ஆலந்தூர் நான்பிறந்த ஊராம்! ஆனால்
 அதற்கடுத்த ஊரெல்லாம் நடந்த ஊர்கள்!
நீலந்தான் வானநிறம்! நிலத்தில் பட்ட
 நிழல்மட்டும் கருப்புநிறம்! நெஞ்சில் பட்ட
கோலந்தான் சாதிநிறம்! கொடுமை செய்யக்
 குறிவைக்கும் இரத்தநிறம்! கண்டும் காணா
ஞாலந்தான் இருட்டுநிறம்! நீயும் நானும்
 நாட்டினிலே என்னநிறம்? தெரிந்த துண்டா?

ஆரணியில் வாழ்ந்தாலும் நவாப்பு வாழ்ந்த
 ஆர்க்காட்டில் வாழ்ந்தாலும் சாதி உண்டு!
ஊருணியில் குதித்துவிட்டுப் பிணமா னாலும்
 உடம்பின்மேல் சாதியினைத் தடவிப் பார்ப்பார்!
பேரணியை நடத்திவரும் தொண்டன் வீட்டில்
 பேன்பார்க்க மறந்தாலும் சாதி பார்ப்பான்!
சீரணியின் அரங்கில்தான் சாதிசாகும்!
 சிரிக்காதே என்நண்பா! இதுவே நாடு!

புடலங்காய் கத்திரிக்காய் போலச் சாதி
 போஎன்றால் போகாது! ஊரில் சாதி
கெடுமானால் போர்க்களத்தில் சந்திப் பாரே
 கிழிகிழிஎன் றேகிழித்து போட்ட நாராய்
நடநடஎன் றேஉலகை விட்டே ஓட்டி
 நல்லன்புக் காதலரைக் கொல்வார்! செத்தால்
சுடலையிலே பிணம்புதைக்கும் போதும் சாதி
 சொல்கின்ற இடந்தவறிப் புதைத்தால் சாவார்!

மலக்குடலைத் தூய்மைசெய்யும் அறிவி யல்தான்
 மனத்தூய்மை பெறுவதற்கும் மருந்த ளிக்கும்
நிலக்கடலைப் பூச்சிகளை அழிப்ப தைப்போல்
 நெஞ்சத்தில் சாதியினை அழிக்க வேண்டும்!
இலக்குவைத்துச் செவ்வாயின் மண்ட லத்தில்
 இறங்குமுன்னால் சாதியினை ஒழிக்கப் பார்ப்பீர்!
விலக்குகிற நோய்தடுக்கும் ஊசி போல
 வேரோடு சாதிவிழ வரட்டும் ஊசி!

Pin It