ஆரியம் கண்டாய்? தமிழம் கண்டாய்? எதைக் கண்டாய்? தமிழா நீ எதைக் கண்டாய்? இதுவரை காணக் கற்றுக் கொள்ளவில்லையென்றாலும் இனியாவது காணக் கற்றுக்கொள்.
ஆரியம்தான் நம் எதிரி; கருவறுக்கும் எதிரி. ஆரியம் எவ்வளவோ முயன்றும், தமிழ் இன்னும் அழிந்துவிடாமல் இருக்கிறதே என்றுதான் தொடர்ந்து அழிக்க முயல்கிறது.
மூவாயிரம் ஆண்டாய் முடியாத ஒன்றை இப்போது இரமண சர்மா என்கிற காஞ்சி மடப் பார்ப்பனர் செய்யத் துடிக்கிறார்.
தமிழ் ஒருங்குகுறியில் (Unicode) 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்று ஒருங்குகுறித் தொகுப்பியத்திற்கு (Unicode Consortium) இரமண சர்மா விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள மூவாயிரம் மொழிகளில் தமிழ் தவிர்த்த பிற மொழிகளெல்லாம் சமற்கிருத நெடுங்கணக்கைப் பின்பற்றுகின்றன. தமிழ் மட்டும் தனித்து நிற்கிறது. இது இரமண சர்மாவுக்கும் தமிழைக் கருவறுக்கவே கங்கணம் கட்டியிருக்கும் காஞ்சி மடத்துக்கும் பிடிக்கவில்லை. தமிழின் உயிர் எங்கே இருக்கிறது என்று பார்த்து அதைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.
தமிழ் நெடுங்கணக்கு தமிழின் தொன்மையை நிலைநாட்டும் சான்று. அதிலிருந்துதான் சமற்கிருதம் நெடுங்கணக்கைக் கடன்பெற்றது என்பதை மெய்ப்பிக்க உள்ள சான்று. இதைக் கெடுத்துவிட்டால் எல்லாம் முடிந்தது. இந்து - இந்தி - இந்தியா என்று எளிதாகப் பாலம் அமைத்துவிடலாம். மெல்ல மெல்லச் சமற்கிருதத்தை அரியணையில் ஏற்றிவிடலாம் என்று இரமண சர்மா கூட்டம் நினைக்கிறது.
தமிழ் இயன்மொழி. 50 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. என்று பிறந்தவள் என்றறியாத இயல்பினள் எங்கள் தாய் என்றார் பாரதியார். இதை அழிக்க நினைக்கிறாயே உன்னால் முடியுமா? தமிழ் தந்த பிச்சை நீ. வாழைக்குத் தன் கண்ணே கூற்றம் என்று நினைத்து அழிக்கப்பார்க்கிறாய். ‘இதன் கன்னித் தன்மை அறியாதவனடா நீ. உன்னால் அறியவும் முடியாது. அழிக்கவும் முடியாது.
நீ வரும்போது என்ன கொண்டுவந்தாய்? உனக்கு மொழி இருந்ததா? பண்பாடு இருந்ததா? நீ சொல்கிற இராமாயண - மகாபாரதக் கதைகள் உன்னுடையனவா? வரும்போது அழிவைத் தான் கொண்டுவந்தாய். அதற்கு முன்பே ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் அறிந்தவர்கள் நாங்கள்.
எம் முன்னோர் புனைந்த கதைகளை உனதாக்கிக் கொண்டு எம்மை ஏய்க்கப் பார்க்கிறாய். மூவாயிரம் ஆண்டு வரலாறுடைய உனக்கு எங்கே இருந்து வந்தது பதினைந்தாயிரம் ஆண்டுத் தொன்மைக் கதை. எல்லாக் காலத்தும் எல்லோரையும் ஏமாற்றலாம் என்று நினைக்காதே.
வடாஅது பனிபடு வடவரை வரைக்கும் வாழ்ந்தவர்கள் நாங்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை நாவலந்தீவு முழுமையும் தமிழர்கள் வாழ்ந்த உண்மையை உணர்வாயா நீ? இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலிருந்தும் சமற்கிருதத்தை நீக்கிவிட்டால் அவை தமிழ்தான் என்பதைப் புரிவாயா நீ?
எத்தனை மொழியிலாளர்கள் இதைச் சொல் கிறார்கள். வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகும் இந்தக் கும்பலிலிருந்து விலகிச் சில பேராசிரியர்கள் மட்டும் தான் இதைச் சொல்கிறார்கள். மற்றவர்களுக்கு அறிவில்லையா? தெரியாதா? தெரியும். நன்கு தெரியும். சொல்லி ஏன் பிழைப்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்.
