தமிழ் உலக முதன்மொழியும் உயர்தனிச் செம்மொழியுமாதலால், மென்மையும் தூய்மையும் அதன் இன்றியமையாத இயல்புகளாகும்.

குமரிநாட்டுத் தமிழர் வாயில் தோன்றிய ஒலிகள், உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக மொத்தம் முப்பதே. பிற மொழிகள் பிற்காலத்திலும் வன்புலங் களிலும் தோன்றியமையால், அவ்வக்கால வளர்ச்சிக்கும் நிலவியல்பிற்கும் தட்பவெப்ப நிலைக்கும் குரல் வாயமைப்பிற்கும் ஏற்றவாறு சில பல வல்லொலிகள் தோன்றியுள்ளன. ஆயினும், எம் மொழியிலும் எல்லா வொலிகளுமில்லை.

இலத்தீன் மொழியில் ஜ, ஷ, ழ, ற முதலியன இல்லை. கிரேக்க மொழியில் ஜ, ஷ, ச, ழ, ற, தி முதலியன இல்லை. ஆங்கில மொழியில் ழ, ற முதலியன இல்லை. மிகுந்த ஒலிப் பெருக்கமுள்ள சமற்கிருதத்திலும் எ, ஒ, ழ, ற, ன, தி, ஞீ முதலியன இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி ஒலியுடல் உள்ளது. எல்லா மொழிகளிலும் எல்லா வொலிகளையுஞ் சேர்த்தல் இயலாது. சேர்ப்பின் மொழி மாறிவிடும்.

தமிழிலுள்ள ஒலிகளெல்லாம் மென்மையானவை. அதில் வல்லொலிகளைச் சேர்த்து வல்லொலி மொழியாக்க விரும்புவது, மெல்லியலான பெண்மேனியை வல்லியலான ஆண்மேனியாக மாற்ற முயல்வதொத்ததே.

தமிழ் முப்பான் மெல்லொலிகளே கொண்ட தேனும், நம் முன்னோரான குமரிநில மக்கள், தம் நுண்மாண் நுழைபுலத்தால், அக் காலத்தில் மட்டுமன்றி எக்காலத்துந் தோன்றும் புதுப்புதுக் கருத்துகளை யெல்லாம் புலப்படுத்தத்தக்க சொற்களைத் தோற்று விக்குமாறு, ஏராளமான வேர்ச்சொற்களை யாக்கியுள்ள னர். எடுத்துக்காட்டாகத் தொழிற் பெயரீறுகளை நோக்குக. தமிழிலுள்ள அளவு தொழிற் பெயரீற்று வளம் வேறெம் மொழியிலு மில்லை.

ஒரு மொழியின் வளத்தைக் காட்டுவன அதன் சொற்களேயன்றி ஒலிகளல்ல. மொழி தோன்றியது சொற்களாகவேயன்றி எழுத்தொலிகளாக வல்ல. இலக்கணம் ஏற்பட்டபோதே, சொற்கள் எழுத்தொலி களாகப் பகுக்கப்பட்டன. எ-டு:

காகா - காக்கா - காக்கை, காகா - (காக) - காகம்.

க் + ஆ + க் + ஆ என்று தோன்றவில்லை.

சொற்களே பொருளுணர்த்தும்; எழுத்தொலிக ளல்ல. ஓரெழுத்துச் சொல்லேயாயினும், பொருளளவிற் சொல்லேயன்றி எழுத்தொலியன்று. பலவெழுத்துச் சொல்லைத் தனித்தனி எழுத்துகளாகப் பகுத்துவிடின், பொருள் தராது.

தமிழில் அயலொலி கலத்தல் கூடாதென்பதை யுணர்த்தவே,

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (எச்ச. 5)

என்று தொல்காப்பியரும்,

“இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும்
அல்லா வச்சை வருக்க முதலீ(று)
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம்
பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும்” (நன்.பத. 19)

என்று பவணந்தியாரும் கூறிப் போந்தனர்.

ஆகவே, சொற்றூய்மை போன்றே ஒலித்தூய்மை யும் தமிழுக்கு இன்றியமையாத பண்பாம்.

