சோழப் பேரரசு தென்னிந்தியாவின் பெரும்பகுதி யைத் தன்னாட்சிக்கீழ்க் கொண்டுவந்தது. ஆதித்தன் காலம் முதல் சோழர்கள் தங்கள் அரசின் பரப்பினை விரிவுபடுத்தினர். ஆதித்தன் தொண்டை நாட்டையும் கொங்கு நாட்டையும் வென்றான். அவனுடைய மகன் பராந்தகன் மேலும் அரசை விரிவுபடுத்தியபோது பாண்டிய நாடு, ஈழமண்டலம் ஆகிய பகுதிகளை வென்றான். இவன் ஆட்சியின் பிற்பகுதியில் தொண்டை நாடும் பாண்டிய நாடும் சோழப் பேரரசின் கைவிட்டுச் சென்றன. இவற்றை மீட்கும் முயற்சியில் சுந்தரச் சோழன் ஓரளவு வெற்றிபெற்றான். இவனுக்குப் பின் ஆண்ட உத்தமச் சோழன் சிறந்த ஆளுமைபெற்று விளங்கினான். இவனைத் தொடர்ந்து ஆண்ட முதலாம் இராசராசன் சோழப் பேரரசை முன்னெப்போதைக் காட்டிலும் விரிவு படுத்தினான். இவன் மகன் இந்தியாவின் கிழக்குப் பகுதியை யும் கடாரத்தையும் தன்னடிக்கீழே கொண்டு வந்தான்.

கோயிலும் அரசும்
 
இடைக்காலத் தமிழகத்தில் கோயில் சமுக, அரசியல், பொருளியல் ஆகியவற்றின் நடுவமாக விளங்கியது. சமுகத்தின் எல்லா நிலையில் உள்ள மக்களையும் இணைக்கும் நிலையில் அது இயங்கியது. கோயில் மக்கள் பஞ்சத்தில் வாடும்போது உற்றுழி உதவியது. வேளாண் வளர்ச்சியிலும் கைவினைத் தொழில் வளர்ச்சியிலும் வணிக வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டியது. அவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி யது. இந்த நிலையில் பேரரசர்கள் கடவுளின் பேராள ராகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். முதலாம் ஆதித்தன் காவிரிக் கரையின் இருமருங்கிலும் 108 கோயில்களைக் கட்டினான். பராந்தகன் காலத்தில் அவனும் மேட்டுக்குடி மக்களும் தென்னிந்தியா முழு வதும் பல கோயில்களைக் கட்டினர். அவன் மருமகள் செம்பியன் மாதேவி பல கோயில்களைக் கட்டினார்.

சோழப் பேரரசர்கள் தாங்கள் வென்றடக்கிய பகுதிகளில் கோயில் கட்டுவதையும் கோயில்களுக்குக் கொடை அளிப்பதையும் பெருமையாகக் கொண்டிருந்த னர். வென்றடக்கிய மக்களைத் தன்னாட்சிக்கீழ் வைத்திருக்க அம்மக்களின் வழிபாட்டிடங்களில் பெருங்கோயில்களைக் கட்டுவது என்ற மரபினைப் பின்பற்றினர். எந்த ஒரு இனக்குழு மக்களும் தங்கள் தலைவனை அன்றி வேற்று வேந்தர்களை ஆட்சியாள ராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; முரண்படுவார்கள்; போரிடுவார்கள். இவற்றைத் தவிர்ப்பதற்குச் சோழர்கள் வென்ற பகுதிகளில் கோயில்களைக் கட்டினர். காவிரி பாய்ந்துவரும் கங்க நாட்டிலும் கொங்கு நாட்டிலும் ஆதித்தன் பல கோயில்களைக் கட்டினான். காரணம் அப்பகுதிகளில் வாழும் மக்களைத் தங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கே ஆகும். பராந்தகன் சித்தூர் மாவட்டம் தொண்டை மாநாடு என்ற ஊரில் கட்டிய பள்ளிப்படைக் கோயில் குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றில் மிகுந்த ஈமச் சின்னங்களை உருவாக்கியதன் நோக்கம் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் வேந்தனின் ஆட்சி இதுவரை என்பதை எதிரிகளுக்குக் காட்டு வதற்கே ஆகும் என்று கூறியுள்ளனர்.

தேவராச வழிபாடு
 
தென்கிழக்காசிய நாடுகளில் நிலைபெற்றிருந்த தேவராச வழிபாடு சோழர் காலத் தமிழகத்திலும் பரவியிருந்தது என்பர். எசு.ஆர். பாலசுப்பிரமணியம், பர்ட்டன் தீன் மற்றும் பலர் இந்தக் கருத்தினை எடுத்துக்கூறி வலியுறுத்தி வருகின்றனர். பிலியோசா, ஏமான் குலுக்கி ஆகிய அறிஞர்கள் இந்தக் கருத்தினை மறுத்துள்ளனர். இதுபற்றிய ஆய்வுகள் மறு ஆய்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இருப்பினும் தேவராச வழிபாட்டின் கூறுகள் தமிழகத்தில் பத்தி இயக்கக் காலம் முதல் இருந்து வந்துள்ளது. ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்று ஆழ்வார் கூறுவது எடுத்துக்காட்டத் தக்கது.