இவர்கள் இப்படியிருந்தால் தமிழ் நெடுங் கணக்கில் கைவைக்கிற துணிச்சல் இந்தப் பார்ப்பனக் கும்பலுக்கு வராமலாப்போகும்?
பார்ப்பனியத்தின் நச்சுப்பல் பிடுங்கப்பட்டு விட்டதாகத் திராவிட இயக்கம் சொல்லித் திரிகிறதே உண்மையா? இல்லை. பார்ப்பனியம் பால்வார்த்து வளர்க்கப்படுவது இவர்களது ஆட்சியில்தான். யாராவது மறுக்க முடியுமா?
திராவிடம் அரை ஆரியம், பார்ப்பனியம் கீழை ஆரியம், ஐரோப்பிய - அமெரிக்கம் மேலை ஆரியம். இந்த முக்கூட்டில் தமிழ் அழிக்கப்படுவதை அறிந்து தடுப்பது எப்போது? தடுப்பவர் யார்?
தமிழ்-தமிழர் என்று சொன்னால் பார்ப்பனர்கள் வந்து புகுந்து விடுவார்கள், திராவிடர் என்று சொன்னால் அவர்கள் வரமாட்டார்கள் - நம்மை அழிக்கமாட்டார்கள் என்று பெரியார் முதல் அவரது பெருந்தொண்டர் வரை சொல்லி வருகிறார்களே இதில் உண்மை இருக்கிறதா? பகுத்தறிவு இருக்கிறதா? தன்மானம் இருக்கிறதா? தமிழனுக்குத் திராவிடப் பட்டம் கட்ட எதை வேண்டுமானாலும் சொல்வதா?
அதனால்தான் இந்த நெருக்கடியான நேரத்தில் கூட தமிழ் நெடுங்கணக்கில் ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ என்ற ஐந்தும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூச்சம் இல்லாமல் சொல்கிறார்கள். திராவிட இயக்கத்தார் இவற்றைத் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து நீக்கவேண்டும் என்று என்றைக்காவது அவர்கள் குரல் கொடுத்த துண்டா?
பாவாணர் குரல் கொடுத்தார். அவர் வழியில் நாமும் குரல் கொடுக்கிறோம்.
தொல்காப்பியர் குரல் கொடுத்தார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குரல்கொடுத்தார்.
‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே’
என்று வரையறை செய்தார்.
‘எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப’
என்று தமிழ் நெடுங்கணக்கு உணர்த்தினார்.
தமிழில் எந்த மொழிச் சொல்லை எழுதினாலும் தமிழ் எழுத்துகளை வைத்துத்தான் எழுத வேண்டும் என்றார். எழுத்துக் கடன்பெறும் மொழி உலகில் எங்காவது உண்டா?
தமிழ் என்பதை Tamil என்று ஆங்கிலத்தில் சிதைத்து எழுதும் போதும் பேசும்போதும் கவலை கொள்ளாத தமிழன் இராசாசி என்று எழுதினால் பேசி னால் கவலைப்படுகிறான். ஆயிரம் விளக்கை Thousand light என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லும் போதும் மரைக்காட்டை வேதாரண்யம் என்றும் தஞ்சாவூரைச் சுயமரணபுரி என்றும் பொருள் புரியாமல் முட்டாள்தனமாகச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துச் சொல்லும் போதும் தமிழனுக்கு ஏன் சினம் வரவில்லை. எத்தனை ஆயிரம் கோயில் பெயர்களை - கடவுளர் பெயர்களைத் தாறுமாறாகச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்து நம்மை முட்டாளாக்கினானே கவலைப் பட்டோமா? இதன் பின்னணியில் நம் பொருளியல் உரிமையை இழந்தோமே யார் அதனை மீட்பது?
தமிழில் ஆரிய நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தப்படுகிறது. கீழை ஆரியச் சமற்கிருதத்தால் முடியாவிட்டால் மேலை ஆரிய ஆங்கிலத்தால் அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு அரை ஆரியத் திராவிட இயக்கம் துணைபோகிறது.
தமிழில் ‘F’ என்ற ஒலிக்கேற்ற எழுத்து இல்லை, அதை அப்படியே சொல்லும்படி Fரான்சு என்பது போல் எழுதலாம் என்று சோ மேதாவி சொல்ல வில்லையா? F போட்டு எழுதுவது நமக்கு அருவெறுப்பாக இருக்கிறதென்றால் ஜ போட்டு எழுதுவதும் அருவெறுப்பாக இருக்க வேண்டுமல்லவா?