தமிழைக் குமரிநாட்டிலேயே செந்தமிழ் கொடுந் தமிழ் எனப் பகுத்து, செந்தமிழையே பேணி வந்தனர். கொடுந்தமிழ் நாடுகளில் வழங்கிய சிறப்புச் சொற்களை மட்டும் திசைச் சொற்கள் (Provincial Words) என்று ஏற்றுக்கொண்டனர்.

“இயற்சொற் றாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே.” (தொல்.எச்ச.2)

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.” (தொல். எச்ச.2)

அக் காலத்துக் கொடுந்தமிழ் நாடுகள் வேறு; தொல்காப்பிய வுரையாசிரியர் கூறும் கொடுந்தமிழ் நாடுகள் வேறு.

வெளிநாடுகளினின்று வந்த பொருள்களெல்லாம் செந்தமிழ்ப் பெயர் பெற்றன. உருளைக்கிழங்கு, ஏழிலைக்கிழங்கு, கரும்பு, சாத்துக்குடி, செந்தாழை (அன்னாசி), புகையிலை, மிளகாய் முதலிய நிலைத் திணைப் பொருள்களும், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, கழுதை, கோவேறு கழுதை (அத்திரி), குதிரை, வரிக் குதிரை, நீர்யானை முதலிய விலங்குகளும்; தீக்கோழி, வான்கோழி முதலிய பறவைகளும்; மிதிவண்டி, புகைவண்டி, சூழ்ச்சிய வண்டி முதலிய ஊர்திகளும்; குண்டுக்குழாய், வைத்தூற்றி, மண்ணெண்ணெய் முதலிய பல்வகைப் பொருள்களும், வெளிநாடுகளினின்று வந்தவையே.

குதிரை ஒன்றே பன்னிரு வகையாக வகுக்கப்பட்டு வெவ்வேறு பெயர் பெற்றுள்ளது. குச்சுக்கிழங்கு இடந் தொறும் பெயர் வேறுபட்டுப் பன்னிரு சொற்களாற் குறிக்கப்படுகின்றன. ஆதலால், வெளிநாட்டுப் பொருள்கட் கெல்லாம் வெளிநாட்டுப் பெயர்களே யிருத்தல் கூடுமென்பது பொருளற்ற உறழாட்டே.

பிறமொழிகளெல்லாம், தமிழ்போல் சொல் வளமும் சொல்லாக்க வாய்ப்பும் தூய்மை மரபும் உடையனவல்ல. ஆங்கிலர் கடந்த முந்நூற்றாண்டு களாகப் புதுப் புனைவுகளால் தம் அறிவைப் பெருக்கிக் கொண்டனர். தம் புத்தறிவுக் கருத்துகளைக் குறிக்கத் தம் மொழியிற் சொல்லின்மையால், இலத்தீன் கிரேக்க மொழிகளினின்று ஏராளமாய்க் கடன்கொண்டு தம் கருத்திற்கேற்பத் திரித்துக்கொண்டனர்.

எ-டு:

புதுக்கருத்து  கடன்சொல்  திரிப்பு

சூழ்ச்சியப்பொறி  Lingenium             engine

(சூழ்ச்சி)

மின்  Gk.electron          electricity

(அம்பர்)

இங்ஙனம் ஆங்கிலர் தம் கருத்தையுணர்த்தப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தியது, பங்கீட்டுக் காலத்தில் மிகுதியாய் அரிசி கிடைக்குமிடத்திற் பையையும், உழவன் தான் விளைத்த கூலத்தைச் சந்தைக்குக் கொண்டுபோக வண்டியையும், இரவல் பெற்றதொக்கும்.

ஆங்கிலத்தில் மட்டுமன்றி இலத்தீன் கிரேக்க மொழிகளிலும் பல அடிப்படைச் சொற்கள் தமிழா யிருப்பதால், இற்றை ஆங்கில அறிவியற் கம்மியக் கலைக் குறியீடுகளிற் பல தமிழ்ச் சொற்களையே அடிப்படை யாகக் கொண்டும் உள்ளன. மேலும், ஆங்கிலக் கலைக் குறியீடுகளெல்லாம் பல்வேறு வகையில் மிக எளிய முறையில் அமைந்துள்ளன. அம்முறைகளைக் கையாளின், எல்லாக் கலைக்குறியீடுகளையும் தமிழிற் செவ்வையாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம். என் புதிய வெளியீடான “மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை” என்னும் பொத்தக முடிவுரை யில் இவ் வுண்மைகளெல்லாம் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. ஆண்டுக் கண்டு தெளிக.