சோழர்கள் சைவ சமயத்தைப் போற்றினர். இராசராசன் தன்னைச் சிவபாத சேகரன் என்று கூறிக் கொள்வதை நோக்க வேண்டும். சோழர் ஆட்சிக்குக் கீழ் வந்த பல்வேறு இனக்குழுக்களை இணைக்கச் சைவம் மிகச்சிறந்த பணியாற்றியது. இனக்குழுக் கடவுளர்களைச் சிவனுடன் இணைத்துப் பெருந் தெய்வமாக்கியது. பெருந்தெய்வங்களுக்குப் பரிவாரத் தெய்வமாக்கியது. அதனால் சோழர்கள் போற்றிய சைவம் பல்வேறு மக்கள் குழுக்களைச் சோழப் பேரரசின்கீழ்க் கலந்தினிது உறையச் செய்தது எனலாம்.

சைவசமயம் மக்களை இணைக்கும் சமயமாக விளங்கியமையால் சோழப் பேரரசர்கள் சிவன் கோயிலைக் கட்டினர் என்று கொள்வதில் தவறில்லை. உள்ளூர்க் குடித்தெய்வங்கள் சிவனோடு இணைக்கப் பெற்றோ பரிவாரத் தேவதைகளாகவோ வைக்கப் பெற்றனர். சில சிவன் கோயில்களின் பெயர்களே இதற்குச் சான்று. துடையீசுவரன், கோமுக்தீசுவரர், தீக்காலி அடிகள், பட்டீசுவரர், காளையார்கோயில் ஆகியவற்றைச் சான்றாகக் காட்டலாம்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அவன் பேரரசின் மாட்சிமையை எடுத்தியம்பக் கட்டப்பெற்ற கோயில் என்பதை யாரும் மறுக்கவியலாது. ஆனால் அதே நேரத்தில் தடுத்தாட்கொண்ட புராணம், முப்புரம் எரித்த செய்தி, சுந்தரர் திருமணக்காட்சி, கண்ணப்ப நாயனார் வரலாறு, யானை உரித்த காட்சி, வாமதேவர் உருவம், இராசராசனின் முடிசூட்டு விழா ஓவியம் என்று பலவகைக் காட்சிகள் உள்ளன. இனக்குழு மக்கள் தங்கள் தெய்வத்தையும், தங்கள் கலையையும், பண்பாட் டையும், தங்கள் இனத்து அடியார்களையும் (வேட்டுவர் கண்ணப்பரைக் கண்டு மகிழ்வது போல) கண்டு மகிழும்படி அக்கோயிலை அமைத்து மக்கள் அனை வரையும் ஈர்த்த பெருமை இக்கோயிலுக்கு உண்டு. நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நாட்டிய மகளிரை அழைத்து வந்த தன்மை இக்கோயிலின் தென்னிந்தியத் தேசியத் தன்மையை எடுத்துக்காட்டவே ஆகும்.

சோழப் பேரரசைப் பற்றிய ஆய்வு செய்த பர்ட்டன்தீன் சோழப் பேரரசு ஒரு கூறாக்க நிலைப் பேரரசு என்று கூறுவார். இதனை ஆங்கிலத்தில் ‘segmentary state’ என்று கூறியுள்ளார். ஒரு கோபுரத்தின் அடிப்பகுதி ஊர்த் தலைவர்களைக் குறிப்பதாகவும் மேலே செல்லச் செல்ல அதிகாரத்தில் மேம்பட்ட குறுநில மன்னர்களைக் குறிப்பதாகவும், உச்சிப்பகுதி சோழப் பெருவேந்தரைக் குறிப்பதாகவும் கொண்டு சோழர் அதிகார அடுக்கு ஒரு கோபுரம் போல அமைந் துள்ளது என்பார். அவர் முடிவினைக் கடுமையாகக் குறைகூறுபவரே மிகுதி. ஒரு சில அறிஞர்கள் அவர் கருத்தை ஏற்றுப் போற்றியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கா. சிவத்தம்பி.

இந்தப் பின்னணியில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை வைத்துப் பார்க்கும்போது அக்கோயில் உருவில் ஒவ்வொருவரும் தன்னைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். சுந்தரர் மணவினை மூலம் தங்கள் ஊர் மண நிகழ்வினைப் பார்ப்பதாகவே நினைத்தனர். திருமண விருந்திற்கு உணவு சமைக்கும் காட்சியும், காணவந்திருந்த மக்கள் அமர்ந்திருக்கும் காட்சியும் தற்காலத் திருமண நிகழ்வுகளையும் நினைவு படுத்துகின்றன. இக்கோயில் இறைவன் உறையும் இடமாக மட்டுமின்றிச் சோழர் காலச் சமுகப் பண்பாட்டைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் போல் நிற்கிறது.

இக்கோயில் தமிழர்களின் பொறியியல் வல்லமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்பதைப் பல அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். அது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. தமிழ்ப் பெருந்தச்சர்களின் கட்டட வல்லமைக்கு அதற்கு முன்பும் இதுபோன்ற உயர்ந்த சான்று கிடைக்கவில்லை. பின்பும் கிடைக்கவில்லை.

Pin It