உண்மைத் தமிழனுக்கு ஜ வராது, ஸ வராது, இராசா என்றுதான் சொல்வான். சத்தியம் என்றுதான் சொல்வான். தமிழில் பிற மொழிச் சொற்களை எப்படி எழுதவேண்டும் என்பது தமிழனுக்குத் தெரியும்.
ஒருங்குகுறிக்கு வருவோம். தமிழ் ஒருங்குகுறி ஒதுக்கீட்டில் ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ என்ற ஐந்து எழுத்து களும் தமிழ் எழுத்துகளாகவே கருதப்பெற்று ஸ, ஸா, ஸி, ஸீ என்று விரித்துப் பதியப்பட்டுள்ளன.
ஒருங்குகுறிக்குள் இவற்றைச் சேர்த்த அறிஞர்கள் யார்?
ஒருங்குகுறியில் தமிழ் எனக் கருதி இவற்றையும் சேர்த்ததை நீக்க வேண்டும் என்பது நம் கட்டளை.
தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி கெட்டுப்போனதற் கான சான்றுதான் இந்த அவலம். ஐம்பது ஆண்டு களுக்கு முன்பு இப்படியொரு வேலையைச் செய்துவிட முடியுமா? முடியாது. ஏமாந்த நேரத்தில் ஏற்றம்கொள்ள ஆரியம் முயன்றுகொண்டேதான் இருக்கும்.
சரி, தமிழக அரசு என்ன செய்துகொண்டிருந்தது? உலகத் தமிழ் மாநாடு நடத்தாமல் தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியதே அவற்றில் என்ன செய்தது? உத்தமம் தமிழ் ஒருங்குகுறியில் ஸ, ஷ வரிசையைச் சேர்த்ததை ஏன் எதிர்க்கவில்லை.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு தமிழ் இணைய மாநாடும் இந்த ஆண்டு நடைபெற்றதே அந்த மாநாட்டினால் ஆய பயன்தான் என்ன?
தமிழ் ஒருங்குகுறிக்கு ஒருங்குகுறித் தொகுப்பியம் 128 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதைக் கூட்டி 350 இடங்களைத் தமிழுக்கு ஒதுக்க வேண்டும் என்று நாம் குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழ் ஒருங்குகுறியில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று காஞ்சி மடத்திலிருந்து விண்ணப்பம் வருவதன் சூழ்ச்சி என்ன?
தமிழக அரசு தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்ற ஒன்றை வைத்திருக்கிறதே இந்தச் சதிச் செயல்கள் அதற்குத் தெரியாதா என்று கேட்டால் அது கடந்த மூன்றாண்டுகளாக ஒருங்குகுறித் தொகுப்பியத்திற்கு உறுப்பினர் கட்டணம் கட்டவில்லையாம்; அதனால் அதற்குத் தெரியாதாம். இது எவ்வளவு பெரிய அவலம்; இழுக்கு. உறுப்புக் கட்டணம் ஆண்டுக்கு 12000 அமெரிக்கத் தாலர்தான். இதைக் கட்ட அரசிடம் பணம் இல்லையா? தமிழ்தானே என்கிற அலட்சியம் என்பதைத் தவிர வேறென்ன?
இரமண சர்மா விண்ணப்பிக்காவிட்டால் இவை எதுவும் வெளியுலகுக்குத் தெரியாமலே போயிருக்கும்.
இந்தியாவின் 8ஆம் பட்டியலில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளின் எழுத்து வடிவங்களும் ஒருங்குகுறியில் இடம்பெற்றுள்ளன. வழக்கில் இல்லாத வேதக்காலச் சமற்கிருதம், கிரந்த எழுத்துகள் ஆகிய வற்றை ஒருங்குகுறியில் சேர்க்க செபுதம்பர் 6ஆம் நாள் நடந்த கிரந்த அறிஞர்களின் கூட்டப் பரிந்துரையை ஒருங்குகுறித் தொகுப்பியத்திற்கு இந்தியத் தரவுத் தொழில்நுட்பத் துறை அனுப்பியுள்ளது.
இதை அறிந்து இணையத்தைப் பயன்படுத்தும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டில் நம் நண்பர்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் மகன் திருவள்ளுவனும் பேராசிரியர் பா.இறையரசனும் தமிழ் அமைப்புகளைக் கூட்டி இதை அம்பலப்படுத்தினார்கள்.
