நைல் நதி ஓரத்தில் ஒரு நாடு புதிதாகப் பூத்திருக்கிறது. அய்க்கிய நாடுகள் அவையில் 193 ஆவது கொடியாகத் தெற்கு சூடான் தேசத்தின் கொடி பறக்கிறது. கொசாவா, எரித்திரியா, கிழக்குத் தீமோர், சோமாலிலான்ட் வரிசையில் புதிய வரவு, தெற்கு சூடான்!

கடந்த 9 ஆம் தேதி அந்த நாட்டின் தலைநகரான ஜூபாவில் ஜோன் காரங் நினைவகத்தின் முன்னாள் சூடானியர்கள் கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள். தெற்குச் சூடானியர்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த காரங், சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோன சோகம் சூடானியர்களுக்கு இன்னும் தாங்க முடியாத வேதனை!

வடக்குச் சூடான் நாட்டிடம் இருந்து தெற்குச் சூடான் மக்களுக்கு விடுதலையை வாங்கித் தர வேண்டும் என்பதற்காகக் காரங் முதலில் போராடவில்லை. தெற்குச் சூடானியர்களை ஒடுக்கும் படையில் மிக முக்கியமானவராக இருந்த காரங். பின்னர் மனம் மாறி துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்த வரலாறு அவருடையது.

வடக்கு சூடானில் அரபு முஸ்லிம்களும் தெற்குச் சூடானில் பழங்குடியினரும் அதிகம். பழங்குடியினர் புறக்கணிக்கப்படுவது உலகத்தின் எல்லா நாடுகளிலும் நடப்பதுதான். பழங்குடிச் சமூகத்தினர் அதிகம் வாழும் டிங்கா என்ற சின்ன கிராமத்தில்தான் காரங் பிறந்தார். இந்தச் சமூகத்தினருக்குப் படிக்கப் பள்ளிகள் கிடையாது.

யாரும் படிக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த ஏற்பாடு. ஆனால், அதை மீறி கிறிஸ்துவ மிஷன் பள்ளிக்கூடம் ஒன்று இவரது பகுதியில் திறக்கப்பட்டது. அதில் படித்த காரங், உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தையும் விவசாயம் பறிய கல்வியையும் கற்றார்.' இவை இரண்டுக்கும் மத்தியில் ராணுவத் தந்திரங்கள், ஆயுதங்களின் செயல்பாடுகளையும் தெரிந்து கொண்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய காரங், தான் கற்ற பொருளாதாரம் மற்றும் விவசாயம் குறித்த வேலைக்குப் போகாமல், சூடான் ராணுவத்தில் சேர்ந்தார். திறமையின் அடிப்படையில், படைத்துறையின் அதிகாரி பதவி கிடைத்தது.

1983 காலகட்டத்தில்தான் தெற்குச் சூடானில் போராட்டக்காரர்கள் மெள்ள எழுந்து ஆயுதங்களைப் பிடித்தார்கள். அன்றும் இன்றும் வடக்குச் சூடானின் அதிபராக இருக்கும் ஓமர் அல் பஷீர், இந்தப் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்பினார். ஓமரின் கெட்ட நேரம் அன்றுதான் தொடங்கியது.

இந்த ராணுவ அணிக்கு, ஜோன் காரங்தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் ஓமர் அறிவித்தார். "சூடான் விடுதலை அமைப்பு' என்ற சிறு குழுக்களை வைத்து சில நூறு பேர் அப்போது சண்டை போட்டுக் கொண்டு இருந்த காலம் அது. அதை அடக்குவதற்குப் பெரும்படையுடன் காரங் வந்தார். அதற்காகவே சூடான் விடுதலை அமைப்பு குறித்த அத்தனை தகவல்களையும் காரங் திரட்டினார்.

"இவர்கள் விடுதலை கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?' – திடீரென்று ஒரு நாள் காரங்குக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது. யாரை ஒடுக்குவதற்காகத் துப்பாக்கியைத் தூக்கி வந்தாரோ... அதே சூடான் விடுதலை அமைப்புக்கு, ஆதரவு தரத் தொடங்கினார் காரங். இவரோடு வந்த பலரும் இவருடன் இணைந்த கொள்ள மற்ற ராணுவ வீரர்கள் வந்த பாதையிலேயே திரும்ப ஓடினார்கள். "சூடான் மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பு காரங் தலைமையில் அப்போதுதான் உருவானது.

கொரில்லா போர்த் தந்திரங்களில் தேர்ந்த காரங் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவரது அமைப்பை இரண்டாகப் பிளக்கும் காரியங்கள் நடந்தன. அதில் ஈடுபட்ட துரோகிகளின் பல்வேறு தாக்குதல்களில் இருந்தும் காரங் தப்பினார்.

“அந்தத் துரோகியைத் கொன்றுவிடுங்கள்!'' என்று ஓமர் உத்தரவிட்டார். தெற்குச் சூடானைக் கைப்பற்றுவதற்கான புனிதப் போர் என்று இதனை ஓமர் சொன்õனர். ஆனால், காரங் வசம் இருந்த நிலங்களை ஓமர் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. அப்பாவிகளைக் கொல்வது அரசாங்கங்களின் ராஜ தந்திரங்களில் ஒன்று அல்லவா? இரண்டு நாடுகளின் எல்லையில் வாழ்ந்த பழங்குடியினரை கண்ணை மூடிக்கொண்டு கொல்ல ஆரம்பித்தது வடக்கு சூடான் ராணுவத்தால், சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஓமர் மீது இன்று குற்றச்சாட்டு கிளம்பி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக அவர் நிறுத்தப்பட்டு உள்ளார். மிக மிகக் கால தாமதமாகத்தான் இந்தக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

அமெரிக்கா இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அதற்கு மூன்று காரணங்கள், வடக்குச் சூடானின் அதிபர் ஓமர், சீனாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இரண்டு, தெற்குச் சூடானின் பழங்குடியினர் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடுகொண்டவர்களாக மாறிக் கொண்டு இருந்தார்கள்.

