, என்னவோ, எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் எங்களை வருத்திப் பிழிந்து எடுக்கின்ற பால்தானே அது? அதற்காகவாவது எங்களிடம் நீர் கருணை காட்டக் கூடாதா? மனிதர்களாவது பல பாவங்களைக் (கேடுகளை) செய்கிறார்கள்? நாங்கள் யாருக்கு, என்ன கேடு, செய்கிறோம்? மனிதர்களுக்குப் பலவிதங்களிலும் நன்மை செய்து வருகின்ற எங்களுக்கு, நினைப்பு – பேச்சு – செய்கை எதனாலும் எவருக்குமே கேடு செய்யாத எங்களுக்கு, ஏன் பயங்கரமான இந்தக் கோமாரி நோயை உண்டாக்குகிறீர்? இதன் காரணமாக நாங்கள் செத்து மடிவது மட்டுமன்று; உமது படைப்புக்களாகிய ஆறறிவு படைத்த மக்களுக்குக்கூடப் பால் கிடைக்காமல் போகிறதே! இதோ, சென்னை நகரில் இந்த வாரம் முதல் பால் கொடுப்பதில் "வெட்டு' உத்தரவு போட்டு விட்டார்களே!

"இந்நிலையில் கருணாமூர்த்தி என்று உங்களை அழைப்பது பொருந்துமா? இந்த மாதிரியான ஒரு தொத்து நோயை ஈ, கொசு, மூட்டைப் பூச்சி, கரப்பான், நச்சுக்கிருமி போன்றவைகளுக்கு உண்டாக்கி அவற்றைப் பூண்டோடு அழிக்கக்கூடாதா? இவற்றை யெல்லாம் அழிப்பதற்காக உலக மக்கள் நாள்தோறும் எத்தனை கோடி ரூபாய் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஓ, கடவுளே! அழிக்க வேண்டியவற்றை வளர விட்டுக் கொண்டு, வாழ வேண்டியவற்றை அழித்துக் கொண்டிருப்பதுதான் “எல்லாம் அறிந்த'' கடவுள் தன்மையா?

“எனவே, மனிதர்கள் உங்களைக் “கருணாகரன்'' என்று போற்றிப் புகழ்கின்றபோது உங்களைக் கிண்டல் செய்கிறார்களா என்றுகூட நாங்கள் அய்யப்படுகிறோம். அன்று எங்கள் முன்னோரில் சிலர் மழையால் நனைந்ததற்காக கிருஷ்ண பரமாத்மா மலையையே கிள்ளி எடுத்து குடையாகப் பிடித்தாராமே! இன்று கொடிய கோமாரி நோய் வந்து பாரத புண்ய பூமியின் மாட்டு இனத்தைத் திடீர் திடீரென்று அழித்துக் கொண்டிருக்கின்ற கோரக் காட்சியைக் கண்டும்கூட கிருஷ்ண பரமாத்மா எங்கள் உதவிக்கு வரவில்லையே! அவர் இருக்கிறாரா அல்லது இற்நத போய்விட்டாரா என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லையே!

“கடவுளே! நாங்கள் செய்து வருகின்ற அரும்பெரும் தொண்டுக்கு இதுதானா நீங்கள் செய்யும் கைம்மாறு? நாங்களும் மனிதர்களைப் போல எந்நேரமும் உங்கள் முன்பு மண்டியிட்டுப் புகழ்ந்து துதி பாடவில்லை என்று கோபமா? நாங்களே கடவுள் என்று கருதுகின்ற இந்துக்களைக் கொண்ட நாடல்லவா, இது? எங்கள் மலம்கூட உங்களுக்குச் சமமாக (பிள்ளையாராக) வணங்கப்படும்போது எங்களை ஏன் இப்படி கோமாரி நோயினால் வாட்டி வதைக்கின்றீர்? இது அடுக்காது! அடுக்காது!''

இப்படிக்கு,

அப்பாவி மாடுகள் ("அறிவுப்பாதை' – 22.1.1965)

Pin It