இது எதுவுமே தெரியாதது போல் தினமணி ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ? என்று தலைப்பிட்டு ஆசிரியவுரை எழுதியது. தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஏதோ தமிழர்கள் இந்த ஐந்து எழுத்துகளை ஒருங்குகுறியில் சேர்ப்பதை எதிர்ப்பது போல் கற்பனை செய்துகொண்டு அந்த எழுத்துகள்தான் முன்பே உள்ளனவே அவற்றை ஏன் நீக்க வேண்டும் என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.
எந்த மொழிச் சொல்லாகவும் இருக்கட்டும். தமிழில் உள்ள எழுத்துகளை வைத்துத்தான் அதை எழுதவேண்டும். ஆளுக்கொரு எழுத்தாய்ச் சேர்த்தால் தமிழ் என்னாவது?
தினமணி ஆசிரியவுரை ஒரு செய்தியை அம்பலப் படுத்தியது. கணினிப் பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் தொல்லை இல்லாமல் எழுதவும் படிக்கவும் வகை செய்யும் அனைத்துத் தமிழ்க் குறியீட்டுத் தொகுப்பு 16 (Tamil all character encoding 16) மென்பொருளைப் பயன்படுத்தத் தமிழக அரசு இசைவளித்துவிட்டது. கடும் எதிர்ப்பு வந்த சூழலில் அந்தப் பரிந்துரையை நிறுத்திவைக்கச் சொல்லி நடுவண் தரவுத்தொழில் நுட்பத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது என்பதுதான் அது.
இதோடு நிறுத்திக்கொள்ளாமல் தினமணி, தமிழில் மணிப்பிரவாள நடையாகத் தமிழையும் சமற் கிருதத்தையும் கலந்து எழுத உருவாக்கப்பட்ட ஐந்து எழுத்துகளையும் ஏற்றுக்கொண்டால் என்ன தவறு என்று கேட்கிறது. அதற்கெனப் பல சான்றுகளை எடுத்துக்காட்டுகிறது. இரமண சர்மாவின் கோரிக்கை யைப் பற்றி ஒருவரியும் எழுதாமல் ஆசிரியவுரையை முடிக்கிறது.
அடுத்த நாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஸ, ஷ முதலிய எழுத்துகள் அல்ல சிக்கல், தமிழுக்கே உரித்தான எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்து எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளோடு சேர்க்க வேண்டும் என்பதுதான் புதிய சிக்கல் என்று தினமணி யில் கட்டுரை எழுதியுள்ளார். தினமணி ஆசிரியர் ஒன்றை மறைத்தால் தமிழக முதல்வரைக் காப்பாற்றத் துணைவேந்தர் வேறொன்றை மறைக்கிறார். ஸ, ஷ முதலிய ஐந்தைத் தமிழில் கலந்தாலும் எ, ஒ முதலிய ஐந்தைக் கிரந்தத்தில் கலந்தாலும் தவறு தவறுதான். பாலில் நஞ்சைக் கலந்தாலும் நஞ்சைப் பாலில் கலந்தாலும் விளைவு ஒன்றுதான். தமிழை மீண்டும் மணிப் பிரவாள நடைக்கு இட்டுச் சென்று அழிக்கும் முயற்சி இது.
மணிப்பவழ (பிரவாள) நடையால் தமிழ் அழிந்ததைக் கண்டுதான் தமிழ்க் கடல் மறைமலை யடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் மாணவர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உலகத் தமிழ்க் கழகம் கண்டு தனித் தமிழுக்கான அமைப்பை நிறுவினார்.
பகைவர்கள் தூங்காமல் அவ்வப்போது தூண்டி விடுவதால்தான் நாமும் தனித்தமிழ் இயக்க முயற்சியில் உலகத் தமிழ்க் கழகத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையில் இருக்கிறோம். மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதைச் சும்மா இருக்கவிடாது. நாம் ஓய்ந்தாலும் எதிரிகள் நம்மை ஓயவிடமாட்டார்கள்.
இதுபோன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல் இந்த மண்ணில் மார்க்சியத்தை விதைத்து அறுவடை செய்யலாமென்று சிலர் நினைக்கிறார்கள். அது முடியாது என்பதை மார்க்சியர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மண்ணில் மாற்றத்தைக் கொண்டுவர தமிழ் மார்க்சியம் புரிந்திருக்க வேண்டும். தமிழ் மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள தமிழம் புரிய வேண்டும்; ஆரியம் புரிய வேண்டும்.
எனவே தமிழர்களே இனி எதைக் காணும் போதும் அதில் ஆரியம் காண்போம்! தமிழம் காண்போம்! நம் வெற்றிப் பாதையில் செல்வோம்!