தமிழ்நாட்டரசு சட்டத்துறை தவிர வேறெதிலும் குறியீடுகளை மொழிபெயர்க்க இதுவரை எத்தகை முயற்சியும் செய்யவில்லை. காலஞ்சென்ற இ.மு. சுப்பிர மணியப் பிள்ளை போன்ற தனிப்பட்ட தமிழ்ப் புலவரும், கிண்டி, கோவை, காரைக்குடி, அண்ணாமலை நகர் முதலிய இடங்களிலுள்ள கல்லூரி மாணவருமே, தம் அளவிறந்த தமிழ்ப் பற்றினால், ஆட்சிப் சொற்களை யும் பல்வேறு அறிவியற் குறியீடுகளையும் தொகுத்தும் மொழிபெயர்த்தும் உள்ளனர். அரசு அவற்றையெல்லாம் தொகுத்து அளவைப்படுத்தி, ஆட்சிச் சொற்களைப் போன்றே பிறவற்றையும் ஆட்சிக்குக் கொண்டுவருதல் வேண்டும். இதற்காகத் தக்காரைக் கொண்ட ஒரு நிலையான குழுவையும் அரசு அமர்த்துதல் வேண்டும்.

மூவேந்தரும் ஆரியக் கொள்கைகளைத் தழுவிய பின் தனித்தமிழ்க் காவலரான புலவர் மரபு அற்றுப் போனதினால், 10ஆம் நூற்றாண்டிலிருந்து வடசொற்கள் தமிழில் வரைதுறையின்றிப் புகுந்து தமிழ்ச் சொற்களை வழக்கு வீழ்த்தவும் தமிழைக் கலவை மொழியாக்கவும், தொடங்கின. வடமொழி வெறியரான மாலிய (வைணவ)ப் பிராமணர், நாலாயிரத் தெய்வப் பனுவல் களின் உரைகளையும் மாலியக் கோட்பாடுகளையும் வடசொல்லுந் தென்சொல்லுங் கலந்த மணிப்பவள நடையிலேயே வரைந்து வந்தனர். அது தமிழில் விளக்க முடியாத மாலிய மருமங்களை (இரகசியங்களை) அறிய விரும்பிய அறிஞர்க்குமட்டும் வரையப்பட்டதன்று. தமிழ்நாடு மாலியர் சிறுபான்மையராதலால், அது தமிழைப் பெரிதுந் தாக்கவில்லை. ஆயினும், 11ஆம் நூற்றாண்டில் எழுந்த வீரசோழியம் என்னும் புத்தமித்திரன் புன்னூல்,

“இடையே வடவெழுத் தெய்தின் விரவியல் ஈண்டெதுகை
நடையேது மில்லா மணிப்பிர வாளநற் றெய்வச்சொல்லின்
இடையே முடியும் பதமுடைத்தாம்...”    (வீர. அலங். 40)

என்று நுவலுமளவு தமிழ் தாக்குண்ணவே பட்டது.

“கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மிதமிஞ்சிய வடமொழிக் கலப்பால் கேரள இலக்கியத்தின் ஒரு பகுதி மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. பண்டைய வட்டெழுத்தின் இடத்தில் ஆரிய எழுத்து இடம் பெற்றது. கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் மணிப்பிரவாள இலக்கியங்கள் தோன்றின. வைசிக தந்திரம், உண்ணுநீலி சந்தேசம், உண்ணிச்சிரிதேவி சரிதம், உண்ணியச்சி சரிதம், அனந்தபுர வர்ண்ணனம் ஆகிய நூல்கள் லீலா திலகத்திற்கு முன்னர்த் தோன்றிய முக்கியமான மணிப் பிரவாள இலக்கியங்கள். இவற்றை அடிப்படையாக அமைத்து வடமொழியில் எழுதப்பட்டதே. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் எழுந்த லீலா திலகம் என்ற மணிப் பிரவாள இலக்கணம்.” (தமிழ் லீலாதிலகம், முன்னுரை, பக். 6-7).