மூன்றாவது தெற்குச் சூடானில் உள்ள எண்ணெய் வளம், புதிய தேசத்தை உருவாக்கினால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எண்ணெய் வளத்தைத் தன்னுடைய பக்கம் திருப்பலாம் என்று அமெரிக்கா கணக்குப் போட்டது. ஓமரைப் போர்க் குற்றவாளியாக ஆக்கியதும், தெற்குச் சூடான் விடுதலை ராணுவத்தின் தலைவர் காரங்குடன் ஓமரைப் பேச்சுவார்த்தை மேஜையில் உட்காரவைத்ததும் அடுத்தடுத்து நடந்த அதிரடி திருப்பங்கள்.

சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை ராணுவத்துக்குமான ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முன்னிலையில் 2005 ஆம் ஆண்டு நடந்தது. ஓமரும் உட்கார்ந்து இருந்தார். காரங் எதிர் முனையில் இருந்தார். “தெற்குச் சூடானில் வாழும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ... அதற்கு இரண்டு தரப்புமே கட்டுப்படவேண்டும். "ஒன்றுபட்ட சூடானாக வாழ்வதா... பிரிந்து சென்று புதிய தேசத்தை அமைப்பதா?' என்பதை அந்த மக்கள் முடிவெடுக்கட்டும்!'' என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த தேர்தலில் 2011ஆம் ஆண்டு நடக்கட்டும் என்று அறிவித்தார்.

இடைக்காலத் தெற்குச் சூடான் அரசின் துணை அரசுத் தலைவராக காரங் முடிசூட்டிக்கொண்டார். இயற்கையின் சதி காரங் விஷயத்தில் நடந்தது. ஆம், பதவி ஏற்றுக்கொண்ட மூன்று வாரங்களில் இவர் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானது. சம்பவ இடத்திலேயே காரங் இறந்துபோனார். மிக மோசமான வானிலைதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. காரங் மரணம் சூடான் மக்களை அதிகமாகப் பாதித்தது. இவரது மரணத்தைக் காரணம் காட்டி, மீண்டும் வடக்குச் சூடான் தனது அதிகாரத்தை அதிகப்படுதுமோ என்று மக்கள் பயந்தார்கள். உலக நாடுகளின் பார்வை இருந்ததால், அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் நாள் வாக்கெடுப்பு நடந்தது. "லட்சக்கணக்கான மக்கள் தம் வாழ்க்கையின் விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புச் சென்று கொண்டு இருக்கிறார்கள்' என்ற அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். "நாம் இந்த நாட்டுடன் ஒன்றாக இருக்கக்கூடாது. உடனடியாகப் பிரித்ததாக வேண்டும்' என்று 37.92 லட்சம் பேர் வாக்களித்தார்கள். பிரிவினை வேண்டாம் என்ற 44 ஆயிரம் பேர் வாக்களித்தார்கள். அதாவது 98 சதவிகிதம் பேர் தெற்குச் சூடான் உருவாக உத்தரவிட்டார்கள்.

காரங்குடன் இருந்து போராடிய சல்வா கிர், அடுத்த தலைமைப் பொறுப்புக்கு வந்தார். காரங் சமாதியில் நின்று சல்வா கிர், “இன்று முதல் நாம் சுதந்திர மனிதர்களாக மாறியுள்ளோம்'' என்று கர்ஜித்தார். சூலை 9 ஆம் நாள் அன்று புதிய தேசத்தின் பிறப்புக்கான தேதி குறிக்கப்பட்டது. தேவாலயங்களில் மணி ஒலிக்க, பொது இடங்களில் மெழுவர்த்தி ஏற்ற, அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன், தெற்குச் சூடான் அதிபர் சல்வா கிர், வடக்கு, சூடான் அதிபர் ஓமர் நிற்க, புதிய கொடி பறந்தது. இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி அன்சாரி கலந்துகொண்டார். தெற்குச் சூடானில் முதன் முதலாகத் தூதரகம் திறந்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு.

இதில் இன்னொரு திருப்பம்... இந்த விழாவுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் தெற்குச் சூடான் அழைத்தது. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைவரான உருத்திர குமாரன், "எங்களை அழைத்திருப்பது இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரம்!' என்று அறிவித்துள்ளார். தெற்குச் சூடான் உதயமானது. நாடு கடந்து வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை விதையை உள்ளது.

தெற்குச் சூடானைவிட தமிழ் ஈழம் தனியாகப் பிரிவதற்குப் பல்லாயிரம் காரணங்கள் உண்டு. சூடானுக்காக அமெரிக்கா துடிப்பதற்கு, அங்கே எண்ணெய் வளம் இருக்கிறது; தமிழ்ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லையே!

– நன்றி : "ஜுனியர் விகடன்'

Pin It