கோல்காப்பூர் சாகுமக ராசர் – மக்கள்
 கொண்டாடும் ஏழைகளின் நேசர்!
சால்புநிறை அரசரென ஆண்டார் – நிலை
 தாழ்ந்தோரின் பால் அன்பு பூண்டார்!

பார்ப்பனியச் சூதுகளைத் தகர்த்தார் – அவர்க்குப்
 பணிந்திட்டே ஆட்சிசெய மறுத்தார்
வேர்ப்புழுவாம் சாதிமறை வெறுத்தார் – அதன்
 வேர்க்காலின் உயிர்நரம்பை முறித்தார்

வரலாற்றில் பிற்பட்டோர் பங்கு – ஐம்பது
 விழுக்காடாய் வழங்கியவர் எங்கு?
அரியசெயல் அரிய செயல் அம்மா – இவர்போல்
 அரசர்களே பிறக்கவில்லை அம்மா!

மாமேதை அம்பேத்கர் பெருமை – அந்த
 மாத்தலைவன் மதிநுட்ப அருமை
தாமாகக் கண்டுணர்ந்த செம்மல் – பெற்ற
 தாயைப்போல் கொண்டணைத்த வள்ளல்

சாதிமுறை ஒழிப்பதுவே வேலை – அதனைச்
 சாதிக்க ஒதுக்குவென்என் நாளை
ஆதிக்கப் பார்ப்பனியக் கொட்டம் – ஓங்க
 அனுமதியேன் நான்உள்ள மட்டும்

தாழ்த்தப்பட்டோர் கல்வி பதவி – இதில்
 தனிக்கவனம் உடனடியாய் வேண்டும்
தாழ்த்தப்பட்டோர் பள்ளி கிணறு – இதில்
 சமத்துவத்தை நிலைப்படுத்த வேண்டும்

என்பதெல்லாம் செயலாகக் கண்டார் – மக்கள்
 எண்ணத்தில் குன்றமென நின்றார்
மன்னர்களில் இவர்போலும் இல்லை – சாகு
 மகராசர் புகழ்வானின் எல்லை

'ஊனுடலைத் தொண்டுக்கே ஈந்தார் – எளியர்
 உரிமைபெற வேமண்ணில் வாழ்ந்தார்
மானுடத்தின் விடுதலைநம் இலக்கு – சாகு
 மகராசர் மனிதகுல விளக்கு 

Pin It