இன்று இரண்டொருவர் அல்லது ஒருசிலர் விரும்பும் மணிப்பவளமோ, லீலாதிலகம், போலாது, வடமொழியும் ஆங்கிலமும் அவற்றின் சிறப்பெழுத் தொடு தமிழிற் கலக்கும் இருமடி மணிப்பவளம் அல்லது மும்மணிக் கலவை.

சேர வேந்தர் குடி அற்றபின், மலையாள நாட்டில் தலைமையாக விருக்கும் நாயர் வகுப்பைச் சேர்ந்த மன்னரும் மக்களும் ஆரியத்திற்கு முற்றும் அடிமைப் பட்டுப் போனதினால், சேரநாட்டுச் செந்தமிழ் முன்பு கொடுந்தமிழாக மாறிப் பின்பு தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகளினுங் கேடாகச் சிதைந்து, மணிப்பவள மொழியாக வழங்கி வருகின்றது.

இனி, தமிழ் மும்மொழிக் கலவையாயின், எந்நிலை யடையுமோ, இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

மாந்தன் பேசக் கற்றதிலிருந்து தொடர்ந்து படிப்படியாக முழு வளர்ச்சியடைந்து கடந்த ஐம்பதி னாயிரம் ஆண்டுகளாக வழங்கிவரும் ஒப்புயர்வற்ற தன்னந்தனித் தூய தமிழை, மறைமலையடிகள் போன்ற நிறைபுலவர்க்கும் மாற்றவும் சிதைக்கவும் அதிகார மில்லை. அங்ஙனமிருக்க, தமிழ்ப் புலமையும் தமி ழாராய்ச்சியும் தமிழ்ப் பற்றுமில்லாத ஒருசிலர் தமிழை உருத் தெரியாது மாற்ற உரிமையுடையரோ?

20.5.1978 அன்று, “திருச்சிராப்பள்ளித் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் திரு. நா. ஞானசம்பந்தம் அவர்கள், தமிழில் உள்ள சொற்கள் அனைத்துக்கும் வேர் இருக்கின்றது என்று கண்டுபிடித்திருப்பதாக, நான்கு நாள்கட்குமுன் வந்தவர்கள் சொன்னார்கள். ஒரு பக்கம் அறிஞர் சிலர் இவ்வகையில் ஆராய்ந்து வரும்போது, கொச்சைத்தமிழ் நடையும் மணிப் பிரவாள நடையும் மறைமலையடிகள் கொள்கைக்கு மாறாகப் பெருகி வருவது வருந்துதற்குரியது. புலவர்கள், பேராசிரியர்கள் கவனிக்கின்றார்களில்லை” என்று வருந்தி எனக்கெழுதிய தாமரைச் செல்வர்; திடுமென்று மனந்தடுமாறி, “ஆழ்ந்து எண்ணிப் பார்ப்போமானால், பல்துறை அறிவியல் அறிவையுந் தமிழில் கொடுப்பதற்கு, நாமும் பிற மொழியினரைப்போல அறிவியல் கலைச் சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டு, தமிழியல் புகட் கேற்ப அமைத்து அறிவியல் நூல்களை ஆக்கிக் கொள்வதே தக்க வழியாகும்,” “கலைச்சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு தனித்தமிழில் நூல்கள் ஆக்கவேண்டுமே யல்லாது, வழக்கத்திலுள்ள பொது வான தமிழ்ச் சொற்களையும் கைவிட்டுப் பிறமொழிச் சொற்களைக் கூட்டியும் கொச்சைச் சொற்களைப் புகுத்தியும் இலக்கணப் பிழையுறவும் எழுதுதல் கூடாது” என்று மேழச் ‘செல்வி’ ஆசிரியவுரை வரைந்திருப்பது, ஒரு கன்னி சிலரொடு மட்டும் சிலமணி நேரம் கூடி விளையாடிவிட்டு, ஏனைப்பொழுதெல்லாம் தன் கற்பைக் கண்டிப்பாய்க் காத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது போலிருக்கின்றது.

இனி, ஆடவைச் ‘செல்வி’ யிதழில், ‘புதிய முத்தமிழ்’க் கட்டுரையின் கீழ், “இக் கட்டுரையில், ஆசிரியர் வடமொழி எழுத்துகளை அறிவியல் சொற் களைத் தமிழில் எழுதுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று, அறுதியிட்டுக் கூறுவதை நோக்குக. இலக்கிய நடைக்கு இவ் வெழுத்துகளைப் பயன் படுத்தக்கூடாது என்று, கண்டிப்பாகக் கூறுவதை வரவேற்கலாம்” என்று தாமரைச் செல்வர் குறிப்பு வரைந்திருப்பது, இந்தியை ஆட்சிக்கும் எழுத்துப் போக்குவரத்திற்குந்தான் பயன்படுத்த வேண்டும்; இலக்கியத்திற்குப் பயன்படுத்தக் கூடாது, என்று சொல்வது போன்றே யிருக்கின்றது.

பாடப் பொத்தகங்களும் ஒருவகை இலக்கியமே என்பதை அவரறியாதது வருந்தத்தக்கது. இன்று பாடப் பொத்தகத்திற்கு நேர்வதே நாளை இலக்கியத்திற்கும் நேரும். அதன்பின் இடைக்கால நிகண்டுகள் போல, அகரமுதலிகளும் அயன்மொழிச் சொற்களை யெல்லாம் அவற்றின் சிறப்பெழுத்துகளுடன்,

“நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்” (மரபு. 90)

என்று கி.மு. 7ஆம் நூற்றாண்டிலேயே, தொல்காப்பியம் ஓம்படை கூறியிருத்தல் காண்க.

இன்னும் மூவாண்டுள், ‘செந்தமிழ்ச் சொற்பிறப் பியல் நெறிமுறைகள்’ என்னும் நூல் உருவாகும். அதன்பின், அதைப் பின்பற்றி, எப் புதுச் சொல்லும் புனைந்து கொள்ளலாம்; எக் கலைக் குறியீட்டையும் மொழிபெயர்க்கலாம். அதுவரை பொறுமையாயிருத்தல் வேண்டு:ம.

ஆட்பெயர், இடப்பெயர் முதலிய மொழி பெயர்க்கக்கூடாத சிறப்புச் சொற்களையும், தமிழெழுத் திலேயே எழுதுதல் வேண்டும். எ-டு. சேக்கசுப்பியர், ஆப்பிரிக்கா. பிற சொற்களையெல்லாம் மொழி பெயர்த்தே யாதல்வேண்டும்.

இனி, ‘புதிய முத்தமிழ்’ வகுத்த புதிய புணர்ச்சி நெறிப்படி,

1. நிலைமொழி யீற்றில் நிற்பது மெய்யேல்
வருமொழி ரலமுன் வாரா வென்க
க¬லான் இரண்டு கண்டே னிலக்கில்
எனவுரைத் தெழுதுக இதுமுது நெறியே

2. நிலைமொழி யீற்றில் உயிரொலி நிற்பின்
வருமொழி ரலமுன் வரலா மென்க
கலைமா ரெண்டு காணுக லெக்கில்
எனவுரைத் தெழுதுக இதுபுது நெறியே

என்று புணர்ச்சி யிலக்கணத்தை மாற்றவும் நேரும். இதன் தீங்கை அறிஞர் கண்டுகொள்க.

ஒருவர் ஏதேனும் உயர்பதவி பெறின், தாம் தேர்ச்சி பெற்ற துறையிலேயே சிறப்புப் பணி செய்தல் வேண்டும்; தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அடாததில் தலையிடக் கூடாது.

தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை. தமிழ்நாட்டு உண்மையான வரலாறும் இன்னும் எழுதப்படவில்லை. எதிர்காலத்தில் ஒரு தமிழ்க் கமால் பாசா தோன்றி எர்க்குலிசு திறவகையில், தமிழரின் மூவாயிர வாண்டடிமைத்தன விளைவையும் ஒருங்கே அகற்றிவிடலாம். ஆதலால், வரம்பு கடந்த நடத்தையை விட்டொழிக.

இன்றே, முடிவுகொள்ள வேண்டுமெனின், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, பெரும் புலவர் வேணுகோபாலப் பிள்ளை, அருட்டிரு அழகரடிகள், தவத்திருக் குன்றக்குடி அடிகள் முதலிய பேரறிஞரைக் கூட்டிப் பெரும்பான்மைத் தீர்ப்பை ஏற்றுக் கொள்க.

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”

“கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.”

நன்றி : “செந்தமிழ்ச் செல்வி” ஆகத்து 1978
Pin It